Published:Updated:

அதிமுக-வில் வலுக்கும் `ஒற்றைத் தலைமை' விவாதம்! - 'கேம் ஸ்டார்ட்' செய்த எடப்பாடி

அதிமுக - எடப்பாடி

'கட்சிக்கு இரட்டைத் தலைமைதான்' என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், ஜெயக்குமாரின் இந்த அனல் பேட்டி அ.தி.மு.க-வுக்குள் தீப்பொறியைத் தெறிக்கவிட்டிருக்கிறது.

அதிமுக-வில் வலுக்கும் `ஒற்றைத் தலைமை' விவாதம்! - 'கேம் ஸ்டார்ட்' செய்த எடப்பாடி

'கட்சிக்கு இரட்டைத் தலைமைதான்' என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், ஜெயக்குமாரின் இந்த அனல் பேட்டி அ.தி.மு.க-வுக்குள் தீப்பொறியைத் தெறிக்கவிட்டிருக்கிறது.

Published:Updated:
அதிமுக - எடப்பாடி
இன்று மதிய உணவை முடித்துவிட்டு, ஓய்வெடுக்கச் சென்ற அ.தி.மு.க நிர்வாகிகளின் தூக்கத்தையெல்லாம் கெடுத்துவிட்டது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்திருக்கும் பரபரப்பு பேட்டி.

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை முடித்துக்கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``இன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஒற்றைத் தலைமை கருத்தை ஆதரித்துப் பல நிர்வாகிகள் பேசினர். 'யார் அந்த ஒற்றைத் தலைமை?' என்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்" என்று தடாலடி குண்டை வீசியிருக்கிறார்.

'கட்சிக்கு இரட்டைத் தலைமைதான்' என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், ஜெயக்குமாரின் இந்த அனல் பேட்டி அ.தி.மு.க-வுக்குள் தீப்பொறியைத் தெறிக்கவிட்டிருக்கிறது.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்று, ஜூன் 14-ம் தேதி ராயப்பேட்டை எம்.ஜி.ஆர் மாளிகையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் குறித்தும், அதில் பேசப்பட்ட ஒற்றைத் தலைமை விவாதம் குறித்தும் அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். ``பொதுக்குழுவில் நிறைவேற்றத் திட்டமிட்டிருக்கும் தீர்மானங்கள் குறித்துத்தான் தொடக்கத்தில் விவாதிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை சேர்மனாக பணியமர்த்துவது, கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் பிரதமருக்குக் கோரிக்கை விடுப்பது போன்ற தீர்மானங்கள் குறித்துப் பேசினோம். பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்தும் விவாதித்தோம். டிசம்பர் 1, 2021-ல் கூடிய அ.தி.மு.க செயற்குழுவில், ‘கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை ஒற்றை வாக்கின் அடிப்படையில் கழக அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பர். இந்த விதியைத் திருத்துவதற்கு, மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு, வரும் ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். இது குறித்த பேச்சு இறுதியாகப் பேசப்பட்டபோதுதான், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி எழுந்து மைக் பிடித்தார்.

அதிமுக
அதிமுக

'கட்சி இப்போது தொடர் தோல்விகளைச் சந்திச்சதால, தொண்டர்களெல்லாம் துவண்டுபோயிருக்காங்க. இதற்கெல்லாம் ஒற்றைத் தலைமை இல்லாததுதான் காரணம். செயற்குழுவுல நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஓரமா வெச்சுட்டு, ஒற்றைத் தலைமையின் அவசியம் குறித்து நாம் பேசணும்' என்று வெடியைக் கிள்ளி எறிந்தார். இதை ஆமோதித்த விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சி.வி.சண்முகம், 'உண்மையான எதிர்க்கட்சி யாருங்கற விவாதம் நடந்துக்கிட்டு இருக்கு. சட்டமன்றத்துலேயும், வாக்கு சதவிகித அடிப்படையிலேயும் நாமதான் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கோம். ஆனா, போற வர்ற கட்சியெல்லாம் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு போட்டி போடுறாங்க. இதற்கெல்லாம், ஒற்றைத் தலைமையாக நம்ம கட்சியை வழிநடத்த ஒருவர் இல்லாமல் இருப்பதே காரணம். அம்மா மறைவுக்குப் பிறகு நாம உருவாக்கிக்கிட்ட பதவிதான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எல்லாம். அதையெல்லாம் கலைச்சுட்டு, பழையபடி ஒற்றைத் தலைமையாக பொதுச்செயலாளர் பதவியைக் கொண்டு வரணும்' என்றார். இதை அவர் அருகில் அமர்ந்திருந்த ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் ஆமோதித்தனர்.

அதிமுக
அதிமுக

தொடர்ந்து, ஒற்றைத் தலைமையின் அவசியம் குறித்து கே.சி.கருப்பணன், ஆர்.காமராஜ், ஆதிராஜாராம் ஆகியோர் பேசினார்கள். இப்படி 35 மாவட்டச் செயலாளர்கள் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவாகப் பேசினார்கள். உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன் பேசுகையில், `உங்கள் இருவரில் யார் ஒற்றைத் தலைமையாக வந்தாலும் சரி. அதை ஏற்கிறோம். ஆனால், கட்சிக்கு ஒற்றைத் தலைமை வர வேண்டுமென்பதே எங்கள் விருப்பம்' என்றார். நத்தம் விசுவநாதன், தளவாய் சுந்தரம், தச்சை கணேசராஜா போன்றவர்கள், ஒற்றைத் தலைமை கட்சிக்குத் தேவையில்லை என்பதை வலியுறுத்தினர். 'ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தப்பட்டு, முறைப்படியே பன்னீரும் எடப்பாடியும் அந்தந்தப் பதவிகளுக்குத் தேர்வாகியிருக்கிறார்கள். இதைத் தேர்தல் ஆணையத்திடமும் ஆவணங்களாகச் சமர்ப்பித்துவிட்டோம். இதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் தேர்தலும் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்போது தேவையில்லாமல் ஒற்றைத் தலைமை விவாதம் கிளம்புவதால், இதுவரை நடந்த உட்கட்சித் தேர்தல் எல்லாமே கேள்விக்குறியாகிவிடும். தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. கட்சிக்கு இரட்டைத் தலைமைதான் சரி' என அவர்கள் வாதிட்டனர். பிறகு, ஒற்றைத் தலைமை விவகாரத்தைப் பொதுக்குழுவில் பேசிக்கொள்வதென முடிவெடுக்கப்பட்டு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கலைந்தது" என்றனர்.

இந்த ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பறந்த பின்னணியில் எடப்பாடி பழனிசாமிதான் இருப்பதாகப் பொருமுகிறது பன்னீர் தரப்பு. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை முடித்த கையோடு, தன்னுடைய தி.நகர் இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் பன்னீர். 'அவைத் தலைவர் பதவியை என்கிட்ட கொடுத்துட்டு, கட்சியை கன்ட்ரோல் எடுக்கப் பார்க்குறாங்களா?' எனத் தன் ஆதரவாளர்களிடம் பன்னீர் கொதித்ததாகக் கூறப்படுகிறது.

பன்னீர் - எடப்பாடி
பன்னீர் - எடப்பாடி

இது குறித்து நம்மிடம் பேசிய பன்னீர் ஆதரவாளரான மாவட்டச் செயலாளர் ஒருவர், "சமீபத்தில் காலியான இரண்டு மாநிலங்களவைப் பதவியிடங்களுக்கு, தான் சொல்லும் நபர்களையே வேட்பாளர்களாகப் போட வேண்டுமென எடப்பாடி அடம்பிடித்தார். ஆனால், தன்னுடைய ஆதரவாளரான முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளர் தர்மருக்கு எம்.பி பதவியை வாங்கிக் கொடுத்துவிட்டார் பன்னீர். இதனால், தென்மாவட்டங்களிலுள்ள கட்சிப் பிரமுகர்களிடையே பன்னீரின் கரம் ஓங்க ஆரம்பித்தது. 'பன்னீரை நம்பினால் பதவி கிடைத்துவிடும்' என ஒன்றிய அளவிலான நிர்வாகிகள்கூட நம்ப ஆரம்பித்துவிட்டனர். இது எடப்பாடி தரப்புக்குப் பிடிக்கவில்லை. தவிர, நீண்டகாலமாகவே ஒற்றைத் தலைமை ஆகும் முயற்சியில் எடப்பாடி ஈடுபட்டிருந்தார். அதை நனவாக்கிக்கொள்வதற்காகத்தான், தன்னுடைய ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மூலமாக 'ஒற்றைத் தலைமை' விவாதத்தைக் கிளப்பியிருக்கிறார் எடப்பாடி. இது ஒருபோதும் எடுபடாது.

அதிமுக-வினர்
அதிமுக-வினர்

ஜெயலலிதாவோடு கட்சியின் ஒற்றை ஆளுமை கட்டமைப்பு முடிந்துபோய்விட்டது. அவருக்குப் பிறகு, கடந்த ஐந்து வருடங்களாக இரட்டைத் தலைமைதான் கட்சியை வழிநடத்துகிறது. 2019, 2022 தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தல்களிலும் வேட்பாளர்களை இந்த இரட்டைத் தலைமைதான் தேர்வு செய்தது. கட்சித் தொண்டர்களும் இந்த அமைப்பு முறைக்கு செட் ஆகிவிட்டனர். இப்படியிருக்கையில், ஒற்றைத் தலைமை என்பது எப்படி கட்சிக்கு ஒத்து வரும்... தவிர, இரட்டை இலைக்குக் கையெழுத்திடும் உரிமையை ஒருபோதும் பன்னீர் விட்டுத்தர மாட்டார். முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் என அதிகாரத்தின் அத்தனை கிரீடங்களையும் எடப்பாடிக்கு விட்டுக் கொடுத்த பன்னீர், இரட்டை இலையை விட்டுத்தரத் தயாரில்லை. இந்த விவகாரம் சூடானால், ஒற்றைத் தலைமைக்கு செங்கோட்டையனை முன்னிறுத்த முடிவெடுத்திருக்கிறார் பன்னீர்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

எம்.ஜி.ஆர் காலத்திலேயே மாவட்டச் செயலாளராக இருந்த செங்கோட்டையன், எடப்பாடிக்கே அரசியல் சொல்லிக் கொடுத்தவர். எடப்பாடியின் சமூகத்தைச் சேர்ந்தவர். கட்சியை வழிநடத்துவதற்கு அனைத்துத் தகுதிகளும் நிரம்பியவர். இதனாலேயே, தனக்குக் கிடைக்காத பதவி எடப்பாடிக்கும் கிடைக்கக் கூடாதென, செங்கோட்டையன் பெயரை ஒற்றைத் தலைமைக்குப் பரிந்துரைக்க, பன்னீர் முடிவெடுத்திருக்கிறார். 'ஒற்றைத் தலைமை' விவகாரம் முற்றினால், பன்னீர் தரப்பிலிருந்து செங்கோட்டையன் அஸ்திரம் வீசப்படும்" என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வின் உள் அரங்கு விவாதங்களிலும், சீனியர் தலைவர்களிடத்திலும் மட்டுமே முணுமுணுக்கப்பட்டுவந்த 'ஒற்றைத் தலைமை' விவகாரம், முதன்முறையாக பொது வெளியில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இந்த விவாதத்தைத் தொடங்கிவைத்திருக்கும் எடப்பாடி தரப்பு, கடந்த காலங்களில் விட்டுக் கொடுத்ததுபோல, இந்த முறையும் பன்னீர் விட்டுக் கொடுத்துவிடுவார் என்று நம்புகிறது. தன் ஆதரவாளர்கள், தன் சகோதரர் எனப் பலரின் நீக்கத்திலும் கையெழுத்திட்ட பன்னீர், அந்தக் கையெழுத்திடும் அதிகாரத்துக்கே ஆபத்து வந்திருப்பதால், வெலவெச்த்துப்போயிருக்கிறார். இந்த முறையாவது எதிர்த்து சண்டை போடுவாரா... அல்லது சரண்டர் ஆவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism