Published:Updated:

`சிவசேனா என்றால் `சிவன் படை’ அல்ல. மராட்டிய சிவாஜியின் படை!’- சிவசேனா கடந்துவந்த பாதை

பால் தாக்கரேவுடன் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே
பால் தாக்கரேவுடன் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே

அஜித் பவாரை வளைத்து, நள்ளிரவில் ஜனாதிபதி ஆட்சியை ரத்துசெய்து, ரகசியமாக பதவிப் பிரமாணம் நடத்திய பி.ஜே.பி-யின் ஜனநாயகப் படுகொலைக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் பச்சை சந்தர்ப்பவாதம்!

விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் சிலரின் குரல்கள், 1980-களில் தமிழகத்தில் கேட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது. ஆனால், தமிழகத்திற்கு வெளியே மராட்டியத்திலும் எதிரொலித்தது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரர், பால் தாக்கரே! ‘'இலங்கையில் கொல்லப்படும் தமிழர்கள் இந்துக்கள். அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கம். அதற்கு எனது ஆதரவு உண்டு'’ என்று பகிரங்கமாகவே அறிவித்தவர் பால் தாக்கரே.

1966 ஜூன் 19-ம் தேதி, பால் தாக்கரேவின் ‘சிவசேனா’ உதயமானது. சிவசேனா பிறப்பதற்கு, சின்ன ஃபிளாஷ்பேக் உண்டு.

சிவசேனா
சிவசேனா

வார்த்தைகளில் அக்னியை உமிழும் அரசியல்வாதிகளில் பால் தாக்கரேவுக்கு தனி இடம் உண்டு. அறுபதுகளில் ‘பிரீ பிரஸ் ஜர்னல்’ என்ற பத்திரிகையில், புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணனுடன் கார்ட்டூனிஸ்டாக வேலைபார்த்துக் கொண்டிருந்தார், பால் தாக்கரே. அந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து பம்பாயில் குடியேறிய உயர் சாதியினர், மகாராஷ்டிர அரசில் முக்கியப் பதவிகளைப் பிடித்திருந்தனர். இந்தியாவின் வணிகத் தலைநகரான பம்பாயின் தொழில்களில் எல்லாம் குஜராத்தி, பார்சி சமூகத்தினர் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தார்கள்.

பம்பாயின் வணிகம் மற்றும் தொழில் வளர்ச்சியால் அந்த இடத்தைத் தேடி மற்ற மாநிலத்தவர்கள் இயற்கையாகவே இடம் பெயர ஆரம்பித்தார்கள். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தக் குடியேற்றங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன. பம்பாயின் தெருக்களின் எதிர்ப்படும் நபர்களில் ஒரு தமிழரையாவது பார்த்துவிட முடியும். பிற மாநிலத்தவர்கள் பம்பாயில் கால்பதிக்க ஆரம்பித்ததைக் கண்டு கொதித்துப் போனார், பால் தாக்கரே.

பால் தாக்கரே
பால் தாக்கரே

‘மராத்தியன் தெருவில் நிற்கிறான்’ என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். ‘லுங்கி ஹடாவோ... புங்கி பஜாவோ.’ (லுங்கி அணிந்த தென் இந்தியரை விரட்டுவோம். மராத்தியரைப் பாதுகாப்போம்) என்ற கோஷத்தை முன்வைத்தார். ‘மராத்தியர் அல்லாதவர்கள் பம்பாயைவிட்டு வெளியேற வேண்டும். இல்லை, வெளியேற்றுவோம். மராத்தி மண் மராத்தியருக்கே’ என கர்ஜித்தார். தனது போராட்டத்தை வலுப்படுத்த அவர் ஆரம்பித்த கட்சிதான் சிவசேனா. அன்றைக்கு காங்கிரஸ் முதல்வராக இருந்த வசந்த்ராவ் நாயக்தான் சிவசேனாவைத் தொடங்கி வைத்தார். அந்தக் கட்சியின் ஆதரவோடுதான் இப்போது அரியணையில் ஏறியிருக்கிறது சிவசேனா. இடைப்பட்ட காலத்தில், காங்கிரஸுக்கும் சிவசேனாவுக்கும் இடையே நடந்த பூசல்கள் எல்லாம் புனிதத்துவம் அடைந்துவிட்டன.

'இதயமே இல்லாத மனிதர்' என பால் தாக்கரேவை ஊடகங்கள் வர்ணித்தபோது, ''பீர்தான் எனக்குப் பிடிக்கும். டின் பீர் ரசித்துச் சாப்பிடுவேன். ஆனால், இதயநோயாளிகளுக்கு அது ஏற்றுக் கொள்ளாது என டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். வேண்டுமானால் ரெட் ஒயின் குடிக்கச் சொல்கிறார்கள். அது இதயத்துக்கு இதமானது. ஆனால், பத்திரிகையாளர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். எனக்கு இதயமே இல்லை என்று எழுதுகிறவர்கள்தானே நீங்கள்’’ என பிரஸ் மீட் ஒன்றில் சொன்னார் பால் தாக்கரே. கார்ட்டூனுக்கு எனத் தனியாக ‘மார்மிக்’ வார இதழை ஆரம்பித்தார் பால் தாக்கரே. பத்திரிகையாளன், சமூக சேவகன் அடையாளங்கள் பெரிய ஆளுமையாக பால் தாக்கரேவை மாற்றியது.

சிவசேனா
சிவசேனா

சிவசேனா என்றால், ‘சிவன் படை’ எனப் பொருள் அல்ல. அது மராட்டிய சிவாஜியின் படை. சமூக சேவையோடு தாய்நாட்டுப் பற்று கொண்டவர்கள்தான் சிவசேனாவில் சேர்க்கப்பட்டார்கள். பால் தாக்கரே பேசினால் லட்சம் பேர் கூடுவார்கள். ‘‘சிவசேனா-வின் கொள்கைக்கு எதிராகச் செயல்படுகிறவர்களை உதைக்கிற தொண்டர்கள்தான் எனக்கு வேண்டும். மராத்திகளுக்கே பம்பாய் சொந்தம். அதை நாம் காக்க வேண்டும். சட்டபூர்வமாக அதைச் செய்ய முடியவில்லை என்றால், சட்டவிரோத வழிகளிலாவது இறங்க வேண்டும்’’ என அதிரடியாகப் பேசுவார் பால் தாக்கரே.

மராத்தி அல்லாதவர்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார், எழுதினார் பால் தாக்கரே. அவர் நடத்திய ‘மர்மிக்’ என்ற மராத்தி வார இதழில் ஆக்ரோஷக் கட்டுரைகளை எழுதிக் குவித்தார். அவருடைய பேச்சுகள், எழுத்துகள் குறிப்பாக மராத்திய இளைஞர்களை உசுப்பேற்றியது. அது, அறிவிக்கப்படாத போராட்டமாகவும் வெடித்தது. ‘சிவசேனா’ முதலில் பதம் பார்த்தது பம்பாயில் இருந்த உடுப்பி ஓட்டல்களைத்தான். ‘வந்தேறி’களான குஜராத்தியர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் மீதும் அவர்களது கடைகள், உணவகங்கள் மீதும் தாக்குதலை நடத்தியது.

ரஜினியுடன் பால் தாக்கரே
ரஜினியுடன் பால் தாக்கரே

பிற மாநிலத்தவர்களுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு தூண்டிவிடப்பட்ட நிலையில், குஜராத்தி மொழி பேசுபவர்கள் வாழும் பகுதிகள், பம்பாய் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு, 1960-ம் ஆண்டு குஜராத் என்ற புதிய மாநிலம் உருவானது. பம்பாயில் பிறந்த அமித் ஷா, பிறகு குஜராத் வாசி ஆகிவிட்டார். தான் பிறந்த மகாராஷ்டிராவின் மீது அமித் ஷா-வுக்கு அதிக அக்கறை உண்டு. இந்துத்துவா கொள்கையைக் கொண்ட சிவசேனாவுடன் பி.ஜே.பி இயற்கையாகவே கூட்டணி அமைத்துக் கொண்டது. மராட்டியத்தில் ஆட்சியையும் சேர்ந்தே பகிர்ந்து கொண்டது. தான் பிறந்த மண்ணில் அமித் ஷா-வின் சாணக்கியத்தனம் தோற்றுப்போனது மட்டுமல்ல, இந்துத்துவ கொள்கை கொண்டவர்களே முதுகில் குத்துவார்கள் என அமித் ஷா நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்.

பிற மாநிலத்தவர்களின் மீதான சிவசேனாவின் எதிர்ப்பு உணர்வு எழுபதுகளில் குறைய ஆரம்பித்தது. ஆனால், அதற்குக் கொஞ்சமும் சளைக்காத இந்துத்துவா கொள்கை சூடு பறக்கத் தொடங்கிவிட்டது. பாகிஸ்தான், முஸ்லிம் எதிர்ப்புப் பிரசாரத்தை கையில் எடுக்க ஆரம்பித்தார் தாக்கரே. காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளஞ்சோடிகளைத் தாக்கியது சிவசேனா. கலாசாரக் காவலராகவே நினைத்துக் கொண்டது. ஆனால், 'கலாசார சீர்கேடு' எனச் சொன்ன சிவசேனா, மைக்கேல் ஜாக்ஸன் இசை நிகழ்ச்சியை மும்பையில் நடத்தியது.

பால் தாக்கரே
பால் தாக்கரே

பாகிஸ்தான் எதிர்ப்புணர்வு காரணமாக, அந்த நாட்டுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று பிரசாரத்தை மேற்கொண்டது சிவசேனா. கிரிக்கெட் மைதானங்களில் அதிரடியாக நுழைந்து, பிட்ச்களை சேதப்படுத்தியது. சிவசேனாவுக்கு எதிராகப் பேசிய, எழுதியவர்கள் மீதெல்லாம் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதில் பத்திரிகைகளும் டி.வி-களும்கூட தப்பவில்லை. தேசபக்த சவடால் அடித்துக் கொண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களையும் கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் அச்சுறுத்தியது.

முஸ்லிம்களுக்கு எதிராக, திட்டமிட்டு வன்முறை நடத்தத் தொடங்கினார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பம்பாயில் நடத்திய வன்முறை, வரலாற்றுக் கறை. அதற்குப் பதிலடியாகத்தான் பம்பாய் குண்டு வெடிப்புகள் நடந்தன. பாபர் மசூதி இடிப்பின்போது நடைபெற்ற வன்முறைகளை விசாரிக்க அப்போதைய மராட்டியக் காங்கிரஸ் அரசு, கிருஷ்ணா கமிஷனை அமைத்தது. பால் தாக்கரே மற்றும் சிவசேனா மீது கமிஷன் குற்றம் சுமத்த, பால் தாக்கரே மீது வழக்குகள் பாய்ந்தன. ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு, 2000-ம் ஆண்டில் பால் தாக்கரே விடுதலை ஆனார்.

அமித்ஷாவுடன் உத்தவ் தாக்கரே
அமித்ஷாவுடன் உத்தவ் தாக்கரே

இந்துத்துவாவை தூக்கிப்பிடிக்கும் சிவ சேனாவின் கொடி, காவி நிறத்தில் காட்சி அளிப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. கட்சியின் தேர்தல் சின்னமான வில்-அம்பு கொடியில் பளிச்சிடுகிறது. ‘சேனா பவன்’தான் கட்சியின் தலைமையகம். ‘சாம்னா’ என்ற பத்திரிகைதான் ‘சிவசேனா’வின் அதிகாரபூர்வ நாளேடு.

இந்தியா முழுவதும் இருக்கும் பத்திரிகைகளில் எல்லாம் 'சாம்னா 'பெயர் அடிபடாமல் இருந்ததில்லை. 'சாம்னா'வில் தாக்கரே பரபரப்புக் கட்டுரை எழுதினால், அடுத்த நாளே மும்பாயில் வன்முறை தாண்டவமாடும். மராட்டியர்களோ, பால் தாக்கரேவை சிவாஜியின் அவதாரமாகப் பார்த்தார்கள்.

பால் தாக்கரேவுடன் உத்தவ் தாக்கரே
பால் தாக்கரேவுடன் உத்தவ் தாக்கரே

அரசியலிலும் ‘சிவசேனா’ கோலோச்சியது. எந்தத் தேர்தலிலும் பால் தாக்கரே போட்டியிட்டது கிடையாது. ஆனால், அவர் ரிமோட் கன்ட்ரோலில்தான் ஆட்சியே நடக்கும். இந்துத்துவா கொள்கையால் சிவசேனாவும் பி.ஜே.பி-யும் கூட்டணி அமைத்தன. மராட்டிய அரசியலைப் பொறுத்தவரை 1995-ம் ஆண்டுக்குப் பிறகு எந்தக் கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைத்ததில்லை. சிவசேனா, பி.ஜே.பி, காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு மட்டுமே சரி சமமான அளவில் செல்வாக்கு இருந்துவருகிறது.

1995-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், சிவசேனா - பி.ஜே.பி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த மனோகர் ஜோஷியை முதல்வர் ஆக்கினார் தாக்கரே. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஜோஷியை மாற்றிவிட்டு, நாராயணன் ரானே முதல்வர் ஆக்கப்பட்டார். அவர் 9 மாதங்கள் மட்டுமே முதல்வராக இருந்தார்.

தேவேந்திர பட்னாவிஸும், அஜித் பவாரும் பதவியேற்ற போது
தேவேந்திர பட்னாவிஸும், அஜித் பவாரும் பதவியேற்ற போது

1999-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், சிவசேனாவுக்கு 69 இடங்களும் பி.ஜே.பி-க்கு 56 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸுக்கு 75 இடங்களும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 58 இடங்களும் கிடைத்தன. சுயேட்சைகள் ஆதரவுடன் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அரசு மராட்டியத்தில் அமர்ந்தது. 2004 சட்டசபைத் தேர்தலில், சிவசேனா 62, பி.ஜே.பி. 54, காங்கிரஸ் 69, தேசியவாத காங்கிரஸ் 71 இடங்களைப் பிடித்தன. மீண்டும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அரசு அமைந்தது.

இந்திய அளவில் பி.ஜே.பி தலைமையிலான ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’யில் சிவசேனா இடம்பெற்றிருந்தது. 1999-ம் ஆண்டு, மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பி.ஜே.பி ஆட்சி அமைந்தபோது, நாடாளுமன்ற சபாநாயகராக பாலயோகி பதவி வகித்தார். விமான விபத்தில் அவர் இறந்துபோக, அந்த இடத்திற்கு சிவசேனா கட்சியைச் சேர்ந்த மனோகர் ஜோஷி தேர்வு செய்யப்பட்டார். 1998-1999-ம் ஆண்டு மற்றும் 1999-2004-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அமைச்சரவைகளில் சிவசேனா இடம்பெற்றது. அது, மோடி ஆட்சியிலும் தொடர்ந்தது.

சிவசேனா மட்டும் விதிவிலக்கல்ல. இங்கேயும் வாரிசு அரசியல்தான். இவரது தம்பி மகன் ராஜ் தாக்கரேதான் சிவசேனாவின் அடுத்த தலைவராக அடையாளம் காட்டப்பட்டார். பால் தாக்கரே ஆரம்ப காலத்தில் எதைக் கையில் எடுத்தாரோ அதே ஆயுதத்தை ராஜ் தாக்கரேயும் எறிந்தார். பிறகு, தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே அரசியலுக்கு வந்தபோது, செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். சர்வாதிகாரமாகத்தான் கட்சியை நடத்துவார் பால் தாக்கரே. அதே பிம்பம்தான் உத்தவ் தாக்கரேவுக்கும். இப்போது, மகாராஷ்டிராவில் பி.ஜே.பி-யோடு நடத்திய மல்லுக்கட்டு, அதற்கு சரியான சாம்பிள்.

``இதெல்லாம் மக்களின் வரிப்பணம் இல்லையா?'' - ரவீந்திரநாத் குமாருக்கு பத்து கேள்விகள்!

எம்.எல்.ஏ, எம்.பி, முதல்வர் என எந்த அரசுப் பதவியையும் தாக்கரேவோ அவர் குடும்பமோ விரும்பியது இல்லை. இதெல்லாம் பால் தாக்கரே உயிருடன் இருந்த வரையில்தான். பால்தாக்கரேயின் மறைவுக்குப் பின் சிவசேனாவின் தலைமைப் பொறுப்பேற்ற உத்தவ் தாக்கரேயும் தந்தை வழியில் கட்சிப் பொறுப்புகளை மட்டுமே வகித்துவந்தார். தந்தையை மிஞ்சி முதல்வர் நாற்காலியில் அமர இந்துத்துவாவையே எதிர்க்கும் காங்கிரஸுடனும் தேசியவாத காங்கிரஸுடனும் கைகோத்துக் கொண்டார். அதேவேளை, ''சிவசேனாவை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பேன்'' என தந்தைக்கு செய்துகொடுத்த சத்தியத்தை நிறைவேற்றிவிட்டேன் எனக் கொக்கரிக்கிறார்.

தேவேந்திர பட்னாவிசுடன் உத்தவ் தாக்கரே
தேவேந்திர பட்னாவிசுடன் உத்தவ் தாக்கரே

2012 செப்டம்பரில், சாம்னாவில் காங்கிரஸில் நடக்கும் வாரிசு அரசியலை எதிர்த்து கடுமையாக எழுதினார் பால் தாக்கரே. அவரது மகனே சிவசேனாவுக்குப் பிறகு தலைவர் ஆனதும், இன்றைக்கு மராட்டியத்தின் முதல்வர் ஆவதும், வாரிசு பேரன் ஆதித்யா எம்.எல்.ஏ ஆவதும் காலத்தின் கோலம்.

பிற மாநிலத்தவர் ஆதிக்கம், இந்துத்துவா, பாகிஸ்தான் எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு ஆகியவற்றுக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல சிவசேனாவின் காங்கிரஸ் எதிர்ப்பு. சோனியாவையும் காங்கிரஸையும் கடுமையாக எதிர்த்தது சிவசேனா. பி.ஜே.பி -க்கும் சிவசேனாவுக்கும் கொள்கை மாறுபாடுகள் எதுவும் இல்லை. சிவசேனா காங்கிரஸ் ஆதரவு பெறுவதும் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதும்கூட சந்தர்ப்பவாத அரசியல்தான்.

சரத் பவாருடன் உத்தவ் தாக்கரே
சரத் பவாருடன் உத்தவ் தாக்கரே

இந்திய ஜனநாயகத்தில் தேர்தல்கள் வெளிப்படையாக நடக்கிறது. ஆனால், முதல்வர் பதவியேற்பை ரகசியமாக நடத்தி ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கியது பி.ஜே.பி. ஆனால், அதற்கு கொஞ்சமும் சளைக்காமல், வெளிப்படையாகவே பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்சியைப் பங்குபோட்டுக் கொண்டிருக்கின்றன, சிவசேனாவும் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும்.

அடுத்த கட்டுரைக்கு