Published:Updated:

`அரசியலில் சிவாஜி ஏன் தோற்றார் தெரியுமா?'- எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு

``இனிமேல் நடிகர்கள் யார் கட்சி தொடங்கினாலும் சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவர்களுக்கு வரும்.''

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``நடிகர்களுக்கு வயதாகிவிட்டால், அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். திரைப்படத்தில் கிடைத்த விளம்பரத்தை வைத்து தலைவராகப் பார்க்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை பொறுப்புகள் இருக்கின்றன என்பதுகூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது.

எல்லா நடிகர்களும் மக்களிடம் செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள். நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன அரசியல் தெரியும்... இடைத்தேர்தலில் அவரது கட்சி ஏன் போட்டியிடவில்லை... இனிமேல் நடிகர்கள் யார் கட்சி தொடங்கினாலும், சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவர்களுக்கு வரும்'' என்று பேசினார்.

Rajini
Rajini

எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சுக்கு சிவாஜி சமூக நலப்பேரவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அந்த அமைப்பின் தலைவர் சந்திரசேகரன், ``வயதான பிறகு நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்று இவருடைய கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆரையும் சேர்த்துதான் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பார் என்று நினைக்கிறேன்.

காங்கிரஸ் - அ.தி.மு.க கூட்டணி அமைத்தபோது, அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வெற்றிபெற வைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி என்பதை தமிழக முதல்வருக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது.

சில்க் ஸ்மிதா, `பராசக்தி’ சிவாஜி, `96’ ராம்- ஜானு...  இணையத்தை கலக்கும் 'கலக்கி'!

யார் காலையோ பிடித்து முதல்வர் பதவியில் அமர்ந்தவருக்கு நடிகர் திலகத்தைப் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. சிவாஜி நினைத்திருந்தால் அவருக்குப் பதவிகள் தேடி வந்திருக்கும். ஆனால், சுயமரியாதையின் காரணமாகவே அவர் எந்தப் பதவியையும் தேடிப்போகவில்லை. சிவாஜி கட்சி ஆரம்பித்தது மற்றும் தோல்வி அடைந்ததற்குக் காரணமே, தன்னுடைய உடன்பிறவா சகோதரராகப் பழகிய எம்.ஜி.ஆரின் ஆட்சி, அவருடைய துணைவியார் ஜானகி தலைமையில் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் என்பது வரலாறு. இது, கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று கூறும் தமிழக முதல்வர் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

சிவாஜி
சிவாஜி

நடிகர் திலகத்தால் அரசியலில் பதவிகளைப் பெற்றவர்கள் ஏராளம். யாருக்கும் துரோகம் செய்து பதவிகளை அடைய வேண்டும் என்று நினைக்காதவர். விபத்தாலும் துரோகத்தாலும் இன்று தமிழக முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இதைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை. பதவியிலிருக்கும் வரைதான் இவர்களுக்கெல்லாம் மரியாதை.

ஆனால், தமிழ் வாழும் வரை நடிகர் திலகம் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதுதான் உண்மை. வெறும் நடிகராக மட்டுமல்லாமல், நாட்டுப் பற்றுடன், நாட்டுக்காக, விளம்பரமில்லாமல் சேவையாற்றி, காமராஜரின் சீடராகத் தன் இறுதிக்காலம்வரை வாழ்ந்து மறைந்தவர் நடிகர் திலகம் சிவாஜி. இனி தேவையில்லாமல் அவர் பெயரை இழுப்பதை தமிழக முதல்வர் தவிர்க்க வேண்டும்” எனக் காட்டமாகப் பேசியுள்ளார்.

Vikatan