Published:Updated:

“வேட்டையாடப்படும் அரசியல் எதிரிகள்!?” - புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றனவா?

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

புலனாய்வு அமைப்புகளை பா.ஜ.க அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என இன்றைக்கு அலறிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் ஒன்றும் யோக்கியம் கிடையாது.

“வேட்டையாடப்படும் அரசியல் எதிரிகள்!?” - புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றனவா?

புலனாய்வு அமைப்புகளை பா.ஜ.க அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என இன்றைக்கு அலறிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் ஒன்றும் யோக்கியம் கிடையாது.

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

‘சி.பி.ஐ., என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது’ என்று கடந்த சில ஆண்டுகளாகவே குற்றம்சாட்டிவரும் எதிர்க்கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராகத் தற்போது போர்க்கொடி தூக்கியிருக்கின்றன!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. இதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் தலைநகர் டெல்லி உட்பட இந்தியா முழுவதும் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த நிலையில், தி.மு.க உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடி இந்தப் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, ‘தனது அரசியல் எதிரிகள்மீது பழிவாங்கல் நடவடிக்கையை மோடி அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது’ என்று காட்டமான கூட்டறிக்கை ஒன்றை அவர்கள் வெளியிட்டார்கள்.

மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ), அமலாக்கத்துறை (இ.டி), தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ), மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி), வருமான வரித்துறை (ஐ.டி), தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்.சி.பி) என ஏராளமான புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தன் கையில் வைத்திருக்கிறது. தங்களின் அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவும், எதிர்க்கட்சித் தலைவர்களைச் செயல்படவிடாமல் முடக்கவும் முக்கிய ஆயுதமாக மோடி அரசு அவற்றைப் பயன்படுத்துகிறது என்று குறிப்பிடுவதோடு, குற்றச்சாட்டுக்கான பல ஆதாரங்களையும் எதிர்க்கட்சியினரும், சமூகச் செயற்பாட்டாளர்களும் அடுக்குகிறார்கள்.

“வேட்டையாடப்படும் அரசியல் எதிரிகள்!?” - புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றனவா?

‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்று வெளிப்படையாக அறிவித்திருக்கும் பா.ஜ.க., இந்தியாவில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சியை முடக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக, காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆகவேதான், தங்கள் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் செயல்படவிடாமல் முடக்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறையை ஏவிவிட்டிருக்கிறார்கள் என்று காங்கிரஸார் விமர்சிக்கிறார்கள்.

சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் செய்ததாக, முன்னாள் மத்திய சுற்றுச்சூழல்துறை மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் 2017-ம் ஆண்டு சி.பி.ஐ சோதனை நடைபெற்றது. அது, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று குற்றம்சாட்டப்பட்டது. அதன் பிறகு, அரசியலைவிட்டே ஜெயந்தி நடராஜன் ஒதுங்கிவிட்டார். மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துவருபவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் 2019-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நூறு நாள்களுக்குப் பிறகே அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான பல வழக்குகளில், அவரது வீடுகளிலும், அலுவலகங்களிலும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தொடர்ச்சியாகச் சோதனைகளை மேற்கொண்டுவருகின்றன.

மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக எதிர்த்துவரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கட்சியினருக்கு எதிரான பல்வேறு வழக்குகளிலும் மத்திய புலனாய்வு அமைப்புகள் நெருக்கடி கொடுத்துவருகின்றன. மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யுமான அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. ‘எங்கள் கட்சி கோவா அரசியலில் இறங்கிய பிறகு, அமலாக்கத்துறை என்னிடம் பத்து முறை விசாரணை நடத்தியது’ என்கிறார் அபிஷேக் பானர்ஜி. நாரதா ஊழல் வழக்கில் மேற்கு வங்கத்தின் இரண்டு அமைச்சர்களும், ஒரு எம்.எல்.ஏ-வும் சி.பி.ஐ-யால் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டனர். பள்ளிக் கல்வித்துறையில் பணியாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக மேற்கு வங்க தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை தற்போது கைதுசெய்திருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 2019, டிசம்பரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, அஸ்ஸாமில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. வன்முறைக்குக் காரணமாக இருந்தார் என்று அஸ்ஸாம் மாநில எம்.எல்.ஏ-வும், செயற்பாட்டாளருமான அகில் கோகோய், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் என்.ஐ.ஏ-வால் 2020, டிசம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டார். பின்னர், குற்றச்சாட்டுக்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று கூறி என்.ஐ.ஏ நீதிமன்றம் அகில் கோகோயை 2021, ஜூலையில் விடுதலை செய்தது. `என்.ஐ.ஏ-வை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது’ என்று அவர் குற்றம்சாட்டினார்.

சோனியா - ராகுல் - மம்தா பானர்ஜி - ஆனந்த் டெல்டும்டே - தீஸ்தா சீதல்வாட் - பார்த்தா சாட்டர்ஜி - அகில் கோகோய்
சோனியா - ராகுல் - மம்தா பானர்ஜி - ஆனந்த் டெல்டும்டே - தீஸ்தா சீதல்வாட் - பார்த்தா சாட்டர்ஜி - அகில் கோகோய்

2002-ல் நடந்த குஜராத் வன்முறை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்த தீஸ்தா சீதல்வாட் கைது, பீமா கோரேகான் வழக்கில் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே என்.ஐ.ஏ-வால் கைதுசெய்யப்பட்டது ஆகியவையும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளே என்று விமர்சிக்கப்படுகிறது.

அதேசமயம், “புலனாய்வு அமைப்புகளை பா.ஜ.க அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என இன்றைக்கு அலறிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் ஒன்றும் யோக்கியம் கிடையாது. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, அதற்கு எதிராகவும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் ஏராளமாக முன்வைக்கப்பட்டன” என்கிறார்கள் பா.ஜ.க-வினர். `சி.பி.ஐ-யை காங்கிரஸ் அரசு தவறாகப் பயன்படுத்துகிறது’ என்று பா.ஜ.க அப்போதே குற்றம்சாட்டியது.

அரசின் புலனாய்வு அமைப்புகளை சுயநலத்துக்காக யார் பயன்படுத்தினாலும், அது ஏற்கத்தக்கதல்ல!