Published:Updated:

தொடர் தோல்வி... நிதி நெருக்கடி... நம்பிக்கையற்ற தலைமை - அல்லாடும் அ.தி.மு.க! - மீண்டும் சசிகலா?

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி

புகைந்துகொண்டுதானே இருக்கிறது என ஏளனமாகக் கடந்துபோகிறவர்களுக்கு எரிமலை சொல்லும் தகவல்... அது வெடிக்கப்போகிறது என்பதுதான்

தொடர் தோல்வி... நிதி நெருக்கடி... நம்பிக்கையற்ற தலைமை - அல்லாடும் அ.தி.மு.க! - மீண்டும் சசிகலா?

புகைந்துகொண்டுதானே இருக்கிறது என ஏளனமாகக் கடந்துபோகிறவர்களுக்கு எரிமலை சொல்லும் தகவல்... அது வெடிக்கப்போகிறது என்பதுதான்

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வுக்குள் ரணகளக் காட்சிகள் அரங்கேற ஆரம்பித்திருக்கின்றன. 2021-ம் ஆண்டிலிருந்து சந்தித்த சட்டமன்றத் தேர்தல், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர் தோல்வியைச் சந்தித்திருக்கிறது அ.தி.மு.க. இந்தத் தோல்வியால் சோர்ந்துபோயிருப்பதோடு, தேர்தல்களில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் பொருளாதார நெருக்கடியிலும் இருக்கிறார்கள். 2016-21 அ.தி.மு.க ஆட்சியில் ‘பசை’யுள்ள துறைகளைக் கைவசம் வைத்திருந்த முன்னாள் அமைச்சர்களெல்லாம், தங்கள் பர்ஸைத் திறக்க மறுப்பது கட்சியின் கடைக்கோடி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சூழலில், ‘அ.தி.மு.க-வில் தலைமையே இல்லை. நாங்களாகப் பார்த்துத்தான் கட்சியை வழிநடத்த இருவரை நியமித்திருக்கிறோம்’ எனத் தலைமையை நோக்கி முதல் வெடியைக் கிள்ளி எறிந்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அடுத்த நான்கு வருடங்களுக்கு யார் செலவு செய்வது என்கிற பஞ்சாயத்தும் கட்சிக்குள் களைகட்டியிருக்கிறது. செல்லூர் ராஜூவிடம் தொடங்கி, விழுப்புரம் செரீஃப், தேனி சையது கான், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி வரை பலரிடமிருந்தும் அ.தி.மு.க தலைமை மீதான நம்பிக்கையற்ற வார்த்தைகள் தெறிக்கின்றன. ‘சசிகலா, தினகரன் உட்பட கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்’ என்று தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறது தேனி மாவட்ட அ.தி.மு.க. இந்தக் களேபரக் காட்சிகளால் அ.தி.மு.க-வே அல்லாடிக்கொண்டிருக்கிறது!

தொடர் தோல்வி... நிதி நெருக்கடி... நம்பிக்கையற்ற தலைமை - அல்லாடும் அ.தி.மு.க! -  மீண்டும் சசிகலா?

“சம்பாதிச்சது யாரு?” வெடிவைத்த ராஜூ!

நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஒருவர், “செல்லூர் ராஜூவின் கருத்தால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அப்செட். ‘இப்படிப் பேசிட்டீங்களே?’ என மதுரை மாவட்டப் பிரமுகர் ஒருவர் செல்லூர் ராஜூவிடம் பேசியபோது, ‘நம்ம ஆட்சியில சம்பாதிச்சது யாரு... கட்சி வளர்ச்சிக்கென ஒதுக்கின தொகை என்னவாச்சு? இதையெல்லாம் கணக்கு கேட்க ஆரம்பிச்சா, ரணகளமாகிடும். ஒவ்வொரு வார்டுக்கும் தி.மு.க-காரங்க தாராளமாக நிதியை இறக்கினாங்க. நம்மாளுங்க வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிஞ்சுது. இந்த லட்சணத்துல எல்லாக் கட்சி செலவையும் எங்க தலை மேல தூக்கிப்போட்டா, நாங்க என்ன பண்றது?’ எனச் சீறியிருக்கிறார் செல்லூர் ராஜூ. உள்ளாட்சித் தேர்தல் முன்பு வரை, எடப்பாடி பக்கம்தான் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நின்றார். அவரிடம், திருவாரூர் மாவட்டத் தேர்தல் செலவுகளைப் பார்க்கச் சொன்னதால், அவர் தரப்பும் அப்செட் ஆகிவிட்டது. செங்கோட்டையன், எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், வெல்லமண்டி நடராஜன், வைத்திலிங்கம், சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன் உள்ளிட்ட பலரும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது வருத்தத்தில் இருக்கிறார்கள். தொடர் தோல்வி அவர்களுக்குள் கலக்கத்தை உண்டு பண்ணி விட்டது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து, பிப்ரவரி 28-ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால், ராஜேந்திர பாலாஜி கைதுசெய்யப்பட்டபோது, இப்படி எந்த ஆர்ப்பாட்டமும் நடைபெறவில்லை. இதைத் தன் சகாக்களிடம் சுட்டிக்காட்டியிருக்கும் பாலாஜி, ‘நான் மட்டும் கிள்ளுக்கீரையா... தி.மு.க அரசால நான் பழிவாங்கப்படலயா? சசிகலாவுக்கு ஆதரவாக நான் இருந்தேன்கற ஒரே காரணத்துக்காக, என்னைய கட்சிக்குள்ள ஓரங்கட்டுறாங்க’ என்று கொதித்திருக்கிறார். இது போன்ற கொதிப்புகள், மன வருத்தங்கள் நாளுக்கு நாள் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளிடம் அதிகரித்த வண்ணமுள்ளன. அதன் வெளிப்பாடுதான், இந்தத் தீர்மானம் நிறைவேற்றம், கட்சியிலிருந்து வெளியேற்றமெல்லாம் அரங்கேறுகின்றன” என்றார்.

சசிகலாவுடன் முகமது ஷெரீஃப்.
சசிகலாவுடன் முகமது ஷெரீஃப்.

கட்டுப்பாடு இல்லாத கழகம்... தலைமைமீது அதிருப்தி!

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர் முகமது ஷெரீஃப். முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவரான இவர், சண்முகத்தின் பெயரைக் கையில் பச்சை குத்திக்கொள்ளும் அளவுக்கு அவரின் நிழலாக வலம்வந்தவர். இப்போது சண்முகத்துக்கு எதிராகவே களமிறங்கியிருக்கிறார். சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவும் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து ஷெரீஃபிடம் பேசினோம். “சசிகலாதான் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர். தற்போது கட்சியிலிருக்கும் இரட்டைத் தலைமையைத் தொண்டர்களும் பொதுமக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் கட்சி, தொடர் தோல்விகளைச் சந்தித்துவருகிறது. ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள்கூட ஆகாத நிலையிலும், கட்சித் தொண்டர்களுக்குப் பெரிய அளவில் பொருளாதார உதவிகளை தி.மு.க செய்தது. ஆனால், அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் யாரும் பெட்டியைத் திறக்கவில்லை. திண்டிவனம் நகராட்சியில் 21 வார்டுகளில் எங்கள் வேட்பாளர்கள் டெபாசிட்கூட வாங்கவில்லை. அதேபோல, விழுப்புரம் நகராட்சியில் 28 வார்டுகளில் டெபாசிட் வாங்கவில்லை. கட்சி அழிவுப் பாதையை நோக்கிச் செல்வதை, தொண்டர்களான எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, திண்டிவனத்திலிருக்கும் என்னுடைய ‘அம்மா டீ டைம்’ ஹோட்டலுக்கு அவ்வப்போது வருவது வழக்கம். இது பொறுக்க முடியாமல் என்னை அழைத்த சி.வி.சண்முகம், ‘கொடநாடு கேஸில் அவரே ஜெயிலுக்குப் போகப்போறார். அவர் உன் கடைக்கு வந்துபோனால் நீ பெரிய ஆளா... எனக்கு எதிரா அரசியல் செய்யுறியா?’ என்று மிரட்டியதுடன், மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் பதவியிலிருந்தும் என்னை நீக்கிவிட்டார். கட்சி இப்போது தலைமையில்லாமல், கட்டுப்பாடு இல்லாமல் செல்கிறது. இதனால்தான் சசிகலாவைச் சந்தித்தோம். அவரால் மட்டுமே கட்சியை மீட்டெடுக்க முடியும்” என்றார்.

கையெழுத்து போடாத பன்னீர்... டென்ஷனான எடப்பாடி!

சசிகலாவைச் சந்தித்த முகமது ஷெரீஃப், சேகர் உள்ளிட்ட ஏழு கட்சி நிர்வாகிகளை நீக்குமாறு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியும், கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அதில் கையெழுத்திட மறுத்துவிட்டார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்த நிலையில்தான் மார்ச் 2-ம் தேதி, பெரியகுளத்திலுள்ள பன்னீரின் பண்ணை வீட்டில், தேனி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், ‘பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும்’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தீர்மானத்தைப் பன்னீரிடம் ஒப்படைத்துவிட்டு, ‘சசிகலா, தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்’ என்று பேட்டியும் அளித்திருக்கிறார் தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சையது கான். இந்தத் தீர்மானக் கூட்டத்தையே பன்னீர் தரப்புதான் ஏற்பாடு செய்திருக்கிறது என்பதால், எடப்பாடி டென்ஷனாகிவிட்டார். “இந்தத் தீர்மானத்தை நான்தான் முன்னெடுத்தேன். சசிகலா, தினகரன் இருவரும் கட்சியில் இணைந்தால் கட்சி வலுப்பெறும். இப்படி தீர்மானம் நிறைவேற்றுவது தமிழ்நாடு முழுவதும் தொடரும்” என்று ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பேசியிருப்பதும் கட்சிக்குள் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.

சையது கான்
சையது கான்

நம்மிடம் பேசிய முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர், “சட்டமன்றத் தேர்தலின்போது, ஒவ்வொரு தொகுதிக்கும் செல்ல வேண்டிய பணம், சென்று சேர்ந்துவிட்டதா என கவனித்தார் எடப்பாடி. ஆனால், இந்த உள்ளாட்சித் தேர்தலின்போது கட்சி வேட்பாளர்கள் செலவுக்கு என்ன செய்தார்கள், அவர்களின் நிலை என்னவென்று கவலைப்படவே இல்லை. தன்னுடைய ஆளுமையை நிலைநாட்ட ஊர் ஊராகப் பிரசாரம் செய்தாரே தவிர, வெற்றிக்குத் தேவையான ஊட்டச்சத்தை அவர் வழங்கவே இல்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கட்சி சார்பாகப் போட்டியிட்ட பெரும்பாலானோருக்கு, 25 லட்சத்துக்குக் குறையாமல் கடனாகியிருக்கிறது. தலைமை மீது நம்பிக்கையற்ற சூழல் அ.தி.மு.க-வுக்குள் உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலைக் கச்சிதமாகத் தனக்கு ஆதரவாக மாற்றப் பார்க்கிறார் சசிகலா.

அதிருப்தியில் 25 எம்.எல்.ஏ-க்கள்... மாவட்டவாரியாகப் போட்டித் தீர்மானம்!

தனக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகளைத் திரட்டும் பணியை, டெல்டாவைச் சேர்ந்த கட்சி சீனியர் ஒருவரிடமும், கொங்கு மண்டல முன்னாள் சீனியர் அமைச்சர் ஒருவரிடமும் ஒப்படைத்திருக்கிறார் சசி. இவர்கள், ஒவ்வொரு நிர்வாகியிடமும் தொடர்ந்து பேசிவருகிறார்கள். செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, தருமபுரி அன்பழகன், கே.சி.வீரமணி, தளவாய் சுந்தரம், சிவகங்கை செந்தில்நாதன், ராமநாதபுரம் முனியசாமி, இசக்கி சுப்பையா, தூத்துக்குடி சண்முகநாதன், கடலூர் எம்.சி.சம்பத் எனக் கட்சியிலுள்ள சீனியர்கள் அனைவரிடமும் இந்த இருவர் டீம் பேசிவருகிறது. டெல்டாவைச் சேர்ந்த அந்த சீனியர் நிர்வாகியின் தொடர்பில், 25 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். ‘கட்சி ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, தி.மு.க-வை வலுவாக எதிர்கொள்ள முடியும்’ என்பதே இந்த நிர்வாகிகளின் எண்ணமாக இருக்கிறது.

மார்ச் 5-ம் தேதி தேனி மாவட்டம், பி.சி பட்டியில் செயல்வீரர்கள் கூட்டத்தைத் திரட்டி, சசிகலாவுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சசிகலாவைப் பொதுச்செயலாளராக முன் மொழிந்து முதலில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஆர்.பி.உதயகுமார். இதைத் தொடர்ந்துதான், டிசம்பர் 2016-ல் நடந்த அவசரப் பொதுக்குழுவில் கட்சியின் பொதுச்செயலாளராக சசி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபாணியில், மாவட்ட வாரியாக இப்போது சசிகலாவுக்கு ஆதரவான தீர்மானங்களை நிறைவேற்றத் தீர்மானித்திருக்கிறது கட்சிக்குள்ளிருக்கும் சசி ஆதரவு கோஷ்டி.

இதை உடைப்பதற்கு எடப்பாடி தரப்பிலும் நகர்வுகள் தீவிரமாகியிருக்கின்றன. சென்னையில் ஆதி ராஜாராம், விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி, நாமக்கல்லில் தங்கமணி உள்ளிட்ட ஒருசிலர்தான் எடப்பாடிக்கு ஆதரவான மனநிலையில் இருக்கிறார்கள். கோவையில் வேலுமணியே தடுமாற்றமான மனநிலையில்தான் இருக்கிறார். ‘எடப்பாடிதான் ஒற்றைத் தலைமை. கட்சியில் சசிகலா, தினகரனைச் சேர்க்கக் கூடாது’ என்று மாவட்டவாரியாகப் போட்டித் தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி தரப்பினர் தயாராகிறார்கள். ‘அ.தி.மு.க-வுக்குள் தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக பன்னீர் செய்யும் உள்ளடி அரசியல்தான் இது. முதல்வர் வேட்பாளர், கழக ஒருங்கிணைப்பாளர் தொடர்பான விவகாரங்கள் எழுந்தபோதும் இதே அரசியலைத்தான் பன்னீர் செய்தார். இப்போது இந்தத் தீர்மானத்தை முடுக்கி விட்டிருக்கும் பன்னீர், வழக்கம் போலக் கடைசி நேரத்தில் ஜகா வாங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’ என்று தெம்பாக இருக்கிறது எடப்பாடி தரப்பு” என்றார் விரிவாக.

ஓ.ராஜா
ஓ.ராஜா

டெல்லி சிக்னல்... மீண்டும் சசிகலா!

சில வாரங்களுக்கு முன்பு, புதுச்சேரியில் பா.ஜ.க சீனியர் நிர்வாகி ஒருவரை சசி குடும்பப் பிரமுகர் ஒருவர் சந்தித்துப் பேசியிருக்கிறார். “நீங்கள் ஒதுங்கச் சொன்னதால்தான், தன் எதிர்காலத்தைப் பற்றிக்கூட யோசிக்காமல் ஒதுங்கினார் சசிகலா. இப்போது காலம் கனிந்திருக்கிறது. சசிகலா கட்டுப்பாட்டில் கட்சி வந்தால் மட்டுமே, அது பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்கு 2024-ல் லாபமாக இருக்கும்” என்றிருக்கிறார். அதற்கு அந்த பா.ஜ.க நிர்வாகி, “ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” என்று ஆதரவாகப் பேசியிருக்கிறார். இந்தத் தகவலை நம்மிடம் பேசிய சசிகலா ஆதரவு அ.ம.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், “கழகம் ஒன்றிணைய வேண்டுமென்பதுதான் சசிகலாவின் எண்ணமாக இருக்கிறதே தவிர, பதவி மீதான எதிர்பார்ப்போ, எடப்பாடியைப் பழிதீர்க்க வேண்டும் என்ற எண்ணமோ அவரிடம் இல்லை. இந்தச் சூழலில், தன் குடும்பத்தை சசிகலா ஒதுக்கிவைத்துவிட்டு அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே அவர்மீது நம்பகத்தன்மை வரும். வெங்கடேஷ், விவேக் எனக் குடும்ப உறுப்பினர்கள் பலரும் இன்னமும் சசிகலாவைச் சுற்றி இருந்துகொண்டு ஆதிக்கம் செலுத்துவதால், சசியோடு இணைய விரும்புகிறவர்களுக்குக்கூட தயக்கம் இருக்கிறது” என்றார்.

சசிகலாவுடன் வைத்தியநாதன்
சசிகலாவுடன் வைத்தியநாதன்

பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையானதிலிருந்து, அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் முயன்றார் சசி. ஆனால், அவையெல்லாம் பெரிதாக எடுபடவில்லை. சிறு சிறு சலசலப்பாக மட்டுமே எழுந்து அடங்கியது. ஆனால், இப்போது முதன்முறையாக அவரைக் கட்சியில் இணைக்க வேண்டுமென்கிற கோஷம், மாவட்ட அளவில் தீர்மானமாகவே நிறைவேற்றப் பட்டிருப்பதால், சசி தரப்பு குஷியாகியிருக்கிறது. இது குறித்து சசிகலாவின் தீவிர விசுவாசியான ஆவின் வைத்தியநாதனிடம் பேசினோம். “மார்ச் 4-ம் தேதி திருச்செந்தூர் செல்லும் சசிகலா, சத்ரு சம்ஹார யாகம் செய்கிறார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளைச் சந்திக்கவிருக்கிறார். விரைவிலேயே, ஒன்றிணைந்த அ.தி.மு.க., சசிகலா தலைமையில் அணிவகுக்கும். இதில், எடப்பாடி, வேலுமணி, சி.வி.சண்முகம் என யார்மீதும் சசிகலாவுக்கு வருத்தமில்லை. கழகம் ஒன்றிணைய வேண்டுமென்பதே அவரது எண்ணம்” என்றார். கழகம் ஒன்றிணைந்தால், தனக்கான பொறுப்பு என்ன என்று தினகரன் ஒருபக்கம் அழுத்தம் கொடுப்பதால், சசி முகாமிலும் குழப்ப ரேகைகள் தென்படுகின்றன.

சமீபத்தில், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ், தன்னுடைய முகநூலில் “புகைந்துகொண்டுதானே இருக்கிறது என ஏளனமாகக் கடந்துபோகிறவர்களுக்கு எரிமலை சொல்லும் தகவல்... அது வெடிக்கப்போகிறது என்பதுதான்” என்று பதிவிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட அப்படித்தான் எரிமலையாகப் புகைந்துகொண்டிருக்கிறது அ.தி.மு.க. அது விரைவில் வெடிக்கப்போகிறது என்பதைச் சொல்லும்விதமாகக் கழகத்துக்குள் காட்சிகள் பரபரப்பாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன!

*****

தொடர் தோல்வி... நிதி நெருக்கடி... நம்பிக்கையற்ற தலைமை - அல்லாடும் அ.தி.மு.க! -  மீண்டும் சசிகலா?

“கடந்த வருடம் ஜூன் மாதம், ‘கட்சிக்குள் சசிகலாவைச் சேர்க்கக் கூடாது’ என்று எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலானோர் தீர்மானம் போட்டு அனுப்பினார்கள். ஆனால், இப்போது தேனி மாவட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் அண்ணன் ஓ.பி.எஸ்-ஸுக்கு உடன்பாடு இருக்காது. அது கொடி பிடித்த தொண்டரின் முடிவு கிடையாது. நிர்வாகிகள் சிலருடைய முடிவாக இருக்கலாம். அவ்வளவுதான்!”

- ஆதிராஜாராம், அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்