Published:Updated:

எல்லோரும் இந்நாட்டு வேட்பாளர்களே!

திருத்துறைப்பூண்டி வேட்பாளர் மாரிமுத்து
பிரீமியம் ஸ்டோரி
News
திருத்துறைப்பூண்டி வேட்பாளர் மாரிமுத்து

கஜா புயல் நேரத்துல மாரிமுத்துவும் இவரோட குடும்பமும் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. இந்தச் சின்னோண்டு குடிசைக்குள்ளார பாவம் என்ன பண்ணுவாங்க

எல்லோரும் இந்நாட்டு வேட்பாளர்களே!

அ.தி.மு.க அம்பாசமுத்திரம் வேட்பாளர் இசக்கி சுப்பையாவின் சொத்து மதிப்பு 246.76 கோடி ரூபாய். தி.மு.க சென்னை அண்ணாநகர் தொகுதியின் வேட்பாளர் எம்.கே.மோகனின் சொத்து மதிப்பு 211.20 கோடி ரூபாய். ம.நீ.ம சென்னை மயிலாப்பூர் தொகுதியின் வேட்பாளர் ப்ரியாவின் சொத்து மதிப்பு 176.71 கோடி ரூபாய். இப்படி கோடிகளில் புரளும் வேட்பாளர்களுக்கு மத்தியில் சொற்ப நிலம் வைத்திருப்போரும்... ஏன், தெருக்கோடியில்கூட சொந்தமாக இடமில்லாத வேட்பாளர்களும் போட்டியிடுவது தான் இந்தியத் தேர்தல் ஜனநாயகத்தின் பன்முகச் சிறப்பே! அப்படியான வேட்பாளர்களில் சிலரைப் பார்ப்போம்!

சின்னஞ்சிறு கீத்து வீடு... கூரையை மூட ஒரு ஃப்ளெக்ஸ்! - திருத்துறைப்பூண்டி வேட்பாளர் மாரிமுத்து...

எல்லோரும் இந்நாட்டு வேட்பாளர்களே!

“கஜா புயல் நேரத்துல மாரிமுத்துவும் இவரோட குடும்பமும் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. இந்தச் சின்னோண்டு குடிசைக்குள்ளார பாவம் என்ன பண்ணுவாங்க... மொத்தக் குடும்பமும் அந்த நட்டநடு ராத்தியில நிலைப்படியிலேயே நின்னுக்கிட்டு இருந்துச்சு. உள்ளார போகலாம்னா, கூரை இடிஞ்சி விழுந்துக்கிட்டு இருக்கு... வெளியில ஓடியாரலாம்னா, மரம் விழுவுது. இப்பவும் நிலைமை மாறலை. ஏதோ கீத்தை சரிபண்ணிட்டு, அதுக்கு மேல ஒரு ஃப்ளெக்ஸைப் போட்டு மூடிவெச்சிருக்காரு’’ - திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மாரிமுத்து பற்றி தொகுதி மக்கள் சொல்லும் வரிகள் இவை!

எல்லோரும் இந்நாட்டு வேட்பாளர்களே!

எளிமை, நேர்மை, போராட்ட குணம் எனத் தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் மாரிமுத்துவின் வீடு திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காடுவாக்குடி கிராமத்தில் உள்ளது. மக்கள் சொன்ன மேற்கண்ட சின்னஞ்சிறு குடிசை வீட்டில்தான் மாரிமுத்து, அவரின் தாய் தங்கம்மாள், மனைவி ஜெயசுதா, மகள் தென்றல், மகன் ஜெயவர்மன் வசிக்கிறார்கள். விவசாயக் கூலித் தொழிலாளியின் மகனான மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான ஈர்ப்பால் உறுப்பினராகச் சேர்ந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து, தற்போது கோட்டூர் ஒன்றியச் செயலாளராக இருக்கிறார்.

“என்னை வேட்பாளராக அறிவிப்பாங்கன்னு நானே எதிர்பார்க்கலை. ஆனா, எங்க பகுதி மக்களும் கட்சிக்காரங்களும் எனக்கு சீட் கொடுக்கணும்னு எங்க கட்சித் தலைமைகிட்ட வலியுறுத்திக்கிட்டே இருந்தாங்க. என்னை மாதிரியான எளிய மனிதர்களுக்கு வாய்ப்பு கொடுக்குறதுங்கிறது கம்யூனிஸ்ட் கட்சியில இயல்பானது. நான் விவசாயக் கூலி வேலைக்குப் போய்தான் பி.காம் வரைக்கும் படிச்சேன். என்னோட மனைவியும் அம்மாவும் விவசாய வேலைகளுக்குப் போறாங்க. என்னோட கட்சிக்காரங்களும், ஊர் மக்களும் தங்களால் முடிஞ்ச பொருளாதார உதவிகளைச் செய்றாங்க” என்று சொல்லும் மாரிமுத்து, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள தனது சொத்துக் கணக்கில் “குடிசை வீடு, 33,000 ரூபாய் விலை மதிப்புள்ள வயல், மூன்று பவுன் நகை, வங்கிக் கணக்கில் 58,000 ரூபாய் சேமிப்பு, கையில் ரொக்கம் 3,000 ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாரிமுத்துவிடம், “தேர்தல் செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?” என்று கேட்டோம். “தனிப்பட்ட முறையில எனக்குனு எந்தச் செலவும் கிடையாது. நோட்டீஸ் அடிக்குறது, மக்களைச் சந்திக்குறதுக்கான செலவுகள் மட்டும்தான். அதையும் எங்கக் கட்சி பார்த்துக்குது. காலையில வீட்டுல கஞ்சி குடிச்சுட்டு கிளம்பினா அப்புறம் விவசாயத் தோழர்கள், கூலித் தொழிலாளர்கள் மிச்ச நேரத்துக்கான கஞ்சியைப் பார்த்துப்பாங்க!” என்கிறார் வெள்ளந்தியாக. இதே வெள்ளந்தியும் எளிமையும்தான் மாரிமுத்துவின் பலமும்கூட!

இதே தொகுதியில் இவரை எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சுரேஷ்குமார், தனது சொத்துக் கணக்காக சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் குறிப்பிட்டிருக்கிறார் என்பது இங்கே கூடுதல் தகவல்!

எல்லோரும் இந்நாட்டு வேட்பாளர்களே!

“டீ வாங்கிக் கொடுக்கக்கூட காசு இல்ல!” - நெல்லையில் களமிறங்கிய சங்கரநாராயணன்...

திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க சார்பாக ஏ.எல்.எஸ்.லட்சுமணன், பா.ஜ.க சார்பாக நயினார் நாகேந்திரன் என பலமான வேட்பாளர்கள் களமிறங்கும் நிலையில், இந்து தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார் சங்கரநாராயணன். பழைய அட்டைப்பெட்டிகள், காலி பாட்டில்கள், தேவையற்ற குப்பைகளை வாங்கி விற்பதுதான் இவரது தொழில்!

“இது எங்கப்பாரு தொழில். நானும் 12 வயசுலேயே இந்த வேலைக்கு வந்துட்டேன். எனக்குச் சொந்த வீடு, நிலம் எதுவும் கிடையாது. வாடகை வீட்டுலதான் குடியிருக்கேன். என்னோட நண்பர் எஸ்.எஸ்.எஸ்.மணி, ஆறு வருஷத்துக்கு முந்தி இந்து தேசிய கட்சியைத் தொடங்கினார். அவரோடு சேர்ந்து இந்தப் பகுதி மக்களுக்கு நிறைய உதவிகளைச் செஞ்சிருக்கேன். கொரோனா ஊரடங்கு காலத்துலயும் எங்களால முடிஞ்ச உதவிகளைச் செஞ்சோம். நாம தனியா இருந்து எதையாவது சொன்னா யாருமே கேட்க மாட்டாங்கங்கிறதால கட்சியில சேர்ந்து செயல்படுறேன்.

நான் தெனமும் வேலை பார்த்தாத்தான் என் குடும்பம் சாப்பிட முடியும். என்னை மாதிரியே ஏழைபாழைங்க நிறைய பேரு இந்தத் தொகுதியில இருக்காங்க. அவங்களோட கஷ்டம் எனக்கு நல்லாவே தெரியும். அவங்களுக்கு இன்னும் நிறைய உதவி செய்யணும்னுதான் தேர்தலில் போட்டியிடுறேன். சொன்னா நம்ப மாட்டீங்க... வேட்புமனுத் தாக்கல் செய்யறப்ப டெபாசிட் கட்டுறதுக்குக்கூட கையில காசு இல்லை. எங்க கட்சிதான் எனக்காக பத்தாயிரம் ரூவா கட்டுச்சு. தினமும் என்கூட பத்து பேரு பிரசாரத்துக்கு வர்றாங்க. அவங்களுக்கு டீ வாங்கிக்கொடுக்கக்கூட என்கிட்ட வசதியில்லை. அவங்கதான் தினமும் எனக்கு டீ, சாப்பாடு வாங்கித் தர்றாங்க. என்னால ஜெயிக்க முடியுமான்னு தெரியாது. ஆனா, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏராளமான மக்களைச் சந்திச்சு அவங்களோட நிலையை புரிஞ்சுப்பேன்!” என்கிறார் நம்பிக்கையோடு!

எல்லோரும் இந்நாட்டு வேட்பாளர்களே!

“படிப்புதான் ஒரே சொத்து!” - ‘நாம் தமிழர்’ ஆர்த்தி அப்துல்லா

இதே திருத்துறைப்பூண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார் ஆர்த்தி அப்துல்லா. திருத்துறைப்பூண்டியில் வேதாரண்யம் சாலையிலிருக்கிறது இவரது குடிசை வீடு. ஆர்த்தியின் கணவர் அப்துல்லா ஆட்டோ ஓட்டுகிறார்.

“அண்ணன் சீமான், இந்த இயக்கத்தைத் தொடங்குனதிலிருந்தே நான் தீவிரமா இயங்கிட்டு இருக்கேன். என்கிட்ட இருக்குற ஒரே சொத்து படிப்புதான். பி.ஏ., பி.எட் படிச்சிருக்கேன். என்னால பிரசாரத்துக்கு செலவெல்லாம் செய்ய முடியாது. இதோ இந்தக் குடிசை வீடும்கூட எங்களுக்குச் சொந்தமானதில்லை. வாடகை வீடுதான். பிரசாரத்துக்கு அஞ்சு பேர்தான் போவோம். அதுவும் தம்பிகளோட டூ வீலர்ல உட்கார்ந்துக்கிட்டு போறேன். கொஞ்சம் தூரமா இருந்தா பஸ்ல ஏறிப் போவோம். என்னோட மதிய லஞ்ச் பட்ஜெட் 30 ரூபாய்தான். பிரசாரத்துக்குப் போற பகுதியில கட்சி உறவுகள் கரும்புச்சாறு, தேநீர்லாம் வாங்கித் தருவாங்க. சமயங்கள்ல சாப்பாடும் ரெடி பண்ணிருப்பாங்க. ஓட்டுப்போடச் சொல்லிக் கேட்கறதுக்கு பணம் எதுக்குங்க? நல்ல மனசு இருந்தாலே போதுமே!” என்று தீர்க்கமாகப் பேசுகிறார் ஆர்த்தி.

எல்லோரும் இந்நாட்டு வேட்பாளர்களே!

“அமைச்சருக்கு சொந்தமாக கார் இல்லை... எனக்கு ஆட்டோ இருக்கிறது! - திருப்பரங்குன்றத்தில் வலம்வரும் பொன்னுத்தாய்...

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில், அ.தி.மு.க-வின் பலம் வாய்ந்த வேட்பாளரான ராஜன் செல்லப்பாவை எதிர்த்து சி.பி.எம் சார்பில் களமிறங்கியிருக்கிறார்

எஸ்.கே.பொன்னுத்தாய். இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் இருக்கும் பொன்னுத்தாய் பற்றி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அறிமுகம் தேவையில்லை. அந்த அளவுக்கு மக்களுக்குப் பரிச்சயமானவர்.

சமயநல்லூரில் சிறு வீட்டில் வசிக்கும் பொன்னுத்தாயின் கணவர் கருணாநிதி ஆட்டோ டிரைவர். தீவிரமான தோழரும்கூட. கல்லூரியில் படிக்கும் மகன் ராகுல்ஜி, இந்திய மாணவர் சங்கத்தின் புறநகர் மாவட்டத் தலைவராக இருக்கிறார். மொத்தக் குடும்பமும் இடதுசாரி சித்தாந்தத்தில் பற்றுக்கொண்டது.

“நீண்டகாலம் அமைச்சர் பதவியிலிருக்கும் செல்லூர் ராஜூ தனது வேட்புமனுவில், தனக்குச் சொந்தமாக கார் இல்லை என்று சொல்லியிருக்கிறார். அதை மக்கள் நம்புவது இருக்கட்டும்... ஆனால், எனக்குச் சொந்தமாக ஆட்டோ இருக்கிறது. என் கணவர் ஆட்டோ டிரைவர்” - தனது வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலேயே இப்படித்தான் பிரசாரத்தை ஆரம்பித்திருக்கிறார் பொன்னுத்தாய்!

எல்லோரும் இந்நாட்டு வேட்பாளர்களே!

“கையில ரெண்டாயிரம் ரூபாய்தான் இருக்கு...” - கந்தர்வக்கோட்டை களம்காணும் சின்னதுரை...

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தொகுதியின் சி.பி.எம் வேட்பாளர் எம்.சின்னதுரை. தொகுதியிலிருக்கும் புனல்குளம் கிராமத்தில் சிறிய தொகுப்பு வீட்டில் வசிக்கிறார். சின்னதுரையின் மனைவி நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலைக்குச் செல்கிறார். சின்னதுரைக்கு, துண்டு நிலம்கூட இல்லை. சி.பி.எம் மாநிலக்குழு உறுப்பினராக இருப்பவர், கட்சி தரும் சொற்ப சம்பளத்தில்தான் குடும்பத்தை ஓட்டுகிறார். கட்சியில் சுமார் 35 ஆண்டுகள் அனுபவம்கொண்டவருக்கு, இதே தொகுதியில் இரண்டாவது முறையாக வாய்ப்பு அளித்திருக்கிறது சி.பி.எம்.

“பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன். கட்சியில் சேர்ந்தப்ப எனக்கு மாசம் 300 ரூபா சம்பளம் கொடுத்தாங்க. இப்ப முழு நேர ஊழியர்ங்கிறதால சம்பளம் உயர்ந்திருக்கு. அது என் வழிச்செலவுக்கே சரியா போயிடும். என் மனைவி ஆடு மேய்ச்சாதான் அன்னிக்குச் சாப்பாடு கிடைக்கும். என் பையன் பேர்ல ஒண்ணரை ஏக்கர் நிலம் இருக்கு. லோன் போட்டு அவன் தனியா விவசாயம் பண்ணுறான். எனக்கு ஒரு டாடா ஏசி வண்டி இருக்கு. அதுவும் கடன்லதான் ஓடுது” என்றவரிடம் தேர்தல் செலவுகளைப் பற்றிக் கேட்டோம்...

எல்லோரும் இந்நாட்டு வேட்பாளர்களே!

“கையில ரெண்டாயிரம் ரூபாய் சேமிப்பு பணம் இருக்குது. அதைத் தொடுறதில்லை. அவசரத்துக்குன்னு வெச்சிருக்கேன். எனக்குன்னு எந்தச் செலவும் இல்லை. போற வர்ற இடத்துல எல்லாம் டீ, காபி, மோர்னு மக்கள் பார்த்துக்குறாங்க... வேற என்னங்க வேணும்!” என்கிறார் உற்சாகமாக.