Published:Updated:

களேபரத்துடன் முடிந்த கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தல்!

கடலூர்
பிரீமியம் ஸ்டோரி
கடலூர்

கடத்தப்பட்ட கவுன்சிலர்கள்... சிறைவைத்தாரா அமைச்சர் மகன்?

களேபரத்துடன் முடிந்த கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தல்!

கடத்தப்பட்ட கவுன்சிலர்கள்... சிறைவைத்தாரா அமைச்சர் மகன்?

Published:Updated:
கடலூர்
பிரீமியம் ஸ்டோரி
கடலூர்

கடத்தல், சிறைவைப்பு, தற்கொலை முயற்சி, பதவிநீக்கம் என அடுத்தடுத்த டெரர் ட்விஸ்ட்களுடன் நடந்து முடிந்திருக்கிறது கடலூர் மாநகராட்சியின் முதல் மேயர் தேர்தல். “என்னதான் நடந்தது?” என்று இதன் உள்விவரங்களை அறிந்தவர்களிடம் பேசியபோது அடுத்தடுத்த திருப்பங்களை அப்படியே லைவ் டெலிகாஸ்ட் செய்தார்கள்!

‘‘கடலூர் மாநகராட்சிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, எப்படியாவது மேயர் பதவியை தங்கள் மனைவிக்கு வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று தி.மு.க நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா என்ற பழக்கடை ராஜாவும், மாவட்டப் பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரனும் கோதாவில் குதித்தார்கள். இருவருமே அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். அதிரடி அரசியலுக்குப் பெயர்பெற்றவரான கே.எஸ்.ராஜா, வேட்பாளர் பட்டியலைக் கட்சித் தலைமை அறிவிப்பதற்கு முன்பே, தன் மனைவி சுந்தரியை வேட்புமனு தாக்கல் செய்யவைத்தார். இதையடுத்து, ‘கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய நகரச் செயலாளர் மீது நடவடிக்கை இல்லையா?’ என்று எதிர்க்கோஷ்டினர் கொந்தளிக்க... கட்சித் தலைவர் ஸ்டாலினோ கணவன், மனைவி இருவருக்கும் சீட் வழங்கினார்.

கதிரவன்
கதிரவன்

ராஜாவிடம் மேயர் பதவி சென்றால் அறுவடையில் ‘பங்கு’ கிடைக்காது என்று நினைத்த பெரும்பான்மையான நிர்வாகிகள், குணசேகரன் அணிக்குத் தாவினார்கள். அமைச்சர் தரப்பும் குணசேகரனுக்கு கிரீன் சிக்னல் கொடுக்க... உற்சாகமான குணசேகரன், தன்னிடம் தஞ்சமடைந்தவர்களின் தேர்தல் செலவுகளை முழுமையாக ஏற்றார். தேர்தல் முடிவில் மொத்தமுள்ள 45 வார்டுகளில் தி.மு.க 27 வார்டுகளையும், வி.சி.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலா மூன்று வார்டுகளையும், காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க தலா ஒரு வார்டையும், அ.தி.மு.க ஆறு வார்டுகளையும் கைப்பற்றின; சுயேச்சைகள் மூன்று வார்டுகளைப் பிடித்தார்கள். ராஜா தனது சொந்த வார்டிலேயே தோற்க, அவரின் மனைவி சுந்தரி வெற்றிபெற்றார்.

மேயர் வேட்பாளராக குணசேகரனின் மனைவி கீதா பெயருடன் அறிவாலயத்தில் பட்டியல் தயாரானது. அதைத் தெரிந்துகொண்ட ராஜா, அவசரமாக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவனைச் சந்தித்து குமுறியிருக்கிறார். தொடர்ந்து காட்சிகள் ராஜாவுக்குச் சாதகமாக மாறின. அமைச்சர் நேரு வரை விவகாரம் செல்ல... மார்ச் 3-ம் தேதி வெளியான பட்டியலில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் ராஜாவின் மனைவி சுந்தரி. அதிர்ச்சியடைந்த குணசேகரன், எம்.எல்.ஏ அய்யப்பனிடம் சென்று ‘துரோகம் செய்துவிட்டார்கள். கவுன்சிலர்கள் என்னுடன் இருக்கிறார்கள். நானும் போட்டியிடுவேன்’ என்று கதறினார்.

அய்யப்பன்
அய்யப்பன்

மார்ச் 4-ம் தேதி மேயருக்கான மறைமுகத் தேர்தல் நடக்கவிருந்த நிலையில், மார்ச் 3-ம் தேதி தனது ஆதரவு கவுன்சிலர்களை இரண்டாகப் பிரித்து 10 பேரை விழுப்புரம் ரிசார்ட்டிலும், 10 பேரை கடலூர் ரிசார்ட்டிலும் தங்கவைத்தார் குணசேகரன். கவுன்சிலர்கள் மாயமான தகவல் கசிந்ததால், பதற்றமானது கடலூர். உளவுத்துறை மூலம் அதை உறுதிப்படுத்திக்கொண்ட அமைச்சரின் மகன் கதிரவன், கடலூர் எஸ்.பி சக்திகணேசனைத் தொடர்புகொண்டு, ‘நம்ம கவுன்சிலர்கள் எல்லோரும் காலையில் தேர்தலில் இருக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். அதையடுத்து கடலூரிலிருந்த கவுன்சிலர்களை மொபைல் போன் லொக்கேஷன் மூலம் கண்டுபிடித்துத் தூக்கியது காவல்துறை. அதேபோல விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா, டி.ஐ.ஜி பாண்டியன் தலைமையிலான 300-க்கும் மேற்பட்ட போலீஸார், விழுப்புரம் ரிசார்ட்டைச் சுற்றிவளைத்தார்கள். அதைக் கேள்விப்பட்டு நள்ளிரவு 1 மணிக்கு குணசேகரனுடன் அய்யப்பன் அங்கு சென்றார்.

களேபரத்துடன் முடிந்த கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தல்!

மார்ச் 4-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் எஸ்.பி சக்திகணேசனுடன் விழுப்புரம் ரிசார்ட்டுக்குச் சென்ற கதிரவன், அங்கிருந்த அய்யப்பன், குணசேகரன் மற்றும் கவுன்சிலர்களிடம், ‘கட்சி அறிவித்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர்களிடமிருந்து சாதகமான பதில் வராததால், அங்கிருந்து கிளம்பினார். தொடர்ந்து அன்பகம் கலை நடத்திய பேச்சுவார்த்தையிலும் குணசேகரன் அண்ட் கோ மசியவில்லை. இதையடுத்து, ‘எம்.எல்.ஏ அய்யப்பன்தான் அனைத்துக்கும் காரணம்’ என்று அறிவாலயத்துக்குத் தகவல் அனுப்பிவிட்டு கிளம்பினார் அன்பகம் கலை. அதேசமயம், எம்.ஆர்.கே தரப்பு, ‘அவங்களைக் கூட்டிக்கிட்டு வந்தாலும் ஓட்டை மாத்திப்போட வாய்ப்பிருக்கு. தேர்தல் முடியுற வரைக்கும் ரிசார்ட்டில் இருந்து அவங்க வெளியே வரக் கூடாது’ என்று உத்தரவிட்டிருக்கிறது. காலை 8 மணிக்கு கடலூருக்குக் கிளம்பத் தயாரான எம்.எல்.ஏ அய்யப்பன் உள்ளிட்ட கவுன்சிலர்களை காவல்துறையினர் வெளியேற அனுமதிக்கவில்லை... அப்போதுதான் தாங்கள் சிறைவைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே அவர்களுக்குப் புரிந்தது.

மனைவி கீதாவுடன் குணசேகரன்
மனைவி கீதாவுடன் குணசேகரன்

அதேநேரத்தில், கடலூரில் எம்.ஆர்.கே ஆதரவாளர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு மாநகராட்சி அலுவலகத்துக்குள் ஓடிச்சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் குணசேகரனின் மனைவி கீதா. அவரையடுத்து, ராஜாவின் மனைவி சுந்தரியும் வேட்புமனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க-வின் ஆறு கவுன்சிலர்களும் தேர்தலைப் புறக்கணித்துவிட... வி.சி.க., பா.ம.க., பா.ஜ.க உள்ளிட்ட 32 கவுன்சிலர்கள் தேர்தலில் பங்கேற்றார்கள். கீதா குணசேகரனுக்கு 12 வாக்குகள் விழுந்த நிலையில், 19 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார் தி.மு.க வேட்பாளர் சுந்தரி. இதைக் கேள்விப்பட்டதும் வீட்டிலிருந்த பழைய மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குணசேகரன். தொடர்ந்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் எம்.எல்.ஏ அய்யப்பனைத் தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்’’ என்று விறுவிறு காட்சிகளை அவர்கள் சொல்லி முடித்தபோது ஓர் அரசியல் சினிமா பார்த்ததுபோல இருந்தது!

‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களைக் காவல்துறை மூலம் சிறைவைத்துவிட்டு தேர்தலைச் சந்திப்பதுதான் ஜனநாயகமா... ஓர் அரசே அதைச் செய்யலாமா?’’ என்று கேள்வியெழுப்புகிறார்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள்!