Published:Updated:

சட்டச் சிக்கல்கள்... பதவிப் பஞ்சாயத்து... டெல்லி கேம்... அல்லாடும் அ.தி.மு.க.!

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

‘கட்சிக்காக நான் எவ்வளவோ உழைச்சிருக்கேன். தி.மு.க-வோட பழிவாங்குதல் நடவடிக்கையால ஜெயிலுக்கெல்லாம் போயிருக்கேன்

சட்டச் சிக்கல்கள்... பதவிப் பஞ்சாயத்து... டெல்லி கேம்... அல்லாடும் அ.தி.மு.க.!

‘கட்சிக்காக நான் எவ்வளவோ உழைச்சிருக்கேன். தி.மு.க-வோட பழிவாங்குதல் நடவடிக்கையால ஜெயிலுக்கெல்லாம் போயிருக்கேன்

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

அரசியல் சதுரங்கத்தின் விறுவிறு காட்சிகள் அரங்கேற ஆரம்பித்திருக்கின்றன, அ.தி.மு.க-வில். திட்டமிட்டபடி, வரும் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவை நடத்தியே தீருவது என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவரைக் கட்சியின் பொதுச்செயலாளராக முன்மொழியும் தீர்மானத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியும் தீவிரமாகியிருக்கிறது. அதேநேரத்தில், பொதுக்குழுவை நடத்தவிடாமல் செய்வதற்கான அத்தனை காரியங்களையும் சட்டரீதியாக எடுத்துவருகிறது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு. இப்படியாக, தடுமாறிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க குறித்து, ‘பா.ஜ.க-வின் கணக்கு என்ன?’ என்பதில்தான் பல கேள்விகளுக்கு பதில்கள் ஒளிந்திருக்கின்றன. “டெல்லியின் முடிவு என்ன... எடப்பாடி, பன்னீர் முகாமில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?” சூடுபறக்கும் இந்தக் கேள்விகளுடன் சென்னை கிரீன்வேஸ் சாலையை வலம்வந்தோம்...

சட்டச் சிக்கல்கள்... பதவிப் பஞ்சாயத்து... டெல்லி கேம்... அல்லாடும் அ.தி.மு.க.!

“ஜெயிலுக்கெல்லாம் போயிருக்கேன்யா..!”

அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி கட்டமைப்பையே மாற்றியமைப்பதில் தீவிரமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்போது அவர் முகாமில் நடக்கும் பஞ்சாயத்தே, பன்னீர் வசமிருக்கும் பொருளாளர் பதவியும், எடப்பாடி வசமிருக்கும் தலைமை நிலையச் செயலாளர் பதவியும் யாருக்கு என்பதுதான். இதில்தான் பிரச்னை வெடித்திருக்கிறது.

நம்மிடம் பேசிய எடப்பாடி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் சிலர், “கட்சியின் பொருளாளர் பதவிக்குத் தீவிரமாக முட்டிமோதுகிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனையில், ‘கட்சிக்காக நான் எவ்வளவோ உழைச்சிருக்கேன். தி.மு.க-வோட பழிவாங்குதல் நடவடிக்கையால ஜெயிலுக்கெல்லாம் போயிருக்கேன். எம்.பி சீட் கேட்டேன், அவைத்தலைவர் பதவி கேட்டேன். எதையும் கொடுக்கலை. தமிழ்மகன் உசேனை, ‘நிரந்தர அவைத்தலைவர்’னு அறிவிச்சுட்டீங்க. இப்ப பொருளாளர் பதவியையாவது எனக்குக் கொடுங்க’ என்று உருக்கமாகவே பேசியிருக்கிறார் ஜெயக்குமார். இதை ஒரு தரப்பு மாவட்டச் செயலாளர்களும், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் போன்ற சீனியர்களும் ஏற்று ஆமோதித்தனர். ஆனால், தென் மாவட்டத்திலிருந்து இந்த முயற்சிக்கு முதல் முட்டுக்கட்டை விழுந்தது.

“நாங்க என்ன வேடிக்கை மட்டும் பார்க்கணுமா?” - வெடித்த பதவிப் பஞ்சாயத்து!

திண்டுக்கல் சீனிவாசன்தான் எதிர்க்குரல் எழுப்பினார். ‘அம்மா காலத்துலேருந்து பொருளாளர் பதவி முக்குலத்தோர் வசம்தான் இருக்கு. நான்கூட பொருளாளரா இருந்திருக்கேன். அதுல எந்த மாற்றமும் வரக் கூடாது. கட்சியில எல்லா முக்கியப் பதவிகளையும் வடமாவட்டத்தைச் சேர்ந்த நீங்களே எடுத்துக்கிட்டா, நாங்க என்ன வேடிக்கை மட்டும் பார்க்கிறதா?’ என்று சூடாகவே கேட்டுவிட்டார். இதை சீனியர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுவரை அமைதியாக இருந்த செங்கோட்டையன், ‘அவர் கேட்கறது நியாயம்தானே... எல்லாப் பதவிகளையும் வடமாவட்டத்தைச் சேர்ந்தவங்களுக்கே கொடுத்துட்டா, தென்மாவட்டத்துல எப்படி அரசியல் பண்றது... பொருளாளர் பதவியை திண்டுக்கல் சீனிவாசனுக்கே கொடுங்க’ என்று தடாலடியாகப் பேசினார். அவரைத் தொடர்ந்து முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா ஆகியோரும் ‘பொருளாளர் பதவியைத் தங்கள் சமுதாயத்துக்கே ஒதுக்க வேண்டும்’ என்றனர்.

ஆனால், ஜெயக்குமார் தரப்பு அதை ஏற்காமல் வாக்குவாதம் செய்ததால், திண்டுக்கல் சீனிவாசன் அப்செட். கொங்கு மண்டல எம்.எல்.ஏ-க்கள் சிலர், ‘இப்ப கட்சிக்குத் தேவையான செலவுகளையெல்லாம் செய்யறது வேலுமணிதான். டெல்லியோட தொடர்பும் அவருக்கு பலமாக இருக்கு. அவரை ஏன் பொருளாளர் ஆக்கக் கூடாது?’ என்று தங்கள் பங்குக்கு வெடியைக் கிள்ளியெறிந்தனர். இடையே சி.வி.சண்முகம் எழுந்து, ‘உங்க பஞ்சாயத்துல தலைமை நிலையச் செயலாளர் பதவியை மறந்துடாதீங்கப்பா... 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கைகொடுத்தது வன்னியர் சமூகம்தான். அதிலிருந்து ஒருவரைத் தலைமை நிலையச் செயலாளர் ஆக்குங்கள்’ என்றார். தனக்காகவும், கே.பி.முனுசாமிக்காகவும் குரல் கொடுத்தார் சண்முகம். பன்னீர் பக்கமிருக்கும் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பதவிகளைப் பறித்துவிட்டு, அவர்களிடத்தில் புதியவர்களை நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டது. அதற்கும், வடமாவட்ட முன்னாள் அமைச்சர்களின் சிபாரிசுகள் குவிவதால், எடப்பாடி முகாமில் குழப்பம் அதிகரித்திருக்கிறது.

சட்டச் சிக்கல்கள்... பதவிப் பஞ்சாயத்து... டெல்லி கேம்... அல்லாடும் அ.தி.மு.க.!

‘தனபாலுக்கு அமைச்சர், சபாநாயகர் பதவிகள் தந்து பட்டியலினச் சமூகத்துக்கு அங்கீகாரம் அளித்தவர் அம்மா. அவர் இடத்துக்கு வர விரும்பும் எடப்பாடி பழனிசாமியும், அதேபோல நடந்துகொள்ள வேண்டும்’ என்று பட்டியலினத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களும் குரல் எழுப்புகிறார்கள். தனபாலுக்கு பொருளாளர் அல்லது தலைமை நிலையச் செயலாளர் பதவியை அளிக்க வேண்டும்’ என்கிறார்கள். இதே குரல் நாடார் சமூகத்தினர் மத்தியிலும் ஒலிக்கிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முகநாதனின் ஆதரவாளர்கள், ‘நாடார் சமூகத்துக்கு என்ன செஞ்சீங்க? எடப்பாடி அமைச்சரவையிலகூட எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை ஒதுக்கலை’ என்று கொதிக்கிறார்கள். இந்தப் பதவிப் பஞ்சாயத்துகளால் எடப்பாடிக்கு தலைவலி அதிகரித்திருக்கிறது” என்றனர் விரிவாக.

சட்டச் சிக்கலில் கழகம்!

பன்னீர்செல்வம் முகாமில் அதிருப்தியெல்லாம் ஏதுமில்லை. “ஆள் இருந்தால்தானே அதிருப்தி அடைவதற்கு. சட்டரீதியிலான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறார் பன்னீர்” என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். தன்னைச் சந்திக்க கிரீன்வேஸ் இல்லத்துக்கு வருபவர்களுக்கு, பெரியகுளம் தோட்டத்தில் விளைந்த மாம்பழம், திராட்சைப் பழங்களைக் கொடுத்தனுப்புகிறார் பன்னீர். ‘இதையாவது கொடுத்தாரே’ என்றபடிதான் கூட்டம் கலைகிறது.

நம்மிடம் பேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர், “கடந்த ஆண்டு டிசம்பரில், ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்று, அது இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டு விட்டது. அதன் பிறகு, ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்புதலுடன் மாவட்டச் செயலாளர்களில் தொடங்கி கிளைக் கழகங்கள் வரை தேர்தல்கள் நடந்துள்ளன. பொதுக்குழு உறுப்பினர்களும் இவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிப்ரவரி, 2022-ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னம் தரக் கோரி, மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி - பன்னீர் இருவரும்தான் பரிந்துரைக் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். இப்போது, ‘ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன’ என எடப்பாடி தரப்பு அறிவித்திருப்பதால் உட்கட்சித் தேர்தலில் வென்றவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற அ.தி.மு.க-வினர் என அனைவரது பதவிகளும் சட்டச் சிக்கலாகியிருக்கின்றன.

சட்டச் சிக்கல்கள்... பதவிப் பஞ்சாயத்து... டெல்லி கேம்... அல்லாடும் அ.தி.மு.க.!

ஜூலை 4-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, ‘நிரந்தர அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டது நீதிமன்ற அவமதிப்புதானா என்பதை விசாரிக்க வேண்டும். அவைத்தலைவர் இல்லாமல் எப்படிப் பொதுக்குழு நடத்த முடியும்... ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழுவுக்குத் தடை கோரி தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டும்’ என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருக்கிறது. ஆக, பொதுக்குழுவைக் கூட்டுவதற்கும், தன்னைப் பொதுச்செயலாளராக அறிவித்துக் கொள்வதற்கும், ஜூலை 4-ம் தேதி வரையில் சட்டரீதியாகத் தடையேதும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.

அதேநேரத்தில், ‘23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றிக்கொள்ளுங்கள்’ என சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு, இந்திரா பானர்ஜி அமர்வில் வரும் ஜூலை 6-ம் தேதி விசாரிக்கப்படவிருக்கிறது. ஏற்கெனவே கேவியட் மனு தாக்கல் செய்திருப்பதால், இந்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் தங்கள் தரப்பு வாதத்தை பன்னீர் தரப்பினர் முன்வைக்கவிருக்கின்றனர். இந்த மனுமீது என்ன தீர்ப்பு வழங்கப்படப்போகிறது, தேர்தல் ஆணையத்தில் பன்னீர் தரப்பு அளித்திருக்கும் மனுவில் என்ன முடிவு எடுக்கவிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே காட்சிகள் மாறும்” என்றனர்.

