Published:Updated:

`நாங்க வேணுமா, அவர் வேணுமா.. முடிவு செய்யுங்க!'- கார்த்தி சிதம்பரத்தை பதறவைத்த காங்கிரஸ் நிர்வாகிகள்

சிதம்பரம் அலுவலகம் காரைக்குடி
சிதம்பரம் அலுவலகம் காரைக்குடி

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் முன் அடிதடி ஏற்பட்டதால் தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் எதிரில் சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம், "உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைத் தவிர்த்துவிட்டு மின்னணு ஓட்டு வைப்பதுதான் சரியாக இருக்கும். உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டமாக நடைபெற்றது உள்நோக்கம் கொண்டது. அப்படி இருந்தாலும் தி.மு.க கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து வரும் தேர்தல்களிலும் தி.மு.க கூட்டணிதான் வெற்றிபெறும்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

அரசியலில் கருத்து வேறுபாடு இருந்தாலும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரைப் பற்றி நெல்லை கண்ணன் பொது மேடையில் அப்படிப் பேசி இருக்கக் கூடாது. நகராட்சி தேர்தலிலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் பி.ஜே.பி தனித்து நிற்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதை வரவேற்கிறேன்" என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து காரைக்குடியில் உள்ள எம்.பி அலுவலகத்துக்கு வந்தார் கார்த்தி சிதம்பரம். அப்போது கார்த்தி சிதம்பரம் முன்பு கட்சி நிர்வாகிகள் அடிதடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாகக் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அண்ணன் கார்த்தி சிதம்பரம் வந்தபோது அவரைப் பார்க்க முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரமும் வந்தார். நகரத்தலைவர் பாண்டி மெய்யப்பன், கார்த்தி சிதம்பரத்தைப் பார்த்து, `கட்சிக்குத் துரோகம் செய்த சுந்தரம் உங்களுடன் வரலாமா?நாங்கள் வேண்டுமா அவர் வேண்டுமா என்று முடிவு செய்யுங்கள். அ.தி.மு.க-வுக்கு வேலை செய்யும் நபர் நமக்கெதற்கு என்றார்.'

சுந்தரம்
சுந்தரம்

உடனே சுந்தரம் மகன் ராஜீவ் என்பவர் பாண்டி மெய்யப்பனை தாக்க முயன்றபோது அவர் தடுத்து திருப்பித் தாக்கினார். இதனால் இரு தரப்புக்கும் மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது இரு தரப்பையும் தடுத்து நிறுத்திய கார்த்தி சிதம்பரம், "காங்கிரஸ் கட்சி பெரிய கடல் ஏதாவது ஒரு மூலையில் ஒரு சம்பவம் நடக்கும். என்னுடன் இருப்பவர்கள்கூட சிலர் எனக்கு எதிராகச் செயல்பட்டவர்கள். இப்போது என்னுடன்தான் இருக்கிறார்கள். இதற்கு என்ன பண்றது அரசியலில் இது சகஜம்தானே எனக் கூறி சமரசம் செய்தார். பிறகு, அனைவரும் கலைந்து சென்றனர்” என்றார்.

இது தொடர்பாக பாண்டி மெய்யப்பனிடம் விசாரித்தபோது, ``எங்கள் கட்சிக்குள் நடந்த விஷயம் அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே” என்றார் கேஷுவலாக. முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரத்திடம் விசாரித்தபோது, ``கட்சி அலுவலகத்தில் பிரச்னையா. அப்படி எதுவும் தெரியவில்லையே. யாராவது தவறாகச் சொல்லியிருப்பாங்க” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு