Published:Updated:

நாவலர் ஆன நாராயணசாமி!

நெடுஞ்செழியன்
பிரீமியம் ஸ்டோரி
நெடுஞ்செழியன்

நெடுஞ்செழியன் 100

நாவலர் ஆன நாராயணசாமி!

நெடுஞ்செழியன் 100

Published:Updated:
நெடுஞ்செழியன்
பிரீமியம் ஸ்டோரி
நெடுஞ்செழியன்

டைமொழிகள் என்றால் திராவிட இயக்கத்துக்கு அவ்வளவு விருப்பம். மாவீரன், அஞ்சாநெஞ்சன், போர்வாள், தளபதி என்றெல்லாம், உண்மையான பெயர்களை மறக்கும் அளவுக்கு அடை மொழிகளால் அழைப்பது வழக்கம். ‘மக்களாட்சிக் காலத்தில் மன்னர்களைப்போல் ஏன் இவ்வளவு அடைமொழிகள்?’ என்று கேள்வியும் எழுப்பலாம்; ‘இன இழிவைத் துடைப்பதற்காக உருவான இயக்கம், பெருமையான அடைமொழிகளைச் சூட்டிக்கொண்டது’ என்று நியாயமும் சொல்லலாம். திராவிட இயக்கத்தவர்கள் நீளமான துண்டு அணிந்து கொள்வதைத் ‘தங்கப்பதக்கம்’ படத்தில் சோ கிண்டலடித்தி ருப்பார். கிண்டலும் அடிக்கலாம்; இடுப்பிலே துண்டு கட்ட வேண்டிய நிலையில் இருந்தவர்கள் தோளிலே துண்டு அணிந்தது வரலாற்று மாற்றம் என்றும் வாதிடலாம். திராவிட இயக்கத்து மேடைப் பேச்சாளர்களைக் கிண்டலடித்து ‘அவர்களேங் இவர்களேங்’ என்று ஞானக்கூத்தன் கவிதை யொன்றை எழுதினார். பகடிக் கவிதையும் எழுதலாம்; பேராசிரியர் முதல் கூலித்தொழிலாளி வரை உள்ள ஒரு கட்சியில் அனைவரின் பெயரையும் மேடையில் குறிப்பிட்டு ‘அவர்களே’ என்று விளிப்பது ஜனநாயகம் என்றும் விளக்கலாம். எப்படியோ அண்ணாவுக்கு அறிஞர், கருணாநிதிக்குக் கலைஞர் என்ற பட்டங்கள் நிலைத்ததைப் போல, பேசிப் பேசியே வளர்ந்த இயக்கத்தில் பேச்சுக்கலையை நினைவூட்டும் ‘நாவலர்’ என்ற பெயர் நெடுஞ்செழியனுக்கு நிலைத்துப்போனது. அவருக்கு இது நூற்றாண்டு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1920-ல் நாகை மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணபுரத்தில் பிறந்த நெடுஞ்செழியனின் தந்தை இராஜகோபாலன், பெரியாரின்மீது பற்று கொண்டவர். அவர் மூலம் பெரியாரின் கூட்டங்களுக்குச் சென்ற நெடுஞ்செழியனும் சுயமரியாதை இயக்கத்துக்காரர் ஆனார். பின்னாளில் நாவலர் என்று அழைக்கப்பட்டவருக்கு, சிறுவயதில் பேசும்போது வார்த்தைகள் சரியாக வராதாம். மீண்டும் மீண்டும் பேசிப் பேசிப் பயிற்சி எடுத்தார். அப்படியும் சில வார்த்தைகள் வராதபோது, ங் என்ற வார்த்தையோடு நிறுத்தி, அதைத் தன்னுடைய பாணியாகவும் மாற்றிக்கொண்டார் நெடுஞ்செழியன். 1938, முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்தான் நெடுஞ்செழியனுக்கும் முதல் போராட்டம்.

நாவலர் ஆன நாராயணசாமி!

இளம் தாடியும் நெடுநெடு உயரமும் அவர் அடையாள மானது. ‘இளம்தாடி’ நெடுஞ்செழியன் என்றழைக்கப் பட்டார். திருமண நிகழ்ச்சி களைக் கொள்கை விளக்கக் கூட்டங்களாக மாற்றியது திராவிடர் இயக்கத்தின் சாதனை. நெடுஞ்செழியனோ தன் திருமணத்தை விழாவாக நடத்தாமல், திருமணம் முடிந்த பிறகுதான் வெளியுலகத்துக்கு அறிவித்தார். “ஏன் உன் கல்யாணத்துக்கு என்னை அழைக்கவில்லை?” என்று கேட்ட நண்பரிடம், “எனக்குத்தானே கல்யாணம். உனக்கு அங்கே என்ன வேலை?” என்று கேட்கும் அளவுக்குப் பெரியாரியம் அவரைப் பற்றியிருந்தது.

திராவிடர் கழகத்தில் இருந்தபோதே தனக்கான தம்பிகள் வட்டம் ஒன்றை உருவாக்கியவர் அண்ணா. பெரியாரை விட்டுப் பிரிந்து தி.மு.க-வைத் தொடங்கியபோது, தாங்கிப்பிடித்த தூண்களாக இருந்தவர்கள் அந்தத் தம்பிகளே. அப்படியான தம்பிகளில் ஒருவர்தான் நெடுஞ்செழியன். தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர். ‘தம்பி, தலைமையேற்க வா, உன் தலைமையின்கீழ் பணியாற்றத் தயாராக இருக்கிறோம்’ என்று அண்ணாவால், மாநாட்டுத் தலைமையேற்க அழைக்கப்பட்டார்.

1961-ல் ஈ.வி.கே.சம்பத் தி.மு.க-வை விட்டு வெளியேறியபோது தி.மு.க-வின் அவைத்தலைவரானார் நாவலர். 1967-ல் ஆட்சியைப் பிடித்தபோது அண்ணாவுக்கு அடுத்த இடம். கல்வி அமைச்சரானார். அண்ணா மறைந்தபோது தற்காலிக முதல்வர் ஆனார். நிரந்தர முதல்வராகிவிடலாம் என்ற நெடுஞ்செழியனின் நினைப்புக்குத் தடையாய் இருந்தவர், சினிமாவில் கதாநாயகனாவும் நெடுஞ்செழியன் நினைப்புக்கு வில்லனாகவும் இருந்த எம்.ஜி.ஆர். ‘கருணாநிதிதான் முதல்வராக வேண்டும்’ என்று ஆதரவு திரட்டி, நினைத்ததை முடித்தார் எம்.ஜி.ஆர். ‘ஆனால் முதலமைச்சர்தான்; வேறு அமைச்சர் பதவி வேண்டாம்’ என்று அடம்பிடித்தவரை சமாதானப்படுத்தி மீண்டும் அமைச்சர் ஆக்கினார் கருணாநிதி.

நாவலர் ஆன நாராயணசாமி!

1972-ல் எந்த எம்.ஜி.ஆர், கருணாநிதியைத் தலைவர் ஆக்கினாரோ அந்த எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் இடையில் மனக்கசப்பு. கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆரே கட்சியில் கணக்குக் கேட்டார். சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோதே தி.மு.க பொதுச்செயலாளரான நெடுஞ்செழியனிடமிருந்து எம்.ஜி.ஆரை நீக்குவதாக அறிவிப்பு வந்தது. ‘யாரையும் கலந்தாலோசிக்காமல் நெடுஞ்செழியனே எடுத்த முடிவு அது’ என்று பின்னாளில், தன் சுயசரிதையான ‘நெஞ்சுக்கு நீதி’யில் எழுதினார் கருணாநிதி. உதயசூரியனுக்கு எதிராக உதயமானது அ.தி.மு.க.

சில ஆண்டுகளிலேயே கருணாநிதி யுடனான முரண்பாடுகள் முற்ற, தி.மு.க-விலிருந்து வெளியேறி ‘மக்கள் தி.மு.க’ என்னும் கட்சியைத் தொடங்கினார் நாவலர். மக்கள் ஏற்கவில்லை மக்கள் தி.மு.க-வை. எந்த எம்.ஜி.ஆர் தன் முதல்வர் கனவுக்குத் தடையாக இருந்தாரோ, எந்த எம்.ஜி.ஆரைக் கட்சியை விட்டு அதிரடியாகத் தூக்கினாரோ அதே எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார் நெடுஞ்செழியன். எம்.ஜி.ஆர் இறக்கும்வரை அவருக்கு அடுத்த இடம் நாவலருக்குத்தான்.

எம்.ஜி.ஆர் மறைந்தார். இரண்டாம் முறை தற்காலிக முதல்வரானார் நெடுஞ்செழியன். இப்போதாவது நிரந்தர முதல்வர் பதவி கிடைக்குமா என்ற நினைப்பில் இந்த முறை மண்ணள்ளிப்போட்டவர், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி. அவர் முதல்வராக, கட்சி ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தது. நான்காவது முறையாகக் கட்சிப்பிளவைச் சந்தித்தார் நெடுஞ்செழியன்.

நாவலர் ஆன நாராயணசாமி!

ஜெயலலிதா அணியில் இணைந்தவருக்கு அங்கேயும் முரண்பாடுகள். அங்கிருந்து வெளியேறி க.ராசாராம், அரங்கநாயகம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து ‘நால்வர் அணி’ என்ற பெயரில் இயங்க ஆரம்பித்தார். ‘அவர்கள் என் தலையில் இருந்து உதிர்ந்த ரோமங்கள்’ என்று வர்ணித்தார் ஜெயலலிதா. அண்ணாவால் ‘தலைமை ஏற்க வா’ என்று அழைக்கப்பட்டவரை ‘தலையில் இருந்து உதிர்ந்த ரோமம்’ என்று ஜெயலலிதா கூறியது, அரசியல் அவலக் காட்சிதான். என்ன செய்ய, உதிர்ந்த ரோமம் ஒட்டிய அதிசயமும் தமிழக அரசியலில் நடந்தது. சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் ஜெயலலிதா தலைமையில் இணைந்தார் நெடுஞ்செழியன். இரண்டு அணிகளும் இணைந்தன. ஜெயலலிதா அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஆனார். நெடுஞ்செழியன் அ.தி.மு.க-வின் அவைத்தலைவராகவும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராகவும் இருந்தார். புத்தாயிரம் தொடங்கிய 2000-ஆம் ஆண்டில், ஜனவரி 12-ல் மறைந்தார் நெடுஞ்செழியன்.

நாவலர், நடமாடும் பல்கலைக்கழகம் என்ற பட்டங்கள் நிலைத்துப்போனதைப் போலவே ‘நம்பர் 2’ என்ற பட்டமும் நெடுஞ்செழியனுக்கு வரலாற்றில் நிலைத்துப்போனது. அண்ணாவுக்கு, கருணாநிதிக்கு, எம்.ஜி.ஆருக்கு, ஜெயலலிதாவுக்கு ‘நம்பர் 2’வாக இருந்து மறைந்தார்.

இறுதிக்காலங்களில் நெடுஞ்செழியன் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார் என்று சொல்லலாம். ஒன்றுபட்ட அ.தி.மு.க. உருவாகி, ஜெயலலிதா முதல்வரான 1991-க்குப் பிறகும் அ.தி.மு.க-விலிருந்து விலகி ஆர்.எம்.வீரப்பன் தனிக்கட்சி கண்டார்; திருநாவுக்கரசர் தனிக்கட்சி கண்டார்; ராஜ கண்ணப்பன் தனிக்கட்சி கண்டார். ஆனால் ‘நால்வர் அணி’க்குப் பிறகு, தனிக்கட்சி நடத்தும் ரிஸ்க்கை எடுக்க நாவலர் தயாராக இல்லை. அதேபோல் அ.தி.மு.க-வில் பல பிரச்னைகள் எழுந்தபோதும் அவர் கருணாநிதியிடம் சரணடையத் தயாராக இல்லை.

நெடுஞ்செழியனின் அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள். ஆனால் ‘தொடக்கக்கால திராவிட இயக்கத்தின் லட்சியவாத முகம்’ என்பதுதான் அவருக்குப் பெருமை சேர்க்கும் அடையாளம். தி.மு.க-வினர் நூற்றுக்கணக்கான இதழ்களை நடத்தினர். அவற்றில் ஒன்று நாவலரின் ‘மன்றம்’ இதழ். அண்ணாவின் ‘திராவிட நாடு’க்கும் கருணாநிதியின் ‘முரசொலி’க்கும் கண்ணதாசனின் ‘தென்றல்’ இதழுக்கும் உடன்பிறப்புகள் மத்தியில் என்ன எதிர்பார்ப்பு இருந்ததோ, அதே எதிர்பார்ப்பு நாவலரின் ‘மன்றம்’ இதழுக்கும் இருந்தது. பாவேந்தர் கவிதைகள் குறித்தும் தி.மு.க மற்றும் நீதிக்கட்சியின் வரலாறு குறித்தும் புத்தகங்கள் எழுதியவர் நெடுஞ்செழியன். திருக்குறளுக்கு உரை எழுதிய நாவலர், ‘மனுதர்மத்தின் அடிப்படையில்தான் குறள் எழுதப்பட்டது என்று பரிமேலழகர் தவறாக உரை எழுதிவிட்டார்’ என்று உதாரணங்களுடன் வாதிட்டார். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் பெயர் சூடியவரல்லவா!

இயற்பெயர் நாராயணசாமி. மத அடையாளங்களை மறுத்துத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டிக்கொள்வது இயக்கமானபோது ‘நாராயணசாமி’ நெடுஞ்செழியன் ஆனார்; அவரின் தம்பி ‘சீனிவாசன்’ இரா.செழியன் ஆனார்; ‘ராமையா’ பேராசிரியர் அன்பழகன் ஆனார்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அண்ணா சொன்னபோதும் தொடக்கக்கால தி.மு.க நாத்திக இயக்கமாகவே இருந்தது. திருப்பதிக்குப் போன சிவாஜி கணேசனுக்கு எதிராகத் தி.மு.க உடன்பிறப்புகள் சுவரொட்டிகள் ஒட்டியதும், வெறுத்துப்போன சிவாஜி காங்கிரஸுக்குப் போனதும் வரலாறு. ஆனால், போகப்போக தி.மு.க தொண்டர்கள் நாத்திகத்தைக் கைவிட்டனர். அது இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத் தலைவர்களுக்கும் பரவியது. அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் மூகாம்பிகை கோயிலுக்குப் போனார். ஜெயலலிதா காலத்து அ.தி.மு.க-வைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஆனால் நாவலர் இறுதிவரை நாத்திகராகவே வாழ்ந்து மறைந்தார். இத்தனைக்கும் அவர் மனைவி விசாலாட்சி, பங்காரு அடிகளார் பக்தையாக இருந்தார். அ.தி.மு.க-வில் எஞ்சிய நாத்திகர்களில் ஒருவர் நாவலர்.

‘நெடுஞ்செழியனின் நூற்றாண்டுவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்’ என்று சட்டசபையில் கோரிக்கை வைத்தவர் தி.மு.க-வின் பொருளாளர் துரைமுருகன். ‘சிறப்பாகக் கொண்டாடப்படும்’ என்று உறுதியளித்தவர் ஓ.பன்னீர்செல்வம்.

நெடுஞ்செழியன் எழுதிய திராவிட இயக்க வரலாறு குறித்த நூல்களும் திருக்குறள் உரை நூலும் மீண்டும் பதிப்பிக்கப்பட்டு, பரவலாகக் கொண்டுசெல்லப்பட வேண்டும். குறிப்பாக அவரின் ‘மன்றம்’ இதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டு நூலாகக் கொண்டுவரப்பட வேண்டும். அது திராவிட இயக்க வரலாற்றையும் தமிழக அரசியல் வரலாற்றையும் புரிந்துகொள்ள உதவும்.

படம் உதவி: அய்கன்