Published:Updated:

கொரோனா நோய் தடுப்புப் பணிகள் - 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் குழு நியமித்தார் முதல்வர் ஸ்டாலின் #NowAtVikatan

9-5-2021 / இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

09 May 2021 8 PM

கொரோனா:   மாவட்ட பொறுப்பாளர்களாக  அமைச்சர்கள் குழு நியமனம்

தமிழகத்தில் கொரோனா கொரோனா பரவல் அதிகமுள்ள 14 மாவட்டங்களில், நோய் கட்டுப்படுத்தும் பணிகளுக்கு பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் அடங்கிய குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

அமைச்சர்கள் குழு:

சென்னை - மா.சுப்பிரமணியன், சேகர் பாபு

செங்கல்பட்டு - தா.மோ.அன்பரசன்

சேலம் - செந்தில் பாலாஜி

கோவை - சக்கரபாணி, ராமச்சந்திரன்

திருவள்ளூர் - சா.மு.நாசர்

மதுரை - பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

ஈரோடு - முத்துசாமி

தூத்துக்குடி - கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்

திருச்சி - கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நெல்லை - ஐ. பெரியசாமி, தங்கம் தென்னரசு

காஞ்சிபுரம் - எ.வ.வேலு

விழுப்புரம் - பொன்முடி, செஞ்சி மஸ்தான்

வேலூர் - துரை முருகன், ஆர்.காந்தி

திருப்பூர் - மு.பெ.சாமிநாதன்

09 May 2021 8 PM

முழு   வீச்சில்   ஆக்ஸிஜன்   தயாரிப்பு!

முதலமைச்சர் தலைமையில் இன்று தொழில் துறையினர் மற்றும் வணிகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆக்ஸிஜன் தயாரிப்பில் உதவ தொழில் துறை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வாய்ப்பிருக்கும் தொழில் நிறுவனங்களில் இருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மே 11-ம் தேதி முதல் கட்டமாக 31 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கிடைக்கும் எனவும், அந்த அளவை மேலும் அதிகரித்து வழங்க அந்நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றார். மொத்தம் தமிழகத்தின் ஆக்ஸிஜன் உற்பத்தியை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

09 May 2021 7 PM

தீவிரமடையும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,897 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் 7,130 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது.

இன்று மட்டும் 236 பேர் பலியாகியிருக்கின்றனர். இவற்றில் இணை நோய்கள் இல்லாத 47 பேர் பலியாகியிருப்பது நிலைமை தீவிரமடைந்திருப்பதை உணர்த்துகிறது.

மொத்தம் 1.44 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இன்று 23,515 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

12 வயதுக்குட்பட்ட சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. மொத்தம் 12,012 சிறார்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தேவையில்லாமல் வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

09 May 2021 6 PM

அமைச்சருக்கு   கொரோனா

புதிய அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவியேற்றிருக்கும் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டார். இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.

09 May 2021 4 PM

பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவர்

பா.ஜ.க சட்டமன்ற குழுத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தி.நகர் பா.ஜ.க தலைமையகத்தில் மாநில பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு. திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நயினார் நாகேந்திரன்.

நயினார்  நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
09 May 2021 3 PM

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ் நியமனம்.

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, போலீஸ் கமிஷனர் , தலைமை செயலர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பு வகித்த பிரகாஷ் மாற்றப்பட்டு ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

09 May 2021 11 AM

"கொரோனா பரவாமலிருக்க பேரறிவாளனுக்கு பரோல் வழங்குங்கள்" - முதல்வருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் .

கொரோனா பரவாமலிருக்க பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக்கோரி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ,"2020 நவம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தால் பரோல் வழங்கப்பட்டு தற்போது புழல் சிறையில் இருக்கும் பேரறிவாளன் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இணை நோய்களின் காரணமாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ன சிறை மருத்துவரும் சான்றளித்துள்ளார். எனவே உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்" என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

09 May 2021 10 AM

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் தேர்வு:

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1977-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்தவர். ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஜெயின் கமிஷனுக்கு உதவ தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டவர். அரசு, சிபிஐ, ரயில்வே சார்பாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடியவர்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் லண்டனில் சொத்து வாங்கிய வழக்கில் வெளிநாடுகளுக்கு சென்று நிறைய ஆதாரங்களைத் திரட்டியவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் 2000- ஆம் ஆண்டு அரசின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு