அரசியல்
அலசல்
Published:Updated:

அரக்கர் கூட்டம், திராவிடம் 2.0 பின்னணியில் தி.மு.க? - உக்கிரமாகும் இணையப்போர்!

பிரபாகரன், கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
பிரபாகரன், கருணாநிதி

முதலில் தி.மு.க-வை ஆதரிப்பவர்களையெல்லாம் தி.மு.க கட்சியின் உறுப்பினர்கள் போல முத்திரை குத்துவதே தவறான செயல்.

`புதிதாகப் பொறுப்பேற்ற தி.மு.க அரசு சிறப்பாகச் செயல்படுகிறது’ என்கிறார்கள் ஒரு தரப்பினர். மற்றொரு தரப்பினரோ, `அதிகாரிகள் நியமனம், மின்வெட்டு உள்ளிட்ட விஷயங்களில் தி.மு.க அரசு தடுமாறுகிறது’ என்கிறார்கள். ஆக்கபூர்வமான இவர்களின் விமர்சனங்களுக்கு இடையே சமூக ஊடகங்களில் `அரக்கர் கூட்டம்’, `திராவிடம் 2.0’ ஆகிய பெயர்களில் ‘தி.மு.க ஆதரவாளர்கள்’ என்று கூறிக் கொள்பவர்கள் பிரபாகரனையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தினரையும் கடுமையாக வசைபாடுவது தி.மு.க-வுக்குக் கடும் குடைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களுக்குப் பதிலடி கொடுப்பதாகச் சொல்லி, தி.மு.க-வை வறுத்தெடுக்கிறார்கள் நாம் தமிழர் தம்பிகள். கடந்த சில நாள்களாக இணையத்தில் உக்கிரமாக நடக்கும் இந்தப் போருக்கான பின்னணி என்ன?

கொளத்தூர் மணி - மனுஷ்ய புத்திரன்
கொளத்தூர் மணி - மனுஷ்ய புத்திரன்

இந்த விவகாரங்களை உன்னிப்பாக கவனித்துவருபவர், தந்தை பெரியார் திராவிடர் கழக மாணவரணி மாநில ஒருங்கிணைப்பாளர் மனோஜ். அவர் நம்மிடம், “தி.மு.க ஐடி விங் நிர்வாகிகள் நேரடியாக இது போன்ற பதிவுகளை இடுவதில்லை. ‘தி.மு.க ஆதரவாளர்கள்’ என்று சொல்லிக்கொண்டு, `திராவிடம் 2.0’, `அரக்கர் கூட்டம்’ போன்ற பெயர்களில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். நாம் தமிழர் தரப்பினர் 2009 ஈழப்போரை மையப்படுத்தி, தி.மு.க மற்றும் மறைந்த கருணாநிதியை விமர்சித்து வருகிறார்கள். ஆனால், தி.மு.க ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் அரக்கர் கூட்டம் உள்ளிட்ட குழுவினர், பதிலுக்கு நாம் தமிழர் கட்சியை விமர்சிக்காமல், பிரபாகரனைத் தாக்குகிறார்கள். ‘புலிகள் ஹெராயின் கடத்தினார்கள்’, ‘குழந்தைகளைப் போரில் ஈடுபடுத்தினார்கள்’ என்று சிங்களத் தரப்பு வைத்த அதே வாதங்களை இவர்களும் வைத்துவருகிறார்கள்.

அரக்கர் கூட்டம், திராவிடம் 2.0 பின்னணியில் தி.மு.க? - உக்கிரமாகும் இணையப்போர்!

மேற்கண்ட கூட்டத்தில் டான் அசோக், ரவிசங்கர் அய்யாக்கண்ணு, கார்த்திக் ராமசாமி உட்பட 100 பேர் வரை இயங்குகிறார்கள். தி.மு.க என்.ஆர்.ஐ விங் இணைச்செயலாளர் எம்.எம்.அப்துல்லாதான் இவர்களை ஒருங்கிணைத்து வழிநடத்துகிறார். இதை அப்துல்லா மறுக்கிறார். ஆனால், அவர்தான் இயக்குகிறார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ‘தலையில் சுட்டுக்கொண்டு செத்தவர் பிரபாகரன்’ என்பதுபோல ஒரு கமென்ட்டை இவர் பதிவுசெய்திருந்தார். இதையொட்டி கண்டன அறிக்கை வெளியிட்ட கொளத்தூர் மணியிடம், மூன்றாம் நபர் ஒருவர் மூலம் பேசிய அப்துல்லா, ‘நான் புலிகள் ஆதரவாளர், அவர்களை விமர்சிக்கும் கூட்டத்தில் நானில்லை’ என்று ஒருபுறம் மறுத்துவிட்டு, ஃபேஸ்புக்கில் கொளத்தூர் மணி தன்னிடம் மன்னிப்புக் கேட்டதுபோலப் பதிவு செய்திருக்கிறார். இவையெல்லாம் ஆரோக்கியமான போக்கு அல்ல” என்றார் மனோஜ்.

கல்ஃப் நாட்டிலிருந்து அரக்கர் கூட்டத்தில் களமாடி வரும் ரவிசங்கர் அய்யாக்கண்ணுவிடம் விளக்கம் கேட்டோம். “முதலில் தி.மு.க-வை ஆதரிப்பவர்களையெல்லாம் தி.மு.க கட்சியின் உறுப்பினர்கள் போல முத்திரை குத்துவதே தவறான செயல். தேர்தல் சமயத்தில் தி.மு.க-வை ஆதரித்தோம் என்பதால், நாங்கள் தி.மு.க-வினர் அல்ல. மற்ற பல விஷயங்களில் எங்களுக்கு முரண்பட்ட கருத்துகள் இருக்கின்றன. பிரபாகரன் தமிழகத்தில் முக்கியமான தலைவராகப் பார்க்கப்படுவதே தவறு. விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம். ஈழத்தில் உள்ள மக்கள் அதைப்பற்றி பேசலாம், இன்னொரு நாட்டில் உள்ளவர்கள் அந்த வேலையைச் செய்யத் தேவையில்லை.

அரக்கர் கூட்டம், திராவிடம் 2.0 பின்னணியில் தி.மு.க? - உக்கிரமாகும் இணையப்போர்!

ஈழ இறுதிப்போரில் கருணாநிதி உதவவில்லை என்பதுதான் அவர்களது வாதம். அதுபற்றி அவர்கள் பேசுவதால், பதிலுக்கு நாங்கள் பேசுகிறோம். குழாயடிச் சண்டையல்ல இது. உண்மையிலேயே ஈழப்போரில் நடந்தது என்ன... இலங்கை ராணுவம், இந்திய அரசு, கருணாநிதி, விடுதலைப் புலிகள் ஆகியவர்களின் செயல்பாடுகள் என்ன... இதில் சரி மற்றும் தவறுகள் என்ன... எனப் பகுத்தாய்வு செய்கிறோம். தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வது போலவே, போர் பற்றி விமர்சனம் செய்வது அறிவின் செயல்பாடாகப் பார்க்கிறோம். விமர்சனத்தில் தவறு இருந்தால் மறுக்கலாம், ஆனால் விமர்சிக்கவே கூடாது என்று கூறுவது தவறு” என்றார்.

இந்த விவகாரத்தில், கண்டித்து அறிக்கை வெளியிட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நம்மிடம், “தி.மு.க ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொண்டு, இந்துத்துவ அமைப்புகளின் சாயலுடன்தான் இவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. சந்தேகம் வராமலிருக்க, அவ்வப்போது கருணாநிதியை மட்டும் முகஸ்துதி பாடுகிறார்கள். கருணாநிதி பிரபாகரன் இருவருக்கிடையிலும் பரஸ்பரம் மரியாதை இருந்தது. உண்மை இவ்வாறிருக்க, கருணாநிதிக்கு எதிராக பிரபாகரனை நிறுத்த முயல்வதும், தி.மு.க-வுக்கு எதிராக விடுதலைப்புலிகள் இருந்தார்கள் என்று சொல்லி தி.மு.க-வுக்கு ஆதரவான திராவிட இயக்கத்தினரை அந்தக் கட்சிக்கு எதிராகத் திருப்பிவிடும் சூழ்ச்சியையும்தான் இவர்கள் செய்கிறார்கள். பெரியாரிய தோழர்கள் இவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது” என்றார்.

மனோஜ், ரவிசங்கர் அய்யாக்கண்ணு, பாக்கியராஜன்
மனோஜ், ரவிசங்கர் அய்யாக்கண்ணு, பாக்கியராஜன்

நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராஜன் “2009 ஈழப்போரைத் தடுத்து நிறுத்தாத தி.மு.க-வை எதிர்ப்பதுதான் எங்கள் அடிப்படை நோக்கமே. அதனால்தான் தி.மு.க ஆதரவாளர்கள், எங்களைத் தாக்குவதாக நினைத்துக்கொண்டு பிரபாகரனை வசைபாடுகின்றனர். இப்போது ஆட்சிக்கு வந்ததும் ஒரு படி மேலே சென்று, நாம் தமிழர் கட்சியை வளரவிடக் கூடாது என்பதற்காக பிரபாகரன் பிம்பத்தை உடைப்பதாகச் சொல்கிறார்கள். இப்படியான குழுக்கள் செயல்படுவது தி.மு.க தலைமைக்கு நன்றாகவே தெரியும். ஆர்.எஸ்.பாரதியின் மகன் இதில் இருக்கிறார். உதயநிதி இவர்களை ஃபாலோ செய்கிறார். நேரடியாக பிரபாகரனைத் திட்ட முடியாதென்பதால், இவர்களை தி.மு.க மறைமுகமாக ஊக்குவிக்கிறது. இதன் பின்விளைவு மோசமாக இருந்தால், ‘நாங்கள் இல்லை’ என்று நழுவிவிடுவார்கள். ஒருவேளை அதன் மூலம் பாசிட்டிவாக ஏதாவது நடந்தால் ‘நாங்கள்தான் செய்தோம்’ என்று சொந்தம் கொண்டாடுவார்கள்” என்றார் காட்டமாக!

“யாரோ பதிவிடும் கருத்துகளுக்கெல்லாம் தி.மு.க பொறுப்பேற்க முடியாது” என்று சொல்லும் அந்தக் கட்சியின் ஐடி விங் ஆலோசகர் மனுஷ்ய புத்திரன் நம்மிடம், “பிரபாகரனையும், ஈழ விடுதலையையும் நாங்கள் மதிக்கிறோம். எந்த நிலையிலும் ஈழத்துக்கு எதிரான வார்த்தைகளை நாங்கள் பயன்படுத்தியதில்லை. தி.மு.க-வின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்களோ அல்லது என்னைப் போன்றவர்களோ வெளியிடும் கருத்துகள் மட்டுமே கட்சியின் கருத்துகள். சமூக வலைதளங்களில் தி.மு.க ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு, யாரோ பதிவிடும் கருத்துகளுக்குக் கட்சி பொறுப்பேற்க முடியாது” என்றார் அழுத்தமாக.