Published:Updated:

புஸ்வாணமா... புல்லட் ரயில் வேகமா... எப்படி இருக்கிறது இந்தியப் பொருளாதாரம்?

இந்தியப் பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியப் பொருளாதாரம்

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து மேற்கத்திய நாடுகளால்கூட மீண்டுவர முடியவில்லை. ஆனால், இந்தியா அந்த பாதிப்பிலிருந்து மீண்டுவந்ததுடன், வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

புஸ்வாணமா... புல்லட் ரயில் வேகமா... எப்படி இருக்கிறது இந்தியப் பொருளாதாரம்?

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து மேற்கத்திய நாடுகளால்கூட மீண்டுவர முடியவில்லை. ஆனால், இந்தியா அந்த பாதிப்பிலிருந்து மீண்டுவந்ததுடன், வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

Published:Updated:
இந்தியப் பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியப் பொருளாதாரம்

‘இந்தியப் பொருளாதாரம் படுத்தேவிட்டதய்யா...’ என்று எதிர்க்கட்சிகளும், பொருளாதார நிபுணர்களும் கதறிக்கொண்டிருக்கும் நேரத்தில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 5-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது என்கிற செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையில், பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கிறது?

கொரானாவும், பொருளாதாரமும்!

கொரோனா பெருந்தொற்றும், பொதுமுடக்க மும் ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகளிலிருந்து இன்னமும் மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன. மேலும், ரஷ்யா – உக்ரைன் போர், உலக அளவிலான பொருளாதார பாதிப்புகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பாக உலக வங்கி வெளியிட்ட ஓர் அறிக்கையில், பெரும் கடன் சுமை, அந்நியச் செலாவணி இழப்பு ஆகிய வற்றால் 70 நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. ஐ.நா-வோ, ‘உலகில் 107 நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது’ என்று தெரிவித்திருக்கிறது.

வளர்ந்த நாடான அமெரிக்காவில், பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்திருப்பதாகவும், விலைவாசி உயர்வால் பொருளாதார மந்தநிலை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுவதாகவும் செய்திகள் கூறுகின்றன. பிரிட்டனில், 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. சீனாவிலும் இதே நிலைதான். பணக்கார நாடுகளின் நிலையே இதுவென்றால், இந்தியா போன்ற வளர்முக நாடுகள், ஏழை நாடுகளின் நிலை என்னவாக இருக்கும்?

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

ஐந்தாவது இடத்தில் இந்தியா?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ, “கொரோனாவுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கிறது” என்று பேசிவருகிறார். இந்த நேரத்தில், ‘கடந்த மாத ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.46 லட்சம் கோடி’ என்கிற செய்தி, ஆளும் பா.ஜ.க தரப்பைக் கொண்டாட்ட நிலைக்குக் கொண்டுசென்றிருக்கிறது.

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி புல்லட் ரயில் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது” என்று பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரான சையத் ஜாபர் இஸ்லாம் கூறுகிறார். பா.ஜ.க-வினரின் இந்தக் கருத்துக்கு வலுச்சேர்ப்பதுபோல, சர்வதேச நிதி அமைப்பு (ஐ.எம்.எஃப்) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை அமைந்திருக்கிறது. ‘உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 5-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியிருக்கிறது’ என்று ஐ.எம்.எஃப் அறிக்கை கூறுகிறது.

எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு

ஆனால், புள்ளிவிவரங்கள் இந்தியப் பொருளாதாரத்தின் வேறு பரிமாணங்களைக் காண்பிக்கின்றன. இந்தியாவில் நிலவும் வேலையின்மை குறித்த புள்ளிவிவரங்களை ‘இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்’ (சி.எம்.ஐ.இ) சமீபத்தில் வெளியிட்டது. அதில், ‘கடந்த ஜூலை மாதம் 6.83 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8.28 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. நகர்ப்புறத்தில் கடந்த ஜூலை மாதம் 8.22-ஆக இருந்த வேலையின்மை விகிதம், கடந்த ஆகஸ்ட் மாதம் 9.57 சதவிகிதமாகவும், கிராமப்புறத்தில் கடந்த ஜூலை மாதம் 6.17-ஆக இருந்த வேலையின்மை விகிதம், கடந்த ஆகஸ்ட் மாதம் 7.68 சதவிகிதமாகவும் அதிகரித்தன’ என கூறப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கும் சி.எம்.ஐ.இ அமைப்பின் நிர்வாக இயக்குநர் மகேஷ் விகாஸ், “இந்தியப் பொருளாதாரத்தால் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை” என்று கூறுகிறார்.

புஸ்வாணமா... புல்லட் ரயில் வேகமா... எப்படி இருக்கிறது இந்தியப் பொருளாதாரம்?

இது தவிர, என்.சி.ஆர்.பி எனப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை (2021-ம் ஆண்டுக்கானது) சமீபத்தில் வெளியானது. அதில், இடம்பெற்றிருக்கும் தற்கொலை தொடர்பான புள்ளிவிவரங்கள் அதிர்ச்சிக்குரியவை. இந்தியாவில் 2021-ம் ஆண்டு 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில் 25.6 சதவிகிதம் பேர், அதாவது 42,004 பேர் தினக்கூலித் தொழிலாளர்கள். இவ்வளவு அதிகமான எண்ணிக்கை இதுதான் முதன்முறை. 2020-ம் ஆண்டில், 37,666, 2019-ல் 32,563 என்ற எண்ணிக்கையில் தினக்கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். மத்திய பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே இதற்குக் காரணம் என்று எதிர்க் கட்சியினர் சுட்டிக் காட்டுகிறார்கள்.

“வளர்ச்சிப் பாதையில் இந்தியா!”

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவரான பேராசிரியர் ப.கனகசபாபதியிடம் பேசினோம்.

“கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து மேற்கத்திய நாடுகளால்கூட மீண்டுவர முடியவில்லை. ஆனால், இந்தியா அந்த பாதிப்பிலிருந்து மீண்டுவந்ததுடன், வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. காரணம், மத்திய அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளாக 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருள்களை வழங்கிவருவதுடன், 212 கோடி கொரோனா தடுப்பூசிகளை இலவசமாகச் செலுத்தியிருக்கிறது. மேலும், தேவையான துறைகளுக்கு தேவையான ஊக்க நிதியை அரசு வழங்குகிறது. இந்த நடவடிக்கை கள்தான், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் செல்வதற்கு முக்கியக் காரணம். கடந்த காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி 13.5 சதவிகிதமாக உயர்ந்திருப்பது, இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணம்” என்கிறார் கனகசபாபதி.

கனகசபாபதி.
கனகசபாபதி.

உலகில் பொருளாதார வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்திருக்கிறது என்றால், ஏன் இங்கு வேலையின்மை அதிகரித்திருக்கிறது... பல ஆயிரம் கூலித் தொழிலாளர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்... ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி ஏன் அதிகரித்திருக்கிறது... அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஏன் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது... விலைவாசி ஏன் உயர்ந்துகொண்டே போகிறது இந்த கேள்விகளுக்கான பதில்களை ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்கிறார்கள் மக்கள்.

பொருளாதாரம் வளர்கிறதோ இல்லையோ, விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது!