Published:Updated:

முதல்வர் VS ஆளுநர் - பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தொடரும் அதிகார மோதல்!

ஜக்தீப் தன்கர் - மம்தா பானர்ஜி
பிரீமியம் ஸ்டோரி
ஜக்தீப் தன்கர் - மம்தா பானர்ஜி

கடந்த சட்டமன்றத் தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா தோற்றதையடுத்து, அங்கு கலவரங்கள் நடந்தன.

முதல்வர் VS ஆளுநர் - பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தொடரும் அதிகார மோதல்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா தோற்றதையடுத்து, அங்கு கலவரங்கள் நடந்தன.

Published:Updated:
ஜக்தீப் தன்கர் - மம்தா பானர்ஜி
பிரீமியம் ஸ்டோரி
ஜக்தீப் தன்கர் - மம்தா பானர்ஜி

‘‘அதிரடி ஆளுநர்... அசராத முதல்வர்’’ என்ற தலைப்பில், 13.02.2022 தேதியிட்ட ஜூ.வி இதழில் வெளியான கவர் ஸ்டோரியில், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான அதிகாரச் சண்டையை விவரித்திருந்தோம். இதே போன்ற ஆளுநர் - முதல்வர் இடையிலான மோதல், பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் பற்றியெரிகிறது. இந்நிலையில், ‘பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் ஆளுநர்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மாநில உரிமைகளைப் பாதுகாக்க, மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் யோசனைப்படி விரைவில் பா.ஜ.க அல்லாத மாநில முதல்வர்களின் மாநாட்டை டெல்லியில் நடத்தவிருக்கிறோம்’ என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் முதல்வர் - ஆளுநர் இடையிலான மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன... என்னென்ன காரணங்களுக்காக அவை நீடித்துவருகின்றன?

கேரளா - பினராயி விஜயன் VS ஆரிஃப் முகமது கான்

முதல்வர் VS ஆளுநர் - பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தொடரும் அதிகார மோதல்!

சி.பி.எம் ஆளும் கேரளத்தில், முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையேயான மோதல் சிஏஏ விவகாரத்தின்போதே வெடித்துக் கிளம்பியது. ‘‘மத்திய அரசின் தேசிய குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம்’’ என்று கூறிய பினராயி, சட்டத்தை எதிர்த்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். மேலும், 11 மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதிய கையோடு, சிஏஏ-வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். ஆரம்பம் முதலே கேரள அரசின் நிலைப்பாட்டை எதிர்த்துவந்த ஆரிஃப் முகமது, “எல்லாவற்றையும் நான் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்’’ என்று கூறி, ‘‘சிஏஏ-வுக்கு எதிரான வாசகங்களை, சட்டப்பேரவை ஆளுநர் உரையில் படிக்க மாட்டேன்’’ என்றார். மேலும், `எனக்குத் தெரியாமல், என்னிடம் கலந்து பேசாமல், எப்படி உச்ச நீதிமன்றத்தில் நீங்கள் வழக்கு தொடரலாம்’ என்று வரிந்துகட்டினார்.

அடுத்த மோதலாக, கண்ணூர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை நியமிக்கும் விவகாரத்தில் முதல்வருக்கும் ஆளுநருக்கும் அதிகாரப்போட்டி வெடித்தது. ‘‘துணைவேந்தராக பேராசிரியர் கோபிநாதன் ரவீந்திரன்தான் இருப்பார்’’ என்று பினராயி கூறவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆரிஃப், ‘‘பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு இருக்கிறது’’ என்று குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடியாக, பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதாவைச் சட்டசபையில் நிறைவேற்றினார் முதல்வர் பினராயி. இதனால் கோபமான ஆளுநர், “பல்கலைக்கழக வேந்தர் பதவியை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கான சட்டத் திருத்தத்தையும் கொண்டுவந்தால், அதில் கையெழுத்துப்போடவும் நான் தயார்’’ என்றதோடு, பல்கலைக்கழகம் தொடர்பான எல்லாக் கோப்புகளையும் முதல்வர் அலுவலகத்துக்கே அனுப்பினார். இன்றுவரையிலும் இந்த மோதல் அணையாமல் புகைந்துகொண்டிருக்கிறது. இப்போது, கர்நாடகா ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமியப் பெண்களுக்கு ஆதரவான நிலையில் கேரள அரசு இருக்க, அதற்கெதிரான நிலைப்பாட்டில் பேசி அடுத்த மோதலுக்கு அடித்தளமிட்டிருக்கிறார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான்!

மேற்கு வங்கம் - மம்தா பானர்ஜி VS ஜக்தீப் தன்கர்

முதல்வர் VS ஆளுநர் - பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தொடரும் அதிகார மோதல்!

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையேயான மோதல்தான், இந்திய மாநிலங்களில் ஆளுநர் Vs முதல்வர் மோதலில் உச்சம். கடந்த சட்டமன்றத் தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா தோற்றதையடுத்து, அங்கு கலவரங்கள் நடந்தன. அப்போது மம்தா பானர்ஜிக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த ஆளுநர் ஜக்தீப் தன்கர், ‘`மாநிலத்தில் நடந்துவரும் சட்ட, ஒழுங்குப் பிரச்னைகளை நீங்கள் சரிசெய்ய வேண்டும்’’ என்று பேசி மம்தாவைக் கடுப்பேற்றினார். அடுத்த சில நாள்களில், ‘‘தேர்தல் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கப்போகிறேன்’’ என ஆளுநர் ஜக்தீப் அறிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மம்தா, `நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளுக்குப் புறம்பாக கள ஆய்வு செய்ய வேண்டாம்’ என ஆளுநருக்குக் கடிதம் எழுதினார். அதைக் கண்டுகொள்ளாத ஆளுநர், கலவரம் நடந்த இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டதோடு, ‘`மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது’’ என மாநில அரசைக் கடுமையாகத் தாக்கிப் பேச, மம்தாவும் பதிலடிக்குத் தயாரானார்.

“ஆளுநர் ஓர் ஊழல்வாதி, 1996-ம் ஆண்டு ஹவாலா ஜெயின் வழக்கில் சம்பந்தப்பட்டவர். அவரை ஆளுநராகத் தொடர மத்திய அரசு ஏன் அனுமதித்துள்ளது?’’ என்று கேள்வியெழுப்பினார். அடுத்த அடியாக, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன முறையிலும் ஆளுநருக்கு செக் வைத்தார். ``ஆளுநரான எனது ஒப்புதல் இல்லாமலேயே, 24 பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமித்திருக்கிறது மேற்கு வங்க அரசு. இது சட்டமீறல்!’’ என்று கடுகடுத்தார் ஆளுநர். பதிலுக்கு, மேற்கு வங்க அரசின் பல முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தொடர்ந்து மறுக்கவும், `ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்’ எனக் கோரி பிரதமர் மோடிக்கு மம்தா நான்கு முறை கடிதம் எழுதினார். கோபத்தின் உச்சத்தில், தனது ட்விட்டர் கணக்கிலிருந்து ஆளுநரை `பிளாக்’கும் செய்தார். இப்படியாக இருவருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துவந்த நிலையில், `அரசியலமைப்பு சட்டத்தின், 174-வது பிரிவின்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மேற்கு வங்கச் சட்டப்பேரவையை பிப்ரவரி 12 முதல் காலவரையின்றி முடக்கிவைப்பதாக’ அறிவித்து அதிரவைத்தார் ஆளுநர் ஜக்தீப் தன்கர். இதையடுத்து, மோதல் மேலும் வலுக்கும் என்று தெரிவிக்கின்றன மேற்கு வங்க வட்டாரங்கள்.

மகாராஷ்டிரா - உத்தவ் தாக்கரே VS பகத்சிங் கோஷியாரி

முதல்வர் VS ஆளுநர் - பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தொடரும் அதிகார மோதல்!

28 வருட பா.ஜ.க-வுடனான உறவை முறித்துக்கொண்டு, மாற்றுக்கட்சிகள் கூட்டணியுடன் ஆட்சியைக் கைப்பற்றி முதல்வரானார் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே. அதிலிருந்தே ஆளுநர் பகத்சிங் கோஷியாரிக்கும், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கும் ஆரம்பமானது பனிப்போர். கொரோனா ஊரடங்கின்போது, ‘`கோயில்களைத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறி முதல்வருக்கு ஆளுநர் போட்ட கடிதம், இருவருக்குமான முதல் மோதலுக்கு சுழிபோட்டது. `மகாராஷ்டிராவில் பெண்களின் பாதுகாப்பு குறித்து விவாதம் செய்ய, சிறப்பு சட்டசபைக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும்’ என்று அடுத்த கடிதத்தை ஆளுநர் அனுப்பவும், சூடான உத்தவ் தாக்கரே, `பா.ஜ.க ஆளும் உ.பி., ம.பி மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அவலங்களைப்போய் கேள்வி கேளுங்களேன்’ எனப் பட்டென்று பதிலளித்தார். தொடர்ந்து ஆளுநர் அனுப்பும் கடிதங்கள், முதல்வர் உத்தவ்-வை மூச்சிரைக்கவைத்தன. சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவும், ``பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் மதம்பிடித்த யானைகள்போலச் செயல்படுகிறார்கள். பா.ஜ.க ஆளாத மாநிலங்களின் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற நோக்கோடு அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள்’ எனக் கடுமையாக விமர்சித்தது.

அதைத் தொடர்ந்து, ஆளுநருக்கே உரித்தான பாணியில், மகாராஷ்டிர மாநில அரசின் பல திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்காமலேயே இழுத்தடித்தார் ஆளுநர். சட்டமேலவை நியமன உறுப்பினர்கள் 12 பேர் பட்டியலை மாநில அரசு பரிந்துரை செய்தது. அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்தார் ஆளுநர். “சிவசேனாவின் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்படும் எனக் கூறிவந்த பாஜ.க-தான், ஆளுநர் பின்னணியில் இருந்துகொண்டு செயல்படுகிறது’’ என்று குற்றம்சாட்டிய முதல்வர், இவை எல்லாவற்றுக்கும் பதிலடி கொடுக்கும்விதமாக, கடந்த டிசம்பர் மாதம் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், ‘மகாராஷ்டிரா பொதுப் பல்கலைக்கழகங்கள் சட்டம் 2016’-ஐ திருத்தினார். பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சட்ட மசோதாவைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநருக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் உத்தவ் தாக்கரே. எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் அடுத்த பஞ்சாயத்து!

பஞ்சாப் - சரண்ஜித் சிங் சன்னி VS பன்வாரிலால் புரோஹித்

முதல்வர் VS ஆளுநர் - பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தொடரும் அதிகார மோதல்!

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாப் மாநிலத்திலும் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோதல் வெடித்தது. அதாவது, பஞ்சாப்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் 36,000 ஒப்பந்தப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான மசோதாவை, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி சட்டப்பேரவையில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தார். ஆனால், பல நாள்கள் ஆகியும் ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தியதால், மசோதா சட்ட வடிவம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பொறுமையிழந்த முதல்வர், `பா.ஜ.க-வின் அழுத்தம் காரணமாகவே ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை’ என்று குற்றம்சாட்டியதோடு, ‘`ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் அவரை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன்’’ என எச்சரிக்கை விடுக்கவும் விவகாரம் பெரிதானது. தற்போது தேர்தல் சமயம் என்பதால் தற்காலிக இடைவேளை விடப்பட்டிருக்கிறது இம்மோதலுக்கு.

டெல்லி - அரவிந்த் கெஜ்ரிவால் VS அனில் பைஜால்

முதல்வர் VS ஆளுநர் - பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தொடரும் அதிகார மோதல்!

ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் யூனியன் பிரதேசமான டெல்லியிலும் இதே சிக்கல்தான். ‘‘நான் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டத்துக்கும் ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார். டெல்லி அரசு நடத்தும் நிகழ்வுகளில் ஐ.ஏ.எஸ் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளைக் கலந்துகொள்ளவிடாமல் செய்கிறார்” என்று துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் மீது அடுக்கடுக்காகக் குற்றம்சாட்டுகிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி ஹைகோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த கெஜ்ரிவால், டெல்லி ஆளுநர் அலுவலகத்தின் முன்பு ஒன்பது நாள்கள் தொடர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்.

கொரோனா ஊரடங்கு வந்தபோது, கோவிட் வைரஸையும் தாண்டி இவர்கள் இருவருக்குமான மோதல் டெல்லியில் பேசுபொருளானது. கொரோனா தொற்று அதிகரித்து டெல்லி மக்களுக்கு மருத்துவமனைகளில், மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவியதை தேசிய ஊடகங்கள் தோலுரித்தன. இதையடுத்து, “இனி டெல்லி மாநில அரசு மருத்துவமனைகளில், டெல்லி மக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும். வெளி மாநிலத்தவர்களுக்குக் கிடையாது. அவர்கள் மத்திய அரசின் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்’’ என்று அறிவித்தார் கெஜ்ரிவால். ஆனால், அனில் பைஜால், “டெல்லியைச் சேராதவர் என்ற காரணத்தால் எந்தவொரு நபருக்கும் சிகிச்சை மறுக்கப்படக் கூடாது” என்று கூறி கெஜ்ரிவாலின் உத்தரவை ரத்துசெய்தார். பிறகு, தொற்று எண்ணிக்கை குறைந்தபோது, வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு இருந்ததை ரத்துசெய்ய, கெஜ்ரிவால் கேட்ட ஒப்புதலை ஏற்க மறுத்தார் துணைநிலை ஆளுநர். இப்படியே போய்க்கொண்டிருக்க, மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ‘துணைநிலை ஆளுநர்தான் டெல்லியின் பிரதிநிதி, அவர் ஒப்புதலின்றி எந்தச் சட்டமும் இயற்ற முடியாது’ என்ற வகையில் துணைநிலை ஆளுநருக்கான அதிகாரங்களை அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதாவைக்கொண்டுவந்து கெஜ்ரிவாலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இப்படியாக, டெல்லி மாநிலத்தின் அதிகார மோதல் மேலும் மேலும் முற்றிக்கொண்டே செல்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உரசல்கள், முதல்வர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான ஈகோ யுத்தங்களாக வெடித்துக் கிளம்புகின்றன. ‘இப்படியான மோதல்கள் இன்னும் அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!