அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

குஜராத்தை குறிவைக்கும் கெஜ்ரிவால்... பா.ஜ.க கோட்டையைத் தகர்ப்பாரா?

அரவிந்த் கெஜ்ரிவால்
பிரீமியம் ஸ்டோரி
News
அரவிந்த் கெஜ்ரிவால்

இலவசங்களை, பிரதமர் மோடி தொடர்ந்து விமர்சித்துவந்தாலும், குஜராத்தில் பா.ஜ.க-வும் இலவசங்கள் அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது

182 தொகுதிகளைக்கொண்ட குஜராத், இந்த ஆண்டு இறுதியில் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. நீண்டகாலமாக பா.ஜ.க-வும் காங்கிரஸும் மோதிக்கொண்டிருந்த களத்தில், புதிதாகப் புகுந்த ஆம் ஆத்மி, தேர்தல் பிரசாரங்களில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க-வின் கோட்டையான குஜராத்தில், கொடியேற்றுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

பா.ஜ.க-வுக்கு கிலி!

பா.ஜ.க-வின் இரு பெரும் தூண்களான பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத். அங்கு சுமார் 25 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வை அசைத்துப் பார்க்க, எப்போதும்போல ஊழல், `டெல்லி மாடல்’ பிரசாரம் உள்ளிட்டவற்றைக் கையிலெடுத்துக்கொண்டு களமிறங்கியிருக்கிறது ஆம் ஆத்மி. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மானும் குஜராத் முழுக்கச் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகின்றனர்.

டெல்லி, பஞ்சாப்பைப்போலவே குஜராத்திலும் `மாதம்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம்; 18 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000; 10 லட்சம் பேருக்கு அரசு வேலை, இலவசக் கல்வி; வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம்தோறும் ரூ.3,000 நிதியுதவி...’ என வாக்குறுதிகளை அள்ளித் தெளித்திருக்கிறது ஆம் ஆத்மி. இந்த வாக்குறுதிகள், பா.ஜ.க அரசுமீது அதிருப்தியிலிருக்கும் மக்களை ஆம் ஆத்மியின் பக்கம் திரும்பியிருக்கிறது.

இலவசங்களை, பிரதமர் மோடி தொடர்ந்து விமர்சித்துவந்தாலும், குஜராத்தில் பா.ஜ.க-வும் இலவசங்கள் அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. `4,000 கிராமங்களுக்கு இலவச வைஃபை; கர்ப்பிணி, பாலூட்டும் பெண்களுக்கு மாதம்தோறும் இலவச பருப்பு, கடலை, எண்ணெய், ஆண்டுக்கு இரண்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்...’ என பா.ஜ.க-வும் தன் பங்குக்கு இலவசங்களை அறிவித்திருக்கிறது. ``ஆம் ஆத்மி போட்டியிலேயே இல்லை என பா.ஜ.க-வினர் சொல்லிவந்தாலும், கெஜ்ரிவாலின் பிரசாரங்கள் பா.ஜ.க-வுக்குச் சற்று கிலியை உண்டாக்கியிருப்பது உண்மைதான்’’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

குஜராத்தை குறிவைக்கும் கெஜ்ரிவால்... பா.ஜ.க கோட்டையைத் தகர்ப்பாரா?

சறுக்கலில் காங்கிரஸ்!

கடந்த தேர்தலில், பா.ஜ.க மீதிருக்கும் அதிருப்தியைப் பயன்படுத்தி ஆட்சியமைத்துவிடலாம் என்றிருந்த காங்கிரஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த முறை பா.ஜ.க ஆட்சி மீதான அதிருப்தி இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. எனவே, எளிதில் வெற்றியடைந்துவிடலாம் என்றிருந்த காங்கிரஸுக்கு, புதுவரவான ஆம் ஆத்மி ஷாக் கொடுத்திருக்கிறது. அதிலும், காங்கிரஸின் வாக்குகளை ஆம் ஆத்மி பெருமளவு பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ``காங்கிரஸுக்கு நீங்கள் செலுத்தும் வாக்குகள், பா.ஜ.க-வின் வெற்றிக்குத்தான் உதவும். எனவே, காங்கிரஸுக்கு அளிக்கும் வாக்குகளை எங்களுக்கு அளியுங்கள்’’ என்று வெளிப்படையாகப் பிரசாரம் செய்துவருகிறார் கெஜ்ரிவால். ஏற்கெனவே, உட்கட்சிப்பூசலால் சறுக்கிக்கொண்டிருக்கும் குஜராத் காங்கிரஸுக்கு, இது மேலும் சறுக்கலை உண்டாக்கியிருக்கிறது.

இதற்கிடையில், ``ஆம் ஆத்மிதான் குஜராத் தேர்தலில் வெற்றிபெறும் என உளவுத்துறை ரகசிய அறிக்கை ஒன்றை மத்திய பா.ஜ.க அரசிடம் கொடுத்திருக்கிறது. எனவே, எங்களை வீழ்த்த பா.ஜ.க-வும், காங்கிரஸும் சேர்ந்து திட்டமிட்டுவருகின்றன’’ என்று ராஜதந்திரத்துடன் பேசிவருகிறார் கெஜ்ரிவால்.

தேர்தல் தேதி அறிவிப்பு சர்ச்சை!

இமாச்சலப் பிரதேசத்துக்கும், குஜராத்துக்கும் ஒன்றாகத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இமாச்சலப் பிரதேசத்துக்கு மட்டுமே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ``தேர்தல் தேதியை அறிவித்துவிட்டால், உடனடியாக மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அதன் பிறகு, மக்களைக் கவரும் நலத் திட்டங்களை பா.ஜ.க-வால் அறிவிக்க முடியாது. எனவே, பா.ஜ.க திட்டங்களை அறிவித்த பிறகே குஜராத்துக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்’’ என எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.

கள நிலவரம் என்ன?

சமீபத்தில், ஏ.பி.பி - சி-வோட்டர் குஜராத்தில் சமூகரீதியாக எடுத்த கருத்துக்கணிப்பில், அங்கு பா.ஜ.க-வே ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தும், ஆம் ஆத்மிக்கு மூன்றாம் இடமும் கிடைக்கும் எனவும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலோ, `நாங்கள் 150 இடங்களில் வெற்றிபெறுவோம்’ எனச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

`உண்மையிலேயே குஜராத் தேர்தல் களம் யாருக்குச் சாதகமாக இருக்கிறது?’ என்பது குறித்து அந்த மாநில அரசியலைக் கூர்ந்துநோக்கும் சிலர், ``குஜராத்தில், ஆம் ஆத்மியின் வருகை மாநில அரசியலையே புரட்டிப்போட்டிருக்கிறது என்பது உண்மைதான். பஞ்சாப்பில் பகத் சிங், அம்பேத்கர் என முழங்கிய கெஜ்ரிவால் குஜராத்தில், கிருஷ்ணர், அயோத்திக்கு இலவசப் பயணம் எனப் பிரசாரம் செய்துவருகிறார். குஜராத் மாடலுக்குத் தலைவலியை ஏற்படுத்தும் அளவுக்கு அவரது டெல்லி மாடல் பிரசாரம் மக்களிடம் எடுபட்டிருக்கிறது. இருந்தும், ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு ஆம் ஆத்மி குஜராத்தில் வளர்ந்துவிட்டதாகத் தெரியவில்லை.

குஜராத்தை குறிவைக்கும் கெஜ்ரிவால்... பா.ஜ.க கோட்டையைத் தகர்ப்பாரா?

`பாரதிய பழங்குடிகள் கட்சி’ தேர்தலுக்கு முன்பே ஆம் ஆத்மியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது, கெஜ்ரிவால் தரப்புக்குச் சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆம் ஆத்மிக்கு முதல்வர் வேட்பாளருக்கான சரியான முகமில்லாததும் பிரச்னையாக அமைந்திருக்கிறது. மேலும், தங்களது கட்சியின் இரு முக்கியத் தலைவர்களின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெறும் தேர்தலில் தோல்வியுற்றால், அது பா.ஜ.க-வுக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் சறுக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, எப்படியாவது குஜராத்தில் ஆட்சியமைத்துவிட வேண்டும் என்று திட்டங்களைத் தீவிரமாகத் தீட்டிவருகிறது பா.ஜ.க. ஆம் ஆத்மியின் வருகையால், காங்கிரஸ் பலவீனமடைந்திருக்கிறது. இதுவே, பா.ஜ.க-வின் வெற்றிக்கு உதவியாக அமையும்’’ என்கின்றனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரசாரங்கள் மேலும் சூடுபிடிக்கும். அந்தச் சமயத்தில், கட்சிகள் நகர்த்தும் காய்கள், காட்சிகளை எப்படி வேண்டுமானாலும் மாற்றக்கூடும்!