Published:Updated:

மகாராஷ்டிரா: எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேரின் பாதுகாப்பை திரும்ப பெற்ற ஷிண்டே அரசு! - என்ன காரணம்?!

ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேரின் பாதுகாப்பை மாநில அரசு திடீரென திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது.

மகாராஷ்டிரா: எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேரின் பாதுகாப்பை திரும்ப பெற்ற ஷிண்டே அரசு! - என்ன காரணம்?!

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேரின் பாதுகாப்பை மாநில அரசு திடீரென திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது.

Published:Updated:
ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த ஏக்நாத் ஷிண்டே, கடந்த சில மாதங்களில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக உத்தவ் தாக்கரே ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை ரத்து செய்வதில் அதிக கவனம் செலுத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் மகாராஷ்டிராவுக்கு வரவேண்டிய தொழில்கள் அனைத்தும் குஜராத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

தற்போது புதிய திருப்பமாக துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மாநில உள்துறை அமைச்சகம் எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேரின் பாதுகாப்பை அடியோடு ரத்து செய்து இருக்கிறது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே பாதுகாப்பும் அடங்கும். உத்தவ் தாக்கரேயின் உறவினர் வருண் சர்தேசாய், சிவசேனாவின் அனில் பரப், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், ஜெயந்த் பாட்டீல், நவாப் மாலிக், தனஞ்சே முண்டே, காங்கிரஸ் கட்சியின் சதேஜ் பாட்டீல், பாலாசாஹேப் தோரட், நிதின் ராவத், விஜய் வடேதிவார், சுனில் கேதார், சிவசேனாவின் சஞ்சய் ராவத், பாஸ்கர் ஜாதவ் உட்பட 25 பேரின் பாதுகாப்பு அடியோடு ரத்து செய்யபட்டுள்ளது.

ஷிண்டே-தாக்கரே
ஷிண்டே-தாக்கரே

இதில் அதிகமானோர் முந்தைய ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் ஆவர். இது தவிர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், திலிப் வல்சே பாட்டீல் ஆகியோருக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்புக்கு இனி ஒன்றிரண்டு காவலர்கள் மட்டுமே செல்வார்கள். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மிலிந்த் நர்வேகர் சமீபத்தில் நடந்து முடிந்த மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் பதவிக்கான தேர்தலில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு மிகவும் நெருக்கமான அமோல் கோலே வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். இந்த நிலையில் மாநில அரசு மிலிந்த் நர்வேகருக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளது. இப்போது அவர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் நகர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் நானா பட்டோலே கூறுகையில், ``எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், சாமானிய மக்களாக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமையாகும். எங்களுக்கு பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதால் நாங்கள் அதனை எதிர்க்கப்போவதில்லை.

எங்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று அரசு நினைத்தால் எங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை” என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் பாலாசாஹேப் தோரட் இது குறித்து கூறுகையில், ``எங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதை விட சிவசேனாவில் இருந்து விலகிய 40 எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் அதிகபாதுகாப்பு கொடுக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது குறித்து மாநில உள்துறை அமைச்சக அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், ``பாதுகாப்பு தொடர்பாக துணை முதல்வர் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுப்பதில்லை. இதற்கென நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட கமிட்டிதான் யாருக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பது குறித்து முடிவு செய்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

கடந்த வாரமே தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேயின் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த கட்சே, ``முதல்வர் ஷிண்டேயும், துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் எதிர்க்கட்சிகளை பழிவாங்க இது போன்ற ஒரு நடவடிக்கை எடுத்திருப்பது துரதிஷ்டவசமானது” என்று தெரிவித்தார்.

விரைவில் மாநகராட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் உத்தவ் ஆதரவு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பை விலக்கிக்கொண்டு விட்டால் தலைவர்கள் பிரசாரத்திற்கு செல்வதை தவிர்பார்கள் என்று கருதி இம்முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகளால் குற்றம்சாட்டப்படுகிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் எதிர்க்கட்சி தலைவர்களின் பாதுகாப்பை விலக்கியது. அப்போது தான் பஞ்சாப் பாடகர் பட்டப்பகலில் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் எதிர்க்கட்சிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.