Published:Updated:

`ஒரு வாரத்துக்குள் தீர்வு... இல்லன்னா..?!' - கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொதித்த செந்தில் பாலாஜி

தமிழகத்தை ஆண்டு வரும் மத்திய அரசின் அடிமை அரசு, மத்திய அரசை சந்தோஷப்படுத்தும் நோக்கில் மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் புறக்கணித்து வருகிறது.

செந்தில் பாலாஜி பேட்டி
செந்தில் பாலாஜி பேட்டி

``கரூர் மாவட்டத்தில், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு, கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு ஒரு வார காலத்துக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால், வரும் 8-ம் தேதி கரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டி.ஆர்.ஓ-வைச் சந்தித்த செந்தில் பாலாஜி, ஜோதிமணி
டி.ஆர்.ஓ-வைச் சந்தித்த செந்தில் பாலாஜி, ஜோதிமணி

கரூர் மாவட்டத்தில் உள்ள 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து, அவர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்கக் கோரி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியும், கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணியும், கோரிக்கை மனு அளிக்க கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அங்கிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரனிடம் மனுவை அளித்தனர்.

Vikatan

பிறகு, செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் ஊதியம் வழங்காமல் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. கடந்த மூன்று மாத காலமாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டி.ஆர்.ஓ-வைச் சந்தித்த செந்தில் பாலாஜி, ஜோதிமணி
டி.ஆர்.ஓ-வைச் சந்தித்த செந்தில் பாலாஜி, ஜோதிமணி

மக்கள் பிரதிநிதிகளான எங்களிடம், பொதுமக்கள் கண்ணீர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைத் தொழிலாளர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்க வேண்டும் எனக் கூறி மாவட்ட நிர்வாகத்திடம் இதுகுறித்து மனுவை புகாராக அளித்துள்ளோம். இன்னும், ஒரு வார காலத்துக்குள் இவர்களுக்கு ஊதியம் வழங்கி, தீர்வு காணாவிட்டால், தொழிலாளர்களுடன் சேர்ந்து கரூரில் வரும் 8-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதை சுட்டிக்காட்டி மனு கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

பின்னர் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களிடம் பேசும்போது, ``காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர விவசாய மக்களுக்கு 100 நாள்களுக்காவது வேலை கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், 100 நாள் வேலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டம், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்டுவந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க ஆட்சியில் பதினைந்து நாள்களில் ஊதியம் வழங்கப்பட்டும் அதுவும், தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்துக்குச் சென்று ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மத்தியில் நடைபெற்றுவரும் மோடி ஆட்சி, நூறுநாள் வேலைத்திட்டத்தை எப்படியாவது முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்கான நிதியை ஒதுக்காமல் மக்கள் நலனைப் புறக்கணித்து வருகிறது.

ஜோதிமணி பேட்டி
ஜோதிமணி பேட்டி

நூறுநாள் வேலைத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசிடமிருந்து உரிய நேரத்தில், தமிழக அரசு போராடி பெற்றிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தை ஆண்டுவரும், மத்திய அரசின் அடிமை அரசு, மத்திய அரசை சந்தோஷப்படுத்தும் நோக்கில், மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் புறக்கணித்து வருகிறது. விரைவில் ஊதியம் வழங்க வேண்டும். இல்லையென்றால், போராட்டம் நடத்தப்படும்" என்றார்.