Published:Updated:

ஹிஜாப் அரசியல்... ஆதாயம் யாருக்கு?

ஹிஜாப் அரசியல்
பிரீமியம் ஸ்டோரி
ஹிஜாப் அரசியல்

‘ஹிஜாப் அணிவது அரசியலமைப்பு சட்டத்தின் 14 மற்றும் 25வது பிரிவுகள் எங்களுக்குத் தந்துள்ள அடிப்படை உரிமை’ என்று மாணவிகள் வழக்கு போட்டுள்ளனர்.

ஹிஜாப் அரசியல்... ஆதாயம் யாருக்கு?

‘ஹிஜாப் அணிவது அரசியலமைப்பு சட்டத்தின் 14 மற்றும் 25வது பிரிவுகள் எங்களுக்குத் தந்துள்ள அடிப்படை உரிமை’ என்று மாணவிகள் வழக்கு போட்டுள்ளனர்.

Published:Updated:
ஹிஜாப் அரசியல்
பிரீமியம் ஸ்டோரி
ஹிஜாப் அரசியல்

கல்லூரிகள் மூடிக்கிடக்கின்றன. பள்ளி வளாகங்களைச் சுற்றி 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. ரவுடிகளை கிரேடு பிரிப்பதைப் போல பள்ளிகளை ஏ, பி, சி என்று கிரேடு பிரித்திருக்கிறார்கள். பிரச்னைக்குரிய ஏ கிரேடு பள்ளிகளில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். தாசில்தார்கள் மற்ற எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, கல்வி நிறுவனங்களில் அமைதியை நிலைநாட்டப் புறப்பட்டிருக்கிறார்கள். இதுதான் கர்நாடகாவின் இன்றைய நிலவரம்.

கொரோனா வைரஸால் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கல்வி தடைப்பட்டிருந்த நிலையில், அதைவிட மோசமான மதவெறுப்பு வைரஸ் கர்நாடகக் கல்வி நிறுவனங்களை ஆட்டிப் படைக்கிறது. வகுப்பறைக்குள் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவது இவ்வளவு காலம் ஒரு சர்ச்சையாக இருந்ததில்லை. சர்ச்சையின் ஆரம்பப் புள்ளியான உடுப்பி அரசு பி.யூ கல்லூரியிலும்கூட அது பிரச்னையாக இருந்ததில்லை. டிசம்பர் மாதம் திடீரென அது பிரச்னையாக வெடித்தது.

கல்லூரி முதல்வர் ருத்ர கவுடா ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித்ததுடன் ‘வகுப்பறைக்குள் யூனிஃபார்ம் மட்டுமே அணிய வேண்டும். அத்துடன் ஹிஜாப் அணிய அனுமதிக்க முடியாது’ என்று எட்டு மாணவிகளை டிசம்பர் 27-ம் தேதி கல்லூரியின் வாசலிலேயே தடுத்து நிறுத்தினார். அவர்கள் அங்கேயே போராட்டம் நடத்தியதுடன் உடுப்பி துணை ஆணையர் குர்மா ராவிடம் புகார் செய்தனர். அதன்பின் அவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும், வகுப்பறையில் ஹிஜாப்புக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

கர்நாடகாவில் சில கல்லூரிகளில் யூனிஃபார்ம் கட்டாயம் என்ற நடைமுறை இருக்கிறது; பல கல்லூரிகளுக்கும் இப்படி இல்லை. ஒவ்வொரு கல்லூரியிலும் கல்லூரி வளர்ச்சிக் கண்காணிப்பு கவுன்சில் என்ற அமைப்பு இருக்கிறது. கல்லூரிச் செயல்பாடுகள் தொடர்பாக முடிவெடுப்பது இந்த அமைப்புதான். இந்த அமைப்பில் எம்.எல்.ஏ-க்கள், ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் இருப்பார்கள். ‘மாணவ, மாணவிகளின் உடை விஷயத்தில் கல்லூரி கவுன்சில் எடுக்கும் முடிவை எல்லோரும் பின்பற்ற வேண்டும்’ என்று அரசு உத்தரவிட்டது.

ஹிஜாப் அரசியல்... ஆதாயம் யாருக்கு?

இந்நிலையில் இந்தப் பிரச்னை அக்கம்பக்கக் கல்லூரிகளுக்கும் பரவியது. ‘அவர்கள் ஹிஜாப் அணிந்தால், நாங்கள் காவித்துண்டு அணிவோம்’ என்று இந்துத்துவ ஆதரவு மாணவ, மாணவிகள் தங்கள் சீருடைக்கு மேல் காவித் துண்டு அணிந்துகொண்டு கல்லூரிகளுக்கு வந்தனர். ஒரு கல்லூரியில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக இருக்கும் கொடிக்கம்பத்தில் காவிக்கொடி ஏற்றினர். மாண்டியாவில் முஸ்கான் கான் என்ற மாணவி கல்லூரிக்குள் நுழைந்தபோது காவித் துண்டுடன் பல மாணவர்கள் அவரை கேரோ செய்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட, அவர் ‘அல்லாஹு அக்பர்’ என்று பதிலுக்கு முழக்க மிட்டார். இது இந்தியா முழுக்க வைரலானது.

இந்தத் திடீர் எதிர்ப் போராட்டங்களின் பின்னணியில் பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்து அமைப்பினர், ‘முதல்வரும், உள்துறை அமைச்சரும் நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நீங்கள் பயப்பட வேண்டாம்’ என்று சொல்லி மாணவர்களுக்குக் காவித்துண்டுகளை அணிவிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகின. விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், ஹிந்து ஜாகரன வேதிகே போன்ற அமைப்புகள் இதன் பின்னணியில் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஐந்து கல்லூரிகளில் இப்படிப் பிரச்னையும் மோதல்களும் நிகழவே, கர்நாடக அரசு எல்லாக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்தது.

‘ஹிஜாப் அணிவது அரசியலமைப்பு சட்டத்தின் 14 மற்றும் 25வது பிரிவுகள் எங்களுக்குத் தந்துள்ள அடிப்படை உரிமை’ என்று மாணவிகள் வழக்கு போட்டுள்ளனர். இப்படி ஐந்து வழக்குகளை மொத்தமாக கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது.

திடீரென ஹிஜாப் விவகாரம் ஏன் இப்படி விஸ்வரூபம் எடுத்தது? அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே தயாராவதுதான் காரணம் என்கிறார்கள் பலரும். கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்களில் தேர்தல் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பது சாதிதான். பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளுமே அங்கு சாதி அடிப்படையில்தான் வேட்பாளர்களை நிறுத்தும். ஆனால், கடலோர கர்நாடகாவின் உத்தர கன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மதமே வெற்றியைத் தீர்மானிக்கிறது. இங்கெல்லாம் பா.ஜ.க வலுவாக இருக்கிறது. அதன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி கல்வி வளாகங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு இந்தப் பகுதியில்தான் அதிக எம்.எல்.ஏ-க்கள் கிடைத்தார்கள்.

இங்கு காங்கிரஸ் மட்டுமே எதிர்க்கட்சி என்றிருந்த நிலை இப்போது மாறியிருக்கிறது. இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா இங்கு வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் கணிசமான வெற்றிகளை இங்கு பெற்றிருக்கிறது. இதன் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (சி.எஃப்.ஐ) இங்குள்ள பல கல்லூரிகளிலும் காலூன்றி வருகிறது.

2021 அக்டோபரில் உடுப்பி அரசு பி.யூ கல்லூரியில் ஏ.பி.வி.பி அமைப்பு ஒரு போராட்டத்தை நடத்தியது. அதில் இஸ்லாமிய மாணவ, மாணவிகள் சிலரும் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து அந்த மாணவர்களை சி.எஃப்.ஐ நிர்வாகிகள் சந்தித்தனர். அதன்பின் சி.எஃப்.ஐ பேனருடன் அவர்கள் நிற்கும் புகைப்படத்தை அந்த அமைப்பு வெளியிட்டது. ‘போராட்டம் நடத்தியது ஏ.பி.வி.பி அமைப்பு என்பது தெரியாமல் இவர்கள் அதில் பங்கேற்றனர். எங்கள் நிர்வாகிகள் அவர்களிடம் விஷயத்தைச் சொன்னதும், தாங்களாகவே முன்வந்து சி.எஃப்.ஐ அமைப்பில் இவர்கள் இணைந்தனர்’ என்று சி.எஃப்.ஐ செய்திக்குறிப்பு வெளியிட்டது. அந்த மாணவிகளில் சிலர்தான் இப்போது ஹிஜாப் போராட்டத்திலும் பங்கேற்றனர்.

இதே உடுப்பி அரசு பி.யூ கல்லூரி பற்றி இன்னொரு செய்தியும் உண்டு. இந்தக் கல்லூரி வளர்ச்சிக் கண்காணிப்பு கவுன்சிலின் சார்பில் முடிவுகளை எடுப்பவர், பா.ஜ.க-வின் உடுப்பி எம்.எல்.ஏ ரகுபதி பட். கல்லூரி சார்பில் செய்தியாளர்களிடம் பேசுவதும் அவர்தான். ரகுபதி ஊழல் விவகாரம் ஒன்றில் சிக்கியதால் அவருக்கு 2013 தேர்தலில் சீட் கிடைக்கவில்லை. 2018 தேர்தலிலும் வேறு நல்ல வேட்பாளர்கள் கிடைக்கிறார்களா என்று பா.ஜ.க தலைமை தேடியது. வேறு யாரும் கிடைக்காததால், தாமதமாகவே வேட்பாளராக ரகுபதி அறிவிக்கப்பட்டார். ‘‘இப்போது இந்த ஹிஜாப் விவகாரத்தைப் பெரிதாக்கியது ரகுபதிதான். இதன்மூலம் அடுத்த தேர்தலில் அவரைத் தாண்டி வேறு யாரையும் உடுப்பி தொகுதிக்கு யோசிக்க முடியாத நிலையை உருவாக்கிவிட்டார். கடலோர கர்நாடக பா.ஜ.க-வில் தன்னை அசைக்கமுடியாத தலைவராக நிலைநிறுத்திக்கொள்ளவும் முயல்கிறார். தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக மாணவர்கள் பகடைக்காய் ஆக்கப்படுகிறார்கள்’’ என்று பா.ஜ.க-வினரே ஆதங்கத்துடன் சொல்கிறார்கள்.

‘‘தேர்வு நேரத்தில் இஸ்லாமிய மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. ஹிஜாப் அணிவதோ, காவித்துண்டு அணிவதோ அரசியல் சட்டம் அனுமதித்த உரிமை. ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காக யாரும் இதையெல்லாம் தூண்டிவிடக்கூடாது. அதையே நாங்கள் எதிர்க்கிறோம்’’ என்கிறார், கர்நாடக கேம்பஸ் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா செயலாளர் சர்ஃப்ராஸ் கங்காவதி.

‘‘எல்லா மாணவ, மாணவிகளும் உடைவிதியைப் பின்பற்ற வேண்டும். இதுவே எங்கள் நிலைப்பாடு. ஹிஜாப்புக்கு எதிராகப் போராடுவோரில் ஏ.பி.வி.பி உறுப்பினர்கள் இருக்கலாம். ஆனால், போராட்டத்தை நாங்கள் முன்னின்று நடத்தவில்லை’’ என்கிறார் கர்நாடக ஏ.பி.வி.பி செயலாளர் ப்ரதீக் மாலி.

கர்நாடகக் கல்வி அமைச்சர் நாகேஷ், இதே குரலை எதிரொலித்தார். ‘‘நூற்றுக்கணக்கான மாணவிகள் படிக்கும் கல்லூரியில் எட்டுப் பெண்கள் ஹிஜாப் அணிந்து, விதிமுறைகளை மீற நினைக்கிறார்கள். அதற்கு எதிர் வினையாக மாணவர்கள் காவித்துண்டு அணிந்து செல்வதை எப்படித் தடுக்க முடியும்?’’ என்ற அவர், ஹிஜாப் அணிந்து யாரும் வகுப்பறைக்குள் செல்லமுடியாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ண தீட்சித், நீதிபதி ஹாஸி ஜைபுன்னிசா மொஹியுதின் ஆகிய மூன்று நீதிபதி அடங்கிய அமர்வு இந்த விவகாரம் தொடர்பான ஐந்து வழக்குகளை மொத்தமாக விசாரிக்கிறது.

ஹிஜாப் தொடர்பான வழக்குகளில் ஏற்கெனவே மாறுபட்ட தீர்ப்புகள் பல வெளிவந்துள்ளன. வாக்காளர் அடையாள அட்டைக்குப் புகைப்படம் எடுக்கும்போது ஹிஜாப் அணிந்துகொள்ளும் உரிமையைச் சில பெண்கள் கோரினர். இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப் இல்லாமல்தான் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று 2006-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அகில இந்திய ப்ரீ மெடிக்கல் தேர்வை ஹிஜாப் அணிந்துகொண்டு எழுதுவதற்கு இரண்டு இஸ்லாமிய மாணவிகள் அனுமதி கோரியபோது, கேரள நீதிமன்றம் அதை 2016-ம் ஆண்டு அனுமதித்தது. இன்னொரு வழக்கில், பள்ளி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்து செல்லும் உரிமையைக் கோரியபோது அதே கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இந்தத் தீர்ப்புகளை கர்நாடக உயர் நீதிமன்றம் பரிசீலிக்கும்.

கர்நாடக பா.ஜ.க-வின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் சுரேஷ்குமார். இவர் முன்னாள் கல்வி அமைச்சரும்கூட! ‘‘ஹிஜாப் என்பது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக எப்போதும் இருந்ததில்லை. அரசியல்வாதிகள் கட்சி வித்தியாசங்களைக் கடந்து இதுபோன்ற விஷயங்களில் நடந்துகொள்ள வேண்டும். மாணவர்களுக்கு சரியான வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு தலைமுறையையே தவறாக வழிநடத்திய பாவத்துக்கு ஆளாகிவிடுவோம்’’ என்று எச்சரிக்கிறார்.

இந்த அக்கறைக் குரல் எல்லோரது காதுகளிலும் விழ வேண்டும்.