Published:Updated:

வேலுமணி ரெய்டு... கோட்டைவிட்டதா லஞ்ச ஒழிப்புத்துறை?

ரெய்டு
பிரீமியம் ஸ்டோரி
ரெய்டு

ஆட்சி மாறியதுமே, கோவை அ.தி.மு.க அலுவலகத்தில் வழக்கறிஞர் அணிக்குத் தனியாக ஓர் அறையை ஒதுக்கிவிட்டார் வேலுமணி

வேலுமணி ரெய்டு... கோட்டைவிட்டதா லஞ்ச ஒழிப்புத்துறை?

ஆட்சி மாறியதுமே, கோவை அ.தி.மு.க அலுவலகத்தில் வழக்கறிஞர் அணிக்குத் தனியாக ஓர் அறையை ஒதுக்கிவிட்டார் வேலுமணி

Published:Updated:
ரெய்டு
பிரீமியம் ஸ்டோரி
ரெய்டு

‘‘வாங்க... என்ன இவ்வளவு லேட்டா வர்றீங்க?’’ - ஆகஸ்ட் 10-ம் தேதி அதிகாலை 6 மணிக்கு ரெய்டுக்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினரை இப்படித்தான் வரவேற்றிருக்கிறார் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. வேலுமணி மீதான இந்த ரெய்டு எதிர்பார்த்ததுதான். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியபோதே, ‘‘முதலில் என் வீட்டுக்குத்தான் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன்’’ என்று எஸ்.பி.வேலுமணி வெளிப்படையாகவே பேசியிருந்தார். இப்போது அந்த ரெய்டு நடந்தேவிட்டது.

வேலுமணி, அவரின் அண்ணன் அன்பரசன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் சந்திரசேகர், கே.சி.பி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சந்திர பிரகாஷ் உள்ளிட்ட 17 பேர் மீது ஆகஸ்ட் 9-ம் தேதி வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, மறுநாளே தமிழகம் முழுவதும் வேலுமணிக்குத் தொடர்புடைய 60 இடங்களில் ரெய்டு நடத்தியது. ஆனாலும், இந்த ரெய்டில் பெரிதாக ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என்பதால் தெம்பாக இருக்கிறாராம் வேலுமணி. இதை முன்வைத்து, “ஆதாரங்கள் சிக்கக்கூடிய இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை கைவைக்கத் தவறிவிட்டது” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

வேலுமணி ரெய்டு... கோட்டைவிட்டதா லஞ்ச ஒழிப்புத்துறை?

இரவில் வந்த போன் கால்!

ஆட்சி மாறியதுமே, கோவை அ.தி.மு.க அலுவலகத்தில் வழக்கறிஞர் அணிக்குத் தனியாக ஓர் அறையை ஒதுக்கிவிட்டார் வேலுமணி. ரெய்டு நடத்தப்பட்டால், அதை சட்டரீதியாக எதிர்கொள்வது குறித்து இந்த டீமுடன் அடிக்கடி விவாதித்திருக்கிறார். கொங்கு ஏரியாவில் பணியாற்றும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகளின் துணையையும் நாடியிருக்கிறது வேலுமணி தரப்பு. குறிப்பாக, கோவை குற்றப்பிரிவில் பணியாற்றிய நிலவின் பெயர்கொண்ட பெண் அதிகாரியும், ‘ஒயிட்’ பெயர்கொண்ட அதிகாரி ஒருவரும் லஞ்ச ஒழிப்புத்துறையின் மூவ்களை அப்டேட் செய்ததாகச் சொல்கிறார்கள்.

ரெய்டு தகவல் தனக்குக் கிடைத்ததுமே அதற்காக வேலுமணி எப்படியெல்லாம் தயாரானார் என்பதை நம்மிடம் விவரித்தார்கள் அ.தி.மு.க சீனியர்கள் சிலர்... ‘‘சட்டமன்றக் கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வந்திருந்த வேலுமணி, எம்.ஆர்.சி நகரில் அன்பரசனுக்குச் சொந்தமான ‘சீப்ரோஸ்’ அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்தார்.

ஆகஸ்ட் 9-ம் தேதி இரவு அவருக்கு ஒரு போன் கால் வந்தது. மறுமுனையில் பேசியவர் ரெய்டு வரப்போகும் தகவலைச் சொன்னார். இதை ஏற்கெனவே வேலுமணி எதிர்பார்த்திருந்தார் என்பதால், உடனே கோவை மற்றும் சென்னையிலுள்ள சில நண்பர்களுக்கு போன் போட்டார். ‘என்ன செய்வீங்களோ தெரியாது... நாளைக்கு ரெய்டு ஆரம்பிச்சவுடனே என் வீடு முன்னாடி அஞ்சாயிரம் பேராவது நிக்கணும். சாப்பாடு, டீ, காபி என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுங்க’ என்று உத்தரவிட்டார். தற்காத்துக்கொள்ளும் யுக்திகளும் சிலரிடம் ஒப்படைக்கப்பட்டன.

காளம்பாளையம் வீடு
காளம்பாளையம் வீடு

களைகட்டிய வீடு... தெம்பான வேலுமணி!

வேலுமணி தங்கியிருந்த ‘சீப்ரோஸ்’ வீடு பல கோடி ரூபாய் மதிப்புடையது. ரெய்டு சமயத்தில் அங்கேயிருந்தால் வீட்டின் பிரமாண்டம் பற்றி மீடியாக்களில் தேவையில்லாமல் பேசப்படும் என்று நினைத்த வேலுமணி, அன்றிரவே சேப்பாக்கம் எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்கு வந்துவிட்டார். அதேபோல, அன்பரசன், சந்திரசேகர், சந்திர பிரகாஷ் எனப் பலரும் சுதாரித்துக்கொண்டனர். வேலுமணிக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்படி, சரியாக ஆகஸ்ட் 10-ம் தேதி காலை 6 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு தொடங்கியது. எம்.எல்.ஏ ஹாஸ்டலிலுள்ள ‘டி’ ப்ளாக், பத்தாவது மாடியில்தான் வேலுமணியின் பிளாட் இருக்கிறது. அங்கே லஞ்ச ஒழிப்புத்துறையினர் வந்தபோது, அவர்களைச் சிரித்த முகத்துடன் வரவேற்றார் வேலுமணி. அப்போது, ‘எம்.எல்.ஏ ஹாஸ்டல் சபாநாயகரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கே வருவதற்கு முன்னர், சபாநாயகரிடம் அனுமதி வாங்கிவிட்டீர்களா?’ என்று வேலுமணியுடன் இருந்தவர்கள் கேள்வி எழுப்பினர். அவர்களை அதட்டிய வேலுமணி, ‘அவங்க கடமையைச் செய்யட்டும். யாரும் தடுக்காதீங்க’ என்று சொல்லிவிட்டார். ரெய்டு முடிந்த பின்னர் எடப்பாடியைச் சந்தித்த வேலுமணி, ‘12 மணி நேரம் என்னை ஒரே இடத்துல உட்காரவெச்சதைத் தவிர வேற எதையும் அவங்க சாதிச்சுடலை’ என்றிருக்கிறார். தனக்கெதிராக எதுவும் சிக்கவில்லை என்பதால் இப்படித் தெம்பாக இருக்கிறார் வேலுமணி’’ என்றார்கள்.

ரெய்டு நேரத்தில் கோவை சுகுணாபுரத்திலுள்ள வேலுமணியின் வீடு களைகட்டியது. ரெய்டு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்களும் திரட்டப்பட்டார்கள். காலையில் டீ, காபி, பிஸ்கெட், தோசை, வெண்பொங்கல், வடை என அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போதே, மதிய உணவுக்கும் ஆர்டர் எடுத்து, அவ்வப்போது ரோஸ் மில்க் எல்லாம் கொடுத்து கட்சிக்காரர்கள் அதகளப்படுத்தினர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ரெய்டு நடத்தப்பட்டபோது, அவருக்கு ஆதரவாகக் கட்சிக்காரர்கள் யாரும் திரளவில்லை. அதுபோல தனக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்த வேலுமணி, ரெய்டு முடியும்வரை கூட்டத்தைத் தன் வீட்டு வாசலைவிட்டு அகற்றவில்லை. 12 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற இந்த ரெய்டின் முடிவில் பெரிய ஆதாரங்கள், ஆவணங்கள் எதையும் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றவில்லை. வேலுமணியின் கோவை வீட்டிலிருந்து பெட்டகச் சாவியை மட்டும்தான் எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

அதேநேரம், கோவை காளம்பாளையத்திலுள்ள சொகுசு பங்களாவுக்குச் சோதனைக்காகச் சென்ற அதிகாரிகள் மலைத்துவிட்டனராம். தேக்கு, இத்தாலி மார்பிளால் கட்டப்பட்ட இந்த வீட்டுக்கு வேலுமணியும், அவருக்கு நெருக்கமான சிலரும் மட்டுமே வந்து சென்றதாகச் சொல்கிறார்கள். வேலுமணிக்கு நெருக்கமான சதீஷ்குமார் என்பவரின் பெயரில் இந்த வீடு இருப்பதாகக் கூறப்படுகிறது. வீட்டுக்குத் தேக்கு மர சப்ளையைச் செய்தவர் கூடலூர் சஜ்ஜீவன் என்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரம்.

வேலுமணி ரெய்டு... கோட்டைவிட்டதா லஞ்ச ஒழிப்புத்துறை?

எங்கெல்லாம் கோட்டைவிட்டது லஞ்ச ஒழிப்புத்துறை?

கோவையில் 42 இடங்களில் ரெய்டு நடந்தாலும், வேலுமணிக்குத் தொடர்புடைய பல முக்கிய இடங்களில் ரெய்டு நடக்கவில்லை. வேலுமணி தரப்பும், மலரான கல்லூரி அதிபர் ஒருவரும் நெருக்கம். அந்தக் கல்லூரி, ரெய்டிலிருந்து தப்பிவிட்டது. வேலுமணியின் ஒவ்வோர் அசைவையும் கண்காணிக்கும் காவல்துறை அதிகாரிகள் சிலர், ‘‘வேலுமணி தரப்புக்கு ஆனைகட்டிக்கு மேலே, கேரளா எல்லைக்குள் ஒரு பண்ணை வீடு இருக்கிறது. பல ரகசிய டீல்கள் இங்கேதான் முடிவெடுக்கப்படும். விடுமுறை நாள்களில் வேலுமணியின் குடும்பத்தினர் இங்கேதான் பொழுதைக் கழிப்பார்கள். ரெய்டு தொடங்குவதற்கு முதல்நாள் இங்கிருந்துதான் ‘நமது அம்மா’ நாளிதழின் வெளியீட்டாளர் சந்திரசேகர் கோவைக்கு வந்திருக்கிறார். இந்தப் பண்ணை வீட்டைச் சோதனை செய்திருந்தால் பல ஆவணங்களை அள்ளியிருக்கலாம். ஆனால், இந்த வீட்டில் ரெய்டு நடத்தவில்லை.

சந்திரசேகர், சந்திர பிரகாஷ் தரப்பிலிருந்து புதிதாக ஒரு சாட்டிலைட் சேனலுக்கு உரிமம் வாங்கியிருக்கின்றனர். கோவையைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் அந்த நிறுவனத்திலும் ரெய்டு நடக்கவில்லை. நாமக்கல்லைச் சேர்ந்த ஓர் அரசுப்பள்ளி ஆசிரியர்தான் அன்பரசன் தரப்புக்கு ஆல் இன் ஆலாக இருக்கிறார். அவரும் ரெய்டிலிருந்து தப்பிவிட்டார். காளப்பட்டி மெயின் ரோட்டிலிருக்கும் கட்டட தொழிலதிபரும் சந்திரசேகரும் மிக நெருக்கம். கடந்த சில வருடங்களிலேயே நூறு கோடி ரூபாய்க்கு அதிபதியான அந்தத் தொழிலதிபர், சென்னை பாலவாக்கத்தில் சொகுசு பங்களா ஒன்றைச் சமீபத்தில் கட்டியிருக்கிறார். இவர் மூலமாகத்தான் பல டீலிங்குகள் சென்னையில் முடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்தத் தொழிலதிபர் தொடர்புடைய இடங்களிலும் ரெய்டு நடத்தப்படவில்லை.

வேலுமணி ரெய்டு... கோட்டைவிட்டதா லஞ்ச ஒழிப்புத்துறை?

பெயருக்கு நடந்ததா ரெய்டு?

டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய வர்தன், கன்ஸ்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் வேறு சிலருக்குக் கைமாறிவிட்டன. அந்த இடங்களுக்கும் ரெய்டு செல்லவில்லை. கே.சி.பி உள்ளிட்ட நிறுவனங்கள் மாநிலம் கடந்து தெலங்கானா, ஆந்திராவில் பணிகள் எடுத்துள்ளன. அங்கு அவர்களுக்கு அலுவலகங்கள் உள்ளன. அங்கும் செல்லவில்லை. வேலுமணியின் உறவினர்கள் சைலன்ட் பார்ட்னர்களாக இருக்கும் நிறுவனங்களையும் கண்டுகொள்ளவில்லை... அவரின் முன்னாள் உதவியாளர்களையும் மறந்துவிட்டார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் ஆகப்போகின்றன. இவ்வளவு லேட்டாக ரெய்டு நடத்தியதே தவறு. அந்த ரெய்டு தகவலும் லீக் ஆனதால், பெரிதாக எதையும் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றவில்லை. மொத்தத்தில் வேலுமணி விஷயத்தில் கோட்டைவிட்டுவிட்டது லஞ்ச ஒழிப்புத்துறை’’ என்றனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பங்களாபுதூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும், வேலுமணியும் நெருக்கம். தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, பங்களாபுதூர் அருகேயுள்ள தன்னுடைய பண்ணை வீட்டுக்கு அவர் சிமென்ட் சாலை போட்டுக்கொண்ட விவகாரத்தைக் கடந்த ஆண்டு ஜூ.வி இதழ் அம்பலப்படுத்தியது. லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டிலிருந்து சுரேஷ் தப்பியது பலரது புருவத்தையும் உயர்த்தியிருக்கிறது. ‘‘ஆட்சி மாறியவுடனேயே மேலிடத்து மாப்பிள்ளைகூட போட்டோ எடுத்துக்கிட்டார் சுரேஷ். அவரையெல்லாம் ஏன் தொடப்போறாங்க?’’ என்கிறது ஈரோடு வட்டாரம்.

இந்த ரெய்டில் யாரும் எதிர்பாராத விஷயமாக, கோவை மாநகர பொறியாளர் லட்சுமணன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதேசமயம், வேலுமணியின் ஆசிபெற்ற ஆர்.டி.ஓ மதுராந்தகியின் பெற்றோர் வீட்டில் நடந்த ரெய்டை யாரும் எதிர்பார்க்கவில்லை.

வேலுமணி ரெய்டு... கோட்டைவிட்டதா லஞ்ச ஒழிப்புத்துறை?

ஆகஸ்ட் 10-ம் தேதி இரவு, முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி கந்தசாமி, ரெய்டு தொடர்பான அப்டேட்களை அளித்திருக்கிறார். பெரிதாக ஆவணங்கள் சிக்கவில்லையென்றாலும், அறப்போர் இயக்கம், சில ஒப்பந்ததாரர்கள் அளித்திருக்கும் புகார்கள், ஆவணங்களைவைத்து வேலுமணியைச் சிக்கவைக்க லஞ்ச ஒழிப்புத்துறை முயல்கிறது. இறுதி அஸ்திரமாக டெல்லி சோர்ஸ் மற்றும் சில சமாதான தூதுவர்கள் மூலமாகக் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க காய்நகர்த்துகிறார் வேலுமணி. யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று பார்ப்போம்!

*****

சத்ரு சம்ஹார யாகம்!

சிக்கலிலிருந்தது விடுபடவும், எதிரிகளை வலுவிழக்கச் செய்யவும் திருச்செந்தூரில் ‘சத்ரு சம்ஹார யாக’த்தை நடத்தியிருக்கிறது வேலுமணி குடும்பம். இதற்காக, ரெய்டு நடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி இரவே வேலுமணியின் குடும்பத்தினர் திருச்செந்தூருக்கு காரில் வந்துவிட்டனர். மறுநாள் காலை 7:35 மணிக்கு சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் வேலுமணியும், அன்பரசனின் மகன் விவேக்கும் வந்திறங்கினர். வேலுமணிக்கு நெருக்கமான சந்திரன் என்பவரால் நடத்தப்படும் சித்ரா பார்க் ஹோட்டலுக்குச் சென்றவர்கள், அங்கு சற்று நேரம் ஓய்வெடுத்திருக்கிறார்கள். பிறகு, திருச்செந்தூர் அருகிலுள்ள ஒரு மடத்தில் தனக்காக நடைபெற்ற சத்ரு சம்ஹார யாகத்தில் குடும்பத்துடன் ஒரு மணி நேரம் கலந்துகொண்டிருக்கிறார் வேலுமணி. கறுப்பு மையை அவர் நெற்றியில் பூசிய வேத விற்பன்னர்கள், ‘உங்க பிரச்னையெல்லாம் தவிடுபொடியாகிடும்’ என்றிருக்கிறார்கள்.

தப்பிய ‘பூ’ நகராட்சி அதிகாரி!

வேலுமணிக்கு நெருக்கமான சென்னை மாநகராட்சி அதிகாரி நந்தகுமார், ஓய்வுபெற்ற அதிகாரி புகழேந்தி ஆகியோரின் வீடுகளில் ரெய்டு நடைபெற்றது. ஆனால், ‘பூ’ நகராட்சியில் பணிபுரியும் ‘முத்தான’ அதிகாரி ரெய்டிலிருந்து தப்பிவிட்டாராம். நகராட்சி அமைந்திருக்கும் பகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட அமைச்சர் மூலமாக தி.மு.க தலைமையிடத்தில் சரணடைந்து அவர் அப்ரூவராக மாறிவிட்டதாகக் கூறப் படுகிறது. இவர்தான் சென்னை மாநகராட்சி, பேரூராட்சி களில் நடந்த டெண்டர் விஷயங்களை கவனித்துக் கொண்டவராம். அவரைவைத்தே வேலுமணி டீமுக்கு செக் வைக்க திட்டமிட்டிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.