Published:Updated:

குஜராத் தேர்தல் களத்தில் வலுப்பெறும் ஆம் ஆத்மி... பாதிப்பு, பா.ஜ.க-வுக்கா... காங்கிரஸுக்கா?

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

குஜராத் அரசியலைக் கூர்ந்து நோக்கும் சிலர், ``குஜராத்தில் வேகமெடுத்திருக்கும் ஆம் ஆத்மி, பா.ஜ.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது.

குஜராத் தேர்தல் களத்தில் வலுப்பெறும் ஆம் ஆத்மி... பாதிப்பு, பா.ஜ.க-வுக்கா... காங்கிரஸுக்கா?

குஜராத் அரசியலைக் கூர்ந்து நோக்கும் சிலர், ``குஜராத்தில் வேகமெடுத்திருக்கும் ஆம் ஆத்மி, பா.ஜ.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது.

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது குஜராத் மாநிலம். ஆகையால், 182 தொகுதிகள்கொண்ட குஜராத்தில் இப்போதிருந்தே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க ஒருபுறம் வியூகங்களை வகுத்துக்கொண்டிருக்க, மறுபுறம் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸிடமிருந்து தட்டிச்செல்லும் வேலைகளில் இறங்கியிருக்கிறது ஆம் ஆத்மி. குஜராத் தேர்தலுக்காகக் கட்சிகள் எப்படி தயாராகிக்கொண்டிருக்கின்றன... கள நிலவரம் என்ன?

திட்டங்களைப் பிரபலப்படுத்தும் பா.ஜ.க!

குஜராத்தில், தொடர்ந்து 25 ஆண்டுகளாக ஆட்சியிலிருப்பது பா.ஜ.க-தான். எப்போதும் சமூகம் சார்ந்தும், மதத்தை மையமிட்டும் குஜராத் தேர்தலில் செயல்பட்டுவந்த பா.ஜ.க., இந்த முறை வியூகத்தை மாற்றியிருக்கிறது. பா.ஜ.க-வுக்கு எதிராக அரசியல் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உருவாகியிருக்கும் இளம் தலைவர்களும், சில பிராந்தியக் கட்சிகளும்தான் இதற்குக் காரணம். கடந்த மாதம் குஜராத் தலைநகர் அகமதாபாத்துக்கு வந்திருந்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். அவர் வந்திருந்தபோது, அகமதாபாத்திலுள்ள ஏழை மக்கள் வாழும் பகுதிகளை, நீண்ட வெள்ளைத்துணி கொண்டு மறைத்திருந்தனர். இந்தியா முழுவதும் கவனம்பெற்ற இந்த விஷயத்தில், ``ட்ரம்ப் வந்தபோது தீண்டாமைச் சுவர் எழுப்பியவர்கள், இப்போது வெள்ளைத்துணி கொண்டு ஏழைகளை மறைக்கிறார்கள். 25 ஆண்டுகளாக குஜராத்தில் பா.ஜ.க ஆட்சிதான்; அதிலும் 12 வருடங்கள் பிரதமர் மோடிதான் இங்கு முதல்வராக இருந்தார். ஆனால், இன்றுவரை பா.ஜ.க-வால் குஜராத்தில் ஏழ்மையை ஒழிக்க முடியவில்லை’’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ``25 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியிலிருந்தும் குஜராத்தில் ஊழல் ஒழியவில்லை’’ என்று பேசினார்.

குஜராத் தேர்தல் களத்தில் வலுப்பெறும் ஆம் ஆத்மி... பாதிப்பு, பா.ஜ.க-வுக்கா... காங்கிரஸுக்கா?

தொடர்ந்து, குஜராத்தில் பா.ஜ.க அரசு செய்யத் தவறிய விஷயங்கள் எவையெவை என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலைகளை எதிர்க்கட்சிகளும், பா.ஜ.க எதிர்ப்பாளர்களும் செய்துவருகின்றனர். அதனால் இந்த முறை சமூகம் சார்ந்த, மதரீதியிலான அரசியலில் கவனம் செலுத்துவதைக் குறைத்துக்கொண்டு, தாங்கள் கொண்டுவந்த வளர்ச்சித் திட்டங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த முடிவுசெய்திருக்கிறது பா.ஜ.க தரப்பு. இதன்படி திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட மத்திய, மாநில அமைச்சர்கள் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், அடுத்தடுத்த மாதங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை குஜராத்தில் தொடங்கவும் முடிவுசெய்திருக்கிறது பா.ஜ.க அரசு. குறிப்பாக, கடந்த மாதம் குஜராத்தின் கட்ச் பகுதியில் பாரம்பர்ய மருத்துவத்துக்கான சர்வதேச மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

``புதிய திட்டங்களையும், ஏற்கெனவே உள்ள திட்டங்களின் மூலம் கிடைக்கும் பலன்களையும் மக்கள் மத்தியில் கொண்டுசேர்த்து, மக்கள் நலன் சார்ந்தே யோகி அரசு இயங்குவதுபோல ஒரு தோற்றத்தை உண்டாக்கி, உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்தது பா.ஜ.க. அதே பாணியை குஜராத்திலும் பின்பற்றத் திட்டமிட்டிருக்கிறது’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

குஜராத் தேர்தல் களத்தில் வலுப்பெறும் ஆம் ஆத்மி... பாதிப்பு, பா.ஜ.க-வுக்கா... காங்கிரஸுக்கா?

விலகும் தலைவர்கள்... திணறும் காங்கிரஸ்!

2017 சட்டமன்றத் தேர்தலில் 77 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது காங்கிரஸ். மற்ற மாநிலங்களில் முக்கியத் தலைவர்களை இழந்து திணறுவதுபோல, குஜராத்திலும் முக்கியத் தலைவர்கள் சிலர் கட்சியிலிருந்து விலகத் தயாராக இருக்கின்றனர். மூன்று முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்தவரும், பழங்குடி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவருமான அஷ்வின் கோட்வால், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க-வில் இணைந்துவிட்டார். 2015-ல் ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த ஹர்திக் பட்டேல், 2019-ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். 2020-ல் குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டவர், தற்போது தனது ட்விட்டர் பயோ-விலிருந்து `காங்கிரஸ் செயல் தலைவர்’ என்பதை நீக்கியிருக்கிறார். இதனால், ஹர்திக்கும் பா.ஜ.க-வில் இணைவார் என்ற செய்திகள் பரவ ஆரம்பித்திருக்கின்றன. கடந்தகாலங்களில், ராமர் கோயில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட பா.ஜ.க-வின் நகர்வுகளுக்கு வரவேற்பு தெரிவித்திருந்தார் ஹர்திக். சமீபத்தில், `பா.ஜ.க-வில் பல நல்லவர்கள் இருக்கிறார்கள்’ என்றும் பேசியிருப்பதால், அவர் பா.ஜ.க-வில் இணைய வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அதேநேரத்தில், ஹர்திக் தங்கள் பக்கம் வர வேண்டுமென்று வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருக்கிறது ஆம் ஆத்மி. 28 வயது மட்டுமே ஆகும் ஹர்திக், ஆம் ஆத்மியில் இணைந்தால் மாநில அளவில் அவருக்குப் பெரிய பொறுப்பு வழங்கப்படும். தேசிய அரசியலிலும் கவனம் பெறுவார். எனவே, தனது அரசியல் எதிர்காலத்தை மனதில்வைத்து அவர் ஆம் ஆத்மியில் இணைவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அவர் எந்தப் பக்கம் சென்றாலும், காங்கிரஸ் பக்கமிருக்கும் பட்டேல் சமூக வாக்குகள் சரிந்துவிடும். குஜராத் அரசியலில் ஆம் ஆத்மியின் என்ட்ரியும் காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

குஜராத் தேர்தல் களத்தில் வலுப்பெறும் ஆம் ஆத்மி... பாதிப்பு, பா.ஜ.க-வுக்கா... காங்கிரஸுக்கா?

வலுப்பெறும் ஆம் ஆத்மி?

பஞ்சாப்பில் கிடைத்த வெற்றியின் உற்சாகத்தோடு குஜராத்தில் கால்பதித்திருக்கிறது ஆம் ஆத்மி. இந்தியாவின் வைர நகரமான சூரத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் ஓர் இடம்கூட பெறாத நிலையில், 27 வார்டுகளைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி. ``குஜராத் முழுவதும் நாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், தற்போதைய நிலவரப்படி 58 இடங்களில் வெற்றி வாய்ப்பிருக்கிறது’’ என்றிருக்கிறார் ஆம் ஆத்மியின் ராஜ்ய சபா எம்.பி சந்தீப் பதக். கிராமப்புறங்களில் மாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களும், நகர்ப்புறங்களிலுள்ள நடுத்தரவர்க்க மக்களும் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கத் தயாராக இருப்பதாக அக்கட்சியினர் கூறிவருகின்றனர்.

சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ``பா.ஜ.க-வின் ஆணவத்தை முறியடிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள்’’ என்று பேசியிருக்கிறார். பஞ்சாப்பைப்போலவே குஜராத்திலும் `டெல்லி மாடலை’ முன்வைத்து, பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறது அக்கட்சி. காங்கிரஸ் கூட்டணியிலிருந்த பாரதிய பழங்குடிகள் கட்சி, ஆம் ஆத்மியுடன் கைகோத்திருக்கிறது. இதன் மூலம் பழங்குடி மக்களின் வாக்குகள் கணிசமாக ஆம் ஆத்மிக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆம் ஆத்மியின் வளர்ச்சி... யாருக்கு பாதிப்பு?

குஜராத் அரசியலைக் கூர்ந்து நோக்கும் சிலர், ``குஜராத்தில் வேகமெடுத்திருக்கும் ஆம் ஆத்மி, பா.ஜ.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது. ஆனால், நிச்சயம் காங்கிரஸ் வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. எனவே, காங்கிரஸின் எதிர்க்கட்சி அந்தஸ்து இந்தத் தேர்தலில் பறிபோக வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார்கள். மும்முனைப் போட்டி நிலவும் குஜராத்தில், அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து நகர்த்தும் காய்களைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும். தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் இருப்பதால், பொறுத்திருந்து பார்ப்போம்!

*****

குஜராத் தேர்தல் களத்தில் வலுப்பெறும் ஆம் ஆத்மி... பாதிப்பு, பா.ஜ.க-வுக்கா... காங்கிரஸுக்கா?

கைதுசெய்யப்பட்ட ஜிக்னேஷ் மேவானி!

குஜராத்தைச் சேர்ந்த தலித் செயற்பாட்டாளரும், சுயேச்சை எம்.எல்.ஏ-வுமான ஜிக்னேஷ் மேவானியை, பா.ஜ.க-வினர் கொடுத்த புகாரின் பேரில் கைதுசெய்தது அஸ்ஸாம் காவல்துறை. இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்த பின்னர், `அஸ்ஸாமின் பெண் காவலரைத் தாக்கினார்’ என மீண்டும் மேவானி கைதுசெய்யப்பட்டார். மேவானி, காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்துவந்ததால், ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர். மேவானியின் ஆதரவாளர்கள், ``குஜராத்தில் தலித் மக்களைத் தாண்டி மற்ற பிரிவினரிடமும் ஜிக்னேஷ் மேவானியின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. அதனால், தேர்தலுக்கு முன்பாக அவரைச் சிறையிலடைக்க முடிவுசெய்து பொய்வழக்கு போட்டுவருகிறது பா.ஜ.க. அவர் குஜராத்தில் இருக்கக் கூடாது என நினைத்துத்தான் அஸ்ஸாமில் வழக்கு பதிந்திருக்கிறார்கள்’’ என்று குற்றம்சாட்டிவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism