Published:Updated:

சொந்த காரணங்களுக்காக பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறேன்! - ரகசியம் உடைத்த ‘சோழவந்தான்’ மாணிக்கம்...

‘சோழவந்தான்’ மாணிக்கம். ‘பா.ஜ.க - வில் சேர்ந்தபோது...
பிரீமியம் ஸ்டோரி
News
‘சோழவந்தான்’ மாணிக்கம். ‘பா.ஜ.க - வில் சேர்ந்தபோது...

யாருடைய வற்புறுத்தலின் காரணமாகவோ அல்லது மிரட்டலின் காரணமாகவோ நான் பா.ஜ.க-வுக்குச் செல்லவில்லை.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அ.தி.மு.க-வில் பஞ்சாயத்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த நிலையில், சத்தமே இல்லாமல் பா.ஜ.க-வுக்கு நடையைக்கட்டினார் அந்தக் கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினராக இருந்த ‘சோழவந்தான்’ மாணிக்கம். ‘பா.ஜ.க மிரட்டியதால் அந்தக் கட்சிக்குச் சென்றார்... அடுத்த சில தினங்களிலேயே மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டார்...” என்றெல்லாம் தகவல்கள் றெக்கைகட்டிப் பறக்கும் சூழலில் மாணிக்கத்தை நேரில் சந்தித்துப் பேசினோம்...

“திடீரென பா.ஜ.க-வுக்குத் தாவி, மறுபடியும் அ.தி.மு.க-வுக்கு வந்துவிட்டீர்கள் என்று தகவல்கள் பரபரக்கின்றனவே?’’

“பா.ஜ.க-விலிருந்து நான் அ.தி.மு.க-வுக்கு மீண்டும் திரும்பிவிட்டதாக வெளியான செய்திகள் தவறானவை. இது குறித்து உடனடியாக மறுப்பையும் தெரிவித்துவிட்டேன். பா.ஜ.க-வில் இணைந்த பிறகு, மதுரை விமான நிலையத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தைப் பார்க்க நேரிட்டது. அப்போது மரியாதை நிமித்தமாக இருவரும் வணக்கம் தெரிவித்துக்கொண்டோம்... அவ்வளவுதான். பத்திரிகைகள்தான் செய்தியைத் திரித்து வெளியிட்டுவிட்டன.’’

மாணிக்கம்
மாணிக்கம்

“ஆனால், ‘அ.தி.மு.க என்னை வாழவைக்கவும் இல்லை; வாழவிடவும் இல்லை’ என்றெல்லாம் நீங்கள் வருத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனவே?’’

“அவையெல்லாம் பொய்யான செய்திகள். அ.தி.மு.க எனக்கு உரிய மரியாதை தந்திருக்கிறது, என்னை நல்லபடியாக வாழவும்வைத்திருக்கிறது. அ.தி.மு.க-வோடு கருத்து வேறுபாடு எதுவும் எனக்குக் கிடையாது. அந்தக் கட்சியைப் பற்றி நான் ஒருபோதும் குறை சொல்ல மாட்டேன். பிரதமர் மோடி ஒரு சிறந்த நிர்வாகி. அவரது சிறப்பான செயல்பாடுகள்தான் என்னைப் பா.ஜ.க-வில் சேரத் தூண்டின. வேறெந்தக் காரணமும் இல்லை!’’

“கடந்த நவம்பர் 24-ம் தேதி அன்றுதான், ‘பிரதமர் மோடி, சிறந்த நிர்வாகி’ என்று உங்களுக்குத் தெரியவந்ததா?’’

“ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க மீதிருந்த பற்றின் காரணமாக பிரதமர் மோடி, ‘கோழி தன் குஞ்சைப் பாதுகாப்பதுபோல’ அ.தி.மு.க-வைப் பாதுகாத்து பக்கபலமாக இருந்தார். அதனால்தான் தி.மு.க-வினர் மற்றும் சில விஷமத்தனமானவர்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்தபோதும் தொடர்ந்து ஐந்தாண்டுகள் அ.தி.மு.க ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்தது. இதையெல்லாம் கடந்தகால அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியின்போதே நான் அனுபவபூர்வமாகவே உணர்ந்துகொண்டேன். இப்போது காலம் கனிந்து வந்திருக்கிறது... அந்தக் கட்சியில் சேர்ந்துவிட்டேன்.’’

“ ‘மோடி எங்கள் டாடி’ என்றவர்கள்கூட அ.தி.மு.க-விலேயே தொடரும்போது, எதுவுமே பேசாத நீங்கள் பா.ஜ.க-வுக்குத் தாவியது ஏன்?’’

“அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் பா.ஜ.க-வை விரும்பியிருக்கிறார்கள் என்பதை நீங்களே சொல்கிறீர்கள். அதேபோல், அன்றைக்கு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்த நானும்கூட பா.ஜ.க மீதும், பிரதமர் மோடி மீதும் மிகுந்த பற்றோடுதான் இருந்துவந்தேன். பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோதுகூட, பிரதமர் மோடி எங்களைத் தனியே சந்தித்துப் பேசினார். ‘எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார். அப்போதிருந்தே மோடியை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.’’

“ஆனால், நீங்கள் பா.ஜ.க-வில் இணைந்ததன் பின்னணியில் சிலரது மிரட்டல்கள் இருந்ததாகச் சொல்கிறார்களே?’’

“யாருடைய வற்புறுத்தலின் காரணமாகவோ அல்லது மிரட்டலின் காரணமாகவோ நான் பா.ஜ.க-வுக்குச் செல்லவில்லை. எனது சொந்தக் காரணங்களுக்காக, சொந்த விருப்பத்தின் பேரில் சுயமாக முடிவெடுத்துத்தான் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறேன். அந்தக் கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. தி.மு.க-வின் தவறுகளை தோலுரித்துக் காட்டும் தலைவராக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இருக்கிறார். அவரது செயல்பாடும் எனக்குப் பிடித்திருக்கிறது.’’

சொந்த காரணங்களுக்காக பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறேன்! - ரகசியம் உடைத்த ‘சோழவந்தான்’ மாணிக்கம்...

“வெளிப்படையாகவே கேட்கிறேன்... நீங்கள் சரிவர ஜி.எஸ்.டி வரி கட்டவில்லை என்றும், அதையொட்டி வந்த மிரட்டலின் பேரிலேயே பா.ஜ.க-வில் இணைந்திருப்பதாகச் சொல்கிறார்களே?’’

“1991-லிருந்தே கட்டுமான நிறுவனம் ஒன்றில் இயக்குநராக இருந்தேன். எம்.எல்.ஏ ஆன பிறகு அந்தப் பதவியிலிருந்து விலகிவிட்டேன். அந்த நிறுவனத்தில் எனது மெஷினரீஸ்தான் இருந்தன. அதற்கான வாடகையை மட்டுமே பெற்றுவந்தேன். அதற்கான ஜி.எஸ்.டி வரியையும் முறையாகக் கட்டி வந்திருக்கிறேன். ஜி.எஸ்.டி வரி கட்டவில்லை, மிரட்டல் விடுத்தனர் என்பதெல்லாம் பொய்.”

“உங்களுக்கு கான்ட்ராக்ட் வேலைகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதாலேயே கட்சி மாறிவிட்டீர்கள் என்றும் கிசுகிசுக்கிறார்களே?’’

“நான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோதே கான்ட்ராக்ட் வேலைகளை எடுத்துச் செய்ததில்லை. நான் மிகச்சரியாக நடந்துகொள்வதால், என் அரசியல் எதிரிகளுக்கு என்மீது குறை சொல்ல எந்தக் குற்றச்சாட்டும் கிடைக்கவில்லை. அதனாலேயே, ‘கான்ட்ராக்ட் கிடைக்கவில்லை... கட்சியைவிட்டுப் போய்விட்டார்’ என்றெல்லாம் கொச்சையான செய்திகளைப் பரப்பிவருகிறார்கள். இவர்கள் சொல்வதுபோல், கான்ட்ராக்ட் கிடைக்கவில்லை என்று நான் கட்சி மாறியிருந்தால், தி.மு.க-வுக்குத்தானே மாறியிருக்க வேண்டும்... தமிழ்நாட்டில் பா.ஜ.க-வினருக்கு கான்ட்ராக்ட் கொடுக்கிறார்களா என்ன? அடுத்து, கான்ட்ராக்ட் எடுத்துச் செய்யவேண்டிய அவசியமே எனக்குக் கிடையாது. என் மனைவி, எல்.ஐ.சி-யில் வேலை செய்கிறார். என் மகள் மருத்துவர். நான் இன்ஜினீயர்... எங்கள் குடும்பம் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல.’’