எடப்பாடி தரப்பில் சி.வி.சண்முகம், தளவாய் சுந்தரம், பொன்னையன், இன்பதுரை ஆகியோர் சட்டம் சார்ந்த ஆலோசனை அளிக்கிறார்கள். உயர் நீதிமன்றத்தில் விஜயநாராயணனும், உச்ச நீதிமன்றத்தில் முகுல் ரோத்கி வழிகாட்டுதலில் சி.எஸ்.வைத்தியநாதனும் எடப்பாடி தரப்புக்கு ஆஜராகிறார்கள். அதே அளவுக்குச் சட்ட நுணுக்கமுள்ள வழக்கறிஞர்களைக் களமிறக்குகிறதாம் பன்னீர் தரப்பு. இதற்கெல்லாம் மேலாக, பன்னீர் தனக்குப் பக்கபலமாக நம்புவது பா.ஜ.க-வைத்தான் என்கிறது விவரமறிந்த வட்டாரம். சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவரைச் சந்தித்தபோதுகூட, அ.தி.மு.க-வில் தான் எடுக்கவேண்டிய வியூகம் குறித்துத்தான் அவரிடம் நெடுநேரம் விவாதித்திருக்கிறார் பன்னீர்.

டெல்லி கேம்... அல்லாட்டத்தில் அ.தி.மு.க!

தமிழ்நாட்டு அரசியலைக் கண்காணித்துவரும் நாக்பூர் தலைவர்களில் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “அ.தி.மு.க விவகாரத்தில் டெல்லியின் அனுசரணையை எதிர்பார்த்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியிருக்கிறார். அதேபோல, பா.ஜ.க தலைவர் பூபேந்திர யாதவ்விடம் பன்னீர் தரப்பு பேசியிருக்கிறது. ஜூலை 2-ம் தேதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு சென்னைக்கு வந்தபோது, எடப்பாடி தலைமையில் அவர் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஒன்றாக வந்து முர்முவுக்கு ஆதரவு தெரிவித்தனர். சிறிது நேரத்தில், பன்னீரும் தன் ஆதரவாளர்களுடன் வந்து முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தார். எடப்பாடி பக்கம்தான் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள், மூன்று மாநிலங்களவை எம்.பி-க்கள், கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள். தேனி எம்.பி ரவீந்திரநாத், மாநிலங்களவை எம்.பி தர்மர் இருவர் மட்டும்தான் பன்னீர் பக்கமிருக்கிறார்கள். ஆனாலும், எடப்பாடிக்குக் கொடுத்த அதே முக்கியத்துவத்தை பன்னீருக்கும் அளித்திருக்கிறது பா.ஜ.க. ஜூலை 18-ம் தேதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் வரை, இரு தரப்பையும் விட்டுக்கொடுக்க டெல்லி தயாராக இல்லை. இதனால்தான் முர்முவின் வருகையை ஒட்டி அண்ணாமலை எழுதியிருந்த கடிதத்தில் ‘அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள்’ என்றே குறிப்பிட்டிருந்தார். இந்தத் தேர்தல் முடிந்த பிறகே, டெல்லியின் கேம் ஆரம்பமாகும்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டிலிருந்து சொல்லிக்கொள்ளும்படியான எண்ணிக்கையிலாவது எம்.பி சீட்கள் கிடைக்குமென எதிர்பார்க்கிறது டெல்லி மேலிடம். ஆனால், அ.தி.மு.க-வில் எழுந்திருக்கும் குழப்பத்தால், அந்தக் கட்சியுடனான கூட்டணியும் குழப்பத்தில் இருக்கிறது. திராவிட மாடல் முழக்கம், பொருளாதார வளர்ச்சி அறிவிப்புகள், கூட்டணி பலம் ஆகியவற்றால் தமிழ்நாட்டில் தி.மு.க-வின் கை ஓங்கியிருப்பதில் சந்தேகமில்லை. இதை அ.தி.மு.க-வுடன் கூட்டணி போட்டும் எதிர்கொள்ள முடியவில்லை என்றால்தான், ‘நமக்குப் பயன்படாத அ.தி.மு.க இருந்தென்ன?’ என்கிற முடிவுக்கு டெல்லி வரும். இந்த முடிவை டெல்லி இப்போதே எடுக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு ‘பத்திரிகையாளர்’ தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார்.

ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தனபால்
ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தனபால்

தெலங்கானாவில் நடந்த பா.ஜ.க தேசியச் செயற்குழுக் கூட்டத்தில், ‘தென் மாநிலங்களில் ஆட்சி அமைப்போம்’ என்று சூளுரைத்திருக்கிறார் அமித் ஷா. இது விளையாட்டு வார்த்தையல்ல. ஆட்சியைப் பிடிப்பதற்கு வலுவான கட்டமைப்பு அவசியம். அது அ.தி.மு.க-விடம் இருக்கிறது. தெலங்கானாவில் டி.ஆர்.எஸ்., பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிகளுடன் இணைந்துதான் அம்மாநிலத் தேர்தல்களை பா.ஜ.க எதிர்கொண்டது. பின்னாளில், அந்தக் கட்சிகளை உடைத்து, எதிர்த்து அரசியல் செய்து பிரதான கட்சி அந்தஸ்தை எட்டிப் பிடித்தது. அதே பாணி அரசியலைத்தான் தமிழ்நாட்டிலும் கொண்டுவர டெல்லி திட்டமிடுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தும் தங்களுக்கு சீட் கிடைக்கப்போவதில்லை என்பது திண்ணமாகத் தெரிந்துவிட்டால், அந்தக் கட்சியை உடைத்து, தி.மு.க-வுக்கு எதிரான பிரதான கட்சியாகத் தங்களை முன்னிறுத்துவதில் பா.ஜ.க கவனம் செலுத்தும். அதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. அ.தி.மு.க-வில் நிலவும் இதே குழப்பம் நீடித்தால், இரட்டை இலைச் சின்னம் மீண்டும் முடங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்றார் விரிவாக.

பா.ஜ.க கூட்டணியில் அ.ம.மு.க-வையும் இணைத்து தேர்தலைச் சந்திக்க வியூகம் வகுத்திருக்கிறதாம் டெல்லி. ‘சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி டி.டி.வி.தினகரனுக்கு வழங்கப்படும்’ என்கிற உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதோடு, ‘தி.மு.க-வுக்கும் எடப்பாடிக்கும் எதிராக வேலை செய்யுங்கள்’ என்கிற மெசேஜ் டெல்லியிலிருந்து தினகரனுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பா.ஜ.க-வின் திட்டத்தில் சசிகலா இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான், அவர் பினாமிக்குச் சொந்தமான 15 கோடி ரூபாய் சொத்து வருமான வரித்துறையால் சமீபத்தில் முடக்கப்பட்டதாம்.

நடப்பதையெல்லாம் தி.மு.க கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க வீக்காகிவிட்டால், அது தி.மு.க-வுக்கு ஆபத்து என்பதை ஸ்டாலின் தெளிவாக உணர்ந்திருக்கிறார். கொடநாடு வழக்கு விசாரணை தாமதப்படுத்தப்படுவதில்கூட அரசியல் கணக்கு இருக்கிறது என்கிறது அறிவாலய வட்டாரம். சமீபத்தில், ‘தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் பங்காளிகள். இங்கு போட்டியே எங்கள் இருவருக்குள்தான்’ என்று அ.தி.மு.க சீனியர் கே.பி.முனுசாமி கூறியிருந்தார். அந்த மனநிலையில்தான் தி.மு.க-வும் இருக்கிறது. ஆனால், பங்காளிச் சண்டை அ.தி.மு.க-வுக்குள் நடப்பதால், அதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளப் பார்க்கிறது பா.ஜ.க. திட்டமிட்டபடி ஜூலை 11 பொதுக்குழுவை எடப்பாடி கூட்டினாலும், அந்தப் பொதுக்குழுவும் சட்டச் சிக்கலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். விசாரித்தவரை, ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியலில் பல காட்சிகள் மாறும் என்கிறது டெல்லி வட்டாரம். அதுவரை அ.தி.மு.க-வில் அல்லாட்டம் ஓய வாய்ப்பில்லை!