Published:Updated:

ராஜஸ்தான்: `ஆபரேஷன் லோட்டஸுக்கு ஆபரேஷன்!’ - பா.ஜ.க-வை விமர்சித்த சிவசேனா

பா.ஜ.க - சிவசேனா
பா.ஜ.க - சிவசேனா

``வேலையின்மை அதிகரித்துவருகிறது. பொருளாதாரம் கடுமையாக பாதிப்படைந்துவருகிறது. இவற்றைச் சீரமைக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, ஆளும் எதிர்கட்சிகளைக் கவிழ்ப்பதில் பா.ஜ.க தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.”

ராஜஸ்தானில் கடந்த சில வாரங்களாக அரசியல் களம் பரபரப்பாகக் காணப்பட்டது. அம்மாநிலத்தின் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே நிலவிவந்த அதிருப்தி, மோதலாக மாறியது. இருவரின் தலைமையின் கீழும் அணிகள் உருவாகி, ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துவந்தனர். சச்சின் பைலட் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த பிரச்னைகளைப் பயன்படுத்திக்கொண்டு பா.ஜ.க., காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கப் பேரங்களைப் பேசிவந்ததாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. உச்சகட்ட நிலையிலிருந்த இந்தப் பிரச்னையால், ஆட்சி கவிழ அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தொடர்ந்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது இருவருக்கும் இடையிலான பிரச்னைகள் முடிவுக்கு வரும் நிலையை எட்டியிருக்கின்றன.

அசோக் கெலாட், ராகுல் காந்தி மற்றும் சச்சின் பைலட்
அசோக் கெலாட், ராகுல் காந்தி மற்றும் சச்சின் பைலட்
PTI

அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையேயான பிரச்னை சமரசத்துக்கு வந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் பிரச்னையை முன்வைத்து மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியான சிவசேனா, பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்துள்ளது. சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாமனாவில், ``ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஆபரேஷன் லோட்டஸுக்கு ஆபரேஷன் செய்து பா.ஜ.க-வுக்குப் பாடம் கற்பித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில்கூட அதிகாலையில் அவர்கள் செய்ய முயன்ற ஆபரேஷன் தோல்வியில் முடிந்தது. குறைந்தபட்சம் இப்போதாவது பா.ஜ.க ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். மகாராஷ்டிராவில், வரும் செப்டம்பர் மாதம் சில போலி மருத்துவர்களைக்கொண்டு மீண்டும் ஆபரேஷன் செய்யத் திட்டமிட்டுள்ளனர்’’ என்று கேலி செய்யும் வகையில் குறிப்பிட்டுள்ளனர்.

`பிரதமர் மோடி ராஜினாமா செய்யக்கோரி மக்கள் போராட்டம் நடத்தும் நிலை வரலாம்!’ - சிவசேனா

பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணியில் மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்தபோது பதவிகளைப் பகிர்ந்துகொள்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த ஆண்டு ராஜ்பவனில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட விழாவை `அதிகாலை நிகழ்ச்சி’ என சிவசேனா குறிப்பிடுகிறது. தொடர்ந்து நிலவிவந்த சலசலப்புகளுக்குப் பிறகு தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகினார். இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சியை அமைத்தது. இதைக் கவிழ்க்கவும் பா.ஜ.க தொடர்ந்து திட்டமிட்டு வருவதாக சிவசேனா குற்றம்சாட்டிவருகிறது. பா.ஜ.க-வும் இந்த கூட்டணியைத் தொடர்ந்து விமர்சித்துவருகிறது. நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்தும் பா.ஜ.க-வை சிவசேனா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கடுமையாக விமர்சித்து வருகிறது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

சிவசேனா கட்சி, பா.ஜ.க-வை, ``கொரோனா வைரஸ் பாதிப்புகள் நீங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. வேலையின்மை அதிகரித்துவருகிறது. பொருளாதாரம் கடுமையாக பாதிப்படைந்துவருகிறது. இவற்றைச் சீரமைக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, ஆளும் எதிர்கட்சிகளைக் கவிழ்ப்பதில் பா.ஜ.க தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது’’ என்றும் விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சச்சின் பைலட் சந்தித்துப் பேசிய பின்னர் கட்சியின் நலனுக்காக சச்சின் தொடர்ந்து பணியாற்ற ஒப்புக்கொண்டிருப்பதாகவும், நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகு அசோக் கெலாட் தனது அரசைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதாகவும் சிவசேனா குறிப்பிட்டுள்ளது. ``அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் பலவீனமானவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தனது அரசாங்கத்தைக் காப்பாற்ற அசோக் கெலாட் அனைத்து முயற்சிகளையும் செய்தார்’’ என்று சிவசேனா குறிப்பிட்டுள்ளது.

மகாராஷ்டிரா:`பட்னாவிஸ் சிறந்த முறையில் செயல்படுகிறார்!’ - சிவசேனா `திடீர்’ பாசம்
அடுத்த கட்டுரைக்கு