Published:Updated:

மத்திய அமைச்சரைக் கைதுசெய்ய உத்தரவிட்ட மகாராஷ்டிரா அமைச்சருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்!

அனில் பரப்
அனில் பரப்

மத்திய அமைச்சர் நாராயண் ராணேவைக் கைதுசெய்ய உத்தரவிட்ட சிவசேனா அமைச்சர் அனில் பரப்-புக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருக்கின்றனர்.

மகாராஷ்டிரா அரசியலில் முன்னாள் முதல்வர் நாராயண் ராணே மத்திய அமைச்சராக்கப்பட்டதிலிருந்தே பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் மும்பையில் ராணே நடத்திய யாத்திரையால் பெரும் கலவரம் ஏற்பட்டது. அதோடு ராணே கைதுசெய்யப்பட்டு ஒரே நாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ராணேவைக் கைதுசெய்ய மகாராஷ்டிரா சிவசேனா அமைச்சர் அனில் பரப், போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியதோடு, அது குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அனில் பரப்-புக்கு சம்மன் அனுப்பியிருக்கிறார்கள்.

நாராயண் ராணே
நாராயண் ராணே

இது குறித்து சிவசேனா போக்குவரத்துத்துறை அமைச்சர் அனில் பரப் கூறுகையில், ``அமலாக்கத்துறை அதிகாரிகள் வரும் 31-ம் தேதி நான் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர். என்ன வழக்கு என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனக்கும் எந்த வழக்கில் என்னை அழைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நோட்டீஸ் குறித்து இப்போது என்னால் எதுவும் கூற முடியாது. முழுமையாகப் படித்த பிறகுதான் கருத்து தெரிவிக்க முடியும்” என்றார்.

மகாராஷ்டிரா: `அதிரடி கைது... ஜாமீன்’ - நீதிமன்ற உத்தரவால் நள்ளிரவில் விடுவிக்கப்பட்ட மத்திய அமைச்சர்

இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், ``ராணே யாத்திரையை முடித்துக்கொண்டவுடன் அனில் பரப்-புக்கு சம்மன் அனுப்புவார்கள் என்று எதிர்பார்த்ததுதான். ரத்னகிரி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருக்கும் அனில் பரப்-புக்கு அனுப்பப்பட்டிருக்கும் நோட்டீஸை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்று தெரிவித்தார். அனில் பரப். முதல்வர் உத்தவ் தாக்கரேயின் நெருங்கிய ஆலோசகர். அடுத்த சில மாதங்களில் மும்பையில் நடக்கவிருக்கும் மாநகராட்சித் தேர்தலில் அனில் பரப் முக்கியப் பங்கு வகிக்கவிருக்கிறார். அதைத் தடுத்து நிறுத்த அனில் பரப் மீது நடவடிக்கை பாய்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

அனில் பரப் மீது ஏற்கெனவே பண மோசடி வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையே மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான நடவடிக்கையை அமலாக்கத்துறை தாமதப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுக்கப்பட்டுவிட்டாரா என்று அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு