Published:Updated:

மீண்டும் பிரசாந்த் கிஷோர் - சரத் பவார் சந்திப்பு! - காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கான பணிகள் தீவிரம்?!

கோப்புக் காட்சி
கோப்புக் காட்சி

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாகத் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதோடு காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பதால், வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்பு தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை மும்பைக்கு வரவழைத்து அவருடன் சரத்பவார் மூன்று மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தால் யாரையெல்லாம் சேர்க்கலாம் என்பது குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.

சரத் பவார்
சரத் பவார்

சரத் பவார் கடந்த சில நாள்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது நாளை, அதாவது செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் அல்லாத 15 எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேச, சரத் பவார் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தச் சந்திப்பு நாளை நடக்கவிருக்கும் நிலையில், இன்று அதாவது திங்கள்கிழமை சரத்பவார் மீண்டும் பிரசாந்த் கிஷோரை அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் முதலில் நடந்தது போன்று அதிக நேரம் நடைபெறவில்லை. வெறும் அரை மணி நேரம் மட்டுமே நடந்தது. இந்தச் சந்திப்பின்போது 15 கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

முதற்கட்டமாக திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரித் தலைவர்களைச் சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. சிவசேனா ஏற்கெனவே தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. எனவே, அந்தக் கட்சியைக் கூட்டணிக்கு கொண்டுவருவதில் சிக்கல் இருக்காது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், புதிய கூட்டணியில் சேருவதில் சிக்கல் இருக்காது. சமாஜ்வாடி கட்சியையும் இந்தக் கூட்டணியில் இணைக்கத் திட்டமிட்டுள்ளனர். முதலில் காங்கிரஸ் அல்லாத அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துவிட்டு, வரும் தலைவர்களுடன் மட்டும் பேச சரத் பவார் திட்டமிட்டுள்ளார். வரும் நாள்களில் எதிர்க்கட்சித் தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்துப் பேசவும் சரத் பவார் திட்டமிட்டிருக்கிறார்.

மம்தா, பிரசாந்த் கிஷோர், சரத் பவார்
மம்தா, பிரசாந்த் கிஷோர், சரத் பவார்

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் முதல்வராகியிருப்பதால், இப்போதைக்கு மத்திய அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை. இது குறித்து மம்தா பானர்ஜியிடம் கேட்டதற்கு, 2024-ம் ஆண்டுத் தேர்தலில் அனைவரும் இணைந்து போட்டியிடலாம் என்று தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளும் இணைந்து கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் மம்தா பானர்ஜியும் பிரதமர் பதவிக்கான களத்தில் இறங்குவார் என்று தெரிகிறது. ஆனாலும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்துப் போட்டியிடவைத்து, பிரதமர் பதவி அல்லது ஜனாதிபதி பதவியை கைப்பற்றும் முடிவில் சரத் பவார் தீவிரமாக இருக்கிறார் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகியிருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தல்: பா.ஜ.க-வை வீழ்த்த பி.கே-வோடு இணைந்து மம்தாவும் சரத் பவாரும் திட்டமா?

காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர ஏற்கெனவே பல அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் நிதிஷ் குமார் இப்போது பீகார் முதல்வராக இருந்தாலும், அவரால் சொந்தமாக எந்தவித முடிவையும் எடுக்க முடியாமல் இருக்கிறார். எனவே, அவரையும் தங்களது பக்கம் இழுத்துவிடலாம் என்று பிரசாந்த் கிஷோரும், சரத்ப வாரும் கணக்கு போட்டுக்கொண்டிருக்கின்றனர். ஒடிசாவில் முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக் எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் இருக்கிறார். அவரை எப்போது வேண்டுமானாலும் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு இழுத்துக்கொள்ள முடியும். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியும் இந்தக் கூட்டணிக்கு வரக்கூடும் என்று தெரிகிறது. தமிழகத்தில் தி.மு.க-வையும் எளிதில் தங்களது பக்கம் இழுத்துவிட முடியும் என்று சரத் பவார் கணக்கு போட்டு காய்களை நகர்த்திவருகிறாராம்.

அடுத்த கட்டுரைக்கு