Published:Updated:

நீதியை தகர்க்கும் ‘புல்டோசர் அரசியல்!’

 ‘புல்டோசர் அரசியல்!’
பிரீமியம் ஸ்டோரி
‘புல்டோசர் அரசியல்!’

உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மதன் லோகூர், இந்தப் பிரச்னை பற்றி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருக்கிறார்.

நீதியை தகர்க்கும் ‘புல்டோசர் அரசியல்!’

உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மதன் லோகூர், இந்தப் பிரச்னை பற்றி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருக்கிறார்.

Published:Updated:
 ‘புல்டோசர் அரசியல்!’
பிரீமியம் ஸ்டோரி
‘புல்டோசர் அரசியல்!’

ஆட்சியாளர்கள் தங்களின் எதிராளிகளை தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற கடும் சட்டங்களின் கீழ் தண்டிப்பது பழைய பாணி பழிவாங்கல் என நினைக்கத் தோன்றுகிறது. புகார் அளிப்பது, வழக்கு பதிவுசெய்வது, புலன் விசாரணை மேற்கொள்வது, நீதிமன்றத்தில் வாதாடுவது என ‘நேரத்தை வீணாக்காமல்’ நேரடியாக புல்டோசரைக் கொண்டு எதிரிகளின் வீடுகளை இடித்துத்தள்ளுவதே எளிதானது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் வட மாநில ஆட்சியாளர்கள்!

முகமது நபி குறித்து பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு உலக அளவில் கண்டனங்கள் எழுந்தன. `அவரை பா.ஜ.க-விலிருந்து இடைநீக்கம் செய்தது போதாது, கைதுசெய்ய வேண்டும்’ என்று மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. வெள்ளிக்கிழமை (ஜூன் 10-ம் தேதி) தொழுகைக்குப் பிறகு, உத்தரப்பிரதேசத்தின் பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதில், வன்முறைகளும் நிகழ்ந்தன. அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை புல்டோசர்களால் இடித்துத்தள்ளும் நடவடிக்கையை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு மேற்கொண்டுவருகிறது. பிரயாக்ராஜ், கான்பூர், சஹரான்பூர் உட்பட பல இடங்களில் போராட்டத்தில் பங்கேற்ற பலரின் வீடுகள் புல்டோசர்களால் இடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் யார் யாருடைய வீடுகளையெல்லாம் இடிக்கலாம் என்று அதிகாரிகள் கணக்கெடுத்துவருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

நீதியை தகர்க்கும் ‘புல்டோசர் அரசியல்!’

இடிக்கப்பட்டது ஏன்?

பிரயாக்ராஜில் ‘வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா’ கட்சியின் மூத்த நிர்வாகியான ஜாவேத் அகமதுவின் வீடு இடிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. ஜாவேத் அகமது, பிரயாக்ராஜில் நடைபெற்ற போராட்டத்துக்கு முக்கியக் காரணமாக இருந்தார் என்று கருதப்பட்ட காரணத்தால் அவர் வீடு இடிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமையன்று போராட்டம் நடைபெற்றது. சனிக்கிழமை இரவு, வீட்டை இடிப்பதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை புல்டோசரைக்கொண்டு வீடு இடிக்கப்பட்டது. ஜாவேத் அகமதுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிரயாக்ராஜ் வளர்ச்சிக் குழுமம், ‘வீட்டின் வரைபடம் அனுமதி பெறப்படாதது’ என்று காரணம் சொல்லியிருந்தது.

இந்த வீடு குறிவைக்கப்பட்டது ஜாவேத் அகமதுவுக்காக மட்டுல்ல. ஜாவேத் அகமதுவின் மகள் அஃப்ரீன் பாத்திமாவும் ஆட்சியாளர்களின் கண்காணிப்பு வளையத்தில் இருப்பவர். சி.ஏ.ஏ., ஹிஜாப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற மாணவர் தலைவராகவும் அஃப்ரீன் பாத்திமா இருக்கிறார். பிரயாக்ராஜில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு அஃப்ரீன் பாத்திமாதான் முக்கியக் காரணம் என்று உ.பி காவல்துறை குற்றம் சாட்டுகிறது. அஃப்ரீன் வழங்கிய ஆலோசனைப்படிதான், ஜாவேத் அகமது போராட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டார் என்றும் போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால், அதற்கான எந்த ஆதாரமும் வெளியிடப்படவில்லை. வலுவான ஆதாரங்கள் கிடைத்தால், அஃப்ரீன் பாத்திமா மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கூறுகிறது.

என்ன கொடுமையென்றால், புல்டோசரால் இடிக்கப்பட்ட அந்த வீடு ஜாவேத் அகமதுவுக்குச் சொந்தமானது அல்ல. அது, ஜாவேத் அகமதுவின் மனைவிக்குச் சொந்தமானது. எனவே, இந்த விவகாரத்தில் யோகி அரசு சிக்கியிருக்கிறது. ஆனாலும், இதைப் பற்றியெல்லாம் முதல்வர் யோகி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

ஏற்கெனவே, சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்களைக் குற்றவாளிகளாகச் சித்திரித்து புகைப்படங்களுடன் சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில், அலகாபாத் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் யோகி அரசைக் கடுமையாகக் கண்டித்தன. “யோகி அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானது, ஒருவரின் அந்தரங்கத்தை மீறும் செயல்” என்று நீதிமன்றம் சாடியது. மேலும், ‘புகார்தாரராக’, ‘தீர்ப்பளிப்பவராக’, ‘தீர்ப்பை நிறைவேற்றுபவராக’ என எல்லாமுமாக யோகி அரசு செயல்படுகிறது என்றும் நீதிமன்றம் சாடியது. நீதிமன்றங்களின் எச்சரிக்கை ‘ஹாரன்’களை காதில் வாங்காமல், புல்டோசர் அரசியலின் ‘ஆக்ஸிலேட்டரை’ யோகி அரசு மூர்க்கத்தனமாக அழுத்துகிறது.

நீதியை தகர்க்கும் ‘புல்டோசர் அரசியல்!’

இது மரண தண்டனையைப் போன்றது!

உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மதன் லோகூர், இந்தப் பிரச்னை பற்றி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருக்கிறார். அதில், “டெல்லி ஜஹாங்கிர்புரியில் புல்டோசரால் வீடுகளும் கடைகளும் இடிக்கப்பட்டபோது, அதற்கு உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மற்ற மாநிலங்களில் தடை உத்தரவு எதுவும் இல்லை. உத்தரப்பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் புல்டோசரால் வீடுகள் இடிக்கப்படுகின்றன.

முற்றிலும் சட்டவிரோதமாக, அனுமதியின்றி ஒரு வீடு கட்டப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டை இடிப்பதற்கு முன்பு சில சட்ட வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். முதலில் நோட்டீஸ் அளிக்க வேண்டும். அவர்கள் விளக்கம் அளிக்கவும், மேல்முறையீடு செய்யவும் உரிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். ஏனென்றால், வீட்டை ஒரு முறை இடித்துவிட்டால், அவ்வளவுதான். `மன்னிக்கவும்... தவறுதலாக நடந்துவிட்டது’ என்று சொல்ல முடியாது. இடித்தது இடித்ததுதான். இன்னும் சொல்லப்போனால், வீட்டை இடிக்கும் இந்த நடவடிக்கை மரண தண்டனையைப் போன்றது. ஒருவரைப் பார்த்தவுடனே, ‘நீ ஒரு குற்றவாளி... நாளை உன்னைத் தூக்கில் போடப்போகிறோம்’ என்று சொல்ல முடியாது.

பிரயாக்ராஜ் விவகாரத்தைப் பொறுத்த அளவில், 11-ம் தேதி நோட்டீஸ் கொடுத்து, 12-ம் தேதி வீட்டை இடித்துவிட்டார்கள். ஜாவேத் அகமது மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பே இல்லை. மேலும், அந்த நேரத்தில், அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இது மிகவும் அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. ஒருவருக்கு ’பாடம் கற்பிக்கிறோம்’ என்பது சிறுபிள்ளைத்தனமானது. பாடம் கற்பிக்க வீட்டையா இடிப்பார்கள்... உச்ச நீதிமன்றம் இதை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார் நீதிபதி மதன் லோகூர்.

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி உட்பட சில மாநிலங்களில் புல்டோசர் அரசியல் தலையெடுத்திருக்கிறது. அங்கே வெறும் கட்டடங்கள் மட்டும் தகர்க்கப்படவில்லை. இந்திய அரசியல் சாசனமும், நீதி நெறிகளும் தகர்க்கப்படுகின்றன. உத்தரப்பிரதேசத்துக்கு அரசியல் சாசனத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா என்று எழுப்பப்படும் கேள்விக்கு பதிலளிக்கவேண்டிய இடத்தில் இருப்பவர் யோகி மட்டுமல்ல... பிரதமர் மோடியும்தான்!

யார் இந்த அஃப்ரீன் பாத்திமா?

நீதியை தகர்க்கும் ‘புல்டோசர் அரசியல்!’

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள், ஹிஜாப் சர்ச்சையின்போது நடந்த போராட்டங்கள் ஆகியவற்றில் தீவிரமாகப் பங்கேற்றவர் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த அஃப்ரீன் பாத்திமா. 22 வயதாகும் அஃப்ரீன் பாத்திமா, இன்றைக்கு உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் மேற்கொண்டுவரும் புல்டோசர் அரசியலுக்கு எதிரான முகமாக மாறியிருக்கிறார்.

தங்கள் வீடு இடிக்கப்பட்டது குறித்து அஃப்ரீன் பாத்திமா வெளியிட்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், “அலகாபாத் போலீஸால் கைதுசெய்யப்பட்ட என் தந்தை ஜாவேத் அகமது குறித்தும், தாய் பர்வீன் பாத்திமா, தங்கை சுமையா பாத்திமா ஆகியோரின் பாதுகாப்பு குறித்தும் கவலையுடன் இருக்கிறேன். எந்த அறிவிப்பும் இல்லாமல் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கோட்வாலி காவல் நிலையத்துக்குச் சென்றபோது, என் குடும்பத்தினர் அங்கு வைக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த காவல்துறையினர் மறுத்துவிட்டனர்” என்று பதைபதைப்புடன் அவர் பேசியிருந்தார்.

யோகி அரசின் புல்டோசர் அரசியலால், அஃப்ரீன் பாத்திமாவின் வீடு சிதைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் #StandWithAfreenFatima என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகளைப் பதிவிட்டனர். அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரும் அஃப்ரீன் பாத்திமாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாணவர் பிரிவான ‘ஃப்ராட்டர்னிட்டி மூவ்மென்ட்’ (சகோதரத்துவ இயக்கம்) என்ற அமைப்பின் தேசியச் செயலாளராக அஃப்ரீன் பாத்திமா இருக்கிறார். 2021-ம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்த இவர், பல்கலைக்கழக மாணவர் சங்கத்தில் கவுன்சிலராகத் தேர்வுசெய்யப்பட்டார். அதற்கு முன்பு, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகக் கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவராகச் செயல்பட்டார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism