Published:Updated:

`பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனாவா இது?’ - பி.ஜே.பி-யுடன் தொடர் மோதலில் உத்தவ் தாக்கரே!

சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக ஆட்சிக்கு வந்த பின்னர், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். பி.ஜே.பி -யின் நீண்ட கால செயல்திட்டங்களை எதிர்க்கும் வகையில், உத்தவ் தாக்கரே மேற்கொள்ளும் முடிவுகள் அமைந்துள்ளன.

கடந்த 30 ஆண்டுகளாக சுமுகமாக நீடித்த பி.ஜே.பி - சிவசேனா கூட்டணி, முறிவுக்கு வர முக்கியக் காரணம், சிவசேனா கட்சி முன்வைத்த நிபந்தனைகளை பி.ஜே.பி ஏற்க மறுத்ததுதான். உத்தவ் தாக்கரே கேட்ட இரண்டரை ஆண்டுகால முதலமைச்சர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடம் ஆகியவற்றை வழங்கியிருந்தால், பி.ஜே.பி - சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்திருக்க அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆனால், 'சிவசேனா இதுபோன்ற நிபந்தனைகள் எதையும் கோரவில்லை' என பி.ஜே.பியும், 'நாங்கள் இந்த நிபந்தனையின் பெயரில்தான் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டோம்' என சிவசேனா கட்சியினரும் மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக்கொண்டதால், தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

அதன் விளைவாக சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ், கூட்டணி அமைத்து மகாராஷ்டிரத்தைக் கைப்பற்றியது. சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே முதலமைச்சரானார். அவர் ஆட்சிக்கு வந்த பின்னர், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். பி.ஜே.பி -யின் நீண்ட கால செயல்திட்டங்களை எதிர்க்கும் வகையில், உத்தவ் தாக்கரே மேற்கொள்ளும் முடிவுகளின் தொகுப்பு இது.

2
ஆரே காடுகள்

ஆரே பிரச்னைக்கு முடிவு!

மும்பை ஆரே பகுதியில், மெட்ரோ பணிகளை மேற்கொள்வதற்கு 2,702 மரங்களை வெட்ட மும்பை மெட்ரோ நிர்வாகம் ஆர்வம் காட்டிவந்தது. அதை எதிர்த்து, அந்தப் பகுதி மக்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மெட்ரோ நிர்வாகம் மும்பை மாநகராட்சியிடம் சரியான உரிமம் பெற்றுதான் மரங்களை வெட்டுவதாகவும், பசுமைத் தீர்ப்பாயம்தான் இந்தப் பிரச்னையில் தீர்வு காண முடியும் என்றும் தீர்ப்பளித்தது. பலரும் இதனை எதிர்த்து போராடத் தொடங்கினர்.

போராடிய செயற்பாட்டாளர்கள், காவல் துறையால் பல்வேறு வழக்குகளின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். மக்கள் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கடிதம் ஒன்றை எழுதினர். அதை அவசர வழக்காகக் கருதி, ஆரே பகுதியில் மரங்களை வெட்டக்கூடாது என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். மேலும், இந்த வழக்கில் சுற்றுச்சூழல் அமைச்சகம் இணைக்கப்பட்டு, அங்கு நடைபெறும் பணிகளைக் கண்காணிக்க வேண்டும் எனக் கூறி, தீர்ப்பை ஒத்திவைத்தது.

தேர்தல் நடைபெற்ற பின்னர், புதிகாகப் பொறுப்பேற்றுள்ள சிவசேனா கட்சி, ஆரே போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது, ஆரே பகுதியில் நடைபெறும் மெட்ரோ பணிகளை முழுமையாக நிறுத்துவது என அதிரடி முடிவுகளை அறிவித்துள்ளது.

3
குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்புப் போராட்டம் - மும்பை

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு!

இந்தியா முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. முஸ்லிம்கள் மற்றும் இலங்கையிலிருந்து குடிபெயரும் தமிழர்களுக்கு இந்தச் சட்டம் எதிராக இருப்பதாக, பல மாநில அரசுகள் இதை எதிர்த்து வருகின்றன. தன்னை சந்தித்த முஸ்லிம் சமூகப் பிரதிநிகளிடம் பேசிய உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவில் தடுப்புக்காவல் முகாம்கள் எதுவும் கட்டப்படாது எனவும், மகாராஷ்ட்ர மாநில அரசு தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்தாது எனவும் உறுதியளித்துள்ளார்.

4
நீதிபதி லோயா

நீதிபதி லோயா மரண வழக்கு!

குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித் ஷா பதவி வகித்த போது நடந்த போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டவர் சோராபுதீன் ஷேக். இந்தப் போலி என்கவுன்டரில் அமித் ஷா-வின் தலையீடு இருப்பதாகவும், அவரின் அறிவுறுத்தலின் பேரில்தான் இந்த என்கவுன்டர் நிகழ்த்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததன் பேரில், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்துக்கு, நீதிபதி லோயா தலைமையின் கீழ் மாற்றப்பட்டது. 2014-ம் ஆண்டு, மத்தியில் பி.ஜே.பி ஆட்சி அமைந்த சில மாதங்களில், விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது நண்பரின் குடும்ப நிகழ்ச்சிக்குச் சென்ற நீதிபதி லோயா, மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர் மறைந்தபின், மற்றொரு நீதிபதியின் தீர்ப்பால், அமித் ஷா விடுவிக்கப்பட்டார். லோயா மரணத்தின் மீதான சந்தேகம் குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது, நீதிபதிகள் தீபக் மீஸ்ரா, சந்திர சூட், கன்வில்கர் ஆகியோர் தீர்ப்பை வழங்கினர். 'வழக்கு முழுக்க அரசியல் ஆதாயங்களைக் கொண்டுதான் தொடுக்கப்பட்டது' என்றும், இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்தின் நேரத்தைக் கெடுப்பதாகவும் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

தற்போது, புதிதாக ஆட்சியமைத்த உத்தவ் தாக்கரே அரசோ, இந்த வழக்கை மீண்டும் கையில் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வு நடந்து 15 வருடங்களுக்கு மேலாகிய பின்பும் அதன் மீதான விமர்சனங்கள் குறைந்தபாடில்லை. லோயா மரணத்தை விசாரிப்பதாக சிவசேனா அறிவித்தது, பி.ஜே.பி உட்பட, அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.

5
பீமா கோரேகான்- கைது செய்யப்பட்ட ஐவர்

பீமா கோரேகன் போராட்டக்காரர்களை விடுவிக்க நடவடிக்கை!

கடந்த ஆண்டு, பீமா கோரேகன் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சமூக செயற்பாட்டாளர்கள் கௌதம் நவ்லாக்கா, ஆனந்த் தெல்டும்டே, ரோனா வில்சன், சுதா பரத்வாஜ், சுதிர் தவாலே, மகேஷ் ராவத் முதலானோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், செயல்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. 40 முறைக்கும் மேல் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துவிட்டபோதும், இதற்கான முடிவு இன்னும் எட்டப்படவில்லை. மகாராஷ்டிர அரசு, இந்த வழக்கைத் தள்ளுபடிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சிவசேனாவின் இந்த நிலைப்பாடு பி.ஜே.பி-யை அசைத்துப் பார்த்துள்ளது. மராட்டிய பி.ஜே.பி-யின் அமித் மாளவியா, "பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனாவா இது?" என்று வருந்தி, கருத்துத் தெரிவித்தார்.

சி.ஏ.ஏ-வுக்கு எதிராக பினராயி... நிவாரணம் தர மறுக்கும் மோடி அரசு!
6
Free Kashmir

காஷ்மீர் பிரச்னையில் சிவசேனா நிலைப்பாடு!

ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்தவர்கள், மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு ஹிந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதலைக் கண்டிக்கும் வகையில், நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையிலும் மாணவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மாணவி ஒருவர் 'Free Kashmir' என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டார். 'காஷ்மீருக்கு விடுதலை' என்ற பதாகையை பி.ஜே.பி-யினர், நாட்டிற்கு எதிரான செயல் என்று கண்டித்திருக்கும் வேளையில், ஆளும் சிவசேனா மற்றும் கூட்டணிக் கட்சியினர் இதனை ஆதரித்துள்ளனர்.

சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான 'சாம்னா', அந்தப் பதாகையைக் கையில் ஏந்திய 'மராட்டியப் பெண்ணுக்கு' ஆதரவாக சிவசேனா நிற்கும் எனத் தலையங்கம் எழுதியுள்ளது. காஷ்மீரில், கடந்த நான்கு மாதத்துக்கும் மேலாக தொலைத்தொடர்பு, இணைய சேவை துண்டிக்கப்பட்ட நிலையில், தற்போதுதான் அதன் சேவை தொடங்கியுள்ளது. இதன் காரணமாகத்தான், மாணவி சுதந்திர காஷ்மீர் என்ற பதாகையை ஏந்தியதாக சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

இப்படி ஒவ்வொரு முடிவையும் பி.ஜே.பி-யின் நிலைப்பாடுகளுக்கு எதிராக முன்வைக்கிறது சிவசேனா. மேலும், பல ஆண்டுகளாக நிலவிவந்த மத மோதல்களைப் பின்னுத்தள்ளி, முஸ்லிம் சமூகத்துடன் இணக்கமான போக்கைக் கடைபிடிக்க முயல்கிறது. இத்தனை ஆண்டுகளாக, பி.ஜே.பி-யின் மதக்கொள்கைகளுக்கு ஆதரவு, மராட்டிய இனத்திற்கான முக்கியத்துவம் எனப் பேசி வளர்ந்த சிவசேனா, தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி, பி.ஜே.பி-யின் நடவடிக்கைகளை எதிர்ப்பது என மாறிவருவது உத்தவ் தாக்கரேவுக்கு பாராட்டுகளை ஈட்டுகிறது.

- தனிமொழி

அடுத்த கட்டுரைக்கு