Published:Updated:

`பா.ஜ.கவில் உறுப்பினர் அட்டை வாங்குவதுதான் பாக்கி!'- நன்றி அறிவிப்பில் கலாய்த்த செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

`ஜெயலலிதா எந்தந்தத் திட்டங்களை எல்லாம் எதிர்த்தாரோ, அந்தத் திட்டங்களுக்கு எல்லாம் தற்போதைய அ.தி.மு.க அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து, மக்களுக்கு எதிரான அரசாக எடப்பாடி ஆட்சி நடத்தி வருகிறார்'.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியும், காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஜோதிமணியும், தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கரூர் பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட காருடையாம்பாளையம், நெடுங்கூர், கா பரமத்தி, முன்னூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களுக்குச் சென்று, வாக்காளர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்து வருகின்றனர்.

நன்றி அறிவிப்பு நிகழ்வில் செந்தில் பாலாஜி
நன்றி அறிவிப்பு நிகழ்வில் செந்தில் பாலாஜி

அவர்களுடன் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளும் உடன் சென்று நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Vikatan

க.பரமத்தி நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, ``தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய மக்களுக்கு உதவாத, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்காத அறிக்கையாக உள்ளது. குறிப்பாக, இரண்டு துறைக்கு மட்டும் அதிகளவில் நிதி ஒதுக்கி உள்ளார்கள். மீதமுள்ள துறைகளுக்குத் தேவையான நிதியே ஒதுக்கவில்லை. அந்தத் துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள், தாங்களே கம்பெனிகளை உருவாக்கி டெண்டர் எடுப்பதற்காக நிதிகளை ஒதுக்கி இருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜி, ஜோதிமணி
செந்தில் பாலாஜி, ஜோதிமணி

வளர்ச்சிக்கு உதவாத நிதி நிலை அறிக்கையாக உள்ளது. எடப்பாடி அரசு மோடியின் நிழலாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு இந்த அரசால் உரிய மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. சில எம்.எல்.ஏக்களை கொண்டு ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

தமிழகத்தில் எம்.எல்.ஏவே இல்லாமல், பா.ஜ.க கட்சியினர் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 'எல்லோரும் பா.ஜ.கவில் சேர்ந்து கொள்ள வேண்டும்' எனக் கூறினால், அ.தி.மு.கவைப் பொறுத்தவரை ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளிட்ட எல்லோரும் பா.ஜ.கவிடம் உறுப்பினர் அட்டை பெற்றுக்கொண்டு, சேர்ந்து கொள்வார்கள். பா.ஜ.கவில் உறுப்பினர் அட்டை வாங்குவதுதான் பாக்கி. இதுதான் அ.தி.மு.க நிலைமை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எந்தந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்தார்களோ, அந்தத் திட்டங்களுக்கு எல்லாம் தற்போதைய அ.தி.மு.க அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து, மக்களுக்கு எதிரான அரசாக எடப்பாடி ஆட்சி நடத்தி வருகிறார். அதன் வெளிப்பாடுதான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்றது. அதனால், வரும் தேர்தலில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு