Published:Updated:

ம.பி-யை பாருங்க... உ.பி-யை பாருங்க... அமைச்சர்கள், ஐடி விங்கின் அடடே முட்டுகள்!

ஐடி விங்கின் அடடே முட்டுகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஐடி விங்கின் அடடே முட்டுகள்!

ஓவியங்கள்: பிரகாஷ் கலை

ம.பி-யை பாருங்க... உ.பி-யை பாருங்க... அமைச்சர்கள், ஐடி விங்கின் அடடே முட்டுகள்!

ஓவியங்கள்: பிரகாஷ் கலை

Published:Updated:
ஐடி விங்கின் அடடே முட்டுகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஐடி விங்கின் அடடே முட்டுகள்!

மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகா என எந்த மாநிலத்தில், மின் கட்டணம் யூனிட்டுக்கு எவ்வளவு என்று தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும், பதில் சொல்லிவிடுவார்கள் நம் நெட்டிசன்கள். அந்த அளவுக்கு தி.மு.க ஐடி விங்கும், அமைச்சர்களும் அவர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்!

புரியலியா, கொஞ்சம் பொறுமையாப் படிங்க...

ம.பி-யை பாருங்க... உ.பி-யை பாருங்க... அமைச்சர்கள், ஐடி விங்கின் அடடே முட்டுகள்!

அமைச்சரின் அறிவிப்பும், கலர் கலர் முட்டுகளும்!

ஜூலை 18-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. எப்போதும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கியிருக்கும் தமிழ்நாட்டு நெட்டிசன்கள், கொஞ்சம் தொலைக்காட்சிப் பக்கமும் முகத்தைத் திருப்பிய சம்பவம் அப்போது இரண்டாம் முறையாக நடந்தது. (முதன்முறை எப்போது என்கிறீர்களா... அது நவம்பர் 8, 2018-ல் நடந்தது. அதாங்க மோடியின் ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை’)

கட்டண உயர்வு அறிவிப்பால் அதிர்ச்சியடைந்தாலும், `சரி... ஆனது ஆகிப்போச்சு’ என மீண்டும் அவர்கள் சமூக வலைதளங்களுக்குள் நுழைந்தால், அடுத்த அதிர்ச்சி! இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், ‘மின் கட்டணம் 100 யூனிட்டுக்கு எவ்வளவு, ஐந்நூறு யூனிட்டுக்கு எவ்வளவு’ என கலர் கலராக, டிசைன் டிசைனாக ‘நியூஸ் கார்டு’கள் வலம் வர ஆரம்பித்தன. “யார்யா இது... தீயா... இல்லை இல்லை... கரன்ட் மாதிரி வேலை பார்க்கிறது?” என்று விசாரித்தால், “வேற யாரு... தி.மு.க ஐடி விங்-தான்...” என்று பதில் வந்தது. ஆக, கட்டண உயர்வை அறிவிப்பதற்கு முன்பாகவே, அதற்கு முட்டுக் கொடுப்பதற்கான முன் தயாரிப்புகள் வெகு ஜோராக நடந்திருக்கின்றன.

ம.பி-யை பாருங்க... உ.பி-யை பாருங்க... அமைச்சர்கள், ஐடி விங்கின் அடடே முட்டுகள்!

‘ஐயா சாமிகளா... நீங்க இன்னும்கூட கட்டணத்தைக் கூட்டிக்கோங்க... தயவுசெய்து இப்படி முட்டுக் கொடுக்கிறதை மட்டும் நிறுத்திடுங்க. முடியலை’ என்று வடிவேலுபோல கதறும் அளவுக்கு மளமளவென வந்து குவிந்தன முட்டுகள். தேர்தலுக்கு முன்பு, ‘மக்களின் நிதிச்சுமையைக் குறைக்க மாதமொருமுறை ரீடிங் எடுக்கப்படும்’ என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் மின் கட்டணத்தை உயர்த்தியதே தப்பு. செய்வதையெல்லாம் செய்துவிட்டு, ‘வேணும்னா, குஜராத்துக்குப் போய்ப் பாரு, ஆந்திராவுக்குப் போய்ப் பாரு, உ.பி., ம.பி-யைப் பாரு’ எனக் கொடுக்கும் விளக்கத்தை மக்களால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, “ஷாக் அடிப்பது மின்சாரமா, மின் கட்டணமா?” என அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கையில் கறுப்புப் பதாகை ஏந்திப் போராடிய காட்சி வேறு நினைவுக்கு வந்து மக்களை இம்சித்தது.

ம.பி-யை பாருங்க... உ.பி-யை பாருங்க... அமைச்சர்கள், ஐடி விங்கின் அடடே முட்டுகள்!

காஸ் விலையும், சொத்து வரியும்...

‘ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையில் 5 ரூபாயையும், டீசல் விலையில் 4 ரூபாயையும் குறைப்போம்’ என்பதும் தி.மு.க-வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று. இதைச் சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ஆவேசமடைந்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “வாக்குறுதி கொடுத்தோம். அதை நிறைவேற்ற தேதி சொன்னோமா?” என்று பதில் கேள்வி கேட்டு அனைவரையும் குப்பென வியர்க்கவைத்தார். சிலிண்டருக்கு நூறு ரூபாய் மானியம் கொடுப்பதாகச் சொன்ன வாக்குறுதி பற்றிக் கேட்டால், ``ஒன்றுக்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். எத்தனை சிலிண்டர் வைத்திருக்கிறார்களோ அத்தனைக்கும் கொடுக்க வேண்டுமா, ஒன்றுக்கு மட்டும் கொடுத்தால் போதுமா என்ற கேள்வி இருக்கிறது’’ என அவரும் கன்ஃபியூஸ் ஆகி, நம்மையும் கன்ஃபியூஸ் செய்தார். “தேர்தலுக்கு முன்னாடி தெளிவாப் பேசுனீங்களேப்பா...” என்பதே மக்களின் மைண்ட் வாய்ஸாக இருக்கிறது.

“கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம், மீண்டும் மேம்படும் வரை சொத்து வரி அதிகரிக்கப்பட மாட்டாது” என, ‘யாருகிட்ட கேட்குற... அண்ணன்கிட்டதானே கேட்குற’ என்கிறரீதியில் வான்ட்டடாக வாக்குறுதி அளித்திருந்தது தி.மு.க. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் நகர்ப்புறங்களில் 25 முதல் 150 சதவிகிதம் வரை சொத்து வரியை உயர்த்தி வாக்காளர்களுக்கு பெப்பே காட்டிவிட்டார்கள். “பஞ்சாப், உ.பி உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்தவுடன், மத்திய அரசு காஸ் சிலிண்டர் விலையை உயர்த்துகிறது” எனக் களமாடிக்கொண்டிருந்த ஆளும் கட்சியின் ஐடி விங் தோழர்களிடம், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் சொத்து வரியை நீங்கள் உயர்த்துகிறீர்களா?” என நெட்டிசன்கள் கேள்வி கேட்டார்கள். “சின்னப் பசங்ககிட்ட என்னப்பா கேள்வி... நான் சொல்றேன் பாரு பதிலு” என்றரீதியில் மூத்த நிர்வாகி ஒரு பதில் தந்தார் பாருங்க... “600 சதுரஅடி வீட்டுக்கு தமிழ்நாட்டில் 2,800 ரூபாய் வரி என்றால், அதுவே மராட்டிய மாநிலத்தில் 84,500 ரூபாய், ஆந்திராவில் 20,000 ரூபாய். சொத்து வரி உயர்த்தப்பட்டும்கூட தமிழ்நாட்டில் வரி மிகக் குறைவு” என்று தடாலடி விளக்கம் தந்தவர் துறை அமைச்சர் கே.என்.நேரு.

ம.பி-யை பாருங்க... உ.பி-யை பாருங்க... அமைச்சர்கள், ஐடி விங்கின் அடடே முட்டுகள்!

அடடே ஆவின்..!

“இதென்ன பிரமாதம்... ஸ்பெஷல் ஐட்டம் ஒண்ணு இருக்கு” என்று உச்சபட்சமாக ஒரு விளக்கத்தைக் கொடுத்து மக்களை மிரளச்செய்தவர் பால்வளத்துறை அமைச்சர் நாசர்தான். ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து, “பார்த்தீங்களா, சொன்னதைச் செய்தோமா” என மார்தட்டியவர்கள், ஓராண்டுக்குள் நெய், பால் பவுடர் உள்ளிட்ட பால்பொருள்களின் விலையை உயர்த்தினார்கள். அது குறித்துக் கேள்வியெழுப்பினால், ``சில தனியார் நிறுவனங்கள் 515 ரூபாய்க்கு ஆவின் நெய்யை வாங்கி, ரீபேக் செய்து, கெமிக்கல் மிக்ஸ் செய்து, அவர்களுடைய லேபிளை ஒட்டி மார்க்கெட் செய்கிறார்கள். இதன் மூலம், 50 முதல் 100 ரூபாய் வரை தனியார் நிறுவனங்கள் சந்தையில் லாபம் பார்க்கின்றன. அவர்கள் நெய்யை மொத்தமாக வாங்கிச் சென்றுவிடுவதால் மக்களுக்கு ஆவின் நெய் கிடைப்பதில்லை. அதனால், 20 ரூபாய் கூட்டவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது’’ என அமைச்சர் நாசர் சொன்ன விளக்கம் பகீர் ரகம். தனியார் நிறுவனங்கள் ஆவின் பொருள்கள் வாங்குவதைக் கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, விலையுயர்த்தி அவர்களை முடக்கும் ‘அடடே ஐடியா’வை அமைச்சர் நாசருக்குக் கொடுத்த அந்தப் பொருளாதார விஞ்ஞானி யார் என்பதுதான் நமக்குத் தெரியவில்லை.

ம.பி-யை பாருங்க... உ.பி-யை பாருங்க... அமைச்சர்கள், ஐடி விங்கின் அடடே முட்டுகள்!

இவை வெறும் சாம்பிள்கள்தான். ‘மகளிருக்கான உரிமைத்தொகை, அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை’ என்ற கேள்விக்கு இணையத்தில் ஆளுங்கட்சியின் ஐடி விங் தோழர்கள் கொடுக்கும் விளக்கமெல்லாம் இவற்றைவிட அதகளமாக இருக்கிறது. என்ன ஒன்று, “எங்கள் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டியாக, முன்மாதிரியாக இருக்கிறது...” எனச் சொல்லிவிட்டு, இப்போது “குஜராத்தைப் பாருங்க, மகாராஷ்டிராவைப் பாருங்க, ம.பி-யை, உ.பி-யைப் பாருங்க” என்றெல்லாம் உடன்பிறப்புகள் விளக்கம் கொடுப்பதுதான் லாஜிக்காக இடிக்கிறது!

இப்ப என்ன வேணும்னாலும் சொல்லலாம். தேர்தல் வருமே... அப்ப என்ன சொல்வீங்க?!