Published:Updated:

நெருங்குது தேர்தல்... வேஷம் கலைக்கும் கரைவேட்டி அதிகாரிகள்!

கரைவேட்டி அதிகாரிகள்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி அதிகாரிகள்

அதிகாரிகளா... மாவட்டச் செயலாளர்களா?

நெருங்குது தேர்தல்... வேஷம் கலைக்கும் கரைவேட்டி அதிகாரிகள்!

அதிகாரிகளா... மாவட்டச் செயலாளர்களா?

Published:Updated:
கரைவேட்டி அதிகாரிகள்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி அதிகாரிகள்
கட்சிகளை, ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டுவருபவர்கள் கரைவேட்டி கட்டிய தொண்டர்கள். அந்த ஆட்சியின் அதிகார இயந்திரங்களைச் சார்பற்று இயக்க வேண்டியவர்கள் அரசு அதிகாரிகள். ஆனால் அவர்களும் கண்ணுக்குத் தெரியாத கரைவேட்டியைக் கட்டிக்கொண்டு, களத்தில் இறங்கினால் என்னவாகும்... அணி அணியாகப் பிரிந்து அரசியல் செய்தால் என்னவாகும்? கிளம்பியிருக்கும் தேர்தல் புயலில் வேஷம் கலைத்து, தங்களது கரைவேட்டி வெளியில் தெரிய அதிகாரிகள் ஆடும் காட்சிகள் அரசியல் அவலம்!

2016, மே 19-ம் தேதி. சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜரூராக நடைபெற்ற நேரமது. அ.தி.மு.க ஆட்சி மீண்டும் தொடராது என்கிற எண்ணத்திலிருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை ஒன்றுதிரட்டிய மீசைக்கார ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், அவர்களை கோபாலபுரத்துக்குக் கொத்தோடு கொண்டுவர காய்நகர்த்தினார். இவரது ஏற்பாட்டில், லகானைக் கையில் பிடித்திருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், மருத்துவரான ஐ.ஏ.எஸ் ஒருவர் என்று பலர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தார்கள். யாரும் எதிர்பாராதவிதமாக மீண்டும் அரியணை ஏறினார் ஜெயலலிதா. போயஸ் தோட்டத்துக்கு அதிகாரம் வந்த அடுத்த 24 மணி நேரத்தில் அதிகாரிகள் பந்தாடப்பட்டனர்.

அந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான இடமாற்றப் பட்டியலில், பல முக்கியத் தலைகள் உருண்டிருந்தன. தனக்கு எதிராக அதிகாரிகளைத் ஒன்று திரட்டிய மீசைக்கார ஐ.பி.எஸ் அதிகாரியை, கடைசி வரையில் டம்மியாகவே வைத்திருந்தார் ஜெயலலிதா. இப்படி, தேர்தல் நெருக்கத்தில் எதிர்க்கட்சிக்கு அனுசரணையாக நடந்துகொள்வது, ஆளுந்தரப்பு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எந்த ஆழத்துக்கும் செல்வது என்று கரைவேட்டி கட்டாத அதிகாரிகளின் ராஜ்ஜியம், கோட்டையில் கொடிகட்டிப் பறக்கும்.

இன்றும், தலைமைச் செயலகத்தில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது!

தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் என இரண்டு முக்கியத் துறைகளிலும் தி.மு.க சார்புள்ளவர்கள், அ.தி.மு.க சார்புள்ளவர்கள், இரண்டு கட்சிகளின் கண்ணில்படாமல் ஒதுங்கியிருப்ப வர்கள் என்று மூன்று வகையாக அதிகாரிகள் வர்க்கம் பிரிந்திருக்கிறது. இது போதாதென்று, தற்போது டெல்லியிலிருந்தும் தன் ஆதரவு அதிகாரிகளை தமிழகத்துக்கு இறக்குமதி செய்திருக்கிறது பா.ஜ.க அரசு!

நெருங்குது தேர்தல்... வேஷம் கலைக்கும் கரைவேட்டி அதிகாரிகள்!

களையெடுக்கும் அதிகாரி... லாபி முழுதும் புரோக்கர்கள்!

நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். கோட்டையில் நடக்கும் கோல்மால்களைப் புட்டுப் புட்டு வைத்தார்கள். “தமிழகத்தின் உச்சாணிக் கொம்பிலிருக்கும் ‘முருகக் கடவுள்’ பெயர்கொண்ட அதிகாரி அவர். ஆரம்பகாலத்தில் தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளிடமும் அனுசரணையாக இருந்து, அந்தக் கட்சித் தலைமைகளின் குட் புக்கில் இடம்பெற்றவர். காலச்சூழல் அவர் போக்கிலும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. தி.மு.க-விடம் மறைமுகப் போர் தொடுத்திருக்கும் அந்த அதிகாரி, இப்போது கடைசி நேர வசூல் வேட்டையில் தூள் கிளப்புகிறாராம். ஆளுந்தரப்புக்கு வேண்டப்படாத அதிகாரிகளைக் கண்டறிந்து களையெடுக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கும் இந்த அதிகாரி, அங்கு சர்வதேசத் தரத்தில் பள்ளி ஒன்றைக் கட்டிவருகிறாராம். எந்த டீலிங்காக இருந்தாலும் சரி, அதை போனில் பேசுவதில்லையாம். ‘நேரா ஆபீஸுக்கு வாங்க பேசிக்கலாம்’ என்கிறாராம். இவர் அலுவலக லாபி முழுவதும் புரோக்கர்கள் நிரம்பியிருப்பதாகக் கூறுகிறது கோட்டை வட்டாரம். ஆளுந்தரப்புடன் மிக நெருக்கமாக இருப்பதால், இவர் இடத்துக்கு வரத் துடிக்கும் சில அதிகாரிகள், இவர் பற்றிய கோப்புகளை தி.மு.க முகாமுக்கு மடைமாற்றி வருகிறார்கள். ஆட்சி மாறினால் அதிகாரிக்குச் சிக்கல்தான்.

அதிகாரிகளா... மாவட்டச் செயலாளர்களா?

தலைநகரத்தின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் வெளிச்சமான அதிகாரியின் வளர்ச்சியைப் பார்த்து, சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே வாய்பிளக் கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் இவரின் சொத்து மதிப்பு பல நூறு கோடிகளைத் தாண்டிவிட்டது. ஈ.சி.ஆரில் நீச்சல்குளத்துடன் இரண்டு பங்களாக்கள், மாநகரத்துக்கு உள்ளேயே அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ‘பென்த் ஹவுஸ்’ என்று சொத்துகளை சரசரவென வாங்கிக் குவித்திருக்கிறார். சென்னையில் எந்தெந்த மாடல் வெளிநாட்டு கார்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினால், இவரின் அலுவலகத்துக்கு மாலை நேரத்தில் சென்று பார்க்கலாம். விதவிதமான சொகுசு கார்களில் வரும் பிரமுகர்கள், கமிஷனைக் கட்டிவிட்டு, வேண்டிய கையெழுத்தை வாங்கிக்கொள்கிறார்களாம். எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் அனுப்பும் கோரிக்கைகளைக்கூட உடனடியாக மூவ் செய்துவிடுவதால், இவரின் ‘நாணயத்துக்கு’ தி.மு.க-வுக்குள்ளேயே மரியாதை இருக்கிறது. என்னதான் எதிர்க்கட்சிமீது கரிசனம் காட்டினாலும், கொங்கு மண்டல அமைச்சரிடம் இவர் மிக நெருக்கமாக இருப்பதால், தி.மு.க தலைமை இவர்மீது அழுத்தமான பார்வையைப் பதித்திருக்கிறது. அது பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல், மீண்டும் அ.தி.மு.க ஆட்சியே மலரும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதால், வசூலில் வெளுத்து வாங்குகிறாராம்.

வெளிச்சமான இவர் மட்டுமல்ல, அ.தி.மு.க மீண்டு்ம் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தங்கள் செல்வாக்கு நீடிக்கும் என்கிற மனப்போக்கில் மேலும் சில அதிகாரிகளும் இருக்கிறார்கள். முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த ‘வேல்’ அதிகாரி, முதல்வரின் துறையை கவனிக்கும் இரண்டு அதிகாரிகள், உள்ளாட்சிகளை கவனிப்பவர், விவசாய இயக்குநரகத்தில் அறுவடை செய்பவர், வீடு வசதி செய்துதருபவர், வரி விவகாரங்களைக் கையாள்பவர், மருந்துகளைக் கையாள்பவர் என்று ஒரு டஜன் அதிகாரிகள் இந்த லிஸ்ட்டில் அடக்கம். கடைசி நேர வசூலுக்கு இவர்கள் ஒத்துழைப்பது மட்டுமல்லாமல், அ.தி.மு.கழக கரைவேட்டி கட்டாமலேயே குட்டி மாவட்டச் செயலாளர்களாகக் கோட்டையில் வலம்வருகிறார்கள்.

நெருங்குது தேர்தல்... வேஷம் கலைக்கும் கரைவேட்டி அதிகாரிகள்!

அடுத்த அசோக்வரதன் ஷெட்டி யார்?

அ.தி.மு.க ஆதரவு கோஷ்டி ஒருபக்கம் என்றால், தி.மு.க ஆதரவு வாத்தியக் குழுக்களின் சத்தம் சற்றுத் தூக்கலாகவே கோட்டையில் ஒலிக்கிறது. 2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில், மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது, உள்ளாட்சித்துறைக்குப் பொறுப்பு வகித்திருந்தார். அப்போது, உள்ளாட்சித்துறைச் செயலாளராக இருந்த அசோக்வரதன் ஷெட்டியின் அதிகாரம் பரந்து விரிந்திருந்தது. ‘தன் சொல், ஸ்டாலினின் வாக்கு’ என்பதுபோல தி.மு.க ஆட்சியில் கொடிகட்டிப் பறந்தார் ஷெட்டி. இன்று, மற்றொரு அசோக் வரதன் ஷெட்டியாக ஆவதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடையே கடும்போட்டி நிலவுகிறது. ஸ்டாலினிடம் தினமும் அப்டேட்களை அளிக்கும் அதிகாரிகளின் வட்டம் தற்போது அதிகரித்திருக்கிறது.

முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தொடர்பே இதில் பிரதானம். தற்போதும் பவர்ஃபுல்லாக இருக்கும் அந்த அதிகாரி, தன் மனைவியை அடிக்கடி தி.மு.க தலைமையின் வீட்டுக்கே விசிட் அடிக்கவைத்து, கிச்சன் கேபினெட்டுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி யிருக்கிறார். கல்வித்துறையில் நடந்த சில அரசு விவகாரங்களைவைத்து ஸ்டாலின் பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட்ட தெல்லாம், இந்த அதிகாரியின் கைங்கர்யம்தான். தி.மு.க தலைமைக்கு நெருக்கமான ஒருவருடன் வாரத்துக்கு ஒரு முறையாவது நட்சத்திர ஹோட்டலில் சந்தித்துப் பேசும் இந்த அதிகாரி, தி.மு.க ஆட்சியைப் பிடிக்கத் தேவையான அனைத்து அஸ்திரங்களையும் ஏவத் தயாராக இருக்கிறாராம்.

ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் மலைக்கடவுள் பெயர்கொண்ட ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, கடந்த இரண்டு மாதங்களாக ‘பிரதமர் வீடு கட்டும் திட்ட’த்துக்கான ஃபைலில் கையெழுத்திடாமல் இருக்கிறார். இந்தத் திட்டத்தில் தொடர்ந்து முறைகேடு நடக்கிறது என்று எழுந்த புகார், டெல்லி வரை சென்றதால் விடாப்பிடியாகத் துறை அமைச்சரிடம் மல்லுக்கட்டுகிறார். இந்தத் தகவல் தி.மு.க தலைமையின் காதுக்கும் எட்டியிருக்கிறது. அவர்கள், “ஆறு மாதம் பொறுத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது உங்கள் துறையில் நடக்கும் மூவ்களைச் சொல்லுங்கள்” என்று அந்த அதிகாரிக்கு சிக்னல் கொடுத்திருக்கி றார்கள். இதைத் தொடர்ந்து, சில ஃபைல்களின் காப்பிகள் செனடாப் சாலைக்கு இடம் மாறத் தொடங்கியுள்ளன.

நெருங்குது தேர்தல்... வேஷம் கலைக்கும் கரைவேட்டி அதிகாரிகள்!

அதிகாரத்திலிருந்தாலும் தி.மு.க விசுவாசம்!

கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்திலிருக்கும் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி நம்மிடம் பேசுகையில், “விவசாயத்துறையில் ஒரு விவகாரம் சமீபத்தில் வெடித்துக் கிளம்பி, டெல்லி வரை அதிர்வை ஏற்படுத்தியது. இது தொடர்பான ஃபைலை முதலில் செனடாப் சாலைக்கு அனுப்பிய துறையின் முக்கிய அதிகாரி ஒருவர், தி.மு.க தலைமையின் நடவடிக்கைக்காகக் காத்திருந்தார். அவர்கள் தரப்பிலிருந்து, ‘மீடியாக்களிடம் கொடுத்துவிடுங்கள். இப்போது நேரடியாக நாங்கள் பேச விரும்பவில்லை’ என்று அறிவுறுத்தியதால், தனக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலமாக மீடியாக்களிடம் பாஸ் செய்தார் அந்த அதிகாரி. முதல்வருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தாலும், தி.மு.க தலைமையிடம் இவர் கொண்டிருக்கும் விசுவாசம் அளப்பரியது. தற்போது, பாகிஸ்தானின் எல்லை மாநிலம் ஒன்றில் கல்லூரி ஒன்றையும் சொந்தமாகக் கட்டிவருகிறார்.

அதேபோல, கால்நடைகளை வளர்க்கும் துறை அதிகாரி ஒருவர், துறை அமைச்சர் எந்தக் கோப்பு அனுப்பினாலும் குருட்டாம்போக்கில் கையெழுத்துப் போடுவதில்லையாம். பலமுறை, நோட் போட்டு அமைச்சருக்கே திருப்பி அனுப்பிவிடுகிறார். இந்தக் குடைச்சல் தாங்காமல் முதல்வர் தரப்பிடம் அமைச்சர் புலம்பும் அளவுக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. தி.மு.க பிரமுகரின் வாரிசான பொன்னான மாவட்ட ஆட்சியர், அமைச்சர் வேலுமணியால் பாதிக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருவர், அறங்காவல்துறையிலிருந்து துாக்கியடிக்கப்பட்ட ஒருவர் உள்ளிட்ட பலரும் அ.தி.மு.க-வுக்கு எதிரான மனநிலைக்கு வந்திருக்கிறார்கள்.

தி.மு.க-வுக்கு நெருக்கமாக இருந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, தேர்தல் ஆணையத்திலும் பணியிலிருந்தார். இப்போது சத்தமில்லாமல் தி.மு.க தரப்புக்குத் தேர்தல் ஆணையத்தைச் சமாளிக்கும் யுக்திகளைச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறாராம்.

தமிழக கஜானாவை கவனித்துவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி கொஞ்சம் கறார் பேர்வழி. சமீபகாலமாக அரசுத் தரப்பு கஜானா விவகாரங்களில் ஏகப்பட்ட சிக்கலை ஏற்படுத்துவதால், பல துறைகளிலுமுள்ள அதிகாரிகளுக்கு போன் போட்டு, ‘ஃபைலை கிடப்பில் போடுங்கய்யா. அடுத்து அவங்க வந்தாங்கன்னா நமக்குத்தான் முதல் சிக்கல்’ என்று வாய்மொழியாகவே உத்தரவிட்டுள்ளாராம். அதிகாரத்தில் இருந்தாலும், ‘தி.மு.க-வை ஏன் பகைத்துக்கொள்ள வேண்டும்’ என்று கோப்புகளை ஓரங்கட்டும் அதிகாரிகளின் எண்ணிக்கை கோட்டையில் அதிகமாகியிருக்கிறது. இப்படி தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பெரும் ஐ.ஏ.எஸ் படையே ‘கறுப்பு-சிவப்பு’ வேட்டி மட்டும் கட்டிக்கொள்ளாமல் களமாட ஆரம்பித்திருக்கிறது” என்றார்.

நெருங்குது தேர்தல்... வேஷம் கலைக்கும் கரைவேட்டி அதிகாரிகள்!

ஈரத்துணியை எடுக்க மல்லுக்கட்டிய ஏ.டி.ஜி.பி!

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் இப்படியென்றால், ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் நடக்கும் கூத்துகள் வேறு ரகம். தன் தாயார் மறைவையொட்டி, எடப்பாடியிலுள்ள தனது வீட்டில் ஒரு வாரம் முதல்வர் இருக்க நேரிட்டது. அந்த நேரத்தில், முதல்வருக்குப் பாதுகாப்பு கொடுக்கிறேன் பேர்வழி என்று ஏ.டி.ஜி.பி ஒருவர் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல என்கிறார்கள். முதல்வர் பாத்ரூம் சென்றால்கூட அறையின் வாசலில் காவலுக்கு நின்றுவிடுவாராம். சுடுகாட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியதால், வீட்டின் ஒதுக்குப்புறத்திலேயே உடையை மாற்றியிருக்கிறார் முதல்வர். அந்த உடையை எடுப்பதற்கு ஏ.டி.ஜி.பி-க்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுவிட்டதாம். `அமைதிப்படை’ மணிவண்ணன் காமெடிபோல, ‘இத்தனை வருஷம் கூடவே நாங்க இருக்கோம். எங்களை மீறி நீங்க எப்படித் துணியை எடுக்கலாம்’ என்று கரைவேட்டிகள் மல்லுக்கட்ட, முதல்வரிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக ஏ.டி.ஜி.பி-யும் பதிலுக்கு மல்லுக்கட்டியிருக்கிறார். இந்த விசுவாசத்துக்குப் பிரதிபலனாக அவருக்கு ‘ஸ்பெஷல்’ பரிசும் கிடைத்திருப்பது சுவாரஸ்யமான தனிக்கதை.

டெல்டா மாவட்டம் ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோலோச்சிக்கொண்டிருக்கும் ஓர் உயரதிகாரியிடம்தான், அமைச்சர் துரைக்கண்ணு சம்பந்தப்பட்ட பண விவகாரப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவரும் போலீஸ் வேலையை விட்டுவிட்டு, கட்சி விசுவாசியாக உருட்டுக் கட்டையுடன் பணத்தைத் தேடி அலைந்தது அதிகாரிகள் வட்டாரத்தையே முகம்சுளிக்க வைத்தது.

மச்சான் மந்திரி... நான் ஏ.டி.ஜி.பி!

டி.ஜி.பி அலுவலகத்தைச் சுற்றிவந்தோம். நம்மிடம் பேசிய நேர்மையான காக்கிகள் சிலர், “தி.மு.க ஆட்சிக்கு வந்தால் டி.ஜி.பி ஆகிவிடலாம் என்கிற கனவில் மிதக்கும் உடற்கட்டு அதிகாரி ஒருவர், தி.மு.க-வுக்காகத் தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டாராம். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, இவரால்தான் சென்னை மாநகருக்குள் பல தொகுதிகள் கைவிட்டுப் போனதாக, கடைசி வரையில் இவரை ஜெயலலிதா டம்மியாக வைத்திருந்தது வரலாறு. இப்போது, மீண்டும் தன் தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டைத் தூசுதட்டி எடுத்திருக்கிறார் அந்த உடற்கட்டு அதிகாரி.

வனத்துக்குள் உலவும் அந்த இரண்டெழுத்துப் பெயர்கொண்ட காவல் அதிகாரி, ‘என் மச்சான் தி.மு.க ஆட்சியில் மந்திரியானால், சிறப்பு சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி நான்தான்’ என்று இப்போதே சொல்லிவருகிறாராம்.

2016 தேர்தல் நேரத்தில் சென்னையில் அதிகாரத்திலிருந்தபோது, தி.மு.க தலைவருக்கு ஆதரவாகக் கருத்து சொன்னதால் மண்டபம் முகாமுக்குத் தூக்கியடிக்கப்பட்டவர், பெயரிலேயே ‘வாசத்தை’ பூசிக்கொண்டிருக்கும் ஏ.டி.ஜி.பி ஒருவர், மத்திய மண்டலத்திலிருந்து சமீபத்தில் சென்னைக்குப் பணிமாற்றம் செய்யப்பட்ட ராஜாவான ஐ.பி.எஸ் அதிகாரி என்று தி.மு.க ஆதரவு காக்கிகளின் வட்டம் விரிவாகிக்கொண்டே செல்கிறது. இவர்களை ஒருங்கிணைப்பது சாட்சாத் ஓய்வுபெற்ற அந்த மீசைக்கார டி.ஜி.பி-தானாம். தி.மு.க-வுக்கான தேர்தல் வியூகப் பொறுப்பாளர்களில் இவரும் ஒருவராம். இவருக்குக் கைகொடுப்பது, மத்திய உளவுத்துறையில் பணிபுரியும் தமிழக கேடரைச் சேர்ந்த துடிப்பான இளம் அதிகாரி என்கிறார்கள். அந்த இளம் அதிகாரி தனது பேட்ஜ் அதிகாரிகள் அனைவரையும் தி.மு.க-வுக்கு நண்பர்களாக மாற்றும் பொறுப்பை ஏற்றிருக்கிறாராம்” என்றனர்.

இப்படி கரைவேட்டி கட்டிக்கொள்ளாமலேயே தி.மு.க., அ.தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டில் உலவும் அதிகாரிகளின் ராஜ்ஜியம் கோட்டையிலும், டி.ஜி.பி அலுவலகத்திலும் கொடிகட்டிப் பறக்கிறது. சமீபத்தில், டெல்லியிலிருந்து தமிழக அரசுப் பணிக்குத் திரும்பியிருக்கும் சந்தீப் மிட்டலுக்கு ‘எஸ்டாபிளிஷ்மென்ட் பிரிவு ஏ.டி.ஜி.பி’ பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இவர் டெல்லியில் பணியாற்றியபோது, ட்விட்டரில் ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆதரவாக வெளிப்படையான கருத்துகளை வெளியிட்டதால், இவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட ஒருவரைத்தான் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழக அரசுப் பணிக்கு அனுப்பியிருக்கிறது பா.ஜ.க அரசு. வழக்கமாகத் தேர்தல் நேரத்தில் பல பணியிட மாற்றங்களைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். அப்படிச் செய்யும்போது, சந்தீப் மிட்டலை சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக கொண்டுவந்து, தங்களுடைய தேர்தல் திட்டத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள பா.ஜ.க தலைமை முடிவெடுத்திருக்கிறது என்கிறது காவல்துறை வட்டாரம்.

இவர்களைத் தவிர்த்து, வேறுவகையான அதிகாரிகளும் இருக்கிறார்கள். எந்த ஆட்சி நடந்தாலும், பவர்ஃபுல் பதவிகளில் இருப்பார்கள். ஆட்சி முடியும் நேரத்தில் ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பி, டம்மியான பதவிக்குப் போய்விடுவார்கள். அதுபோலத்தான், ஆட்சியின் நம்பர் 2-வுடன் முறுக்கிக்கொண்டு, சமீபத்தில் டம்மி துறைக்கு லாகவமாகச் சென்றுவிட்டார் அந்த அதிகாரி. இனி, அடுத்த ஆட்சி வரும்போது பவர்ஃபுல் துறைக்கு மாறுதலாகிவிடுவார். நேர்மையான அதிகாரிகளும் இல்லாமல் இல்லை. தேர்தல் நேரத்தில் ‘நமக்கேன் வம்பு’ என்று அமைதியாக ஒதுங்கியும், பிரச்னை இல்லாமல் டெல்லிக்கு மாறிவிடவும் அவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

கரைவேட்டி அதிகாரிகளின் கறை ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தின் மீதும் அப்பியிருப்பது, நிர்வாகத்துக்கு நல்லதல்ல!