Published:Updated:

ஆறுமுகசாமி ஆணையம் ‘கம்பேக்’!

ஜெயலலிதா
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலலிதா

மீண்டும் விசாரணை தொடங்கும்போது விசாரணையைக் கண்காணிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் வீடியோ கான்ஃபிரன்ஸ் வழியாகவோ அல்லது நேரடியாகவோ ஆஜராகவுள்ளார்கள்.

ஆறுமுகசாமி ஆணையம் ‘கம்பேக்’!

மீண்டும் விசாரணை தொடங்கும்போது விசாரணையைக் கண்காணிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் வீடியோ கான்ஃபிரன்ஸ் வழியாகவோ அல்லது நேரடியாகவோ ஆஜராகவுள்ளார்கள்.

Published:Updated:
ஜெயலலிதா
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலலிதா

சும்மாவே இருக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்குப் புதுசாக என்ன டாஸ்க் கொடுக்கலாம் என்று மீம் கிரியேட்டர்கள் வரை கலாய்த்து வந்த விஷயத்தில் இப்போது புதிய திருப்பம். ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை சூடுபிடிக்கப் போகிறது என்று செய்தி. இந்த விசாரணை என்னமாதிரியான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது?

ஜெயலலிதா மரணமடைந்து அதற்குப்பிறகு அ.தி.மு.க-வில் பிளவு, சசிகலா சிறைப்படலம், எடப்பாடி பழனிசாமி ஆட்சி, தேர்தல், முதல்வர் ஸ்டாலின் என்று ஒரு நீண்ட காலம் முடிந்துவிட்டது. சிறைக்குச் சென்ற சசிகலாவே தன் தண்டனைக்காலத்தை முடித்துவிட்டு வெளி யிலேயே வந்துவிட்டார். ஆனால் ஜெயலலிதா மரணத்தின் மர்ம முடிச்சு அவிழவில்லை. இந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் இரண்டரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விசாரணையைத் தொடங்க உள்ளது.

2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சசிகலாவுக்கு எதிராக ‘தர்மயுத்தம்’ நடத்திய ஓ.பன்னீர்செல்வம் ‘ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது. விசாரிக்க வேண்டும்’ என்றார். தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனி ஆணையம் ஒன்றை அமைத்து 2017 செப்டம்பர் 25-ம் தேதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பன்னீர்-பழனிசாமி இணைந்தனர்.

ஆறுமுகசாமி ஆணையம் ‘கம்பேக்’!

2017-ம் ஆண்டு இறுதியிலிருந்து இந்த ஆணையம் விசாரணையை ஆரம்பித்தது. 154 சாட்சிகளிடம் விசாரணையை முடித்திருந்த நிலையில், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டது. அதில் மருத்துவர்களின் கண்காணிப்பு இல்லாமல் ஆணையத்தின் விசாரணை நடந்துவருவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க, நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டு ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதித்தது.

இதுவரை 12 முறை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், வரும் 24.6.2022 வரை செயல்பட முடியும். அதன்பிறகும் தேவைப்பட்டால் நீட்டிப்பு தரப்படலாம். சுமார் நான்கு கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்ட நிலையில், ‘இந்த ஆணையமே தேவையில்லை. இதை மூடிவிட வேண்டும்’ என்று ஒரு வழக்குகூட சென்னை உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டது. அதிலும் தப்பிப் பிழைத்துவிட்டது ஆணையம். அ.தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு இந்த ஆணையத்தின் அறிக்கை உதவும் என்று நம்புகிறது தி.மு.க அரசு. அதனால் அதீத ஆர்வம் காட்டுகிறது.

கடந்த டிசம்பரில் உச்ச நீதிமன்றம் “ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. அதேநேரம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவும் விசாரணையில் பங்கேற்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. அதனடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் ஆறுபேர் கொண்ட குழுவை எய்ம்ஸ் அமைத்துள்ளது.

ஏற்கெனவே நடந்த விசாரணையின்போது சசிகலா சிறையில் இருந்ததால், அவரது சாட்சியத்தை எழுத்துபூர்வமாக ஆணையத்திடம் தாக்கல் செய்திருந்தது சசிகலா தரப்பு. அதே போல, அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதா வீட்டில் பணியாற்றிய பணியாளர்கள் எனப் பலரிடமும் ஆணையம் விசாரணையை முடித்துவிட்டது. அவர்களில் பலரிடம் சசிகலா தரப்பும் குறுக்கு விசாரணையை முடித்துவிட்டது. ஜெயலலிதா மறைந்ததும் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மட்டும் இதுவரை விசாரிக்கப்படவில்லை. எட்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்துவந்தார் ஓ.பி.எஸ். இத்தனைக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கான கோரிக்கையை எழுப்பியவரே ஓ.பன்னீர்செல்வம்தான். எடப்பாடி பழனிசாமி அரசோ பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜர் ஆகாததைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நடப்பது தி.மு.க ஆட்சி என்பதால் ஓ.பன்னீர்செல்வம் கண்டிப்பாக ஆஜராகியே தீரவேண்டிய நிலை. எடப்பாடியையும் பகைத்துக்கொள்ளாமல், சசிகலாவுக்கும் மனம் கோணாமல் அரசியல் செய்துவரும் ஓ.பி.எஸ்., ஆணையத்தில் என்ன சொல்வார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. ‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை’ என்று சொன்னாலும் அவர் கிண்டலுக்கு ஆளாவார்.

ஆறுமுகசாமி ஆணையம் ‘கம்பேக்’!

ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரவிருப்பதால், கடந்த 16-ம் தேதி அன்று நீதிபதி ஆறுமுகசாமி சசிகலா தரப்பு வழக்கறிஞர் மற்றும் அப்போலோ தரப்பின் வழக்கறிஞருடன் விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எப்படிக் கொண்டு செல்வது என்று ஆலோசனை நடத்தினார். சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், “ஏற்கெனவே 114 சாட்சிகளை விசாரித்துமுடித்துவிட்டோம். இன்னும் 13 பேரிடம் மட்டுமே நாங்கள் விசாரிக்க வேண்டியுள்ளது. அவர்களை விசாரிக்க எங்களுக்கு இரண்டு நாள்கள் போதும்.எனவே விரைவாக விசாரணையை முடிக்கவேண்டும் என்றே கோரிக்கை வைத்துள்ளோம்” என்கிறார். அப்போலோ தரப்பில், “ஏற்கெனவே நடந்த விசாரணைகள் குறித்த விவரங்களை எய்ம்ஸ் மருத்துவக்குழுவிற்கு அளித்தபிறகு விசாரணையை ஆரம்பிக்கலாம்” என்று சொல்லியுள்ளார்கள்.

மீண்டும் விசாரணை தொடங்கும்போது விசாரணையைக் கண்காணிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் வீடியோ கான்ஃபிரன்ஸ் வழியாகவோ அல்லது நேரடியாகவோ ஆஜராகவுள்ளார்கள். அதே போல் சாட்சிகளின் வாக்குமூலங்களையும் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு ஆராய்ந்து, நீதிபதிக்கு அறிக்கை அளிக்கும். ஏற்கெனவே ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அ.தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் இனி தொடர சாத்தியமில்லை என்பதால் புதிய வழக்கறிஞர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. அரசுத் தரப்பில் ஆணையத்தின் பணிகளைக் கவனிக்க நியமிக்கப்பட்ட கோமளா என்கிற அதிகாரியை மாற்றிவிட்டு சிவசங்கர் என்பவரை நியமித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளில் இதுபோன்ற எண்ணற்ற மாற்றங்களைச் சந்தித்த இந்த ஆணையம் மீண்டும் விசாரணைப் படலத்தைத் தொடங்கவுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி

சசிகலாவை ஆணையம் மீண்டும் விசாரணைக்கு அழைத்தால், அவர் ஏற்கெனவே அளித்த எழுத்துபூர்வ சாட்சியத்தின் அடிப்படையில் விசாரித்தவர்களையெல்லாம் மீண்டும் விசாரிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே சசிகலா மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா இல்லையா என்பது உறுதியாகவில்லை. ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் விசாரிக்கப்படுவார் என்கிறார்கள்.

எப்படி இருந்தாலும், ஆணையம் விரைவில் விசாரணை அறிக்கையைத் தயார் செய்து அரசுக்கு வழங்கும். ஜெயலலிதா மரணத்தில் ஏதேனும் மர்ம முடிச்சுகள் இருந்தால், அதிகபட்சம் இன்னும் ஐந்து மாதங்களில் அதற்கு விடை கிடைத்துவிடும் என்கிறார்கள்.

ஏற்கெனவே கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகள் அ.தி.மு.க தலைமைக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவுகளும் அ.தி.மு.க-வுக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி - யாருக்கெல்லாம் பிரச்னை என்று இனிமேல்தான் தெரியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism