“விலைக்கு வாங்கிய தி.மு.க!” - “காணாமல்போன அ.தி.மு.க!” - முடிவுக்கு வந்த உள்ளாட்சிப் பஞ்சாயத்து

அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ம.க பிரிந்து சென்றதால், அதுவும் ஒருவிதத்தில் எங்களுக்கு வசதியாகிவிட்டது. தேர்தல் அறிவித்த நாள் முதலே, களத்தில் தொண்டர்கள் வேகம் காட்டினர்.
ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஆளுங்கட்சியான தி.மு.க பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. பிரசாரத்துக்கு, தான் செல்லாமலேயே இந்த வெற்றி கிடைத்திருப்பதால், “ஐந்தாண்டுகளில் செய்யவேண்டிய சாதனையை ஐந்து மாதங்களில் செய்ததற்குக் கிடைத்த வெற்றி” என்று புல்லரித்துப் பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் ‘தி.மு.க செய்த பண விநியோகம், வன்முறைகளால்தான் இந்த வெற்றி சாத்தியமானது’ எனக் குற்றம்சாட்டுகிறது அ.தி.மு.க வட்டாரம். அதேநேரத்தில், `கெளரவமான எண்ணிக்கையாவது பெறுவார்கள்’ என எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க மொத்தமாகச் சுருண்டுவிட்டது. இரண்டு முன்னாள் முதல்வர்கள் சுற்றிச் சுழன்று பிரசாரம் செய்தும், அந்தக் கட்சியைக் கரைசேர்க்க முடியவில்லை. இந்த ஒன்பது மாவட்டங்களிலுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில், இரண்டில் மட்டுமே அ.தி.மு.க-வால் வெற்றிபெற முடிந்திருக்கிறது. 138 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றியைத் தட்டிச் சென்றுள்ளது. முதல்வர் அரியணைக்கான கனவிலிருந்த பா.ம.க-வின் பிம்பத்தையும் மொத்தமாக உடைத்திருக்கிறது இந்த உள்ளாட்சித் தேர்தல். ‘இந்தத் தேர்தல் முடிவை வைத்து மட்டும், தமிழக அரசியல் களத்தில் தி.மு.க-வை முன்னிலைப்படுத்திவிட முடியுமா? அ.தி.மு.க., பா.ம.க சுருண்ட பின்னணி என்ன?’ எனப் பல கேள்விகளை இந்தத் தேர்தல் முடிவுகள் உருவாக்கியுள்ளன.
தேர்தல் முடிவுகள் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க மூத்த அமைச்சர் ஒருவர், “பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுங்கட்சி என்கிற அந்தஸ்தை தி.மு.க பெற்றுள்ளது. அதேநேரம் கட்சியில் கீழ்நிலையிலுள்ள நிர்வாகிகள் எந்தப் பதவியிலும் இல்லாமல் இருந்தனர். அவர்களுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போதே, தி.மு.க கணிசமான வெற்றியைப் பெற்றது. அப்போது தேர்தலைச் சந்தித்த 514 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 244 இடங்களிலும், 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 2,095 இடங்களிலும் தி.மு.க வெற்றிபெற்றது. அந்த வெற்றி, தற்போதும் தொடர்கிறது. முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்ற ஸ்டார் முகங்கள் பிரசாரத்துக்குச் செல்லாமலேயே இந்த வெற்றி எங்களுக்குச் சாத்தியமாகியிருக்கிறது.

அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ம.க பிரிந்து சென்றதால், அதுவும் ஒருவிதத்தில் எங்களுக்கு வசதியாகிவிட்டது. தேர்தல் அறிவித்த நாள் முதலே, களத்தில் தொண்டர்கள் வேகம் காட்டினர். மாவட்டவாரியாக அமைச்சர்களுக்குப் பொறுப்புகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. சட்டமன்றத் தேர்தல் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்ந்ததால், கூட்டணிக் கட்சியினருடன் இணக்கமான போக்கு இருந்தது. சில இடங்களில் மட்டும் சீட் கிடைக்காத விரக்தியில் கூட்டணிக் கட்சியினரும், தி.மு.க-வைச் சேர்ந்தவர்களும் தனித்துக் களமிறங்கினார்கள். இதனால், தி.மு.க-வுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. திட்டமிட்ட முறையில் தி.மு.க பணியாற்றியதும், எதிர்க்கட்சிகளை எளிதாகக் கையாண்டதுமே இந்த வெற்றிக்குப் பிரதான காரணம். சரியான தலைமையும் இல்லாமல், திட்டமிடலும் இல்லாததால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க காணாமல்போய்விட்டது” என்றார்.
“விலைக்கு வாங்கிய தி.மு.க!”
வெற்றிக்கான காரணங்களை இப்படி தி.மு.க தரப்பு அடுக்கினாலும், அதைத் தாண்டிய சில விமர்சனங்களும் அ.தி.மு.க-வால் முன்வைக்கப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோதே அறிக்கை வெளியிட்ட அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள், “வரலாறு காணாத வன்முறையையும், ஜனநாயக அக்கிரமங்களையும் தி.மு.க கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. புறவாசல் வழியாக இந்த வெற்றியை தி.மு.க பெற்றிருக்கிறது” என்று காரசாரமாகவே கூறியிருந்தனர். உள்ளாட்சித் தேர்தலின்போது ஆளுங்கட்சியின் கை ஓங்குவதும், எதிர்க்கட்சிகள் திணறுவதும் வழக்கமானதுதான். ஆனால், இந்தமுறை 100 சதவிகித வெற்றி இலக்கை முதல்வர் ஸ்டாலின் கண்டிப்போடு கூறியதால், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சகல வித்தைகளையும் களமிறக்கியிருக்கிறார்கள்.
நம்மிடம் பேசிய அ.தி.மு.க வட மாவட்டச் செயலாளர்கள் சிலர், “ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட தி.மு.க அமைச்சர்கள், சட்டமன்றத் தேர்தலுக்குச் செய்யும் செலவில் முக்கால் பங்கை உள்ளாட்சித் தேர்தலுக்குச் செலவு செய்தனர். ஒரு ஒன்றிய கவுன்சில் வேட்பாளருக்கு 10 லட்சம், மாவட்ட கவுன்சில் வேட்பாளருக்கு 20 லட்சம் ரூபாய் வரை செலவுக்கு தி.மு.க தலைமை கொடுத்தது. இதுபோக, வாக்காளர்களுக்குச் செய்து கொடுத்த ‘வசதி’ வகையறாக்கள் தனி. உதாரணத்துக்கு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு பூத்துக்கு தினமும் 30,000 ரூபாய் வரை தி.மு.க-வினர் பணத்தை இறக்கினார்கள். தென்காசி மாவட்டத்தில் ஒரு ஓட்டுக்கு 500 லட்டுகள் வரை கொடுக்கப்பட்டன. இதுபோக, சில அ.தி.மு.க நிர்வாகிகளுடனும் தி.மு.க-வினர் ‘அண்டர்ஸ்டேண்டிங்’ போட்டுவிட்டனர்.
அ.தி.மு.க-வுக்கு என கணிசமான வாக்குகள் கொண்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலேயே அனைத்து மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் தி.மு.க கூட்டணி தட்டிச் சென்றிருக்கிறது. வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் தி.மு.க வெற்றிபெற மறைமுகமாக அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரே உதவியிருக்கிறார்கள். அனைத்து மட்டங்களையும் பணத்தால் தி.மு.க விலை கொடுத்து வாங்கிவிட்டதால், இந்த வெற்றி அவர்களுக்குச் சாத்தியமாகியிருக்கிறது” என்றனர் கோபமாக.

“காணாமல்போன அ.தி.மு.க!” - காரணம் என்ன?
ஒருபக்கம் தி.மு.க வெற்றிக் கூச்சலிடும்போது, மற்றொருபுறம் அ.தி.மு.க-வில் கோபக் குரல்கள் ஒலிக்கின்றன. செலவுக்குப் பணம் தரவில்லை என்பதில் ஆரம்பித்து, தலைமையில் ஒருங்கிணைப்பு இல்லாதது வரை சகலமும் அ.தி.மு.க-வில் சர்ச்சையாகியிருக்கின்றன. கட்சி நிர்வாகிகளுக்குள் உரசல் ஏற்படும்போதெல்லாம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற வலிமையான தலைவர்களிடமிருந்து, “கட்சிக்குத் தொண்டர்கள்தான் ஆணிவேர். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” என்று அறிவுரைகள் வரும். ஆனால் இன்று, “தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து, கட்சியை வழிநடத்த வேண்டும்” என்று தொண்டர்கள் அறிவுரை சொல்லும் அளவில் இருக்கிறது. “இரட்டைத் தலைமைக்குள் ஏற்பட்ட இந்த மனமாச்சர்யம், கழக நிர்வாகிகளையும் சோர்வடையவைத்ததோடு, உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வைக் காணாமல்போகச் செய்துவிட்டது” என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.
நம்மிடம் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஒருவர், “தேர்தலைச் சந்தித்த மாவட்டங்களில் ஆறேழு பேர்கொண்ட குழுக்களைக் கட்சித் தலைமை நியமித்தது. கட்சி வேட்பாளர்களின் செலவுக்கு உதவுவார்கள் என்பதற்காகவே, அ.தி.மு.க ஆட்சியில் வளமான துறைகளை வைத்திருந்த முன்னாள் அமைச்சர்கள் இந்தக் குழுக்களில் நியமிக்கப்பட்டனர். ஆனால், இவர்கள் யாரும் கடைசி வரை தங்கள் பர்ஸைத் திறக்கவே இல்லை. தேர்தல் நடந்த மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டத்துக்கு வரும்போது, அவருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர்கள், அவர் கிளம்பிச் சென்ற அடுத்த நிமிடமே காணாமல்போய்விட்டார்கள். மாவட்ட அளவில் வேட்பாளர்கள் தேர்விலும் குழப்பம் இருந்தது. தி.மு.க-வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் பம்பரமாகச் சுற்றிப் பணியாற்றிய நேரத்தில், மாஜி அ.தி.மு.க அமைச்சர்கள் அதை வேடிக்கை மட்டுமே பார்த்தனர். ‘தலைவர்களே இப்படி அமைதியாக இருக்கும்போது, நாம் ஏன் களப்பணியாற்ற வேண்டும்?’ என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க தொண்டர்களும் சோர்ந்துவிட்டனர்.
தேர்தலைச் சந்தித்த 1,421 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களில், சுமார் 200 இடங்களை மட்டுமே அ.தி.மு.க வென்றிருக்கிறது. அதாவது, 14 சதவிகித வெற்றியைத்தான் அடைந்திருக்கிறது. மாவட்ட கவுன்சிலர் இடங்களில் விழுப்புரம், செங்கல்பட்டில் மட்டும் தலா ஓரிடத்தைக் கைப்பற்றியிருக்கிறோம். தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களிடம் செலவுக்குப் பணம் கேட்டபோது, ‘நாங்களே கடனில் இருக்கிறோம். எங்ககிட்ட எங்கப்பா காசு?’ என்றுவிட்டனர். சொந்தச் செல்வாக்கிலும், கைக்காசைச் செலவுசெய்து தேர்தல் களத்தில் களமாடியவர்களே ஜெயித்திருக்கிறார்கள். இந்த வெற்றியை அ.தி,மு.க தலைமையின் வெற்றியாக ஒருபோதும் கருத முடியாது” என்றார்.
அ.தி.மு.க-வின் இந்தப் பின்னடைவு, ஒருவகையில் சசிகலா எதிர்பார்த்ததுதான். இந்தச் சூழல் சசிகலாவுக்குச் சாதகமாகியிருக்கிறது. “அக்டோபர் 16-ம் தேதி ஜெயலலிதா சமாதிக்குச் செல்லவிருக்கும் சசிகலா, பத்தாயிரத்துக்கும் அதிகமானோரைக் கூட்டிவிடும் பட்சத்தில், அதைவைத்தே அ.தி.மு.க-வுக்குள் ஒரு கலக்கத்தை உருவாக்கிவிட நிறைய வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
பிம்பம் உடைந்த பா.ம.க!
பெரிய கட்சிகளுக்கு இணையாக, இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே களமிறங்கியது பா.ம.க. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பா.ம.க தொடங்கப்படவில்லை. அடுத்தது தமிழகத்தில் பா.ம.க-வின் ஆட்சிதான். அதற்கான முன்னோட்டம்தான் இந்த உள்ளாட்சித் தேர்தல்” என்று பிரகடனம் செய்தார். தேர்தலைச் சந்தித்த ஏழு மாவட்டங்களில் பா.ம.க-வுக்கு என கணிசமான செல்வாக்கு இருந்ததால், அன்புமணியின் பேச்சுக்கு எதிர்பார்ப்பும் எழுந்தது. பெரிதாக ஊதப்பட்ட பலூன் ஒரு கட்டத்தில் வெடித்துவிடுவதுபோல, பா.ம.க கட்டியமைத்த இந்த பிம்பமும் உள்ளாட்சி முடிவுகளால் நொறுங்கிப்போய்விட்டது.
வட மாவட்டங்களில் வலுவான கட்சியாகத் தன்னை முன்னிறுத்தும் பா.ம.க., மாவட்ட கவுன்சிலர் இடங்கள் எதையும் கைப்பற்றவில்லை. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சீட்களில்கூட, ஐந்து சதவிகித இடங்களைத்தான் கைப்பற்றியிருக்கிறார்கள். அ.தி.மு.க-வினருடன் பா.ம.க-வினர் ‘அண்டர்ஸ்டேண்டிங்’ போட்டுக்கொண்ட இடங்களிலும், தி.மு.க-வினர் உள்ளே புகுந்து அ.தி.மு.க நிர்வாகிகளை வசமாக்கிக்கொண்டதால், மாம்பழம் பழுக்கவில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி, சோளிங்கர், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியங்களிலும், விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர், மரக்காணம், வானூர், வல்லம் ஒன்றியங்களிலும், வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திலும் கவனிக்கத்தக்க வெற்றியை பா.ம.க-வினர் பெற்றிருக்கிறார்கள். மீதமுள்ள இடங்களில் சுமாருக்கும் கீழேதான் ‘மார்க்’ வாங்கியிருக்கிறது அந்தக் கட்சி.
கவனம்பெற்ற விஜய் மக்கள் இயக்கம்!
பா.ம.க-வைப்போல இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களமிறங்கிய நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., தே.மு.தி.க கட்சிகளின் வெற்றி விகிதாசாரம் தி.மு.க-வோடு ஒப்பிடும்போது பஸ்பமாகிவிட்டன. ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு பஞ்சாயத்தைக் கைப்பற்றியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் அருண். இதுபோக, 20-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களையும் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பிடித்திருக்கிறார்கள். இதைத் தாண்டி ஒரு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சீட்டைக்கூட அவர்களால் பெற முடியவில்லை. அ.ம.மு.க-வினரோ, ஐந்து ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் நிலைமைதான் படுமோசம். கட்சி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் எவரும் வெற்றிபெறவில்லை. கட்சியின் கட்டமைப்புகள் கலகலத்துப்போயிருப்பதால் தள்ளாடியிருக்கிறது அக்கட்சி.

இந்தத் தேர்தலில் கவனிக்கத்தக்க வெற்றியை விடுதலைச் சிறுத்தைகள் பெற்றிருக்கிறார்கள். போட்டியிட்ட நான்கு மாவட்ட கவுன்சிலர் சீட்களில், மூன்றில் வெற்றிபெற்றிருக்கிறது அக்கட்சி. அதேபோல, 43 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சீட்களில் போட்டியிட்டு 27 இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் பாராட்டத்தக்க வெற்றியை வி.சி.க அடைந்திருக்கிறது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் வீடு அமைந்திருக்கும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பான்மை இடங்களை அவர் கட்சி கைப்பற்றியிருக்கிறது. இதுபோக, காஞ்சிபுரம் மற்றும் தென்காசியில் தலா ஒரு மாவட்ட கவுன்சிலர் இடத்தையும் ம.தி.மு.க கைப்பற்றியிருக்கிறது. காங்கிரஸ் எட்டு மாவட்ட கவுன்சிலர், 33 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும், பா.ஜ.க எட்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் வெற்றியைச் சுவைத்திருக்கிறார்கள்.
நடிகர் விஜய்யின் ‘விஜய் மக்கள் இயக்கம்’ போட்டியிட்ட 169 இடங்களில் சுமார் 120-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றதாகக் குறிப்பிடுகிறார்கள். 114 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளையும், வானூர் ஒன்றியத்துக்குட்பட்ட எறையூர் பஞ்சாயத்தையும் கைப்பற்றியதாக மார்தட்டுகிறது அந்த இயக்கம்.
மொத்தமாகப் பார்க்கும்போது, இந்த உள்ளாட்சித் தேர்தல் தி.மு.க-வுக்கு ‘பூஸ்ட்’ அளித்திருக்கிறது. வெற்றிக் களிப்பில் விரைவிலேயே நகராட்சி, மாநகராட்சி தேர்தலையும் நடத்தத் தீர்மானித்திருக்கிறாராம் ஸ்டாலின். இந்தத் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகளுக்கு ‘ஷாக்’கை தந்திருப்பதோடு, அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவர்களின் அரசியல் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் பஞ்சாயத்து ஒருவழியாக முடிந்திருக்கும் சூழலில், தோற்றவர்கள் அதற்கான காரணங்களை ஆராயட்டும். ஜெயித்தவர்கள் தங்கள் மீதான விமர்சனத்தைப் பரிசீலனை செய்யட்டும்!