Published:Updated:

அச்சுறுத்தும் உணவுகள் - அலட்சியம் காட்டும் அரசு?!

அச்சுறுத்தும் உணவுகள் - அலட்சியம் காட்டும் அரசு?!
பிரீமியம் ஸ்டோரி
அச்சுறுத்தும் உணவுகள் - அலட்சியம் காட்டும் அரசு?!

‘நாம் அன்றாடம் உண்ணும் உணவு ஆபத்தில்லாதது’ என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா...

அச்சுறுத்தும் உணவுகள் - அலட்சியம் காட்டும் அரசு?!

‘நாம் அன்றாடம் உண்ணும் உணவு ஆபத்தில்லாதது’ என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா...

Published:Updated:
அச்சுறுத்தும் உணவுகள் - அலட்சியம் காட்டும் அரசு?!
பிரீமியம் ஸ்டோரி
அச்சுறுத்தும் உணவுகள் - அலட்சியம் காட்டும் அரசு?!

மே 1-ம்தேதி கேரள மாநிலம், காசர்கோடு பகுதியில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து, தஞ்சையிலும் ஷவர்மா சாப்பிட்ட மூன்று மாணவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், ஒரு கடையில் ஃபுரூட் மிக்ஸ் குடித்த குழந்தைகள் உட்பட 18 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அடுத்ததாக, புதுக்கோட்டையிலுள்ள ஓர் உணவகத்தில், பிரியாணி சாப்பிட்ட 24 பேருக்கு வாந்தி, மயக்கம் உண்டானது. இப்படிக் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் தரம் குறைந்த உணவுகளால் அதிர்ச்சியூட்டும் பல சம்பவங்கள் அரங்கேறின.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் மதுரையில், 10 கிலோவுக்கு அதிகமான பழைய இறைச்சியும், கோவையில் 57 கிலோ பழைய இறைச்சியும், திருச்சியில் 43 கிலோ கெட்டுப்போன இறைச்சியும் கைப்பற்றப்பட்டன. சமைத்த உணவுப்பொருள்களை ஃப்ரீஸரில் வைத்து அடுத்தடுத்த நாள்களில் பயன்படுத்துவது, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பல்வேறு ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவது, சுகாதாரமற்ற முறையில் சமையற்கூடங்களை வைத்திருப்பது எனப் பல்வேறு முறைகேடுகள் கவனத்துக்கு வந்தன.

மக்களின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு. ஆனால், உணவகங்களில் கிடைக்கும் உணவுப்பொருள்களின் தரம், சுகாதாரம் குறித்த அக்கறையும் கண்காணிப்பும் நம்மிடம் போதுமான அளவு இருக்கிறதா... ‘நாம் அன்றாடம் உண்ணும் உணவு ஆபத்தில்லாதது’ என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா... சுகாதாரமற்ற உணவால் மக்கள் பாதிக்கப்படும் செய்திகள் தொடர்கதையாகவே இருக்கின்றன. ‘கண்காணிக்கவேண்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்?’ என்கிற மிகப்பெரிய கேள்வி மக்களிடையே எழுந்திருக்கிறது. ‘தரமற்ற, ஆபத்தான உணவுகளை விற்பனை செய்ய உணவகங்களுக்கு எப்படி தைரியம் வருகிறது... அரசு ஏன் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுகிறது?’ என்று கொந்தளிக்கின்றன நுகர்வோர் அமைப்புகள். இது குறித்து, களத்தில் இறங்கி விசாரித்தோம்...

அச்சுறுத்தும் உணவுகள் - அலட்சியம் காட்டும் அரசு?!

உரிமம் இல்லாத கடைகள்... கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்!

உணவு பாதுகாப்புத்துறையின் விதிமுறைகளை உணவகங்கள் காற்றில் பறக்கவிடுவதும், அதைக் கண்காணிக்கவேண்டிய அதிகாரிகள் வசூல் செய்துகொண்டு அமைதியாக இருப்பதும்தான் இந்த நிலைமைக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். வருடத்துக்கு 12 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யும் உணவகங்கள் முறையான ‘உரிமம்’ பெற வேண்டும். அதேபோல, 12 லட்சத்துக்கும் கீழ் விற்பனை செய்யும் உணவகங்கள் ‘பதிவுச் சான்றிதழ்’ கட்டாயமாகப் பெற வேண்டும். ஆனால், தெருவுக்குத் தெரு இருக்கிற பெரும்பான்மையான உணவகங்கள் பதிவுசெய்யப்படாதவை என்பதுதான் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டாக இருக்கிறது.

தலைநகர் சென்னையில் மட்டும் 40,000-க்கும் அதிகமான பிரியாணிக் கடைகள் செயல்படுகின்றன. இங்கு ஒரு பிளேட் பிரியாணி 50 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு மலிவு விலையில் எப்படி பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது என்று விவரமறிந்த வட்டாரத்தில் பேசினோம். ``ஏற்றுமதிக்கு வைக்கப்பட்டிருக்கும் பாசுமதி அரிசிகளில் காலாவதியான அரிசிகள் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும். தரமில்லாத, மலிவு விலையில் கிடைக்கும் அந்த அரிசியைப் பயன்படுத்துவதால்தான் குறைந்த விலையில் இவர்களால் விற்க முடிகிறது. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வெட்டும்போது, கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்து சான்றளிப்பது கட்டாயம். ஆனால், அந்த நடைமுறையெல்லாம் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுவதே கிடையாது. இறந்துபோன ஆடு, மாடு, கோழிகளின் இறைச்சிகள் குறைந்த விலைக்குக் கிடைக்கும் என்பதால், பல கடைகளில் அந்த இறைச்சிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. அசைவ உணவகங்கள் மட்டுமல்லாமல், சைவ உணவகங்களிலும் மீந்த சோறு, குழம்பு, பலகாரங்கள் போன்றவை வேறு வடிவங்களில் மீண்டும் பரிமாறப்படுகின்றன. மீந்த சோறு தயிர்சாதமாக, மீந்த வடைகளிலிருந்து வடகறி என இந்தப் பட்டியல் பெரிது. சிறிய கடைகளின்மீது மட்டும் இப்படிக் குற்றம் சொல்லிவிட முடியாது. பெரிய பெரிய உணவகங்களின் கிச்சன்களில்கூட இப்படியான பிரச்னைகள் இருக்கின்றன. நாட்பட்ட இறைச்சி, பயன்படுத்தப்பட்ட ஆயில், சுவையூட்டும் தீங்கான ரசாயனப்பொடிகள் பயன்படுத்துவது எனப் பல ஆபத்தான விஷயங்கள் நடக்கின்றன. தவிர, ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுகள் தயாராகும் சில கம்யூனிட்டி கிச்சன்களின் சுகாதாரத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்கிறார்கள்.

அன்பழகன்
அன்பழகன்

வசூல் வேட்டை... லட்சங்களில் கொழிக்கும் அதிகாரிகள்!

“சிறிய கடைகளோ, பெரிய உணவகங்களோ, லைசென்ஸ் வாங்கியிருக்கிறார்களா, சுகாதாரமான உணவுகளைத்தான் விற்பனை செய்கிறார்களா என்பதைக் கண்டறிய வேண்டியது அந்த வட்டார உணவு பாதுகாப்பு அலுவலரின் கடமை. ஆனால், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே இவர்கள் சோதனைகளுக்கே வருகிறார்கள். மற்ற நேரங்களில், பல அதிகாரிகள் தினசரி இத்தனை கடைகள் என நிர்ணயித்து பணம் வசூலிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள்” என்கிற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்து, நேர்மையான சில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.

``மற்ற எல்லாத் துறைகளையும்விட பணம் கொழிக்கும் துறை, உணவு பாதுகாப்புத்துறைதான். ஆனால், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறைகளைப் போல இந்தத் துறையில் நடக்கும் முறைகேடுகள் பெரிய அளவில் வெளியில் வருவதில்லை. உண்மையில், இந்தத் துறை அதிகாரிகளில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் ஊழல்வாதிகளாகத்தான் இருக்கிறார்கள். பெரும்பாலான மாவட்ட நியமன அலுவலர்கள், மாதத்துக்கு இவ்வளவு வசூல் என டார்கெட் ஃபிக்ஸ் செய்துவிடுகிறார்கள். அதை வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகளாக இருப்பவர்கள், கடைகளில் வசூல் பண்ணிக் கொடுத்து அதில் தங்களின் பங்கை வாங்கிக்கொள்கிறார்கள். தவிர, இவர்களே தனியாகக் கூடுதல் கலெக்‌ஷனிலும் இறங்குகிறார்கள். தமிழகம் முழுவதும் சிறிய கடைகளிலிருந்து பெரிய பெரிய ஹோட்டல்கள் வரை லைசென்ஸ் கொடுப்பதற்குப் பணம் கன்னா பின்னாவெனக் கறக்கப்படுகிறது. ஆய்வுக்குப் போனால், பெரிய ஹோட்டல்கள் என்றால் பத்தாயிரத்தில் தொடங்கி லட்சங்களில் பேரம் பேசப்படுகிறது. ஒரு மாதத்துக்கு மாமூலாக, நகரங்களில் லட்சங்களிலும், மாநகரங்களில் கோடிகளிலும் வசூல்வேட்டை நடக்கிறது.

மாவட்ட அளவில் மருத்துவர்கள்தான் நியமன அலுவலர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இதற்குப் பொருத்தமானவர்கள் அல்ல. இந்தத் துறையின் நடைமுறை விஷயங்கள் இவர்களுக்குச் சுத்தமாகத் தெரியாது. மேலும், இவர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்கள். இவர்களின் நீட்டிப்புக் காலமும் முடிந்துவிட்டது என FSSI (உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்) அறிவித்த பிறகும்கூட, அவர்களே தொடர்ந்து பதவியில் இருந்துவருகிறார்கள். இவர்கள்மீது கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உணவு வாங்கிய விஷயத்தில் புகார்கள் எழுந்தன. ஆனாலும், எந்த நடவடிக்கையும் இன்றி அவர்களே பதவியில் தொடர்கிறார்கள். அதிகாரிகளின் பொறுப்பின்மையும், வசூலும், அலட்சியமுமே இந்த அவலங்களுக்கு மிக அடிப்படையான காரணம்” என்றார்கள் ஆதங்கத்தோடு.

குறைந்தபட்ச தண்டனை... உணவகங்கள் அலட்சியம்!

சோதனையின்போது சிக்கும் உணவகங்களுக்கு, கடையின் அளவைப் பொறுத்து 1,000 முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்படும். அதே உணவகத்தில் அந்தத் தவறு இரண்டாவது முறை நடந்தாலும், அதே நடைமுறைதான். மூன்றாவது முறையும் அந்தத் தவறு தொடர்ந்தால் மட்டுமே, அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படும். இந்தப் படிப்படியான நடவடிக்கைதான், உணவகங்கள் எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல் செயல்படுவதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இது குறித்து அவர்கள் பேசும்போது, ``தமிழ்நாடு முழுக்கவுள்ள பெருநகரங்களில், ஊரைவிட்டு வந்து தங்களின் வாழ்வாதாரத்துக்காக ஏராளமான இளைஞர்கள் தங்கியிருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் சிறிய உணவகங்களைத்தான் நம்பியிருக்கிறார்கள். ஆனால், சுகாதாரமற்ற உணவுகளால் அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில உடனடியான பாதிப்புகளை ஏற்படுத்தும், சில ஆபத்துகள் பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்துபவை. கடை முதலாளிகளும் அதிகாரிகளும் தங்களின் அற்ப லாபத்துக்காக, லட்சக்கணக்கான மனிதர்களின் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை’’ என்றார்கள்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

கட்டமைப்பு இல்லை... உயிருக்கு அச்சுறுத்தல்... கைவிரிக்கும் அதிகாரிகள்!

உணவு பாதுகாப்புத்துறை, தமிழ்நாட்டில் தனியாக 2011-ம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது. இந்தத் துறை, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 ஆகியவற்றின் கீழ் இயங்கிவருகிறது. இந்தத் துறை உருவாக்கப்பட்டபோது, மாவட்டத்துக்கு ஒரு நியமன அலுவலர் என மொத்தம் 32 பதவிகளும், வட்டார அளவில் ஓர் உணவு பாதுகாப்பு அலுவலர் என மொத்தம் 584 பதவிகளும் உருவாக்கப்பட்டன. மாவட்ட நியமன அலுவலர்களாகப் பொது சுகாதாரத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்தான் பணியில் இருக்கிறார்கள். உணவு பாதுகாப்பு அலுவலர்களாக ஹெல்த் இன்ஸ்பெக்டர் அல்லது சானிட்டரி இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதவியில் இருக்கிறார்கள். ஆனால், 2018-ம் ஆண்டில் மொத்தமாக 584-ஆக இருந்த உணவு பாதுகாப்பு அலுவலர்களின் எண்ணிக்கையை அப்போது ஆணையராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ் 392-ஆகக் குறைத்தார். அதிலும் 119 இடங்கள் காலியாக உள்ளன. ஆக, தற்போது 273 பேர்தான் பணியில் உள்ளனர். ``அலுவலர்கள் பற்றாக்குறையும், அவர்களுக்கான சரியான வசதிகள் செய்துதரப்படாததும் இந்தச் சிக்கல்களுக்கு முக்கியக் காரணம்’’ என்கிறார்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்.

இது குறித்து நம்மிடம், தமிழ்நாடு மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அன்பழகன் பேசும்போது, ``மற்ற துறைகளில் இருப்பதைப்போல எங்கள் துறையிலும் கையூட்டு பெறும் அதிகாரிகள் சிலர் இருக்கிறார்கள். ஆனால், நேர்மையாகச் செயல்பட நினைக்கும் அதிகாரிகளுக்கு போதிய வசதிகளை அரசு செய்து தரவில்லை. ஒரு வட்டாரத்துக்கு ஓர் உணவு பாதுகாப்பு அலுவலர் இருக்க வேண்டும். ஆனால், தற்போது பற்றாக்குறையின் காரணமாக, ஓர் அலுவலர் நான்கு வட்டாரங்கள் வரை பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு வட்டாரத்தில் சுமார் 3,000 கடைகள் வரை இருக்கும். அப்படியிருக்க, ஓர் அலுவலர் எப்படி இத்தனை கடைகளையும் ஆய்வு செய்ய முடியும். அப்படியே ஒரு கடையில் தரமற்ற உணவுப்பொருள்களைக் கண்டறிந்தாலும் அதை வெளியில் எடுத்துச் செல்வதற்குக்கூட அரசு சார்பில் வாகன வசதி எதுவும் செய்துதரப்படுவதில்லை. எங்களின் இரு சக்கர வாகனங்களில் எவ்வளவு பொருள்களை எடுத்துவர முடியும் சொல்லுங்கள்... அதை ஆய்வகத்துக்கு அனுப்புவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் நாங்களாகவே தனியாகச் செய்ய வேண்டும். எந்த நிறுவனமாவது எங்கள்மீது வழக்கு போட்டால், அதற்காகவும் நாங்கள்தான் நீதிமன்றத்துக்கு அலைய வேண்டும். எதற்கு இவ்வளவு பிரச்னைகளைத் தூக்கிக்கொண்டு அலைய வேண்டும் என்கிற உணர்வுதான் பெரும்பாலான அலுவலர்களிடம் இருக்கிறது.

அதுமட்டுமல்ல, தனியாகச் சென்றுதான் கடைகளையோ, தயாரிப்பு நிறுவனங்களையோ நாங்கள் சோதனையிடவேண்டியிருக்கிறது. எங்கள் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பல இடங்களில் ஆபத்தான பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. குறைந்தபட்சம் சோதனைக்குப் போகும்போது, அங்குள்ள விஷயங்களைப் பதிவுசெய்வதற்காகவாவது ஓர் உதவியாளர் வேண்டும். ஒப்பீட்டளவில், மற்ற மாநிலங்களில் செய்து தரப்பட்டிருக்கும் வசதிகள் எதுவும் தமிழ்நாட்டில் இல்லை. காவல்துறைக்கு இருப்பதைப் போலான கட்டமைப்புகள் எங்கள் துறைக்கும் தேவை என அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம்.’’ என்றார்.

இந்த விவகாரம் குறித்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமாரிடம் பேசினோம். ``தமிழ்நாட்டில் தற்போது உரிமம் பெற்ற, பதிவுசெய்யப்பட்டவை என 5.5 லட்சம் உணவகங்கள் இருக்கின்றன. மாநிலம் முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுமார் 300 பேர் இருக்கிறார்கள். இன்னும் 120-க்கும் மேற்பட்டவர்களைப் பணியமர்த்த உள்ளோம். மேலும், ஆறு உயர்தரப் பரிசோதனைக் கூடங்கள் செயல்பட்டுவருகின்றன. உணவு பாதுகாப்பு அதிகாரிகள், தொடர் சோதனைகளை மேற்கொண்டுதான் வருகிறார்கள். ஸ்டார் ஹோட்டல் போன்ற பெரிய உணவகங்கள் தவறு செய்தால், அந்த நிறுவனத்துக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். அதேநேரத்தில் தள்ளுவண்டிக் கடை போன்ற சிறு உணவகங்கள் தவறு செய்தால், ஒன்றுக்கு இரண்டு முறை அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, எப்படிக் கடையை நடத்த வேண்டும் என்ற படிப்பினையை வழங்குவோம். மூன்றாவது முறை அதே தவறு தொடர்ந்தால் மட்டுமே அந்த உணவகம் மூடப்படும். சிறு உணவகங்களை உடனடியாக மூடிவிட்டால் அவர்களின் வாழ்வாதாரம் மொத்தமும் பாதிக்கப்படும். மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. எங்கள் அதிகாரிகள் யாரும் லஞ்சம் பெறுவது தெரியவந்தால் அவர்கள்மீது துறைரீதியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

உணவகங்களைக் கேட்டால் அதிகாரிகளையும், அதிகாரிகளைக் கேட்டால் அரசாங்கத்தையும் கைகாட்டுகிறார்கள். சுகாதாரமற்ற உணவுகளால் மக்களின் உயிரோடு விளையாடும் இந்த அலட்சியத்தின் பின்னால், பேராசைகொண்ட முதலாளிகளும் அதிகாரிகளும் இருக்கிறார்கள். உணவு பாதுகாப்பு எனும் துறையின் நிர்வாகக் கட்டமைப்பிலும் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. ஒரு மரணம் என்று வரும்போது மட்டும், கண்துடைப்பாக அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடாமல், மக்கள் வாங்கி உண்ணும் ஒவ்வொரு கவள உணவும் பாதுகாப்பானது என உறுதிப்படுத்தவேண்டியது அரசின் கடமை!

*****

இறைச்சிக்கூடம் அவசியம்!

ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வெட்டும்போது, கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்து சான்றளிப்பது கட்டாயம். ஆனால், பெயருக்காக மட்டுமே அப்படியொரு நடைமுறை இருக்கிறது. சென்னை, புளியந்தோப்பிலிருக்கும் ஆட்டுத்தொட்டியிலிருந்துதான், ஒட்டுமொத்த சென்னைக்கும் இறைச்சி செல்கிறது. ஆனால், அங்கு உண்மையில் எந்தப் பரிசோதனையும் நடைபெறுவதே இல்லை. குறைந்தபட்சம் சென்னையில் இப்படி ஓர் இடமாவது இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில், பொதுவான இறைச்சிக்கூடம் (Slaughter House) என்பதே இல்லை. அவரவர் தங்கள் இஷ்டத்துக்கு எந்தவிதச் சோதனையும் செய்யாமல்தான் இறைச்சிகளை விற்பனை செய்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் கால்நடை மருத்துவர் மற்றும் உரிய கட்டமைப்புகளுடன்கூடிய இறைச்சிக்கூடத்தை ஏற்படுத்த வேண்டும்!

அச்சுறுத்தும் உணவுகள் - அலட்சியம் காட்டும் அரசு?!

ஷவர்மா தடை... மறுபரிசீலனை தேவை!

“ `அரேபிய உணவுகளைத் தமிழ்நாட்டில் தடைசெய்ய வேண்டும்’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சொல்கிறார். குடியாத்தம் தி.மு.க நகராட்சித் தலைவர், ஷவர்மாவைத் தடைசெய்திருக்கிறார். ஷவர்மாவின் தரம் குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி, உணவுப் பொருள்களைப் பறிமுதல் செய்வதை வரவேற்கிறோம். அதேநேரத்தில், ஓரிரு இடங்களில் நடந்த தவறுகளுக்காக ஒட்டுமொத்தமாக ஓர் உணவு வகையையே தடைசெய்வது நியாயமல்ல. ஷவர்மா உணவு வியாபாரத்தில் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பேர் ஈடுபட்டிருக்கிறோம். எங்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும்” என்கிறார் சென்னையில் ஷவர்மா கடை நடத்திவரும் ஒருவர்.

“இழுத்து மூடிட்டுப் போகவேண்டியதுதான்!”

``ஒரு நாளைக்கு நாங்க சம்பாதிக்கிற பணத்துல, பெரும்பகுதி மாமூலுக்கே போயிடுது. அந்த அளவுக்கு, காவல்துறை அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், லோக்கல் கட்சிக்காரர்கள், கவுன்சிலர்கள் என அனைவருக்கும் படியளக்கவேண்டியிருக்கிறது. இதுல ஒருவாட்டி பயன்படுத்தின எண்ணெயை மறுவாட்டி பயன்படுத்தக் கூடாதுன்னா இழுத்து மூடிட்டுப் போகவேண்டியதுதான்!’’ என்கிறார்கள் சில தள்ளுவண்டி உணவக உரிமையாளர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism