Published:Updated:

`இது டிரைலர்தான்.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்!'- எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊரில் 200 பேரை வளைத்த செந்தில்பாலாஜி

அ.தி.மு.க-வினர் 200 பேர்களை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைத்து, கரூர் மாவட்ட ஆளுங்கட்சியினரை கலங்கடித்திருக்கிறார், செந்தில் பாலாஜி.

தி.மு.கவில் இணைந்தவர்கள்...
தி.மு.கவில் இணைந்தவர்கள்...

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியைச் சேர்ந்த அ.தி.மு.க-வினர் 200 பேர்களை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைத்து, கரூர் மாவட்ட ஆளுங்கட்சியினரை கலங்கடித்திருக்கிறார், செந்தில் பாலாஜி. அவரின் அரசியல் எதிரியும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள்தான் தி.மு.க-வுக்கு வந்திருப்பவர்கள் என்பதால், அமைச்சர் தரப்பும் ஆடிப்போய் கிடக்கிறது எனக் கூறப்படுகிறது.

தி.மு.கவில் இணைந்தவர்கள்...
தி.மு.கவில் இணைந்தவர்கள்...
நா.ராஜமுருகன்

அரவக்குறிச்சித் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க கரூர் மாவட்டப் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜிக்கும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் இடையே மோதல் தெரிந்த ஒன்று. செந்தில் பாலாஜி அ.தி.மு.க-வில் அமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே எல்லா விவகாரங்களிலும் இருவருக்கும் முட்டல் மோதல்தான்.

``இது என்ன ஜீபூம்பா வேலையா?''- செந்தில் பாலாஜியை சாடும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

செந்தில் பாலாஜியை கரூர் மாவட்ட அரசியலில் இருந்து காலி செய்ய நினைத்து முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை அவரின் அமைச்சர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்டப் பதவிகளை கட்சி தலைமை மூலம் பறிக்க வைத்து அந்தப் பதவிகளை சாதாரண ஒன்றியச் செயலாளராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கிடைக்க வைத்தார் என்று இன்றளவும் கரூர் மாவட்ட அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பேசப்படுவதுண்டு.

அதிலிருந்து செந்தில் பாலாஜும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் எல்லா விவகாரத்திலும் முட்டிக்கொள்ள, செந்தில் பாலாஜி அ.ம.மு.க, பிறகு தி.மு.க என கட்சிகள் மாறினார். ஆனால், கட்சி மாறியும், இருவருக்கும் இடையில் ஏற்படும் மோதல் காட்சிகள் மாறவில்லை என்கின்றனர்.

தி.மு.கவில் இணைந்தவர்கள்...
தி.மு.கவில் இணைந்தவர்கள்...
நா.ராஜமுருகன்

அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை செந்தில் பாலாஜி வாங்கல் பக்கமுள்ள ஒரு கிராமத்தில் அமைக்க முயன்றார். ஆனால், அதைத்தடுத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சணப்பிரட்டிக்கு மாற்றி கட்டுமான பணிகள் முடிந்து அரசு மருத்துவமனையை செயல்பாட்டுக்கும் கொண்டுவந்துவிட்டார்.

அதேபோல், தான் அமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திருமாநிலையூரில் அமைக்க முயன்றார் செந்தில் பாலாஜி. அதுவும் நடக்கவில்லை. திருமாநிலையூருக்குப் பதிலாக சுக்காலியூரில் புதிய பேருந்து நிலையத்தை அமைப்பதற்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் முயன்றதாகவும், நகராட்சியில் தீர்மானம் போடப்பட்டபடி திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையத்தை அமைக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் செந்தில் பாலாஜி.

இந்த நிலையில்தான் தற்போது செந்தில்பாலாஜி விஜயபாஸ்கர் ஊர் ஆட்களை தி.மு.க-வில் இணையவைத்துள்ளார். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கரூர் அரசியல் புள்ளிகள் சிலர், ``தென்னிலைப் பக்கமுள்ள கார்வழியில் அமைந்திருக்கும் ஆத்துப்பாளையம் அணை 18 வருடங்களுக்குப் பிறகு முழுகொள்ளளவும் நிறைந்திருக்கிறது. அந்த அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் விவகாரத்தில் இருவருக்கும் மோதல், பேருந்துநிலையம் அமைப்பதில் மோதல் என இப்படி பல விவகாரங்களில் இருவரும் முட்டிக்கொண்டுள்ளனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

இவர்களின் மோதலுக்கு இடையில்தான் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி நடத்தும் கொசுவலை கம்பெனியில் சுங்க மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளை விட்டு ஆய்வு நடந்தது. அதேபோல், செந்தில் பாலாஜி மீது பதியப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பணமோசடி வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

இதற்குப்பின் எம்.ஆர்.விஜய்பாஸ்கரின் கைங்கர்யம் இருக்கிறது. இப்படி எம்.ஆர்.விஜய்பாஸ்கர் தனது பவரைக் காட்டி செந்தில் பாலாஜியை மடக்கப் பார்க்க, அவரோ அமைச்சரின் சொந்த ஊரைச் சேர்ந்த 200 அ.தி.மு.க-வினர்களை தி.மு.க-வுக்கு இழுத்து அமைச்சர் தரப்பை ஆடிப்போகச் செய்திருக்கிறார்.

தாந்தோணி மேற்கு ஒன்றிய அம்மா பேரவை துணைத் தலைவரும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சொந்த ஊரான ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவருமான கண்ணையன் தலைமையில் அ.தி.மு.க-வினர் 200 பேரை தி.மு.க-வில் இணைத்துள்ளார். ஸ்டாலின் முன்னிலையில், செந்தில் பாலாஜியால் சென்னை அறிவாலயத்தில் இந்த இணைப்பு நடத்தப்பட்டது" என்றார்கள்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

இதுகுறித்து, செந்தில் பாலாஜியிடம் பேசினோம். ``இது வெறும் டிரைலர்தான். இனிதான் என்னோட ஆட்டம் ஆரம்பம். கரூர் மாவட்ட அ.ம.மு.க கூடாரத்தை மொத்தமா காலி பண்ணி, தி.மு.க-வுல இணைச்சமாதிரி, விரைவில் கரூர் மாவட்ட அ.தி.மு.க கூடாரத்தையும் மொத்தமா காலிபண்ணுவோம்" என்றார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் பேசினோம். ``புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதையால்ல இருக்கு?!. கட்சியிலேயே இல்லாத சிலரை தி.மு.க-வுக்கு இழுத்துவிட்டதா பம்மாத்து காட்டுறார், செந்தில் பாலாஜி. அவருக்கு கெட்ட காலம் இனிதான் ஆரம்பம்" என்றார்கள்!