Published:Updated:

ஜனநாயகத்துக்கு எதிரானதா மறைமுகத் தேர்தல்?

மறைமுகத் தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
மறைமுகத் தேர்தல்

- ஆர்.முத்துக்குமார்

ஜனநாயகத்துக்கு எதிரானதா மறைமுகத் தேர்தல்?

- ஆர்.முத்துக்குமார்

Published:Updated:
மறைமுகத் தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
மறைமுகத் தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்துமுடிந்திருக்கிறது. இது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டுமே. இனிமேல்தான் அவற்றின் தலைவர்களுக்கான தேர்தலை நடத்த வேண்டும். இது நேரடியாக அல்லாமல் மறைமுகமாக நடக்கவிருக்கிறது. ஆம்... மேயர், துணை மேயர், சேர்மன், துணை சேர்மன், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க மக்களின் நேரடிப் பங்களிப்பு இருக்காது. மாறாக, வெற்றிபெற்ற உள்ளாட்சி உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஆர்.முத்துக்குமார்
ஆர்.முத்துக்குமார்

உண்மையில், உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமைகொண்ட மக்களுக்கு அவற்றின் தலைவர்கள், துணைத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஏன் மறுக்கப்படுகிறது என்ற நியாயமான கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்வி பல ஆண்டுகளாகக் கேட்கப்பட்டு, அதற்கான தீர்வும் கடந்த காலத்தில் எட்டப்பட்டது. ஆனாலும், அது நிரந்தரமானதாக இல்லாமல், அரசியல் காரணங்களுக்காக அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டதால் இந்த விஷயத்தில் மக்களுக்கான ஜனநாயக உரிமை இன்னமும் நிலுவையிலேயே இருக்கிறது.

சரியாகச் சொல்வதென்றால், தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது என்பதே ஆளுங்கட்சிகளின் விருப்பத்தைப் பொறுத்தது என்ற நிலைதான் இருந்தது. ஆனாலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. வார்டு உறுப்பினர்களுக்கு நேரடித் தேர்தலும், தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலும் நடத்தப்பட்டன. பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதே எம்.ஜி.ஆர் ஆட்சியில் கேள்விக்குறியானது.

1977-ல் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தலையே நடத்தவில்லை. இடைப்பட்ட காலத்தில் அவர் மூன்று முறை முதல்வராகிவிட்டார். ஆனாலும், அவருக்கு உள்ளாட்சித் தேர்தல்மீது ஆர்வமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்டு நிர்வகிக்கவேண்டிய உள்ளாட்சி அமைப்புகளை, சிறப்பு அதிகாரிகளைக் கொண்டே நிர்வகித்தார். உடைத்துச் சொன்னால், அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள், வார்டு செயலாளர்களே உள்ளாட்சி நிர்வாகத்தை மறைமுகமாக இயக்கினார்கள்.

அதற்கு எழுந்த எதிர்ப்பால் எம்.ஜி.ஆர் தனது இறுதிக்காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார். அப்போதும்கூட மாநகராட்சிகளைத் தவிர்த்துவிட்டு ஏனைய அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போதும் தலைவர், துணைத் தலைவர்கள் மறைமுகத் தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், ராஜீவ் காந்தி காலத்தில் அறிமுகமாகி, வி.பி.சிங் காலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, நரசிம்மராவ் காலத்தில் அமலுக்கு வந்த பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கட்டாயமாக்கப்பட்டது. அப்போது தலைவர், துணைத் தலைவர் தேர்தல்களை மாநில அரசுகள் நேரடியாகவும் நடத்தலாம், மறைமுகமாகவும் நடத்தலாம் என்ற சூழல் ஏற்பட்டது.

1996-ல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த தி.மு.க உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது. அப்போதுதான் முதன்முறையாக மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி உயர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சென்னை மாநகர மேயராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு முழுக்க மறைமுகத் தேர்தல் என்பதே இல்லாமல், முழுக்க முழுக்க மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளே உள்ளாட்சி அமைப்புகளில் அமர்த்தப்பட்டனர். அதன் மூலம் மக்களுக்கான தேர்ந்தெடுக்கும் உரிமை மீட்டெடுக்கப்பட்டது; உள்ளாட்சி ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது என்றெல்லாம் வரவேற்புப் பத்திரங்கள் வந்துசேர்ந்தன. ஆனால், அடுத்த ஐந்தாண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியது. 2001-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதலமைச்சரானார். அவரது அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்துமா என்ற கேள்வி எழுந்தபோது `நேரடித் தேர்தலுக்கே தயார்’ என்று சொல்லி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார் ஜெயலலிதா. அதன் மூலம் 2001 உள்ளாட்சித் தேர்தலும் நேரடித் தேர்தலாகவே நடந்தது.

ஜனநாயகத்துக்கு எதிரானதா மறைமுகத் தேர்தல்?

ஆனால், அந்த இடத்தில் ஒரு சிக்கல் முளைத்தது... குறிப்பாக, சென்னை மாநகராட்சியை முன்வைத்தே அந்தச் சிக்கல் வெடித்தது. கடந்தமுறை மு.க.ஸ்டாலின் மேயராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டபோது மாநகராட்சியில் தி.மு.க-வுக்குப் பெரும்பான்மை இருந்தது. ஆனால் 2001-ல் மீண்டும் மு.க.ஸ்டாலின் மக்களால் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாரே தவிர மாநகராட்சியில் அ.தி.மு.க-வுக்கே பெரும்பான்மை இருந்தது. அதனால் அ.தி.மு.க-வின் கராத்தே தியாகராஜன் துணை மேயரானார்.

மாநகராட்சி மன்றத்திலும் மேயருக்குப் பெரும்பான்மை ஆதரவு இல்லை; மாநகராட்சி ஆணையரும் மேயருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மாநகராட்சியை நிர்வகிப்பதே சிரமம் என்ற சூழல். போதாக்குறைக்கு, ‘ஒருவருக்கு ஒரு பதவி’ சட்டத்தை அ.தி.மு.க அரசு கொண்டுவந்தது. ஒருவர் தொடர்ச்சியாக இரு முறை மேயராக முடியாது என்ற விதி போன்றவை மேயர் மு.க.ஸ்டாலினை ராஜினாமா செய்யவைத்தன. துணை மேயரே பொறுப்பு மேயர் ஆக்கப்பட்டார்.

மேயரின் ராஜினாமாவைத் தொடர்ந்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், அதை அ.தி.மு.க அரசு செய்யவில்லை. விளைவு, மேயருக்கான பதவிக்காலம் முடியும்வரை பொறுப்பு மேயரே தொடர்ந்தார். அதன் மூலம் நேரடித் தேர்தலின் எதிர்மறை அம்சம் வெளிப்பட்டது. `மாநில அரசு நினைத்தால் மக்கள் தீர்ப்பையே மாற்றியமைத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் உள்ளிட்ட பதவிகளை மறைமுகமாக நீக்கலாம் என்ற சூழல் ஆபத்தானது’ என்ற விமர்சனம் எழுந்தது.

அதனால், 2006-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க., உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுகத் தேர்தலை நடத்தியது. மீண்டும் 2011-ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க நேரடித் தேர்தலை நடத்தியது. பிறகு 2016-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., தனது முந்தைய நிலையை மாற்றிக்கொண்டு, மறைமுகத் தேர்தலை அறிவித்தது. ஆனால் இட ஒதுக்கீடு, வழக்கு உள்ளிட்ட காரணங்களால், அறிவித்தபடி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2018-ல் நேரடித் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். வழக்குகளால் அந்தத் தேர்தல் தள்ளிப்போனது. பிறகு எடப்பாடி பழனிசாமியே மீண்டும் மறைமுகத் தேர்தலுக்குத் தயாரானார். ஆக, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதா, வேண்டாமா என்பதும், அது நேரடித் தேர்தலா, மறைமுகத் தேர்தலா என்பதும் மாநில ஆளுங்கட்சியின் விருப்பத்தைப் பொறுத்தது என்பதும், கள நிலவரத்தைப் பொறுத்து எப்போது நடத்துவது என்பது ஆளுங்கட்சியின் முடிவைப் பொறுத்தது என்பதும் வெளிப்படையாகத் தெரிந்தது.

ஜனநாயகத்துக்கு எதிரானதா மறைமுகத் தேர்தல்?

கூடுதலாக, உள்ளாட்சித் தேர்தலை முழுமையாக நடத்துவதா, வெற்றி வாய்ப்புக்கு ஏற்ப பிரித்துப் பிரித்து நடத்துவதா என்பதும் ஆளுங்கட்சியின் மனநிலையைப் பொறுத்தது. இதற்கான அடையாளமாகவே 2019-ல் நகர்ப்புறப் பகுதிகளைத் தவிர்த்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்குத் தனியாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த நேரடித் தேர்தல்கள் முடிந்த பிறகு அவற்றுக்கான மறைமுகத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த நிலையில் 2022 பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகியுள்ளன. மேயர், துணை மேயர், சேர்மன், துணை சேர்மன், பேரூராட்சித் தலைவர், பேரூராட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. இப்போது `ஆட்சி நிர்வாகத்தின் முக்கிய அடுக்கான உள்ளாட்சி நிர்வாகத்தின் தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுப்பதுதானே மெய்யான ஜனநாயகம்?’ என்ற கேள்வி மீண்டும் ஒலிக்கிறது.

மக்களாட்சி தேசத்தில் மக்களின் பிரதிநிதிகளை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுப்பதே ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை உறுதிப்படுத்த மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வர வேண்டுமே தவிர அரசியல் கட்சிகள் பார்த்து, அவர்களது தகுதிகளைத் தீர்மானித்து, அவர்களுக்குச் சாதகமானவர்களையோ, பிடித்தமானவர்களையோ மேயர், சேர்மன் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு மேலிருந்து திணிப்பது மக்கள் தீர்ப்பை நிராகரிப்பது அல்லது புறக்கணிப்பது அல்லது மடைமாற்றுவதற்குச் சமம்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம்... இந்தியாவின் பிரதமர் பதவிக்கும், மாநில முதல்வர் பதவிக்குமே இங்கு மறைமுகத் தேர்தல்தான் நடத்தப்படுகிறதே தவிர அவர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கவில்லையே. எனில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் ஏன் நேரடித் தேர்தல் என்று கேட்கலாம். உண்மைதான்... ஆனால் பிரதமர், முதல்வர் பதவிகளையும் உள்ளாட்சிப் பதவிகளையும் ஒப்பீடு செய்வது பொருத்தமற்றது. பிரதமர் பதவி என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது. மாநில முதலமைச்சர் பதவி என்பது ஒட்டுமொத்த மாநிலத்துக்கானது. அவர்களது ஆளுகைப் பகுதி என்பது மிகவும் பரந்து விரிந்தது.

ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் அளவில் சிறியவை. மக்களுக்கு மிகவும் நெருக்கமானவை. அவர்களது அன்றாட நடவடிக்கைகளுடன் மிகவும் நேரடியான தொடர்புகொண்டவை. ஆகவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளை நிர்வகிக்கும் உயர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் வைத்தால், தங்கள் பிரச்னைகளை நேரடியாக உணர்ந்து, புரிந்து, தீர்க்கும் வல்லமைகொண்டவரை நேரடியாகத் தேர்வு செய்யும் வாய்ப்பு மக்களுக்கு உருவாகும். அப்படி மக்களின் வாக்குகளால் நேரடியாகத் தேர்வுசெய்யப்படும் ஒருவர், அந்த மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய நிர்பந்தம் இயல்பாகவே உருவாகும். அதன் மூலம் அவர் தனது கடமைகளைச் செய்தாகவேண்டிய கடப்பாடு ஏற்படும்.

ஜனநாயகத்துக்கு எதிரானதா மறைமுகத் தேர்தல்?

மாறாக, வார்டு உறுப்பினர்களைக்கொண்டு மறைமுகத் தேர்தல் மூலம் உயர் பதவிகளுக்கு வருபவர்கள், தனக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்களைத் தம் பக்கம் திரட்டினாலே போதுமானது; மக்களின் ஆதரவு தேவையில்லை என்ற சூழல் வருவது மக்களுக்குப் பலனளிக்காது. ஆகவே, உள்ளாட்சி உயர் பதவிகள் நேரடித் தேர்தல் மூலமே நிரப்பப்படுவதுதான் சரியான ஜனநாயக வழி. மற்றபடி, அரசியல் கட்சித் தலைவர்களால் மேலிருந்து திணிக்கப்படுவது ஏற்புடையது அல்ல.

இந்த அம்சங்களைத் தாண்டி, குதிரைப் பேரம் என்கிற கட்சித்தாவல் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் நேரடித் தேர்தல் அவசியமாகிறது. குறிப்பாக, நேரடித் தேர்தல் மூலம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் பெரும்பான்மை பலம் பெறாத கட்சிகள் தங்களது அரசியல் செல்வாக்கையோ, அதிகார பலத்தையோ அல்லது பணம் உள்ளிட்ட அம்சங்களைப் பயன்படுத்தியோ மாற்றுக்கட்சியினரின் பிரதிநிதிகளைத் தம் பக்கம் இழுத்து, உள்ளாட்சி அமைப்புகளின் உயர் பதவிகளைக் கைப்பற்றும் போக்கு அமலில் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்சித்தாவல் தடைச் சட்டம் பொருந்தாத இன்றைய சூழலில், குதிரைப் பேரம் அசுரப் பாய்ச்சலில் நடப்பதைத் தவிர்ப்பதற்காகவும் நேரடித் தேர்தல் அவசியமாகிறது.

இங்கே ஒரு முக்கியமான அம்சத்தை மறந்துவிடக் கூடாது. அது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் அல்லது சேர்மன் ஒரு கட்சியைச் சேர்ந்தவராக இருந்து, உள்ளாட்சி மன்றத்தின் பெரும்பான்மை வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அந்த உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை எப்படிச் சிக்கலின்றி நடத்திச்செல்வது என்பதற்கு உரிய, உறுதியான, வலுவான நெறிமுறைகள் வகுக்கப்படவேண்டும்.

குறிப்பாக, அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ உள்ளாட்சி உயர் பதவியில் இருப்பவர் பதவி விலகும்பட்சத்தில், அந்தப் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடத்தி, அந்தப் பதவிக்கான மக்கள் பிரதிநிதியை மீண்டும் தேர்தல் நடத்தி மக்களைக்கொண்டே தேர்ந்தெடுக்க வழிவகை செய்ய வேண்டும். அப்படியான அம்சங்களை முறைப்படுத்திவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நேரடித் தேர்தல்கள் உண்மையான ஜனநாயகத்தை எதிரொலிக்கும்!