Published:Updated:

30 ஆண்டுகளில் முன்னேறியிருக்கிறோமா?

30 ஆண்டுகளில் முன்னேறியிருக்கிறோமா?
பிரீமியம் ஸ்டோரி
30 ஆண்டுகளில் முன்னேறியிருக்கிறோமா?

இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த ஒரு நேரத்தில், தாராளமயமாக்கல் முடிவு எடுக்கப்பட்டது.

30 ஆண்டுகளில் முன்னேறியிருக்கிறோமா?

இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த ஒரு நேரத்தில், தாராளமயமாக்கல் முடிவு எடுக்கப்பட்டது.

Published:Updated:
30 ஆண்டுகளில் முன்னேறியிருக்கிறோமா?
பிரீமியம் ஸ்டோரி
30 ஆண்டுகளில் முன்னேறியிருக்கிறோமா?

நரேந்திர மோடி பிரதமரான பிறகு ‘புதிய இந்தியா’ அடிக்கடி பிறந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன்பாக புதிய இந்தியா பிறந்த ஆண்டு என 1991-ம் ஆண்டைச் சொல்வார்கள். அந்த ஆண்டில்தான் 30 ஆண்டுகள் இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்தது.

சுதந்திரத்துக்குப் பிறகு, நேரு தலைமையில் அமைந்த இந்திய அரசாங்கம், சோஷலிச மாடலான ‘திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற பாதுகாப்பு அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. இறக்குமதி, அந்நிய முதலீடுகள், வர்த்தகம், தொழில் தொடங்குதல், உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றுக்கு லைசென்ஸ், பர்மிட் போன்ற கடுமையான ஒழுங்குமுறைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தன. ‘ஆசியப் புலிகள்’ என்றழைக்கப்படும் தென்கொரியா, தைவான், சிங்கப்பூர், ஹாங்காங் போன்றவை தாராள அணுகுமுறையைப் பின்பற்றி மிகப்பெரிய தொழில் வளர்ச்சியை எட்டியிருந்தன. சீனாவும் இதில் விரைவில் இணைந்தது. ஆனால், இந்தியப் பொருளாதாரம் தேங்கியிருந்தது. இதனால் மிகக்கடுமையான நெருக்கடியை இந்தியா எதிர்கொள்ளத் தொடங்கியது.

இந்தியாவின் நிதியமைச்சராக ஒரு பொருளாதார நிபுணர் பதவியேற்றது அந்த ஆண்டில்தான். பிரதமராக நரசிம்ம ராவ், நிதியமைச்சராக மன்மோகன் சிங், 1991 ஜூலை 24-ம் தேதி பட்ஜெட்டை சமர்ப்பித்தார். 31 பக்கங்கள் கொண்ட அந்த பட்ஜெட், இந்தியாவின் தலையெழுத்தையே தலைகீழாக மாற்றியது. பொருளாதார தாராளமயமாக்கலுக்கு இந்தியாவின் கதவைத் திறந்துவிட்ட பட்ஜெட் அது.

அந்த நேரத்தில் இந்தியா கடும் நெருக்கடியில் இருந்தது. கச்சா எண்ணெய் மற்றும் உரங்களை இறக்குமதி செய்யாவிட்டால் இந்தியா ஸ்தம்பித்துவிடும் நிலை. மத்திய அரசிடம் பணம் இல்லை. 91 ஜூலையில் மத்திய ரிசர்வ் வங்கி சுமார் 47 டன் தங்கத்தை பாங்க் ஆப் இங்கிலாந்து மற்றும் பாங்க் ஆப் ஜப்பான் ஆகிய வெளிநாட்டு வங்கிகளில் அடகு வைத்து 400 மில்லியன் டாலர் கடன் வாங்கியது. அந்தத் தங்கத்தை விமானத்தில் ஏற்றி அனுப்புவதற்காக எடுத்துச் சென்ற லாரி ஒன்று, வழியில் ரிப்பேராகி நின்றது. கிட்டத்தட்ட இந்தியப் பொருளாதாரத்தை ஒரு குறியீடாக உணர்த்துவது போன்ற சம்பவம். அதனால் இந்த விவகாரம் பத்திரிகைகளுக்குக் கசிந்தது. ‘வெளிநாட்டு வங்கிகளில் தங்கத்தை அடகுவைத்து தேசம் கடன் வாங்குவதா’ என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன. ‘எங்களுக்கும் இது வலி தருகிறது. ஆனால், இப்போது இதைவிட்டால் வேறு வழியில்லை’ என்று விளக்கம் சொன்னார், நிதியமைச்சர் மன்மோகன் சிங்.

நெருக்கடிகளே நம்மைப் பாதை மாற்றுகின்றன. புதிய முடிவுகளை எடுக்க வைக்கின்றன. இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த ஒரு நேரத்தில், தாராளமயமாக்கல் முடிவு எடுக்கப்பட்டது. அது பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, லைசென்ஸ் ராஜ்ஜியத்தை ஒழித்து, இந்தியப் பொருளாதாரத்துக்குப் புதுப்பாய்ச்சல் கொடுத்தது.

இதோ 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன் பலன்கள் யாருக்குக் கிடைத்திருக்கின்றன?

2கே கிட்ஸ் எல்லோருக்கும் 1991-ம் ஆண்டுக்கு முந்தைய இந்திய வாழ்க்கை ஆச்சர்யம் தரலாம். இன்று ஆதார் கார்டுடன் போனால், சில நிமிடங்களில் போன் கனெக்‌ஷன் வாங்கிவிட முடியும். ஆனால், அப்போது காஸ் சிலிண்டர், போன் வேண்டுமென்றால் பதிவு செய்துவிட்டு வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஐந்தாறு ஆண்டுகள் ஆகலாம். நான்கைந்து டூவீலர் நிறுவனங்கள்தான், அம்பாசடர், பியட், மாருதி என கார்களும் அப்படியே! பணம் கட்டிப் பதிவுசெய்து மாதக்கணக்கில் காத்திருந்தால்தான் கைக்கு வரும். கம்ப்யூட்டரை ஏதோ அபாயகரமான ஆயுதம்போல அரசு கருதியது. வீட்டுக்குக் கம்ப்யூட்டர் வாங்குவதென்றால், அரசு அனுமதி பெற வேண்டும்.

உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கலை அடிப்படையாகக் கொண்ட புதிய பொருளாதாரக்கொள்கையோ வாழ்வின் எல்லா அம்சங்களிலும் ஏராளமான வெரைட்டியைக் கொண்டுவந்தது. டிஜிட்டல் தொழில்நுட்பம் அதை இன்னும் எளிமையாகவும் பரவலாகவும் மாற்றியது.

30 ஆண்டுகளில் முன்னேறியிருக்கிறோமா?

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நம் சமூக வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் மிக முக்கியமானவை. நகர்ப்புற நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் சம்பளம் கணிசமாக உயர்ந்தது. உணவுமுறை, கல்வி வாய்ப்புகள், பயணங்கள், சுகாதார சேவைகள், தகவல் தொடர்புகள் என எல்லாமே முன்னேற்றம் கண்டன. ஆனால் கிராமங்களை இந்த வளர்ச்சி அப்படி முழுமையாக எட்டவில்லை. கூரைக் கொட்டகையாக இருந்த அரசுப் பள்ளி அறைகள் கட்டடங்களாக மாறினாலும், கல்வித்தரம் பெரிதாக மாறிவிடவில்லை. இதனால் நகரங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வது அதிகமானது. லாபம் தராத விவசாயத்திலிருந்து பெருமளவு மக்கள் வெளியேறிச் செல்வதற்கு இதுவும் ஒரு காரணமாக மாறியது. விவசாயத்திலிருந்து வெளியேறிய எல்லோருக்கும் வாய்ப்பு தரும் அளவுக்கு மற்ற துறைகளில் வேலைகள் உருவாகவில்லை.

‘‘உலகமயமாக்கலால் இந்தியாவில் உழைக்கும் வர்க்கம் மத்திய தர வர்க்கமாக மாறியிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 30 கோடிப் பேர் இப்படி மாறியிருக்கிறார்கள். ஒரு பண்டம் எப்படி உற்பத்தியாகிறது என்பதைவிட, அது எப்படி நுகரப்படுகிறது என்பதே பொருளாதாரமாக மாறியது. நுகர்வுக் கலாசாரம், வாழ்க்கைமுறை என்பவை இந்திய வாழ்க்கையில் நுழைந்தது உலகமயமாக்கலால்தான். உலகமயமாக்கலின் விளைவால் இந்த 30 ஆண்டுகளில் கடுமையான சமத்துவமின்மை உருவாகியிருக்கிறது; ஒரு வீட்டிலிருக்கும் இரு சகோதரர்களுக்கிடையேகூட சமத்துவ மின்மையை அது உருவாக்கிவிட்டது’’ என்கிறார், எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான பாலசுப்ரமண்யன் பொன்ராஜ்.

“இந்தியாவின் கடன், அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஆகியவற்றைக் காரணம் காட்டி சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்மூலம், தனியார் நிறுவனங்களை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக வர்த்தகம் செய்ய அனுமதிப்பது; கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு போன்ற அரசின் கீழ் இயங்கிவந்த துறைகளை லாப அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது; இதன் மூலமாக நிறைய அந்நிய முதலீடுகளை ஈர்த்து உற்பத்தியை அதிகமாக்கி, வேலைவாய்ப்புகளைப் பெருக்கி, வறுமையை ஒழிப்பது இந்திய அரசின் கனவாக இருந்தது. ஆனால், எதிர்பார்த்த வகையில் முழுமையான மீட்சி கிடைக்கவில்லை. 2004-ல் இடதுசாரிகளின் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, இடதுசாரிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் போன்ற மக்களுக்குச் சாதகமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது” என்கிறார், பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா.

‘‘அரசின் கட்டுப்பாடு இல்லாமல் பொருளாதாரம் தன்னிச்சையாக இயங்க அனுமதிப்பதையே தாராளமயம் என்கிறார்கள். கல்வி, மருத்துவம் முதலான அடிப்படைச் சேவைகள் உட்பட அனைத்தும் வணிக மயமாக்கப்படுவது உலகமயத்தின் விளைவுதான். ‘காட்’ ஒப்பந்தம் உலக அளவில் யாரும் உள்நாட்டுக் கட்டுப்பாடுகள் இன்றிச் சுதந்திரமாக வணிகம் செய்ய வழிவகுத்தது. அதன்பின் கல்வி, மருத்துவம் முதலான சேவைத் துறைகளுக்கும் ஒரு ‘காட்’ ஒப்பந்தம் திணிக்கப்பட்ட போது வாஜ்பாய் அரசு அதற்கு முதற்கட்ட ஒப்புதலை அளித்தது. அதற்கடுத்ததாக இப்போது புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இடஒதுக்கீடு பற்றிப் பேச்சே இல்லை. ‘நீட்’ முதலானவை எல்லாம் இந்தப் பின்னணியில் உருவானவைதான்” என்று உலகமயமாக்கலின் விளைவுகளை விளக்குகிறார் அ.மார்க்ஸ்.

பொன்ராஜ், ஆத்ரேயா, அ.மார்க்ஸ்
பொன்ராஜ், ஆத்ரேயா, அ.மார்க்ஸ்

சமநிலையற்ற வளர்ச்சி, ஒரு கட்டத்தில் தேங்கிப்போகும். இங்கும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. மக்களிடையே நுகர்வு குறைந்ததை 2017-18 Consumption Expenditure Survey (CES) வெளிப்படுத்தியது. அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் செய்த ஆய்வு ஒன்று, அடித்தட்டு மக்களின் வருமானம் குறைந்திருப்பதை உணர்த்தியது. குழந்தைகளிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்திருப்பதை National Family and Healthy Survey வெளிச்சமிட்டுக் காட்டியது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி என்ற பெயரில் உள்ளூர் வளங்களைச் சுரண்டும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் அதிகரித்ததும் உலகமயமாக்கலுக்குப் பிறகுதான். இவையெல்லாமே அபாய அறிகுறிகள். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, வரிமுறை மாற்றங்கள் காரணமாகத் தடுமாறிக்கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரம், கொரோனாவுக்குப் பிறகு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. வேலையிழப்பும் வருமானம் பறிபோனதும் பல குடும்பங்களின் துயரக்கதைகள் ஆகியுள்ளன.

ஆனால், கொரோனாவுக்குப் பிறகான ‘புத்தியல்புச் சூழல்’ என, தொழில் நிறுவனங்கள் வேறொன்றை வரையறுக்க நினைக்கின்றன. அதிகரிக்கப்பட்ட வேலை நேரம், உரிமைகள் பறிப்பு என நிகழ்கின்றன. அதிக உழைப்பு, குறைந்த வருமானம் என்பதாகச் சூழல் மாறியிருக்கிறது.

இந்தியாவில் தாராளமயமாக்கலின் 30-ம் ஆண்டில், பொருளாதாரக் கொள்கைகள் குறித்த மறுபரிசீலனைக்கான விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இப்போதைய பிரச்னை, 1991-ம் ஆண்டில் இருந்தது போன்றதல்ல. நம் நிலையைச் சரியாகப் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதே இன்றைய தேவையாக இருக்கிறது. பொருளாதார சமத்துவமின்மையின் அடிப்படைப் பிரச்னைகள், சமூக முன்னேற்றம் சார்ந்த தடைகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறனற்ற பொருளாதாரம் ஆகியவற்றைக் களைந்து வளர்ச்சி தொடரவேண்டுமென்றால், மிகச்சிறந்த திட்டமிடல் அவசியம்!

*****

30 ஆண்டுகளில் முன்னேறியிருக்கிறோமா?

சமநிலையற்ற வளர்ச்சியே நிகழ்ந்தது!

‘தாராளமயமாக்கல் காரணமாக வளமும் வளர்ச்சியும் இந்தியாவுக்குக் கிடைத்தது’ என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள் பலர். ஆனால், ‘இது எல்லோருக்கும் கிடைத்ததா’ என்றால், ‘இல்லை’ என்பதுதான் பதில். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆனார்கள். எதிர்பார்த்த அளவுக்கு ஏழ்மை ஒழியவில்லை. கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைச் சேவைத் துறைகளில் தனியாருக்குக் கதவுகள் திறக்கப்பட்டதால் சேவையின் தரம் உயர்ந்தது. ஆனால், எளிய மக்களுக்கு இதனால் செலவுகள் அதிகரித்தன. இது இந்தியாவில் மட்டும் என்றில்லை, பொருளாதார மாற்றங்களை அமல்படுத்திய வளமான நாடுகளிலும்கூட ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஏற்படுத்திய பேரழிவு இதை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான பாகுபாடு அதிகரித்துக்கொண்டே போவதை ஆக்ஸ்ஃபாம் அமைப்பு வெளியிடும் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. ‘The Inequality Virus’ என்று பெயரிடப்பட்ட 2021-ம் ஆண்டுக்கான ஆக்ஸ்ஃபாம் அறிக்கை பல கசப்பான உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ‘கொரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியில் ஏழைகள் தவித்த 2020-ம் ஆண்டில் இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 35 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது’ என்கிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை.

‘‘இந்தியாவின் அடித்தட்டில் இருக்கும் 10 சதவிகித ஏழைகளுக்கு இன்னமும் கண்ணியமான வாழ்வை நம்மால் தர முடியவில்லை. இவர்களுக்கு இலவசங்கள் கொடுப்பதும், மானியங்கள் அளிப்பதும் மட்டுமே தீர்வு இல்லை. 100 நாள் வேலைத்திட்டம் போன்ற வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்கள் எல்லாமே தற்காலிக ஏற்பாடுகள்தான். ஒரு குடும்பம் 200 ரூபாய் தினசரி வருமானத்தில் வாழ்ந்துவிட முடியாத சூழலில்தான் விலைவாசி இருக்கிறது. நிரந்தர வருமானம் அளிக்கும் திட்டங்களே அவர்களை உயர்த்தும்’’ என்கிறார், ‘கேர்’ ரேட்டிங் அமைப்பின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் மதன் சப்னாவிஸ்.