Published:Updated:

இந்தியப் பொருளாதாரம் வீழ்கிறதா?

இந்தியப் பொருளாதாரம் வீழ்கிறதா?
பிரீமியம் ஸ்டோரி
இந்தியப் பொருளாதாரம் வீழ்கிறதா?

முத்தலாக் சட்டம், என்.ஐ.ஏ, காஷ்மீர் பிரிப்பு என அடுத்தடுத்த மசோதாக்களால் தேசத்தையே அதிர வைத்துக்கொண்டிருக்கிறது மோடி–அமித்ஷா ஜோடி.

இந்தியப் பொருளாதாரம் வீழ்கிறதா?

முத்தலாக் சட்டம், என்.ஐ.ஏ, காஷ்மீர் பிரிப்பு என அடுத்தடுத்த மசோதாக்களால் தேசத்தையே அதிர வைத்துக்கொண்டிருக்கிறது மோடி–அமித்ஷா ஜோடி.

Published:Updated:
இந்தியப் பொருளாதாரம் வீழ்கிறதா?
பிரீமியம் ஸ்டோரி
இந்தியப் பொருளாதாரம் வீழ்கிறதா?

நாட்டை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறார்கள் என்று ஒரு பக்கம் கொண்டாடுகிறார்கள். முப்பது ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்துக்கொண்டிருக்கிறது, அதை மறைக்கவே இந்த அவசர மசோதாக்கள் என்று இன்னொரு புறத்தில் கொந்தளிக்கிறார்கள். உண்மை நிலை என்ன...?

உலக அளவில் அதிக மதிப்பு கொண்ட பொருளாதார நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் விற்பனை சரிந்துவருகிறது; பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துவருகிறார்கள்; முதலீடுகள் வெகுவாகக் குறைந்துள்ளன; லாபம் சரிந்துள்ளது என்பதுதான் இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய யதார்த்தம் என்று புள்ளிவிவரம் தருகிறார்கள் தொழில் அமைப்பினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்டீல், சிமென்ட் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் வளர்ச்சி விகிதம் 2018 ஜூனில் 7.8 சதவிகிதமாக இருந்தது. அது, 2019 ஜூனில் 0.2 சதவிகிதமாகச் சரிந்துள்ளது. இது கடந்த ஐம்பது மாதங்களில் இல்லாத சரிவு. பயணிகள் போக்குவரத்து வாகனங்களின் உற்பத்தி 25%, டிராக்டர் போன்ற வாகனங்களின் உற்பத்தி 13%, இருசக்கர வாகனங்களின் உற்பத்தி 11% எனச் சரிவடைந்துள்ளன. உள்நாட்டு விமானப்போக்குவரத்தில் 2.8% குறைந்துள்ளது. இந்தச் சரிவு காரணமாக, கடந்த ஒருசில மாதங்களில் மட்டும் பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

இதற்குமுன் இல்லாத அளவுக்கு இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்கள் பலரும் வெளிப்படையாக, தாமே முன்வந்து நாட்டின் பொருளாதார நிலைமை குறித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்...

இந்தியப் பொருளாதாரம் வீழ்கிறதா?

“உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு மார்க்கெட் இல்லை, பொருள்களை விற்க முடியவில்லை, பொருள்களுக்கான தேவை (டிமாண்டு) இல்லை. தனியார் முதலீடு இல்லை” என்று தொழிலதிபர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான ‘எல் அண்டு டி’ நிறுவனத்தின் தலைவர் ஏ.எம். நாயக், “இது ஒரு சவால்மிகுந்த காலம்” என்று குறிப்பிடுகிறார். “பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது” என்று கூறியுள்ள எச்.டி.எஃப்.சி வங்கியின் தலைவரான தீபக் பரேக், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணப்புழக்கம் கடினமாக ஆகியிருக்கும் சூழல் பற்றி கவலை தெரிவித்திருக்கிறார்.

இந்தியப் பொருளாதாரம் வீழ்கிறதா?

வளர்ச்சியில் தொய்வு!

இந்தப் பிரச்னை குறித்து, பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனிடம் பேசினோம்...

“கடந்த ஐந்தாண்டுகளில், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடும் முறையை மத்திய ஆட்சியாளர்கள் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றிவிட்டனர். எனவே, இது குறித்துத் திட்டவட்டமாக எதையும் சொல்ல முடியவில்லை. ஆனாலும், நாட்டின் பொருளா தார வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இந்தியா வில் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதியின் விற்பனை கிட்டத்தட்ட 40% சரிந்துள்ளது. சோப்பு, ஷேம்பு, பற்பசை போன்ற அன்றாடம் உபயோகிக்கிற பொருள்களின் (FMCG) விற்பனை குறைந்துள்ளது. இவற்றைத் தயாரிக்கக்கூடிய இந்துஸ்தான் லீவர், இந்தியாவிலேயே மிகப்பெரிய நிறுவனம். இந்த நிறுவனமே, ‘எங்களால் பொருள்களை விற்க முடியவில்லை’ என்று வருத்தப்படுகிறது” என்கிறார் ஜெயரஞ்சன்.

நெருக்கடியில் சிறு குறு தொழில்கள்!

“சிறு குறு தொழில்களின் நிலை எப்படி இருக்கிறது?” என்ற கேள்வியை ஜெயரஞ்சனிடம் முன்வைத்தபோது, “இந்தப் பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்படுவது சிறு குறு தொழில் நிறுவனங்கள்தான். 12%, 14% என இருந்த சிறு குறு தொழில்களின் வளர்ச்சி, தற்போது 6%, 7% என்கிற அளவுக்குக் குறைந்து விட்டது. இந்தப் பிரச்னையால் ஒப்பந்தத் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஒரு நிறுவனத்தில் உற்பத்தி குறைகிறதென்றால், அங்கு பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைத்தான் உடனடியாக வீட்டுக்கு அனுப்புவார்கள்” என்றார்.

இந்தியப் பொருளாதாரம் வீழ்கிறதா?

“தற்போது நிலவும் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு உரிய தீர்வைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டிய இடத்தில் உள்ள அரசு, இதுபற்றி வாய்திறக்கவே இல்லை. அது மட்டுமல்ல, என்ன நடக்கிறது என்பதையே அரசு சொல்ல மறுக்கிறது. பட்ஜெட்டிலும் இதுபற்றி மூச்சுப்பேச்சே இல்லை. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதுகுறித்துப் பேசப்படவே இல்லை. இது மிகவும் கவலைக்குரிய போக்கு” என்று முடித்தார் ஜெயரஞ்சன்.

அபாயகரமான நிலை இல்லை!

அதே நேரத்தில், நாட்டின் பொருளாதாரம் ஒன்றும் அபாயகரமான நிலையில் இல்லை என்கிற கருத்தை, பொருளாதார வல்லுநர்களில் ஒரு சாரார் முன்வைத்துவருகிறார்கள். இன்னொரு சாரார், இது தற்காலிகப் பிரச்னைதான், விரைவில் சரியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.

“சில அறிகுறிகளைப் பார்க்கும்போது, இந்தியப் பொருளாதாரத்துக்குத் தற்போது பெரிய அளவுக்கு ஆபத்தான நிலை எதுவும் இல்லை. சேவைத்துறைகள், மின் உற்பத்தி, சுரங்கப்பணிகள் மற்றும் உள்நாட்டு சேவைகள் ஆகியவை வளர்ச்சி நிலையில்தான் உள்ளன. அபாயகரமான நிலையில் இல்லை” என்கிறார், பொருளாதார நிபுணர் ஷியாம் சேகர்.

மேலும் தொடர்ந்த ஷியாம் சேகர், “பொருளாதாரம் மோசமாக இருப்பதாகத் தொழிலதிபர்கள் பேசிவருகிறார்கள். ஆனால், அவர்கள் இப்படிப் பேசுவதை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், ‘நாங்கள் சிரமத்தில் இருக்கிறோம். எங்களுக்குக் கொடுங்கள்’ என்று அவர்கள் சொல்வது வழக்கமான ஒன்றுதான். எங்களுக்கு எல்லாம் கிடைத்துவிட்டது என்று எந்தத் தொழிலதிபரும் எந்தக் காலத்திலும் சொன்னது கிடையாது.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு அவர்கள்தான் காரணம். ஒழுங்காகத் தொழில் நடத்தாமல் நஷ்டப்பட்டு, இதற்கு மேல் தொழில் நடக்காது என்ற இடத்துக்குப் பலர் வந்து நிற்கிறார்கள். தோல்வியடைந்த தொழில்கள் எல்லாவற்றையும் கூர்ந்து பார்த்தால், அங்கு ரியல் எஸ்டேட் பிரச்னையின் தாக்கம் இருப்பது தெரியும். எந்தத் தொழிலில் முதலீடு செய்வது என்பதில் தனியார் நிறுவனங்கள் தவறு செய்துள்ளன. அதனால், தொழில்களை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தங்களிடம் உபரியாக இருந்த பணத்தில் சொத்துகளை வாங்கிக் குவித்துவிட்டார்கள். அதன் காரணமாகப் பணப்புழக்கம் குறைந்துள்ளது. நிறுவனங்களில் பணம் இல்லை. முதலீடு செய்வதற்குத் தொழிலதிபர்களுக்கு தைரியம் இல்லை. அதனால் முதலீடுகள் இல்லை. முதலீடுகள் இல்லாததால் வளர்ச்சி இல்லை. இது ஒரு சுழற்சி. எனவே, மக்களிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்தால்தான் இந்த நிலை மாறும். இதற்கு, வங்கிகள் பணம் கொடுக்கலாம். அப்படிக் கொடுத்தால், நுகர்வு அதிகரிக்கும். நுகர்வு அதிகரித்தால், தேவை அதிகரிக்கும். தேவை அதிகரித்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதற்கு அரசுத் தரப்பில் சில முயற்சிகளை எடுத்துவருகிறார்கள்.

அரசிடம் நிதி இல்லை!

அரசிடம் நிதியாதாரம் இல்லை. எனவே, வெளியிலிருந்துதான் நிதியாதாரம் வர வேண்டும். அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் தேவையான நிதியாதாரம் கிடைக்கும். அடுத்ததாக, பணவீக்கத்தை 4-5 சதவிகிதத்திலே வைத்திருக்க வேண்டும். ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறக்குமதியைக் குறைப்பதற்கு உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டும். முக்கியமாக, மக்கள் மனதில் உள்ள அச்சத்தைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்!

பொருளாதாரத்தில் மந்தநிலையில் இருக்கும் போது, முதலீடு செய்வதற்கு எல்லோருமே தயங்குவார்கள். எனவே, பொருளாதாரத்தைத் தூக்கிநிறுத்த வேண்டிய மிகப்பெரிய கடமை அரசுக்கு இருக்கிறது. வளர்ச்சியை நோக்கிப் பொருளாதாரம் செல்ல ஆரம்பிக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும். அந்த நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், எல்லோரும் முதலீடு செய்ய ஆரம்பிப்பார்கள். அந்த நம்பிக்கையை அரசு ஏற்படுத்த வேண்டும்.

அடிப்படையில், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். வருமானம் வந்தால், அதை மக்கள் செலவு செய்வார்கள். அதனால், விற்பனை அதிகரிக்கும். உற்பத்தி நடைபெறும். அதுபோக, அரசு தன் திட்டங்களுக்காகச் செலவு செய்ய வேண்டும். அடுத்ததாக, இந்தியாவின் ஏற்றுமதி பெருமளவுக்குக் குறைந்திருக்கிறது. அதை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவையெல்லாம் நடந்தால் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.

களமிறங்கியுள்ள அரசு!

நிலைமை சீரியஸ் ஆகிவருவதை உணர்ந்து, தொழிலதிபர்களை அழைத்துப் பேசித் தீர்வுகாண அரசு முயற்சி செய்துவருகிறது. பொருளாதாரத்தை உயர்த்துவதில் அரசுக்கு எந்த அளவுக்குப் பங்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு இந்திய ரிசர்வ் வங்கிக்கும் பங்கு இருக்கிறது. வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதனால், கடன் எளிதாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், எளிதாகக் கடன் கிடைக்கிறது என்பதற்காக, கடன்களை வாங்கி உடனே தொழில் தொடங்க யாரும் முன் வருவார்களா என்பது கேள்விக்குறி. காரணம், தொழில் வளர்ச்சி ஏற்படப் போகிறது என்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டால்தான் யாரும் தொழில் தொடங்க முன் வருவார்கள்.

முதலீடுகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சூழலையும் அரசு ஏற்படுத்த வேண்டும்.

லாரிகள் வாங்க மாட்டோம்!

கடுமையான தொழில் நெருக்கடிகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துவருவதால் அடுத்த ஆறு மாதங்களுக்குப் புதிதாக லாரிகள் வாங்க மாட்டோம் என்று அனைத்திந்திய மோட்டார் அமைப்புகள் முடிவுசெய்துள்ளன.

“ஆகஸ்டிலிருந்து ஆறு மாதங்களுக்குப் புதிதாக லாரிகள் வாங்கமாட்டோம். புதிய லாரி (டிரக்) வாங்கினால் 28% ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. முதலீடு இவ்வளவு அதிகமானால் தொழில் செய்யவே முடியாது’’ என்கிறார் அனைத்திந்தியப் போக்குவரத்து நல அமைப்பின் (AITWA) தலைவர் மகேந்திரன் ஆர்யா.

“டீசலுக்கு 2 ரூபாய் செஸ் வரி, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகப் பரிமாற்றம் நடந்தால் 2 சதவிகிதம் டி.டி.எஸ் பிடித்தம் என இரண்டு அறிவிப்புகளை பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே எங்கள் வருமானத்தில் 60 சதவிகிதத்தை டீசலுக்கே செலவு செய்ய வேண்டியிருக்கிறது. பராமரிப்புச் செலவுகள் உள்ளன. தற்போதுள்ள சூழலில் மோட்டார் தொழில் செய்யவே முடியாது’’ என்று கூறியுள்ளார் அனைத்திந்திய மோட்டார் வாகனக் கூட்டமைப்பின் தலைவர் பால் மல்கித் சிங்.

இந்தியப் பொருளாதாரம் வீழ்கிறதா?

ஜி.டி.பி சர்ச்சை!

ஜி.டி.பி என்கிற உள்நாட்டின் மொத்த உற்பத்தியின் சதவிகிதத்தை வைத்துதான், நாட்டின் பொருளாதாரம் முடிவுசெய்யப்படும். இதில் அரசு சொல்லும் புள்ளிவிவரம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி 6.8% என்று அரசு சொல்கிறது. ஆனால், உண்மையான ஜி.டி.பி என்பது 4.3 சதவிகிதமாக இருக்கவே வாய்ப்புள்ளதாக இந்திய அரசின் பொருளாதாரத் தலைமை ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கூறுகிறார்கள். அதேபோல, காலாண்டு வளர்ச்சி 5.8% என்று அரசு கூறுகிறது. ஆனால், இதில் உண்மையான வளர்ச்சி 3.3 சதவிகிதம்தான் என்றும் பொருளாதார நிபுணர்களில் ஒரு சாரார் வாதிட்டுவருகிறார்கள்.

‘வானத்திலிருந்தா வளர்ச்சி வரும்?’

இந்திய ஆட்டோமொபைல்துறை ஓராண்டில் 25%் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நாடு முழுவதும் பல ஆட்டோமொபைல் டீலர்ஷிப்புகள் மூடப்பட்டிருக்கின்றன. மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது உள்நாட்டு உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன. ஆட்டோமொபைல் துறையில் இருந்தே மத்திய அரசுக்கு எதிரான முதல் கலகக்குரல் எழுந்துள்ளது. அது, பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜின் குரல்.

“கார், பைக், கமர்ஷியல் வாகனங்கள் உள்ளிட்ட ஆட்டோமொபைல் துறை மிக மோசமான சரிவைச் சந்தித்துவருகிறது. உற்பத்திக்கு ஏற்ப மார்க்கெட்டில் டிமாண்டு இல்லை. தனியார் துறையில் பெரியளவில் முதலீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தச் சூழலில் வளர்ச்சி எங்கிருந்து வரும். வானத்தில் இருந்தா வளர்ச்சி வரும்... நாட்டில் வளர்ச்சி இல்லை என்பதை மத்திய அரசு வேண்டுமானால் சொல்லாமல் மறைக்கலாம். ஆனால் ஐ.எம்.எஃப், உலக வங்கி உள்ளிட்டவை கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக நம் வளர்ச்சியில் வீழ்ச்சியிருப்பதை வெளிச்சமிடுகின்றன. மத்திய அரசு வேண்டுமானால் மகிழ்ச்சியான முகத்தைக் காட்டலாம். ஆனால், இதுதான் உண்மை. உண்மையை யாராலும் மறைக்க முடியாது’’ என்று பேசியிருக்கிறார்.