Published:Updated:

`தென் தமிழகக் கோரிக்கை முதல் தி.மு.க-வை உடைக்கும் முருகன் வரை!' - கழுகார் அப்டேட்ஸ்

``நண்பர்கள் சிலருடன் டின்னர். முடித்துவிட்டுப் பேசுகிறேன். மெசஞ்சர் பாரும்...’’ - ஒரு வரியில் முடித்துவிட்டு, போனை `கட்’ செய்தார் கழுகார். சிறிது நேரத்தில் மாது மெசஞ்சரில் தகவல் மழை பொழிந்தது.

``எங்களை ஏன் கேட்கவில்லை?’’ குமுறும் பா.ஜ.க சீனியர்கள்

தமிழக பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதையே அந்தக் கட்சியின் சீனியர்கள் பலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், கட்சியில் இணைந்த ஐந்தாவது நாளே முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு, துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது பலருக்கும் கடுப்பை ஏற்றியுள்ளது. அவருக்குப் பொறுப்பு வழங்கப்படுவது குறித்து சீனியர்கள் யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லையாம். முரளிதர் ராவ் மூலம் தேசியத் தலைமையிடம் மட்டும் தகவலைத் தெரிவித்துவிட்டு, அண்ணாமலையைத் துணைத் தலைவராக அறிவித்துள்ளார் முருகன்.

பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை
பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை

ஏற்கெனவே நயினார் நாகேந்திரன், சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, நரேந்திரன், வானதி சீனிவாசன், முருகானந்தம், எம்.என்.ராஜா, மகாலட்சுமி, கனகசபாபதி, புரட்சிக் கவிதாசன் என 10 பேர் துணைத் தலைவர்களாக இருக்கிறார்கள். கட்சி அமைப்பு விதியை மீறி அண்ணாமலையைத் துணைத் தலைவராக நியமித்திருப்பதை சர்ச்சையாக்குகிறது முருகனின் எதிர்தரப்பு.

றெக்கை கட்டி பறக்குதய்யா `அண்ணாமலை’ சைக்கிளு!

அச்சத்தில் நீலகிரி தி.மு.க!

ஊட்டியிலுள்ள தி.மு.க அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதி சிலைத் திறப்பு விழா கடந்த வாரம் நடைபெற்றது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், நீலகிரி எம்.பி-யான ஆ.ராசா ஆகியோர் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விழாவில் பங்கேற்றனர்.

சிலை திறப்பு விழா
சிலை திறப்பு விழா

விழாவில் கலந்துகொண்டவர்கள் முண்டியடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விழாவை ஒருங்கிணைத்து நடத்திய தி.மு.க மாவட்டச் செயலாளர் முபாரக்குக்கு தற்போது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதனால், கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தொற்றுக் கலக்கத்தில் இருக்கிறார்கள். நோய் பரவக் காரணமானவர்கள்மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவிடுமோ என்கிற அச்சத்தில் உழல்கிறது நீலகிரி தி.மு.க! அச்சம் என்பது மடமையடா...

அஞ்சாமை திராவிடர் உடைமையடா!

சர்ச்சையைக் கிளப்பிய மாணிக்கம் தாகூர் ட்வீட்!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் யாரை அமரவைப்பது என்று கட்சிக்குள்ளே நடைபெறும் கபடியில் பா.ஜ.க-வும் தன் பங்குக்கு மூக்கை நுழைத்துவருவது சர்ச்சையாகியுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி-யான மாணிக்கம் தாகூர், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்
ஆர்.எம்.முத்துராஜ்

அதில், நிகழ்ச்சி ஒன்றின்போது பிரதமர் நரேந்திர மோடியின் பின்னே நடந்துவரும் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா, திடீரென அமித் ஷாவை முந்திக்கொண்டு மோடிக்கு அருகில் செல்ல நேரும்போது, அவரைப் பின்னிழுத்துவிட்டு முன்னேறிச் செல்கிறார் அமித் ஷா. காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவி குறித்து கேள்வி எழுப்பும் பா.ஜ.க-வினருக்கு பதிலடியாக இந்த வீடியோவைப் பகிர்ந்திருந்தார் மாணிக்கம் தாகூர் எம்.பி!

பத்த வெச்சுட்டியே பரட்ட!

டயரைக் கும்பிட்ட அமைச்சர்; விஜயபாஸ்கர் vs பா.ஜ.க; `ஹாட்’டான உதயநிதி... கழுகார் அப்டேட்ஸ்!

``எங்களுக்கும் பொறுப்பு கொடுங்க!’’

`அ.தி.மு.க-வில் முஸ்லிம்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையை, கட்சித் தலைமையிடம் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தோர் முன்வைத்திருக்கிறார்கள். தலைமையிடம் நெருக்கம் காட்டிவரும் தென்சென்னையைச் சேர்ந்த முஸ்லிம் நிர்வாகி ஒருவர், சேப்பாக்கம் தொகுதியைக் குறிவைத்து வீட்டையே மாற்றியிருக்கிறாராம். மாவட்டச் செயலாளர் கனவும் அவருக்கு இருக்கிறதாம். சென்னை மாவட்டச் செயலாளர்கள் மாற்றப் பட்டியல் வெளியானால், கட்சிக்குள் நிச்சயம் களேபரம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டை மாத்தியாச்சு... சீட்டு கிடைக்குமா?

``கிருஷ்ணகிரி கலெக்டர் இடமாற்றப் பின்னணி!”

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபாகர், இந்து அறநிலையத்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் ஆட்சியராக இருந்தபோது, 18 மலைகளிலிருந்து கிரானைட் கற்களை வெட்டியெடுக்க 100 கோடி ரூபாய்க்கான டெண்டரை வெளியிட்டிருந்தாராம். ``இந்த மலைகளில் குடியிருப்புகளும் கோயில்களும் உள்ளன. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தனி நபர்களின் ஆதாயத்துக்காக வெளிப்படைத்தன்மையின்றி ஏலம்விட முயற்சி நடக்கிறது’’ என்று கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி-யான செல்லக்குமார், ஆட்சியர்மீது பாய்ச்சல் காட்டியிருந்தார்.

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். ஆகஸ்ட் 27-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், கிரானைட் குவாரிகளின் டெண்டர் அறிவிப்பை ரத்துசெய்துவிட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டதையடுத்து, வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து பிரபாகர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.

கிழிஞ்சுது கிருஷ்ணகிரி!

``தனித் தென் தமிழ்நாடு வேண்டும்!’’ அ.தி.மு.க எம்.பி போர்க்கொடி

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க மேல்சபை எம்.பி-யான விஜயகுமார் சமீபகாலமாக கட்சித் தலைமையை ஏகக்கடுப்பில் வைத்திருக்கிறாராம். கடந்த ஆண்டு கட்சித் தலைமையின் அனுமதியில்லாமல் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். `பிரதமரைப் பார்க்க கட்சித் தலைமையிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை’ என்று விளக்கமளித்து அதிரடித்தார். இந்நிலையில் தற்போது, அடுத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

``கன்னியாகுமரிக்கு ஏர்ப்போர்ட் வேணும்னு கேட்டு பல வருஷம் ஆகுது. இந்தக் கோரிக்கையை நான் எழுப்பிய பிறகு, சேலத்துல விமான நிலையம் கொண்டுவந்துவிட்டார் முதலமைச்சர். வட தமிழகத்தைச் சேர்ந்த நாலு அமைச்சர்கள்தான் ஆட்சியில பவர்ஃபுல்லா இருக்காங்க. மத்திய அரசு கொடுக்கும் நிதியைக் கொண்டு மாநில அரசுதான் எல்லாப் பகுதிகளுக்கும் சரிசமமா திட்டங்களை நிறைவேற்றணும். ஆனா, தென் தமிழகத்தில வளர்ச்சித் திட்டம் எதுவுமே கொண்டுவராம புறக்கணிக்கிறாங்க. இப்போ மதுரையைத் துணைத் தலைநகரம் ஆக்கணும்னு சொல்றாங்க. தென் தமிழகம் வளரலைனு அவங்களுக்கே தெரியுது.

விஜயகுமார் எம்.பி
விஜயகுமார் எம்.பி

தென் தமிழகம் வளரணும்னா துணைத் தலைநகரம் தேவையில்லை. `தென் தமிழ்நாடு’ என்ற தனி மாநிலத்தை உருவாக்கணும். மதுரையில ஹை கோர்ட் இருக்கு, திருநெல்வேலியில இருந்து மதுரை போகிற வழியில புதிய வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த நிறைய இடம் இருக்கு. குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், ஆரல்வாய்மொழி காற்றாலை, கூடங்குளம் அணுமின் நிலையம் எல்லாம் இருக்கிறதால நிறைய திட்டங்களைக் கொண்டுவந்து தென் தமிழகத்தை நாமே வளர்த்துக்கலாம். வளர்ச்சிக்காகனு சொல்லி, மாவட்டங்களைப் பிரிக்கிறாங்கதானே... அப்போ வளர்ச்சிக்காக மாநிலத்தைப் பிரிச்சா என்ன தப்பு?’’ என சீரியஸாகவே சொல்கிறார் விஜயகுமார். `ஒருவேளை இவர் பா.ஜ.க-வுக்கு தாவப்போறாரோ?’ என்று குமரி அ.தி.மு.க-வினரே சந்தேகிக்கின்றனர்.

கிளிக்கு றெக்கை முளைச்சிடுத்து..!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சங்கச் சர்ச்சை!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையில், மாநிலப் பொறுப்பிலிருக்கும் பிரமுகர் ஒருவர்மீது பண மோசடிப் புகார்களைக் கொடுக்க வணிகர்கள் தயாராகிவிட்டார்களாம். ஏலச் சீட்டு நடத்திவந்த அந்த நிர்வாகி, பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவருகிறாராம். ``என்மீது நடவடிக்கை எடுத்தால் விஸ்வரூபம் எடுப்பேன்'' என்று மிரட்டிவருகிறாராம் அந்தப் பிரமுகர். ‘சங்கத்தை உடைத்துவிடுவாரோ?’ என்று அதிர்ந்துபோன தலைவர் வெள்ளையன், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்துவருகிறாராம்.

மீண்டும் பிளவா?

``கட்சி நிகழ்ச்சியில் ஆட்சியருக்கு என்ன வேலை?’’

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வான பெரியகருப்பனுக்கும், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனுக்கும் இடையேயான மோதல்தான் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ``திருப்பத்தூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக நலத்திட்ட உதவி வழங்கினால் நீங்கள் ஏன் கலந்துகொள்கிறீர்கள்?’’ என்று கலெக்டரிடம் பெரியகருப்பன் கடுகடுத்திருக்கிறார்.

பெரியகருப்பன்
பெரியகருப்பன்

``அமைச்சர் கலந்துகொண்டால் நான் பங்கேற்கத்தானே வேண்டும்’’ என்று கலெக்டர் அளித்த விளக்கத்தை பெரியகருப்பன் ஏற்கவில்லையாம். தற்போது அ.தி.மு.க நிகழ்ச்சிகளில் ஆட்சியர் கலந்துகொள்வதில்லையாம்.

கருப்பன் குசும்புக்காரர்!

மௌனம் காக்கும் காங்கிரஸ்!

சோனியா காந்தி
சோனியா காந்தி

``காங்கிரஸ் கட்சியிலுள்ள இஸ்லாமியத் தலைவர்கள் நேரு குடும்பத்தினருக்கு அடிமையாக இருந்து நேரத்தை வீணடிக்கிறார்கள்’’ என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தேசியத் தலைவர் அஸாதுதீன் ஓவைஸி கொளுத்திப்போட்டிருக்கும் ஒரு வெடி காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்துத் தள்ளுகிறது. அந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியிலுள்ள இஸ்லாமியத் தலைவர்களிடமிருந்து இதுவரை மறுப்போ, கண்டனமோகூட வரவில்லை. தமிழக காங்கிரஸ் கமிட்டியிலுள்ள சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் அஸ்லம்பாஷா உள்ளிட்டோரும் மௌனம் காக்கிறார்களாம். தேர்தல் நேரத்தில் சிறுபான்மை வாக்குகளுக்கு வெடிவைக்கப் பார்க்கிறார்களோ எனப் பதறுகிறது சத்தியமூர்த்திபவன்.

அமைதிக்குப் பின் புயல்!

காற்றில் வெண்ணெய் எடுக்கும் அதிகாரிகள்!

இன்னமும் சின்னத்திரையில் கதைநாயகியாக வரும் நடிகையின் பெயர்கொண்ட மூத்த அதிகாரியும், பழநி கடவுளின் பெயர்கொண்ட அதிகாரியும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் செம கல்லா கட்டுகிறார்களாம். முன்னாள் தலைமைச் செயலக அதிகாரி வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனையில் மருத்துவ நிறுவனம் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அது குறித்த ஃபைலை லஞ்ச ஒழிப்புத்துறை வசம் வருமானவரித் துறையினர் ஒப்படைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட மருத்துவ நிறுவனத் தரப்பை அணுகிய இவ்விரு அதிகாரிகளும், ``எல்லாத்தையும் ஸ்மூத்தா முடிச்சுத் தர்றோம்’’ என பெருந்தொகையைக் கறந்துவிட்டார்களாம்.

கறவைக் கில்லாடிகள்!

அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கும் விளம்பர அமைச்சர்!

புதுச்சேரியில் கொரோனா சிறப்பு மருத்துவமனையாகச் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆகஸ்ட் 29-ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வுக்குச் சென்றார். அப்போது, அங்கு சரியாகச் சுத்தம் செய்யப்படாத கழிவறை ஒன்றை, எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும் என்று அங்கிருந்த பெண் பணியாளருக்குச் செய்து காட்டினார். அந்தப் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. அது தற்போது விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது.

மல்லாடி கிருஷ்ணாராவ்
மல்லாடி கிருஷ்ணாராவ்

``அமைச்சரின் செயல் பாராட்டப்பட வேண்டியதுதான். அதேசமயம், அங்கிருக்கும் அடிப்படைப் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு சரிசெய்யாமல், இப்படியான வீடியோக்களை வெளியிடுவது வெற்று விளம்பரம்தான். நோயாளிகளுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை’’ என்கின்றன எதிர்க்கட்சிகள்.

சில நாள்களுக்கு முன்னர் இதே போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கினார் மல்லாடி கிருஷ்ணாராவ். தனது தொகுதியான ஏனாமில் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பார்வையிடச் சென்றவர், இடுப்பளவு வெள்ளத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் புடைசூழ நின்றுகொண்டு பேட்டி கொடுத்தது, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. உங்க கடமை உணர்வுக்கு அளவே இல்லையா அமைச்சரே!

கிரம்மர் சுரேஷ்மீது செல்லூர் ராஜூ பாராமுகம்!

வித்தியாசமான வாசகங்கள்கொண்ட போஸ்டர்கள் மூலம் தமிழக மக்களைத் திரும்பிப் பார்க்கவைத்தவர் மதுரை கிரம்மர் சுரேஷ். அவரின் தாயார் மறைவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறார். ஆனாலும், செல்லூர் ராஜூவை மட்டும் வாழ்த்தி அவ்வப்போது போஸ்டர்கள், நாளிதழ் விளம்பரங்கள் கொடுத்துவருகிறார்.

கிரம்மர் சுரேஷ்
கிரம்மர் சுரேஷ்

சமீபத்தில் செல்லூர் ராஜூவின் தாயார் நினைவுதினத்துக்கு உருக்கமான வாசகங்களைப் பதிவிட்டு அஞ்சலி போஸ்டர்கள், நாளிதழ் விளம்பரங்களை கிரம்மர் செய்திருப்பதைப் பார்த்து செல்லூர் ராஜூ கண்கலங்கிவிட்டாராம். ``செல்லூர் ராஜூவுக்காக கிரம்மர் சுரேஷ் என்னதான் செலவு செய்தாலும், தேர்தல் நேரத்தில் சீட் கொடுப்பதிலும், வேறு முக்கியப் பொறுப்பு கொடுப்பதிலும் கிரம்மரை நேக்காக மறந்துவிடுகிறார் அமைச்சர்’’ என்கிறது மாவட்ட அ.தி.மு.க வட்டாரம்.

பாராமுகம் ஏனோ?

தி.மு.க-வை உடைக்கும் எல்.முருகன்!

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர், கடந்த சில நாள்களுக்கு முன்னர் பா.ஜ.க-வில் இணைந்தனர்.

எல்.முருகன்
எல்.முருகன்

இதன் பின்புலத்தில் மத்திய சென்னை பா.ஜ.க எஸ்.சி அணியைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் இருக்கிறாராம். ``இவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிக்குப் பக்கபலமாக இருந்தவர். இவர் மூலமாகத்தான் சேப்பாக்கம் தொகுதியில் தி.மு.க-வின் செல்வாக்கை உடைக்கும் வேலைகளைச் செய்துவருகிறார் முருகன்’’ என்கின்றனர் உடன்பிறப்புகள் வட்டாரத்தில்.

பா.ஜ.க திட்டம் பலிக்குமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு