Published:Updated:

எதிர்ப்பைக் கிளப்பும் ‘நெருப்பு’!

அக்னிபத்
பிரீமியம் ஸ்டோரி
அக்னிபத்

அக்னிபத் திட்டம் ராணுவத்துக்கு ஆளெடுக்கும் நடைமுறையையே புரட்டிப் போட்டுள்ளது. இதன்படி முப்படைகளுக்கும் இந்த ஆண்டு 46,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்

எதிர்ப்பைக் கிளப்பும் ‘நெருப்பு’!

அக்னிபத் திட்டம் ராணுவத்துக்கு ஆளெடுக்கும் நடைமுறையையே புரட்டிப் போட்டுள்ளது. இதன்படி முப்படைகளுக்கும் இந்த ஆண்டு 46,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்

Published:Updated:
அக்னிபத்
பிரீமியம் ஸ்டோரி
அக்னிபத்

மத்திய அரசு வரிகளை உயர்த்தினால் எழும் எதிர்ப்புக்குரல்களை ‘எல்லையில் நம் ராணுவ வீரர்கள்' என்ற முழக்கத்தைச் சொல்லி அடக்கினார்கள் பா.ஜ.க-வினர். இப்போது அந்த ராணுவ வீரர்கள் விவகாரமே எதிர்ப்புக்கான கருப்பொருளாகியிருக்கிறது. இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தவும் இளமையானதாக மாற்றவும் `அக்னிபத்' என்ற ஆளெடுப்புத் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது மத்திய அரசு. முப்படைத் தளபதிகள் முன்னிலையில் மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்த இந்தத் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. வட மாநிலங்களில் பல ரயில்கள் எரிகின்றன. அரசுப்பேருந்துகள் நொறுக்கப்படுகின்றன. பீகார் துணை முதல்வர் ரேணுதேவி வீடு தாக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க அலுவலகங்களும் தப்பவில்லை. குறிப்பாக பீகார், உ.பி., ஹரியானா போன்ற மாநிலங்களில் அதிக போராட்டங்கள் நடக்கின்றன. பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகளே இதை எதிர்க்கின்றன.

மருத்துவம், இன்ஜினீயரிங் போல ராணுவப் பணியையும் ஒரு கரியராகக் கருதும் இளைஞர்கள் வட மாநிலங்களில் ஏராளம் உண்டு. தேசபக்தியுடன் ராணுவத்தில் சேரும் இயல்பும் உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அதிகம். இதற்கென இருக்கும் கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து இளைஞர்கள் உடற்தகுதியைப் பெற்றுக்கொண்டு தயாராவார்கள். ‘இனி ராணுவ வீரர் பணி ஒரு நிரந்தர வேலைவாய்ப்பாக இல்லாமல்போய்விடுமோ' என்ற அச்சம் அவர்களுக்கு எழுந்ததே போராட்டங்களுக்குக் காரணம். இந்தப் போராட்டங்களை கோச்சிங் சென்டர்கள் தூண்டிவிடுவதாகவும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

எதிர்ப்பைக் கிளப்பும் ‘நெருப்பு’!

அக்னிபத் திட்டம் எப்படி வடிவமைக் கப்பட்டுள்ளது? அதற்கான காரணங்கள் என்ன? அதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு? அதன் சாதக பாதகங்கள் என்னென்ன?

இந்திய ராணுவத்தில் சராசரியாக ஓர் ஆண்டுக்கு 60,000 பேர் ஓய்வு பெறுகிறார்கள் என்பதால், அதே அளவுக்கு ஆண்டுதோறும் வீரர்கள் தேர்வு நடைபெறும். இதேபோல விமானப்படை, கடற்படைக்கும் தனித்தனியே ஆளெடுப்பு முகாம்கள் நடத்தி வீரர்களைத் தேர்வு செய்வார்கள். இவர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். அதன்பின் எப்போது வேண்டுமானாலும் ஓய்வுபெறலாம். ஆயுள் முழுக்க பென்ஷன் கிடைக்கும். முன்னாள் ராணுவத்தினர் என்ற அந்தஸ்துடன் சலுகைகளும் பெற முடியும்.

கொரோனாச் சூழல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு நடைபெறவில்லை. இந்திய ராணுவத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. விமானப்படை மற்றும் கப்பல் படையிலும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் வீரர்கள் இல்லை. எனவே, இந்த ஆண்டு பெரிய அளவில் ஆள் சேர்ப்பு நடைபெறும் என்ற எதிர்பார்ப்புடன் இளைஞர்கள் தயாராகி வந்தார்கள். இந்தநிலையில்தான் அக்னிபத் திட்ட அறிவிப்பு, அவர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது.

எதிர்ப்பைக் கிளப்பும் ‘நெருப்பு’!

அக்னிபத் திட்டம் ராணுவத்துக்கு ஆளெடுக்கும் நடைமுறையையே புரட்டிப் போட்டுள்ளது. இதன்படி முப்படைகளுக்கும் இந்த ஆண்டு 46,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். பதினேழரை வயதிலிருந்து 21 வயதுக்குள் இவர்கள் இருக்க வேண்டும். (கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் தேர்வு நடைபெறாததால், இந்த ஆண்டு மட்டும் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!) தேர்வு செய்யப்படும் இவர்கள் ‘அக்னிவீரர்கள்' எனப்படுவார்கள். இவர்கள் நான்கு ஆண்டுகள் பணிபுரிவார்கள். இதில் 6 மாதங்கள் பயிற்சிக்காலம். ஆரம்பத்தில் மாதம் ரூ.30,000 சம்பளம். ஆண்டுதோறும் இது உயரும்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின் ராணுவத்தில் நிரந்தரப் பணிக்கு இவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தகுதி மற்றும் ராணுவத்தின் தேவை அடிப்படையில் இவர்களில் 25 சதவிகிதம் பேர் நிரந்தரப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்பின் அவர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்.

எதிர்ப்பைக் கிளப்பும் ‘நெருப்பு’!

தேர்வாகாத மீதி 75 சதவிகிதம் பேர் வீடு திரும்பலாம். அவர்களுக்கு சேவா நிதி வழங்கப்படும். இவர்களுக்கு கிராஜுவிட்டி, பென்ஷன் என்று எதுவும் கிடைக்காது. இவர்கள் முன்னாள் ராணுவத்தினராகவும் கருதப்பட மாட்டார்கள். எனினும், ‘‘இவர்களுக்கு ‘அக்னிவீர் திறன் சான்றிதழ்' ஒன்று வழங்கப்படும். இது எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு உதவும்'' என்கிறது மத்திய அரசு. மத்திய போலீஸ் படைகள் நியமனத்தில் இவர்களுக்கு ஒதுக்கீடு தரப்படும் என உள்துறை அமைச்சகம், எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பின் அறிவித்துள்ளது. இதேபோல பல மாநில காவல்துறைகளிலும் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘பா.ஜ.க அலுவலகத்தில் செக்யூரிட்டியாக இவர்கள் ஆகலாம்’ என்று பா.ஜ.க பிரமுகர் ஒருவர் கொச்சைப்படுத்திய சர்ச்சையும் நடந்தது.

அக்னிவீரர்களுக்குக் கல்வியிலும் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு அக்னிவீரர் ஆகும் ஒருவர், நான்கு ஆண்டு சேவையை முடித்துவிட்டு வரும்போது, பிளஸ் 2 முடித்ததற்கு இணையான தகுதி பெறுவார். பிளஸ் 2 முடித்துவிட்டுச் சேரும் ஒருவர், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பிரிவில் சேர்ந்து பட்டம் பெறலாம்.

‘‘Conscription என்ற பெயரில் பல நாடுகளில் கட்டாய ராணுவ சேவை சட்டம் உள்ளது. ஒவ்வொரு குடிமகனும் கட்டாயமாக சில ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும். அதன் நவீன வடிவமே இது. அக்னிபத் திட்டம் இளைஞர்களிடம் திறனையும் தேசபக்தியையும் வளர்க்கும்'’ என்கிறது மத்திய அரசு. வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர், இஸ்ரேல் என்று பல இடங்களில் இப்படியான ராணுவ சேவை உள்ளது. உதாரணமாக இஸ்ரேலில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் 2 முதல் 3 ஆண்டுகள் கட்டாய ராணுவ சேவை புரியவேண்டும்.

எதிர்ப்பைக் கிளப்பும் ‘நெருப்பு’!

அக்னிபத் திட்டத்தை ஆதரிப்பவர்கள் அதற்குப் பல காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள்:

* இது ராணுவத்தை இளமைத்துடிப்புள்ளதாக மாற்றும். இப்போது இந்திய ராணுவத்தினரின் சராசரி வயது 32. அக்னிவீரர்கள் ஆண்டுதோறும் நுழையும்போது இது 24 முதல் 26 வயது என ஆகும். இளமைத்துடிப்புள்ள ராணுவமே நன்கு செயல்படும்.

* ராணுவ பட்ஜெட்டில் பெருமளவு தொகை சம்பளம் மற்றும் பென்ஷனுக்கே போகிறது. ஆயுதங்கள் வாங்கவும் ராணுவத்தை நவீனப்படுத்தவும் வெறும் 32 சதவிகித பட்ஜெட் தொகையே செலவிடப்படுகிறது. அக்னிபத் திட்டத்தால் பென்ஷன் செலவு குறையும். எனவே, நவீன ஆயுதங்கள் நிறைய வாங்க முடியும்.

* பெரிய ராணுவம் இருப்பதுதான் வலிமையானது என்ற காலம் மலையேறிவிட்டது. ஆளில்லா வாகனங்கள், டிரோன்கள், துல்லியத் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் என்று போர்முறையே மாறிவிட்டது. ஆட்களைவிட தொழில்நுட்பத்துக்கே தேவை அதிகம். ஆள் பலத்தைக் குறைத்து, தொழில்நுட்பத்தை அதிகமாக்கும் திட்டமே அக்னிபத்.

* அக்னிபத் திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெறும் இளைஞர்கள் ஒழுக்கமும் திறமையும் நிறைந்தவர்களாக சமூகத்துக்குத் திரும்பி வருவார்கள். திறமையுள்ள இளைஞர் பட்டாளம் இந்திய வேலைவாய்ப்பு மார்க்கெட்டுக்குக் கிடைக்கும்.


அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்களிடமும் இதேபோல வலுவான காரணங்கள் இருக்கின்றன:

* அக்னிபத் திட்டத்தை ‘டூர் ஆஃப் டியூட்டி' என்றே சொல்கிறார்கள். நான்கு ஆண்டுகள் மட்டுமே பணி எனும்போது, அவர்கள் அர்ப்பணிப்புணர்வுடன் செயல்பட மாட்டார்கள்.

* ராணுவம் என்பதே ஒழுங்குமுறையுடன் கட்டமைக்கப்பட்டது. உயிர் ஆபத்துள்ள சூழலிலும் மேலதிகாரியின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதே ராணுவ ஒழுங்கு. 4 ஆண்டு கான்ட்ராக்ட் பணியாக வருபவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது. இது ஒட்டுமொத்தமாக ராணுவ ஒழுங்கைச் சீர்குலைக்கும்.

* வெறும் ஆறு மாத காலப் பயிற்சியில் ஒருவரை முழுமையான ராணுவ வீரராக உருவாக்க முடியாது. அக்னிவீரர்களுக்குத் தரப்படும் பயிற்சி முழுமையானதாக இல்லாதபட்சத்தில் அவசர காலங்களில் அவர்களைப் பயன்படுத்த முடியாது.

* ஒரு பக்கம் நிரந்தர ராணுவ வீரர்கள், இன்னொரு பக்கம் அக்னிவீரர்கள் என ராணுவத்தில் இரண்டு பிரிவினர் இருப்பது ராணுவ ஒழுங்கைக் காக்க உதவாது. நிரந்தரப் பணியாளர்களும் கான்ட்ராக்ட் ஊழியர்களும் கலந்த ஒரு அலுவலகம் போல அது ஆகிவிடும்.

* 15 ஆண்டுகள் ராணுவச் சேவையை முடித்துவிட்டு வரும் முன்னாள் ராணுவ வீரர்கள், கட்டுக்கோப்பான பணியைப் பல ஆண்டுகள் செய்து முதிர்ச்சி பெற்றிருப்பார்கள். 22 வயது முதல் 25 வயதுக்குள் ராணுவப் பணியை முடித்துவிட்டு சமூகத்துக்கு வரும் இளைஞர்களிடம் அந்தப் பக்குவம் இருக்காது. ஆயுதப்பயிற்சி பெற்ற அவர்களில் பலர், இந்தச் சமூகத்துக்கு ஆபத்தானவர்களாக மாறலாம்.

* இப்போதும் ராணுவத்தில் அதிகாரிகள் பணி நியமனத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் வழக்கமான முறையில் சேர்ந்து நிரந்தரப் பணி பெறுகிறார்கள். ஆனால், சாதாரண வீரர்கள் நியமனத்தை மட்டுமே மாற்றியுள்ளனர். இதன்மூலம் ஒவ்வோர் ஆண்டும் ராணுவ வீரர்கள் நியமனம் நான்கில் ஒரு பங்காகக் குறைந்துவிடும். அதிகாரிகள் மட்டும் அதே எண்ணிக்கையில் இருப்பார்கள். இது ராணுவத்தின் சமநிலையைக் குலைத்துவிடும்.

* அக்னிபத் திட்டத்தில் சேரும் வீரர்கள் முப்படைகளின் எல்லா இடங்களிலும் பணி செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ராணுவ ரகசியங்களை அறிந்தவர்களாக இவர்கள் வெளியில் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. இது தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தும்.

* அக்னிபத் போன்ற ராணுவ சேவைத் திட்டங்களை வைத்திருக்கும் வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வலுவான எதிரிகள் கிடையாது. ஒருபுறம் சீனா, இன்னொரு புறம் பாகிஸ்தான், காஷ்மீரில் தீவிரவாதச் செயல்பாடுகள், வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதக்குழுக்கள் எனப் பலமுனை யுத்தம் நடத்திவரும் இந்தியா, பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. ராணுவத்தைச் சுருக்கவோ, அதன் தன்னம்பிக்கையை நொறுக்கவோ கூடாது.

அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் எல்லோரையும் தேசவிரோதிகள் என விமர்சனம் செய்யாமல், அவர்கள் சொல்லும் கருத்துகளின் விளைவுகளை அலசிப் பார்த்து முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஏனெனில், எல்லாவற்றையும்விட தேசநலனே பெரிது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சம்பளம் எவ்வளவு?

அக்னிபத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு மாதச் சம்பளம், படிகள் எவ்வளவு என்ற விவரங்களை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவர்களின் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அதே அளவு தொகையை அரசும் செலுத்தும். இந்த நிதி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சேவா நிதியாக அவர்களுக்குத் தரப்படும்.

எதிர்ப்பைக் கிளப்பும் ‘நெருப்பு’!

பிடித்தம் செய்யப்படும் தொகையும், அரசின் பங்கும் வட்டியுடன் பெருகி ரூ. 11.71 லட்சம் சேவா நிதியாகத் தரப்படும். இதற்கு வரிகள் கிடையாது. இதுதவிர 48 லட்ச ரூபாய்க்குக் காப்பீடு செய்யப்படும். அதற்கு அவர்கள் பிரிமியம் கட்டத் தேவையில்லை. சேவையின்போது மரணமடைந்தால், குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.

ஆயுதம் வாங்க நிதியில்லை!

ராணுவ பட்ஜெட்டில் பெருமளவு தொகை சம்பளம் மற்றும் பென்ஷனுக்கே செலவாகிறது. அதனால் ஆயுதங்கள் வாங்கவோ, ராணுவத்தை நவீனப்படுத்தவோ போதுமான நிதி கிடைப்பதில்லை. அக்னிபத் திட்டம் இந்தச் சூழலை மாற்றும் என்பதுதான் மத்திய அரசின் கணக்கு. 2022-23 பட்ஜெட் ஒதுக்கீடு இதை உணர்த்தும்.

(ரூபாய் கோடிகளில்)

எதிர்ப்பைக் கிளப்பும் ‘நெருப்பு’!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism