Published:Updated:

காங்கிரஸ்: அதிருப்தி தலைவர்களோடு சோனியா ஆலோசனை! - மீண்டும் கட்சித் தலைவராகிறாரா ராகுல்?

சோனியா காந்தி, ராகுல் காந்தி
சோனியா காந்தி, ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் கொண்டுவருவது, புதிய தலைவரைத் தேர்வு செய்வது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து காங்கிரஸின் மூத்த தலைவர்களோடு சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்றும், கட்சியைப் பலப்படுத்த முழுநேரத் தலைவர் வேண்டும் என்று இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கட்சி நிர்வாகிகள் சிலர் கடிதம் எழுதினர். அந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி தலைவர்கள் உட்பட 23 மூத்த தலைவர்கள் கையெழுத்திட்டிருந்தனர். பீகார் தேர்தல்களின் முடிவுக்குப் பின்னர் காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கருத்து தெரிவித்திருந்தார்.

சோனியா காந்தி - ராகுல் காந்தி
சோனியா காந்தி - ராகுல் காந்தி

இந்த நிலையில் மூத்த தலைவர்களோடு ஆலோசனைக் கூட்டத்தை மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் ஒருங்கிணைத்திருந்தார். இந்த கூட்டத்தில் அசோக் கெலாட், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, பூபேந்தர்சிங் ஹூடா, பிரித்விராஜ் சவுகான், சசிதரூர், ப.சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா பேரிடருக்குப் பிறகு சோனியா காந்தி மூத்த நிர்வாகிகளை நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை. சோனியாவுடன் ராகுல் மற்றும் பிரியங்காவும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜனவரி மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவரைத் தேர்வு செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பீகார் சட்டப்பேரவைத் மற்றும் கேரளா உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவு சந்தித்திருப்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

மேலும், தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல் கூட்டணி குறித்தும், தற்போது, குளிர்கால கூட்டுத்தொடர் ரத்து செய்துள்ளது தொடர்பாகவும், வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிரான நிலைப்பாடே மேலும் வலுப்படுத்துவதுக் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டம் இன்றும் நாளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ்: `மோடி அரசின் மோசமான சதியைத் தோற்கடிக்க வேண்டும்!' -  சோனியா காந்தி

ஆலோசனைக் கூட்டம் தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, "இந்த கூட்டம் கருத்துவேறுபாடு உள்ள தலைவர்களையும், அதிருப்தி தலைவர்களையும் சந்திக்கும் கூட்டம் கிடையாது. கட்சியின் உள்விவகாரத்திற்காகவும் நடைபெறவில்லை. தேர்தல் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படவே இந்த கூட்டம். புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும். காங்கிரஸ் தலைவர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள் 99.9 சதவிகிதம் ராகுல் காந்தியைத் தலைவராக்கவே விரும்புகிறார்கள்" என்று பேசினார்.

ரன்தீப் சுர்ஜிவாலா
ரன்தீப் சுர்ஜிவாலா
Twitter

நடந்துவரும் இந்த கூட்டத்தின் மூலம் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும் என்றும்., பல்வேறு திருப்பு முனைகளை உருவாக்கும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு