Published:Updated:

`சுதந்திர தின போஸ்டர் விவகாரம்'-பாஜக வை விமர்சிக்க தமிழக முதல்வர் ஸ்டாலினை மேற்கோள்காட்டிய சிவசேனா!

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

`நாட்டின் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட ஜவஹர்லால் நேருவை இந்த அளவுக்கு ஏன் வெறுக்கிறீர்கள்?' என்று சிவசேனா கேள்வி எழுப்பி இருக்கிறது.

நாட்டின் 75-வது சுதந்திரத்தையொட்டி மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட போஸ்டரில் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் படம் விடுபட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. சிவசேனாவும் இதனை கண்டித்துள்ளது. சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் ( (ICHR) வெளியிட்டுள்ள போஸ்டரில் ஜவஹர்லால் நேரு மற்றும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் ஆகியோரின் படங்கள் விடுபட்டு இருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். ( அந்த போஸ்டரில் மகாத்மா காந்தி, அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சாவர்க்கர், சர்தார் வல்லபாய் படேல், மதன் மோகன் மவுலியா, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன.) நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்களின் பெயர்களை மூடி மறைத்து புதிய வரலாற்றை எழுத நினைப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இது நல்லதல்ல. அரசின் குறுகிய மனப்பான்மையை இது காட்டுகிறது. இச்செயல் ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரரையும் அவமதிக்கும் செயலாகும்.

`கலைஞர் நினைவு நூலகம் கமிஷன் சர்ச்சை முதல் மோடியைத் தாக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ வரை' கழுகார் அப்டேட்ஸ்
சஞ்சய் ராவுத்
சஞ்சய் ராவுத்

சுதந்திரத்திற்கு பிறகு நேருவின் கொள்கையில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நேரு சுதந்திர போராட்டத்திற்கு ஆற்றிய பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. நேருவை இந்த அளவுக்கு வெறுக்க அவர் அப்படி என்ன செய்துவிட்டார். நேரு உருவாக்கிய அரசு நிறுவனங்களை இப்போது பொருளாதாரத்தை சரி செய்ய விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். நேருவின் நீண்ட காலத்திட்டத்தின் மூலம் நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பியது. தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக ஏற்கெனவே தயாராக இருக்கும் புத்தகப் பையில் இருந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்களை அகற்றாமல் அப்படியே மாணவர்களுக்கு கொடுக்கும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார். இது அவரின் அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது. நேருவை இந்த அளவுக்கு ஏன் வெறுக்கிறீர்கள்?. இதற்காக நாட்டிற்கு நீங்கள் பதிலளிக்கவேண்டும் என்று பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்தார். நாட்டை உருவாக்கியதில் நேரு மற்றும் இந்திரா காந்தியின் பங்களிப்பை உங்களால் அழிக்க முடியாது. நேருவின் பங்களிப்பை மறுப்பவர்கள் வரலாற்று வில்லன்களாகவே கருதப்படுவர் என்று குறிப்பிட்டுள்ளார். சஞ்சய் ராவத் ஒவ்வொரு வாரமும் ரோக்தாக் என்ற பெயரில் சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கையில் அரசியல் கட்டுரை எழுதி வருகிறார். இந்த வாரக் கட்டுரையில் மேற்கண்ட தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு