Election bannerElection banner
Published:Updated:

கொரோனா: `மே 2-ம் தேதி; காலத்துக்கேற்ப சீர்திருத்தங்கள் அவசியம்’ - சமூக ஆர்வலர்களின் கோரிக்கை

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை ( மாதிரிப்படம் )

தேர்தல் ஆணையம் காலத்துக்கேற்ப, தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது அவசியம். 1990-ம் ஆண்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற டி,என்.சேஷன் தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார். ஆனால் அதன் பிறகு ?

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்குதல் மிக வேகமாக அதிகரித்துவருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டேயிருக்கிறது. இந்தநிலையில்தான் இதன் பரவலைத் தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநாள் ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல், இன்னும் பல தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆனால், நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்காக, மே 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கை செய்யும் சமூக ஆர்வலர்கள், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குச் சில கேள்விகளையும் யோசனைகளையும் முன்வைக்கிறார்கள். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலு,ம் மே மாதம் 1, 2 தேதிகளில் ஊரடங்கை அமல்படுத்தவும் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது.

டி.என்.சேஷன்
டி.என்.சேஷன்

இந்திய தேர்தல் ஆணையம் காலத்துக்கேற்ப, தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதும் மிகவும் அவசியம். 1990 -களுக்கு முன்பு வரை, இங்குள்ள அரசியல் கட்சிகள் இரவு முழுவதும் விடிய விடிய தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். அரசியல் கட்சியினர், தங்களது கண்களில் கண்ட சுவர்களிலெல்லாம் தங்களது கட்சிகளின் சின்னங்களை வரைந்து, தேர்தல் விளம்பரங்களைச் செய்து மக்களுக்குப் பெரும் தொந்தரவுகளைக் கொடுத்தார்கள்.

இந்தநிலையில்தான் 1990-ம் ஆண்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற டி,என்.சேஷன், தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து, மக்களின் கவனத்தை ஈர்த்தார். இரவு நேர பிரசாரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டது. கட்டட உரிமையாளர்களிடம் முறையான அனுமதி பெற்ற சுவர்களில் மட்டுமே தேர்தல் விளம்பரங்களை மேற்கொள்ள வேண்டும்... இது போன்று இன்னும் பல்வேறு விதிமுறைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. இவை சிறு சிறு மாற்றங்களுடன் இப்போதும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

ஆனால் டி. என்.சேஷனுக்குப் பிறகு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவிவகித்தவர்கள், மிகப்பெரிய அளவிலான சீர்திருத்தங்களைக் கொண்டு வரவில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, கொரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கிய நேரத்தில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இது நவீன யுகம்... தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ள இந்தக் காலத்தில், குறிப்பாக, கொரோனா அபாயம் நிலவக்கூடிய தற்போதைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அரசியல் கட்சியினர், வீதி வீதியாகச் சென்று பிரசாரம் மேற்கொள்ளவும், கூட்டம் கூட்டவும் தேர்தல் ஆணையம் தடைவிதித்திருக்க வேண்டும்.

வாக்குப் பெட்டிகள்
வாக்குப் பெட்டிகள்

ஆனால் கொரோனா அபாயம் குறித்துத் தேர்தல் ஆணையம் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பு நடவடிக்கைகள் எடுத்ததாகத் தெரியவில்லை. போனது போகட்டும். வாக்கு எண்ணிக்கையிலாவது எச்சரிக்கையுடன் இருந்திருக்கலாம். வாக்கு எண்ணிக்கைக்காக மே 2-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படலாம் எனத் தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் வீரசேனன், ‘``வாக்கு எண்ணிக்கைக்காக ஊரடங்கைத் தளர்த்துனது, வேதனையான விஷயம். மற்ற நாள்களைவிட ஞாயிற்றுக்கிழமைகள்ல, இறைச்சிக் கடைகள்ல அதிக அளவுல மக்கள் கூடுறாங்க. இதனால் கொரோனா பரவல் அதிகமாகுங்கறதுனாலதான், ஞாயிற்றுக்கிழமைகள்ல ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கைக்காக மே 2-ம் தேதி ஊரடங்கைத் தளர்த்தினால், கண்டிப்பாக இறைச்சிக் கடைகள்ல கூட்டம் அதிகமாகி, கொரோனா பரவும். ஊரடங்கைத் தளர்த்தாமலேயே வாக்கு எண்ணிக்கையை நடத்தத் திட்டமிட்டிருக்கலாம். ஒரு தொகுதிக்கான வாக்குகளை எண்ண, அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட அதிகபட்சம் 100 பேர் இடம்பெறுவாங்க.

கொரோனா தடுப்பு நடைமுறைகளோடு இவங்களை மட்டும் அனுமதிச்சாலே போதும். இவங்களுக்கு போக்குவரத்துக்கான சிறப்பு அடையாள அட்டைகளை வழங்கி, ஊரடங்கைக் கடைப்பிடிக்கலாம். ஒரு மையத்துல நாலஞ்சு தொகுதிகளின் வாக்குகளை எண்ணுவதாக இருந்தாலும்கூட அதிகபட்சம் 500 பேர்தான் கூடுவாங்க.

கொரோனா: `மே 2-ம் தேதி; காலத்துக்கேற்ப சீர்திருத்தங்கள் அவசியம்’ - சமூக ஆர்வலர்களின் கோரிக்கை

ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் ஆர்வம்மிக்க பொதுமக்கள் உட்பட மிகுந்த ஆர்வத்தோடு ஓவ்வொரு மையத்துக்கு வெளியில ஆயிரக்கணக்கான பேர் கூடுவாங்க. டாஸ்மாக் கடைகள்லயும் கூட்டம் அலைமோதும். இறைச்சிக் கடைகள்லயும் பெருமளவும் கூட்டம் கூடும். இதனால் கண்டிப்பாக கொரோனா அதிகரிக்கும். வாக்கு எண்ணிக்கைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டவங்களை மட்டும், மே 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியில் நடமாட அனுமதிச்சாலே போதும்.

ஞாயிற்றுக்கிழமை வழக்கமான ஊரடங்கோடு வாக்கு எண்ணிக்கையை நடத்தினால், அரசியல் கட்சிகளின் ஆடம்பரக் கொண்டாட்டங்கள், மோதல்கள், அலப்பறைகளையும் தவிர்க்கலாம். கொரோனா அபாயத்திலிருந்து மக்களை பாதுகாக்குறதுக்காக, கல்யாணத்துக்கு இவ்வளவு பேருதான் அனுமதி, இறுதி ஊர்வலத்துக்கு இவ்வளவு பேருதான் அனுமதினு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குறாங்க. ஆனால் தேர்தல் கொண்டாட்டத்துக்கு மட்டும் கட்டுப்பாடுகளே கிடையாதா? கொரோனா இரண்டாம் அலை மக்களை அச்சுறுத்திக்கிட்டு இருக்கு. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கை, வாக்கு எண்ணிக்கைக்காக தளர்த்தறதுங்கறது, மிகவும் தவறான செயல். தேர்தல் ஆணையமே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள்ல கவனம் செலுத்தலைன்னா, பொதுமக்கள் எப்படிப் பொறுப்போடு நடந்துக்குவாங்க. கோரோனா அதிகமானால், தேர்தல் ஆணையம்தான் பொறுப்பேத்துக்கணும்’’ என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு