Published:Updated:

மகாராஷ்டிரா:`சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உளவு பார்க்கின்றன’-கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் தலைவர் பகீர்

நானா பட்டோலே
நானா பட்டோலே

சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தன்னையும், காங்கிரஸ் தலைவர்களையும் உளவு பார்ப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற நானா பட்டோலே, காங்கிரஸ் வரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடும் என்று சொன்னதிலிருந்து கூட்டணியில் குழப்பம் நீடித்துவருகிறது. அடிக்கடி சிவசேனா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவருக்கொருவர் புகார் கூறிக்கொண்டிருக்கின்றனர். இதனால் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி பா.ஜ.க உள்ளே நுழையப் பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தநிலையில் புதிய திருப்பமாக தன்னை சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உளவு பார்ப்பதாக நானா பட்டோலே குற்றம்சாட்டியிருக்கிறார்.

காங்கிரஸ் - என்.சி.பி - சிவசேனா
காங்கிரஸ் - என்.சி.பி - சிவசேனா

இது தொடர்பாக புனே அருகிலுள்ள லோனவாலாவில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், ``தினமும் காலையில் 9 மணிக்கு முதல்வர், துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் உள்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் காங்கிரஸ் தலைவர்களின் கூட்டங்கள் குறித்த விவரங்களை பெறுகின்றனர். காலை 3 மணிக்கு ஒரு கூட்டத்தில் கலந்துகொள்கிறேன். அது குறித்து யாருக்கும் தெரியாது. ஆனால் எங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு தெரிந்திருக்கிறது. என்னையும், காங்கிரஸ் தலைவர்களையும் உளவு பார்க்கின்றனர்.

`சிவசேனா, தேசியவாத காங்கிரஸுக்கு பா.ஜ.க நன்றி சொல்ல வேண்டும்!’ - மத்திய அமைச்சரவை குறித்து சிவசேனா

இதிலிருந்தே சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சறுக்க ஆரம்பித்துவிட்டன என்பது தெளிவாகத் தெரிகிறது. என்னை அமைதியாக வாழவிட மறுக்கிறார்கள். எனது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது. நான் எங்கு சென்றாலும், என்ன பேசினாலும் உடனே முதல்வர், துணை முதல்வர் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பப்படுகிறது. சிலருக்கு காங்கிரஸ் கட்சி வளர்வது பிடிக்கவில்லை. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடம் முதல்வர் மற்றும் உள்துறை இலாகா இருக்கிறது. காங்கிரஸ் கட்சியிடம் அது போன்ற துறை இல்லை” என்று குற்றம்சாட்டினார்.

உத்தவ் தாக்ரே
உத்தவ் தாக்ரே

நானா பட்டோலேயின் இந்தக் குற்றச்சாட்டு காரணமாக சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன. ஏற்கெனவே கடந்த மே மாதம் நானாபட்டோலே, தனது போனை முந்தைய அரசு ஒட்டுக்கேட்டதாகவும், போதைப்பொருள் கடத்தல்காரனுடன் தொடர்புவைத்திருப்பவன் என்று தவறுதலாக கூறி எனது போன் நம்பரை கொடுத்துள்ளனர் என்றும், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, பாஜக தலைவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளின் போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும், இது குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம்தான் இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மாநில அரசு மூன்று பேர்கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. 2015-19ம் ஆண்டு வரை மக்கள் பிரதிநிதிகளின் போன் அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டனவா என்பது குறித்து இந்த கமிட்டி விசாரிக்கும். நானே பட்டோலே இரண்டு நாள்களுக்கு முன்பும் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார். ``யாராவது புறமுதுகில் குத்தினால் அதற்கு கட்சியினர் யாரும் பதிலளிக்க வேண்டாம். கட்சியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ், ``நானாபட்டோலே தனது கட்சிக்காக அரசியல் செய்ய முழு உரிமை இருக்கிறது. கட்சித் தலைமை இறுதி முடிவு எடுக்கும்” என்று தெரிவித்தது. கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததையே இது காட்டுவதாக பாஜக தெரிவித்துள்ளது. சரத் பவாரிடம் இது குறித்துக் கேட்டதற்கு, ``சின்னவர்களின் கருத்துக்கெல்லாம் பதிலளிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு