Published:Updated:

ஸ்டாலின் நூறு நாள்... ப்ளஸ் மைனஸ்!

ஸ்டாலின் நூறு நாள் ப்ளஸ் மைனஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் நூறு நாள் ப்ளஸ் மைனஸ்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவை, ஸ்டாலின் தி.மு.க-வுக்குச் சாதகமாக அரசியல் சாதுர்யத்தோடு கையாளவில்லை என்கிற விமர்சனங்கள் அப்போது முன்வைக்கப்பட்டன

ஸ்டாலின் நூறு நாள்... ப்ளஸ் மைனஸ்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவை, ஸ்டாலின் தி.மு.க-வுக்குச் சாதகமாக அரசியல் சாதுர்யத்தோடு கையாளவில்லை என்கிற விமர்சனங்கள் அப்போது முன்வைக்கப்பட்டன

Published:Updated:
ஸ்டாலின் நூறு நாள் ப்ளஸ் மைனஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் நூறு நாள் ப்ளஸ் மைனஸ்

தொண்டராகக் கட்சிக்குள் பயணத்தைத் தொடங்கி, இளைஞரணித் தலைவர், செயல் தலைவர் என்று பயணித்து, தி.மு.க-வின் தலைவராக மகுடம் சூடிய ஸ்டாலினின் அரசியல் கனவு பலித்த நாள் 7, மே 2021. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள். ஆகஸ்ட் 14-ம் தேதியோடு நூறு நாள்களைத் தொட்டுவிட்டது ஸ்டாலினின் ஆட்சி. இந்த நூறு நாள்களில் ஸ்டாலின் அரசு செய்தது என்ன, செய்யத் தவறியது என்ன என்கிற ஸ்கேன் ரிப்போர்ட் இது!

கனவு பலித்தது!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவை, ஸ்டாலின் தி.மு.க-வுக்குச் சாதகமாக அரசியல் சாதுர்யத்தோடு கையாளவில்லை என்கிற விமர்சனங்கள் அப்போது முன்வைக்கப்பட்டன. ஆனால் “குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை” என்று அதற்கு பதிலடி கொடுத்தார் ஸ்டாலின். அப்போதே, ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார், தேர்தல் களத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்கிற எதிர்பார்ப்புகள் உருவாகத் தொடங்கிவிட்டன. விமர்சனங்களுக்கு பதிலளிக்கும்விதமாக, 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுக்காட்டினார் ஸ்டாலின். பத்து ஆண்டுகள் ஆட்சிக்கட்டிலை இழந்திருந்த தி.மு.க-வுக்கு 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் என்பது வாழ்வா, சாவா பிரச்னையாக இருந்தது. ஆனால், ஸ்டாலின் தலைமையில் அமைந்த கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றிபெற, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்...” என்று தனது பெயரை உவகையோடு உச்சரித்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் ஸ்டாலின்.

ஸ்டாலின் நூறு நாள்... ப்ளஸ் மைனஸ்!

கொண்டாட விடாத கொரோனா!

மே மாதம் தி.மு.க அரசு பொறுப்பேற்பதற்கு முன்பாகவே, தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த தி.மு.க., அதை உற்சாகமாகக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. அறிவாலயத்தின் முன்பு கூடி பட்டாசு வெடித்த தொண்டர்களைக் கூட கலைந்து போகுமாறு கட்சி கேட்டுக் கொண்டது. வெற்றி ஊர்வலங்களும் இல்லை. பிரமாண்டமாகப் பதவியேற்பு விழாவை நடத்த நினைத்த ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்கும் நிலை உருவானது. தேர்தல் முடிவுகள் வெளியான மறுதினமே, முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்பாகவே, அரசுத்துறைச் செயலாளர்களைத் தனது வீட்டுக்கே வரவழைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின். அதிகாரிகள் சொன்ன சில தடுப்பு நடவடிக்கைகளுக்கு உடனடியாக ஒப்புதல் அளித்தார். அதன் தொடர்ச்சியாகக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. மே 7-ம் தேதிக்குப் பிறகு கொரோனா தாக்கம் கட்டுப்பாட்டை மீறியது. ‘ஊரடங்கு மட்டுமே இதற்குத் தீர்வு’ என அதிகாரிகள் சொல்ல, வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை முதல்வருக்கு வந்தது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது “இன்னொரு ஊரடங்கைத் தமிழகம் தாங்காது” என்றார் ஸ்டாலின். ஆனால், அவரே முதல்வர் ஆசனத்தில் அமர்ந்தவுடன் “ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை” என்று அறிவித்தார். அது விமர்சனங்களை உண்டாக்கியபோதும், கொரோனா இரண்டாவது அலையின் வீரியத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்கள்போல தடுமாறாமல் கடந்தது தமிழகம். தி.மு.க அரசு பதவிக்கு வந்த முதல் 30 தேனிலவு நாள்களை கொரோனா கபளீகரம் செய்துவிட்டது என்பதே உண்மை.

அமைச்சரவையே அதிர்ச்சி ரகம்!

ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் யார் யார், அவர்களுக்கான துறைகள் எவை என்பவை குறித்த தகவல்கள், முதல்வர் பதவியேற்புக்கு முதல் நாள் இரவுவரை யாருக்கும் தெரியாமலேயே இருந்தது. கருணாநிதி காலத்தில் அமைச்சர்களாகப் பதவியேற்பவர்களிடம் முன்கூட்டியே அவர்களுக்கான துறைகள் பற்றி ஆலோசனை செய்வார். ஆனால், ஸ்டாலின் யாருக்கு என்ன துறை என்பதைத் தானே முடிவுசெய்து, அதை நேரடியாக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைத்தார். இந்த அணுகுமுறை, ஜூனியர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், சீனியர்களைச் சீற்றம்கொள்ளச் செய்தது. குறிப்பாக, தி.மு.க-வில் பல ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் சீனியர்களுக்கு வழங்கப்பட்ட துறைகள் அதிர்ச்சியைக் கொடுத்தன. கட்சியின் சீனியரான ஐ.பெரியசாமிக்குக் கூட்டுறவுத்துறையைக் கொடுத்து, அதே மாவட்டத்தைச் சேர்ந்த சக்கரபாணிக்கு உணவுத்துறையைக் கொடுத்தார். கே.என்.நேருவுக்கு உள்ளாட்சித்துறையிலிருந்து நகர்ப்புற வளர்ச்சித்துறையை மட்டும் தனியாகப் பிரித்துக் கொடுத்துவிட்டு, அதே மாவட்டத்தில் அன்பில் மகேஷுக்குப் பள்ளிக் கல்வித்துறையைக் கொடுத்தார். அதேபோல, பொதுப்பணித்துறையில் இருந்த நீர்வளம் மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டு துரைமுருகனுக்கு வழங்கப்பட்டது. சீனியர்கள் வசம் வளமான துறைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற எழுதப்படாத விதியை உடைத்தார் ஸ்டாலின். இதன் மூலம், ‘சீனியர்களுக்கு செக் - புதியவர்களுக்கு வாய்ப்பு’ என்கிற அம்சத்தைச் செயல்படுத்திக் காட்டினார். அதேபோல் அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அதிகாரிகளின் ஆலோசனை இல்லாமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று கறார் உத்தரவும் போட்டார். இதனால், அதிகார துஷ்பிரயோகங்கள் நிகழ முடியாமல் போனது.

ஸ்டாலின் நூறு நாள்... ப்ளஸ் மைனஸ்!

முத்தாய்ப்பான அறிவிப்புகள்!

முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலினின் முதல் கையெழுத்தே வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக 4,000 ரூபாய் கொரோனா நிவாரணம், மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசம், ஆவின் பால் விலைக் குறைப்பு என அதிரடியாகச் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அதுபோலவே, அறநிலையத்துறையில் அடுத்தடுத்து தற்போதைய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை பா.ஜ.க-வினரே பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

உங்கள் தொகுதியில் முதல்வர்!

தேர்தலுக்கு முன்பாக ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என முகாமிட்டு பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். `ஆட்சிக்கு வந்தவுடன் அந்த மனுக்கள்மீது 100 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்கிற உறுதியையும் கொடுத்தார். முதல்வராகப் பொறுப்பேற்றதுமே ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்கிற தனித்துறையை உருவாக்கி, அந்தத் துறைக்கு ஷில்பா பிரபாகர் என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்தார். இந்தத் துறைவசம், 39 மாவட்டங்களில் பெறப்பட்ட நான்கரை லட்சம் மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன. பத்து நாள்களில் 549 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வும் காணப்பட்டது. அடுத்த ஒரு மாதத்தில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்குத் தீர்வுகாணப்பட்டது. நூறு நாள்களுக்குள் நான்கரை லட்சம் மனுக்களுக்கும் தீர்வுகாண முடியாமல் போனாலும், அவற்றில் கணிசமான மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் துறையிலுள்ள அதிகாரிகள்.

ஸ்டாலின் நூறு நாள்... ப்ளஸ் மைனஸ்!

ஆட்டுவிக்கப்படும் அமைச்சர்கள்!

`தி.மு.க-வினர் ஆட்சிக்கு வந்தாலே அந்தக் கட்சியினர் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வார்கள்’ என்கிற கருத்தை எதிர்க்கட்சிகள் சொல்லிவந்தன. தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு மறுநாளே, சென்னை கே.கே.நகரிலுள்ள அம்மா உணவகத்தைத் தாக்கி, கட்சித் தலைவர் ஸ்டாலினை வியர்த்து விறுவிறுக்கவைத்தனர் தி.மு.க தொண்டர்கள். ஆனால், அந்தச் சம்பவத்தில் அவர் எடுத்த அதிரடியான நடவடிக்கை பாராட்டப்பட்டது. “கட்சிக்காரர் என்பதற்காக யாருக்கும் எந்தச் சலுகையும் காட்ட வேண்டாம்” என்கிற உத்தரவு முதல்வர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகளுக்குச் சென்றது.

``மூத்த அமைச்சர்களைத் தாண்டி, முதல்வர் அலுவலகத்திலுள்ள அதிகாரிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டது. அமைச்சர்களின் உதவியாளர்களைக்கூட முதல்வர் அலுவலகமே தலையிட்டு தேர்வுசெய்தது” என்கிறார் மூத்த அமைச்சரின் உதவியாளர் ஒருவர். அதேபோல், ஒவ்வொரு துறைக்கும் நியமிக்கப்பட்ட செயலாளர்களைத் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கிறது முதல்வர் அலுவலகம். “முன்பு அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டியவர்களைத் துறைக்கு அதிகாரிகளாக நியமிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த முறை அதிகாரிகள் தேர்வைக்கூட முதல்வரே செய்தார். அமைச்சர்களுக்கு ஒத்துவரும், ஒத்து வராது என்பதையெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை. மூத்த அமைச்சர் ஒருவர், ‘என் துறையின் செயலாளர் நான் போன் பண்ணினால்கூட ஒழுங்காகப் பேசுவதில்லை’ என்று தன் சக அமைச்சரிடம் புலம்ப, ‘எனக்கும் அதே நிலைதான்’ என்று அவரும் புலம்பியிருக்கிறார். இப்படி அதிகாரிகளை ஒருபுறம் கண்காணிப்பில் வைத்துக்கொண்டே, அமைச்சர்களையும் ஆட்டுவிக்கும் முதல்வராக இருக்கிறார் ஸ்டாலின்” என்கிறார் தென்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர்.

கான்ட்ராக்ட் விவகாரங்களில் கவனம் வேண்டும்!

“ஒவ்வொரு துறையிலும் ஒப்பந்தங்கள் போடப்பட்டால், துறையின் அமைச்சருக்கு கணிசமான பங்கு இருக்கும். ஆனால், இப்போது எல்லாமே முதல்வர் அலுவலகத்திலேயே முடிவுசெய்யப்படுகிறது. யாருக்கு எதைக் கொடுக்க வேண்டும், அதை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை முதல்வர் அலுவலகமே முடிவெடுப்பதால், அமைச்சர்கள் நிலை பரிதாபத்தில் இருக்கிறது” என்று ஓப்பனாகவே சொல்கிறார் கொங்குமண்டலத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர். “அதேநேரம் கடந்த அ.தி.மு.க ஆட்சியில், யாரெல்லாம் ஒப்பந்தப் பணிகளில் கோலோச்சினார்களோ, அவர்களே இந்த ஆட்சியிலும் ஒப்பந்தப் பணிகளுக்குத் தேர்வாகியுள்ளனர். இதை முதல்வர் சரிசெய்ய வேண்டும். கிறிஸ்டி நிறுவனத்தின்மீது கடந்த ஆட்சியில் பல புகார்கள் எழுந்தன. ஆனால், தி.மு.க அரசும் சமூக நலத்துறையில் அவர்களுக்கே ஆரம்பத்தில் ஒப்பந்தங்களை வழங்கியது. இதேபோல, கடந்த ஆட்சியில் கோலோச்சிய இரண்டு நிறுவனங்கள், முதல்வர் வாரிசைப் பிடித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வீட்டுக்குள்ளும் சென்றுவிட்டார்கள். சைக்கிள் டெண்டரிலும் கடந்த ஆட்சியில் கோலோச்சிய நபர்களே கோட்டைக்குள் மீண்டும் உலவ ஆரம்பித்திருக்கிறார்கள். பல துறைகளிலும் முன்பு ஒப்பந்தங்கள் எடுத்து சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. எனவே, அதிகாரிகளை விரட்டும் முதல்வர், கான்ட்ராக்ட் விவகாரங்களிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும்’’ என்கிற கவலையைப் பகிர்ந்துகொண்டார் மூத்த ஒப்பந்ததாரர் ஒருவர். மேலும், “கடந்த ஆட்சியில் ஊழல் அமைச்சர்கள் என்று ஸ்டாலின் பட்டியலிட்ட அமைச்சர்களுக்கு ஆல் இன் ஆலாக இருந்த பல அதிகாரிகள் இப்போதும் பவர்ஃபுல்லான பதவிகளில் பவனிவருகிறார்கள். இதை முதல்வர் எப்படி அனுமதிக்கிறார்?” என்கிற புலம்பல் நேர்மையான அதிகாரிகளிடம் உள்ளது. `பழைய மனைவி புதிய புடவையில் சிரிப்பது’ போன்று முதல்வரின் சில நடவடிக்கைகள் இருக்கின்றன என்கிறார்கள்.

ஸ்டாலின் நூறு நாள்... ப்ளஸ் மைனஸ்!

அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சு!

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையில் 5 ரூபாயையும், டீசல் விலையில் 4 ரூபாயையும் குறைப்போம்’ என வாக்குறுதி கொடுத்திருந்தது தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில நாள்களில் பெட்ரோல் விலை உச்சத்துக்குச் செல்ல, விலைக் குறைப்பு குறித்துக் கோரிக்கைகள் எழுந்தன. உடனடியாக, இது தொடர்பாக விளக்கமளிக்க செய்தியாளர்களைச் சந்தித்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். தேர்தலில் கொடுத்த வாக்குறுதி குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்ப, “குறைப்போம்னு சொன்னோம்... எப்போன்னு சொன்னோமா, தேதி ஏதும் தேர்தல் அறிக்கையில போட்டிருக்கா... உங்களுக்குக் கணக்கு தெரியுமா?’’ எனப் பேசி அதிர்ச்சி கொடுத்தார் அமைச்சர். அவர் மட்டுமல்ல, “கிறிஸ்தவர்களின் ஜெபத்தால்தான் தி.மு.க வெற்றிபெற்றது” என பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேசியதும் மிகப்பெரிய சர்ச்சையானது.

நிறைவேற்றாத வாக்குறுதிகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம், சட்டப்பிரிவு 161-ன்படி மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. அதனால், தமிழக அரசே விடுதலை செய்யலாம் எனக் கடந்தகாலத்தில் குரல் எழுப்பிவந்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு அமைதி காக்கிறது. அதுமட்டுமல்ல, கடந்த அ.தி.மு.க ஆட்சியில், எழுவர் விடுதலை தொடர்பான மனுவை ஆளுநர், ஜனாதிபதிக்கு அனுப்பியபோது, ‘அது மாநில அரசு உரிமை மீறல், அரசியலமைப்புக்கு எதிரான செயல்பாடு’ என தி.மு.க-வினர் கொந்தளித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அதே ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது ஆளுநர் செய்த செயலை வலுப்படுத்தும் விதமாகவே அமைந்துவிட்டது என்கிற விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. அதேபோல, தேர்தலுக்கு முன்பாக, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்துசெய்வோம்’ எனத் தீவிரமாக பிரசாரம் செய்தனர் தி.மு.க-வினர். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வை ரத்துசெய்ய பிரதமருக்குக் கடிதம் எழுதினார் முதல்வர் ஸ்டாலின். நீட் தேர்வின் பாதிப்பைக் கண்டறிய குழு ஒன்றும் அமைக்கப்பட்டு மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இதுதான் சரியான வழிமுறை என்று தி.மு.க-வினர் விளக்கம் அளித்தாலும், அதை மக்களும் அரசியல் விமர்சகர்களும் முழுமையாக ஏற்கவில்லை.

ஸ்டாலின் நூறு நாள்... ப்ளஸ் மைனஸ்!

டாஸ்மாக் விவகாரத்தில் தள்ளாட்டம்!

கொரோனா முதல் அலையின்போது, நாற்பது நாள்கள் அடைக்கப்பட்டிருந்த மதுக்கடைகளை மீண்டும் திறக்க, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தபோது, தி.மு.க அதை மிகக் கடுமையாக எதிர்த்தது. தமிழகம் முழுவதும் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. `ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு உச்சத்திலிருந்த கொரோனாவைக் கண்டுகொள்ளாமல், மதுக்கடைகளைத் திறந்தது தி.மு.க அரசு. சமூக ஆர்வலர்கள் அதற்கெதிராகக் கண்டனக் குரல்களை எழுப்பியும் முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை.

கட்சி மாறினால் பாவ மன்னிப்பு!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை செய்து கொண்டிருந்த நேரத்தில், ஒரு மீம் சமூக வலைதளங்கள் மொத்தத்தையும் ஆக்கிரமித்தது. அதில் ‘வேலுமணி தி.மு.க-வுக்குப் போயிட்டா சரியாப்போச்சு, அடுத்து அவரும் அமைச்சர்தான்’ என்கிற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. கடந்த ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அ.தி.மு.க-வில் இருந்தபோது அவர்மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த தி.மு.க தலைமை, தங்கள் கட்சிக்கு அவர் வந்ததும் அமைச்சராக்கி அழகுபார்த்ததைத்தான் அந்த மீம் கேலி செய்திருந்தது. அது மட்டுமல்ல, கட்சியில் பல சீனியர்கள் இருந்தபோதும், கடந்த வருடம் தி.மு.க-வுக்கு வந்த ராஜகண்ணப்பனுக்குப் போக்குவரத்துத்துறையை ஒதுக்கியதும்கூட கடுமையான விமர்சனங்களையே ஏற்படுத்தியது.

‘பவர் கட்’ தி.மு.க!

‘தி.மு.க பவருக்கு வந்தாலே ‘பவர் கட்’ வந்துவிடும்’ என்ற விமர்சனம் உண்மையாகியிருக்கிறது. இதற்கு ‘அணில்தான் காரணம்’ என்ற துறை அமைச்சரின் பேச்சு கடுமையான கேலிக்குள்ளானது. பவர் கட் பிரச்னை இன்னும் சரிசெய்யப்படாத சூழலில், மின்சாரக் கட்டணத்திலும் பல குழப்பங்கள். மக்களின் அன்றாடத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம் மின்சாரம் என்கிற வகையில், ஸ்டாலின் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இது!

எதிர்நோக்கும் சவால்கள்?

முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் முன்பே, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய நிலையில் தமிழக நிதி நிலைமை இருக்கிறது. இனி அடுத்தடுத்த நாள்களில் தமிழகத்தின் நிதி நிலைமையைச் சரிசெய்யவே அரசு படாதபாடுபட வேண்டும். மறுபுறம், கடந்த பத்தாண்டுகளாகத் தேர்தலுக்கும் கட்சிக்கும் செலவுசெய்து காத்திருக்கும் கட்சியினரைச் சமாளிக்க வேண்டிய நெருக்கடியும் ஸ்டாலினுக்கு உள்ளது. ஆட்சிக்கு வந்தது முதலே `ஒன்றிய அரசு’ என்கிற கோஷத்தை தி.மு.க முன்வைத்துவருகிறது. இது, மத்திய அரசைக் கடுமையாக டென்ஷனாக்கியிருக்கிறது. மத்திய அரசின் உதவியில்லாமல் தனித்துச் செயல்படும் நிலையில் தமிழக அரசின் நிதி நிலைமையும் இல்லை. எனவே, மத்திய அரசுடன் மல்லுக்கட்டுமா, பணிந்துபோகுமா... என்கிற எதிர்பார்ப்பில் எதிர்க்கட்சிகளும் உள்ளன. இவற்றைத் தாண்டி, தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார் என்பதே மில்லியன் டாலர் கேள்வி!

“நான் கலைஞரின் மகன். சொன்னதைத்தான் செய்வேன், செய்வதைத்தான் சொல்வேன்” எனத் தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் சொன்ன வார்த்தைகள் நம் காதுகளில் பலமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இன்னும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் பட்டியல் மிக நீளம். வார்த்தைகளை உண்மையாக்குவாரா ஸ்டாலின்?