Published:Updated:

`முதல்முறையாகத் தோற்ற தேர்தல் வியூகம்!'- நெருக்கடியில் செந்தில் பாலாஜி, ஆதரவாளர்கள்

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களையும், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியையும் அ.தி.மு.க-விடம் பறிகொடுத்திருக்கிறார், தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜி ஸ்டாலினுடன்...
செந்தில் பாலாஜி ஸ்டாலினுடன்... ( நா.ராஜமுருகன் )

அரசியலில் அடி எடுத்துவைத்த காலத்திலிருந்து, தேர்தல் வியூகத்தில் வெற்றிக்கொடி நாட்டிய செந்தில் பாலாஜியின் அந்த கைங்கர்யம், முதல்முறையாக மண்ணைக் கவ்வியிருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களையும், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியையும் அ.தி.மு.க-விடம் பறிகொடுத்திருக்கிறார், தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி.

`மெஜாரிட்டி அ.தி.மு.க, 3 இடங்களில் பா.ஜ.க.!' -செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த கரூர் நிலவரம்

சில மாதங்களுக்கு முன்பு அ.ம.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு தாவினார், செந்தில் பாலாஜி. அவர் கட்சி மாறிய 41 நாள்களிலேயே அவருக்கு தி.மு.க மாவட்டப் பொறுப்பாளராக பதவி கொடுத்தது தி.மு.க தலைமை. அதோடு, இவர் நடத்திய பொதுக்கூட்டங்கள், கட்சிக் கூட்டங்களின் நேர்த்தியைப் பார்த்து வியந்த ஸ்டாலினே, 'இவ்வளவு துல்லியமாக கூட்டம் நடத்துபவரை இதற்கு முன்பு பார்த்ததில்லை' என்று புகழ்ந்து தள்ளினார். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, 'கட்சியை வளர்ப்பதிலும், தேர்தல் வியூகத்திலும் கரைகண்டவர் செந்தில் பாலாஜி' என்று தன் பங்குக்கு பாராட்டிப் பேசினார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

அதோடு, செந்தில் பாலாஜி ஏற்பாடுசெய்திருந்த மற்றொரு கூட்டத்துக்கு வருகைதந்த உதயநிதி ஸ்டாலின், 'செந்தில் பாலாஜி கூட்டம் கூட்டுவதைப் பார்த்து வியப்பாக உள்ளது' என்று பாராட்டிவிட்டுப் போனார். இந்நிலையில்தான், நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-விடம் மொத்தமுள்ள 8 ஒன்றியங்களையும், ஒரு மாவட்ட சேர்மன் பதவியையும் பரிதாபமாக இழந்திருக்கிறது தி.மு.க. "செந்தில் பாலாஜியின் தேர்தல் வியூகம், முதல்முறையாக மண்ணைக் கவ்வியிருக்கிறது" என்று உச் கொட்டுகிறார்கள், அவரது ஆதரவாளர்கள்.

இந்த நிலையில், இதுகுறித்து கரூர் மாவட்ட தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். "தொடர்ந்து பல தேர்தல்களில் வெற்றி மேல் வெற்றி பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் தோல்வி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க மாவட்டப் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி, தேர்தலில் தொடர் வெற்றிகளைப் பெற்று வந்தார். அந்த அளவுக்குத் தேர்தல் சம்பந்தமான விசயங்களில் நேர்த்தியாகவும் புதுமையாகவும் வியூகம் வகுப்பவர் என்று பெயர் பெற்றவராகத் திகழ்ந்தார்.

இவர், கடந்த 1996 -ம் ஆண்டு, கரூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் முதல் சமீபத்தியில் நடைபெற்ற 2019 அரவக்குறிச்சி சட்டசபை இடைத்தேர்தல் வரை, எல்லா தேர்தல்களிலும் வெற்றிபெற்றார். இவர் வெற்றிபெறுவது மட்டுமல்லாது, தான் அங்கம் வகித்த கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார். தேர்தல் வாக்குறுதியால் வாக்காளர்களைக் கவரும் விதம் முதல் ஓட்டுச்சாவடி முகவர்கள் தேர்வு வரை, புதிய முறையைக் கையாண்டார். மாவட்டத்தில், 2011 சட்டசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல், 2009, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க-வை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
நா.ராஜமுருகன்

தினகரன் அணியில் இருந்தபோது, ஆர்.கே நகரில் டி.டி.வி.தினகரன் பெற்ற வெற்றியில், இவரது பங்கு முக்கியானது. கடந்த ஆண்டு, தி.மு.க-வில் இணைந்த பின், மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2009 - ம் ஆண்டு முதல் மாவட்டத்தில் தோல்வியைச் சந்தித்துவந்த தி.மு.க கூட்டணியை அரவக்குறிச்சி சட்டசபை, கரூர் லோக்சபா தேர்தல் மூலம் வெற்றிக் கணக்கைத் தொடங்கிவைத்தார்.

ஆனால், தற்போது நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட பஞ்சாயத்து, கவுன்சிலரில், 9 அ.தி.மு.க-வும், 3 தி.மு.க-வும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலரில், 69 அ.தி.மு.க கூட்டணியும், 37 தி.மு.க-வும் வெற்றிபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களையும் அ.தி.மு.க-விடம் தி.மு.க இழந்துள்ளது. இந்தத் தோல்வி, செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்லாது, அவரது ஆதரவாளர்களுக்கு நெருக்கடியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது" என்றார்கள்.