Published:Updated:

`காங்கிரஸ்மீது கோபம்; தி.மு.க மீது திடீர் பாசம்!’ - கட்சி தாவும் சோளிங்கர் செல்வந்தர்

ஏ.எம்.முனிரத்தினம்
ஏ.எம்.முனிரத்தினம்

``இப்போதுள்ள சூழலில், நான் காங்கிரஸிலிருந்து விலகி தி.மு.க-வுக்குச் செல்வதே சரியாக இருக்கும்’’ என்கிறார் சோளிங்கர் செல்வந்தர் ஏ.எம்.முனிரத்தினம்.

சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றன தமிழக அரசியல் கட்சிகள். கூட்டணி பேரம், முக்கியப் பிரமுகர்களின் கட்சித்தாவல் என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தநிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவரும், ஸ்ரீபாரதி பஸ்களின் அதிபரும், பாரம்பர்ய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த செல்வந்தருமான ஏ.எம்.முனிரத்தினம் நாளை மறுநாள் (26-ம் தேதி) தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணையவிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஆர்.காந்தி செய்துவருகிறார்.

தி.மு.க-வினரைச் சந்தித்த முனிரத்தினம்
தி.மு.க-வினரைச் சந்தித்த முனிரத்தினம்

``வரும் சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் போட்டியிடுவதற்கான எம்.எல்.ஏ சீட்டும், கட்சியில் மாவட்ட அளவிலான பொறுப்பும் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்கிற இரண்டு நிபந்தனைகளுடன் முனிரத்தினம் கட்சி தாவுகிறார்’’ என்கிறார்கள்.

காங்கிரஸைத் தூக்கியெறிந்துவிட்டு, தி.மு.க-வில் இணைவதற்கான காரணம் குறித்து முனிரத்தினத்திடமே பேசினோம். ``நாளை மறுநாள் தி.மு.க-வுக்குச் செல்கிறேன். 1945-லிருந்து என்னுடைய குடும்பமே காங்கிரஸ் கட்சிக்காக உழைத்துவருகிறது. என் அண்ணன் ஏ.எம்.பொன்னுரங்க முதலியார் 1962 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் இரண்டு முறை சோளிங்கர் தொகுதியில் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மற்றோர் அண்ணன் ஏ.எம்.வேலு 1980 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியின் எம்.பி-யாக இருந்தவர். நான் 1989-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு, முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குச் சென்றேன். இதையடுத்து, 1991-லும் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனேன். 1996-ம் ஆண்டு மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்து வெற்றிபெற்றேன். மீண்டும் காங்கிரஸில் இணைந்துவிட்டோம். 2006-ல் காங்கிரஸ் கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டத் தலைவராக பொறுப்புவகித்தேன்.

தி.மு.க மாவட்டச் செயலாளருடன் முனிரத்தினம்
தி.மு.க மாவட்டச் செயலாளருடன் முனிரத்தினம்

அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எனக்கு `சீட்’ கொடுக்கவில்லை. 2011-ல் சீட் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். காங்கிரஸ் கட்சி கைவிட்டது. அந்த ஆத்திரத்தில், `காஸ்’ சின்னத்தில் சுயேச்சையாகக் களமிறங்கினேன். தோல்வியைத் தழுவியிருந்தாலும், 62,000 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்து செல்வாக்கைக் காட்டினேன். இதையடுத்து, 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி என்னைக் களமிறக்கியது. அ.தி.மு.க வெற்றிபெற்றுவிட்டது. நான் தோல்வியடைந்துவிட்டேன். இப்போதுள்ள சூழலில், நான் தி.மு.க-வுக்குச் செல்வதே சரியாக இருக்கும் என்பதால் காங்கிரஸிலிருந்து விலகுகிறேன்’’ என்றவரிடம்...

``வரும் சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க வேட்பாளராக நீங்கள் சோளிங்கர் தொகுதியில் போட்டியிடலாம் என்று பேச்சு அடிபடுகிறதே..?’’ என்று கேள்வி எழுப்பினோம்.

அதற்கு அவர், ``இப்போது, எதையும் சொல்லிவிட முடியாது. தி.மு.க-வில் இணைந்த பின்னர் பார்ப்போம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு