Published:Updated:

தி.நகர் எம்.எல்.ஏ பெயரில் வசூல் வேட்டை! - திண்டாடும் சிறு வியாபாரிகள்...

அ.தி.மு.க., தி.மு.க-ன்னு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எம்.எல்.ஏ பேரைச் சொல்லி பெரிய கடைகள்லதான் மாமூல் வாங்குவாங்க.

பிரீமியம் ஸ்டோரி

சென்னையின் மிகப்பெரிய ‘ஷாப்பிங் ஹப்’ தி.நகர் எனப்படும் தியாகராய நகர். பளபளக்கும் பாண்டி பஜார் தொடங்கி நெரிசல்வழியும் ரங்கநாதன் தெரு வரை வியாபாரம் களைகட்டும். இந்த ஏரியாவில்தான் தள்ளுவண்டி கடை, சாலையோர சமோசா கடை, பூக்கடை என்று ஒன்றுவிடாமல் தி.நகர் தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் பெயரைச் சொல்லி அடாவடி வசூல் வேட்டை நடத்தப்படுவதாக கொந்தளிக்கிறார்கள் வியாபாரிகள்!

கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போதும் இதேரீதியில் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், அது பற்றி அவ்வப்போது ஜூவி-யிலும் எழுதிவந்தோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அங்கு போட்டியிட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான சத்யா தோல்வியடைந்து, தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜெ.கருணாநிதி வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வானார். தி.மு.க-வின் மறைந்த மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகனின் சகோதரர்தான் இந்த கருணாநிதி. இந்த நிலையில்தான் எம்.எல்.ஏ-வை மையமாகக்கொண்டு இப்படியொரு வசூல் புகார் எழுந்துள்ளது.

தி.நகர் எம்.எல்.ஏ பெயரில் வசூல் வேட்டை! - திண்டாடும் சிறு வியாபாரிகள்...

ரூ.10 ஆயிரம் டு 25 ஆயிரம்

இது பற்றி நம்மிடம் பேசிய தி.நகர் வியாபாரிகள் சிலர், “அ.தி.மு.க., தி.மு.க-ன்னு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எம்.எல்.ஏ பேரைச் சொல்லி பெரிய கடைகள்லதான் மாமூல் வாங்குவாங்க. சின்னக் கடைகள்ல அவ்வளவா கவனம் செலுத்த மாட்டாங்க. சின்னக் கடைகள்ல போலீஸ்ல நூறு இருநூறு மாமூல் வாங்குறதோட சரி... இதுதான் காலம் காலமா இருக்குற பழக்கம்... ஆனா, கருணாநிதி எம்.எல்.ஏ ஆன பின்னாடி அவர் பேரைச் சொல்லி சின்ன வியாபாரி, பெரிய வியாபாரின்னு வித்தியாசம் பார்க்காம சமோசாக்கடை, கையேந்திபவன், தட்டுக்கடை, பழக்கடை, பிளாட்பாரத்துல தோடு, கம்மல், கர்சீப் விக்குறவங்கன்னு ஒண்ணுவிடாம பணம் வசூலிக்கிறாங்க. நாங்களே கடனை வாங்கியும் நகையை அடகுவெச்சும்தான் ரோட்டோரம் கடையைப் போட்டு வயித்தைக் கழுவுறோம். எங்ககிட்டபோயி மாசத்துக்கு பத்தாயிரத்துல இருந்து 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் மாமூல் கேட்டா நாங்க எங்க போறது? மாசம் பல லட்சம் ரூபாய் மாமூல் எம்.எல்.ஏ தரப்புக்குப் போகுது. யாராச்சும் பணம் கொடுக்க மறுத்தா, மாநகராட்சி அதிகாரிகளையும் போலீஸையும் விட்டு மிரட்டுறாங்க... விரட்டி விடுறாங்க... ரெண்டு வருஷமா கொரோனாவால வியாபாரம் சுத்தமா போயி, இப்போதான் ஏதோ மீண்டு வந்துட்டு இருக்கோம். எங்க வருமானத்துல பாதியளவுக்கு அவங்களுக்குக் கொடுத்துட்டா, நாங்க எப்படிப் பொழப்பை நடத்துறது?” என்றார்கள் கொதிப்புடன்!

முறைப்படுத்தப்படுமா சாலையோரக் கடைகள்?

இந்தப் புகார்கள் உண்மைதானா என்று தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்புகளின் தலைவர் விக்கிரமராஜாவிடம் கேட்டோம். இவர் விருகம்பாக்கம் தி.மு.க எம்.எல்.ஏ பிரபாகர் ராஜாவின் தந்தையும்கூட. ``ஆமாம்... எங்களுக்கும் இதுபோன்ற புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. தி.நகரில் ஆயிரக்கணக்கான சாலையோரக் கடைகள் இருக்கின்றன. இது போன்ற சட்டவிரோத வசூல்களைத் தடுக்க வேண்டுமென்றால் இவர்களுக்கென்று ஓர் இடத்தை ஒதுக்கி, அடையாள அட்டையையும் கொடுத்து முறைப்படுத்த வேண்டும். அரசாங்கம் அவர்களிடம் குறிப்பிட்ட தொகையை வாடகையாக வசூலித்துக்கொண்டால், அரசாங்கத்துக்கும் வருமானம் வரும். இது பற்றி முதல்வரிடமும் மனு கொடுத்திருக்கிறோம். தி.நகரில் இப்படியொரு நடைமுறை இல்லாததால்தான் அரசியல்வாதிகள் தொடங்கி அதிகாரிகள் வரை வசூல் வேட்டை நடத்துகிறார்கள். அரசாங்கம் விரைவில் இதற்கொரு தீர்வுகாண வேண்டும்” என்றார்.

வணிகர்கள் மட்டுமல்லாமல், தி.நகர் தொகுதி மக்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள்... “கடந்த ஆட்சியில்தான் இந்தத் தொகுதியில் ஏராளமான முறைகேடுகள் நடந்தன. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகாவது எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், தி.மு.க-வினரே வருத்தப்படும் அளவுக்குத்தான் எம்.எல்.ஏ கருணாநிதியின் செயல்பாடுகள் இருக்கின்றன. இந்த மழைக்கு முன்பாகவே பல இடங்களில் தோண்டப்பட்ட சாலைகளெல்லாம் இன்னும் அப்படியே இருக்கின்றன. மழை நேரத்தில் அது மக்களுக்குக் கடும் பாதிப்புகளை உண்டாக்கியது. தொகுதிக்கான பணிகள் எதையும் அவர் முடுக்கிவிட்டதாகத் தெரியவில்லை. நாங்கள் ஏமாந்ததுதான் மிச்சம்’’ என்கிறார்கள் கவலையோடு.

கருணாநிதி
கருணாநிதி

“நான் அவனில்லை!” எம்.எல்.ஏ விளக்கம்...

பண வசூல் புகார்கள் பற்றியும், தொகுதி மக்களின் அதிருப்தி குறித்தும் எம்.எல்.ஏ கருணாநிதியிடம் கேட்டோம். “வசூல் விஷயம் என் காதுக்கும் வந்தது. என் பேரைச் சொல்லி யாரோ பணம் வசூல் பண்றாங்கன்னு அடிக்கடி புகார் வருது. இது பத்தி நான் முதலமைச்சர்கிட்டயும், தலைமைச் செயலாளர்கிட்டயும் புகார் கொடுத்திருக்கேன். இதையெல்லாம் என்னைப் பிடிக்காத யாரோ செய்யணும்... இல்லை என் பேரைப் பயன்படுத்தி கட்சிக்காரங்க யாராச்சும் செஞ்சிருக்கணும். சாலையோர வியாபாரிகள் சங்கத்துல கருணாநிதின்னு யாரோ இருக்காங்கபோல... அவங்க வசூல் பண்றதை நான்னு நெனைச்சுக்கிட்டு எல்லாரும் என்னைத் தப்பா நினைக்கறாங்க. இது பத்தி காவல்துறையினரும் விசாரிச்சுட்டு இருக்காங்க. தவறு செய்யறவங்க மேல கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா முடக்கம், சட்டமன்றக் கூட்டத்தொடர், மழைன்னு தொகுதிப் பணிகள்ல கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டுருச்சுதான். எம்.எல்.ஏ தொகுதி நிதியும் இன்னும் வரலை... இப்போதான் வேலைகளை முடுக்கிவிட்டிருக்கோம். சீக்கிரமே தொகுதிப் பிரச்னைகள் அத்தனையும் சரிசெய்யப்படும்’’ என்றார் விளக்கமாக!

ஆக மொத்தம் வியாபாரிகளிடம் அடாவடியாக வசூல் வேட்டை நடக்கிறது என்பது மட்டும் உறுதியாகிறது. ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய எம்.எல்.ஏ மற்றும் அரசு அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு