Published:Updated:

இந்தியா பன்முகத்தன்மை வாய்ந்த தேசம்தானா?

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

இந்தியா பல்வேறுபட்ட உணவுகளின் சங்கமம்தான். அதில் நமக்கு ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், இங்கே தொடர்ந்து உணவிலும் மிகப்பெரும் பாகுபாடுகள் தொடர்கின்றன.

இந்தியா பன்முகத்தன்மை வாய்ந்த தேசம்தானா?

இந்தியா பல்வேறுபட்ட உணவுகளின் சங்கமம்தான். அதில் நமக்கு ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், இங்கே தொடர்ந்து உணவிலும் மிகப்பெரும் பாகுபாடுகள் தொடர்கின்றன.

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

“இந்தியாவின் பன்முகத்தன்மையே அதன் வலுவான ஜனநாயகத்தின் அடையாளம். பல்வேறு கலாசாரங்கள், மொழிகள், உணவுகளின் தேசம் இந்தியா. இது ஒரு துடிப்புமிக்க ஜனநாயகம்” - செப்டம்பர் 25 அன்று நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற ஐ.நா-வின் 76-வது பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி பேசிய வார்த்தைகள் இவை. மோடியின் இந்த உரையைக் கேட்டதிலிருந்து அதிலிருந்த சாராம்சத்தை என் மனம் அசைபோட்டபடியே இருந்தது...

இந்தியாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பாரசீகர்கள் உள்ளிட்ட பல்வேறு மதங்களைப் பின்பற்றுகிறவர்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். இந்திய நிலப்பரப்பை அவர்கள் தங்களின் தாயகமாகக் கருதுகிறார்கள். இத்தனை மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி சகோதரர்களாக வாழ்வதுதான் இந்தியாவின் சிறப்பம்சங்களில் ஒன்று. உலகின் பல்வேறு தத்துவங்கள், மதங்கள், கலைகள், இசைகள், வர்த்தகர்கள், மேய்ப்பர்கள், பயணிகளின் வழியே இந்திய நிலப்பரப்பு தன்னை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஓர் அகழாய்வில் நிலத்தின் வெவ்வேறு அடுக்குகளில், வெவ்வேறு பொக்கிஷங்கள் மண்ணுள் புதைந்திருப்பதுபோல, இந்திய வாழ்வில் ஒவ்வோர் அம்சத்திலும், ஒவ்வோர் அசைவிலும் பல்வேறு கலாசாரங்களின் சிறப்பம்சங்கள் வாழ்க்கை முறையாக மாறியிருப்பதை நாம் காண முடியும். இந்திய நிலம் உலகம் முழுவதும் கலாசாரப் பரிமாற்றம் செய்த மண்; அனைவரையும் வரவேற்று உபசரித்த மண். பிரதமர் மோடி ஐ.நா-வில் ஆற்றிய உரையில் கிட்டத்தட்ட இதையேதான் சொன்னார். அவர் அப்படிச் சொன்னாலும், அனைவரையும் உபசரித்து வாழவைத்த நிலமாகத்தான் இந்தியா இன்னும் இருக்கிறதா என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி!

மொழித்திணிப்பு தேவையா?

உலகிலேயே அதிக மொழிகள் பேசுகிறவர்களைக்கொண்ட நாடு இந்தியா. இங்கு 22 அதிகாரபூர்வமான, அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன; 1,635-க்கும் அதிகமான வட்டார வழக்குகளில் மக்கள் இங்கே பேசுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 50 மொழிகள் காணாமல் போயிருக்கின்றன. இந்தியாவின் வட்டார மொழிகள் பலவும் அழிவின் விளிம்பில் உள்ளன. தொடர்ந்து இந்தி எனும் ஒற்றை மொழி, இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளையெல்லாம் மென்று தின்று, செரித்துவிட்டு இன்று தமிழ், வங்கம், மராத்தி உள்ளிட்ட மொழிகளைக் காவு வாங்கத் துடித்துக்கொண்டிருக்கிறது. இந்திக்கும், மனிதர்கள் மத்தியில் புழக்கத்திலேயே இல்லாத சம்ஸ்கிருதத்துக்கும் மத்திய அரசு தொடர்ந்து செலவிடும் தொகையும், அதை அனைவரின்மீதும் திணிக்க மத்திய அரசின் பல்வேறு துறைகளின் மூலம் எடுக்கும் நடவடிக்கைகளும் இந்தத் தருணத்தில் தேவையற்றவை.

இந்தியா பல்வேறு மதங்களின் நாடு என்கிறபோது, இங்கே நாம் அனைத்து மதங்களையும் சமமான அந்தஸ்துடன் அணுகுகிறோமா என்ற கேள்வி சமீபத்தைய வருடங்களில் வலுவாக எழுந்துள்ளது. பொது விடுமுறையான கிறிஸ்துமஸ் தினத்தன்றுகூட ‘Good Governance Day’ என்று அலுவலகம் வைத்த பெருமை இந்த அரசையே சாரும். மத்திய கிழக்கிலுள்ள இஸ்லாமிய நாடுகளின் அதிபர்களுடன் நல்லுறவு. ஆனால், இந்தியாவில் இஸ்லாமிய உடையுடன் ஒருவரைப் பார்த்தால் பயங்கரவாதி என்று அணுகும் போக்கு எத்தகைய விழுமியங்களைக்கொண்டது? மோடி பின்பற்றும் சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்களெல்லாம் இன்று கிறிஸ்தவ பாதிரியார்களைச் சர்வ சாதாரணமாக `பாவாடை’ என்று கொச்சையாக சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் விளிப்பது எத்தகைய தலைக்குனிவை இந்தியா எனும் இந்தப் பெரு நிலத்துக்கு ஏற்படுத்திவருகிறது என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். இந்தியாவில் வாழும் மதச் சிறுபான்மையினர், வரலாற்றின் எந்தக் காலத்திலும் இத்தனை பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்ததில்லை.

இந்தியா பன்முகத்தன்மை வாய்ந்த தேசம்தானா?

உணவிலும் பாகுபாடு!

இந்தியா பல்வேறுபட்ட உணவுகளின் சங்கமம்தான். அதில் நமக்கு ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், இங்கே தொடர்ந்து உணவிலும் மிகப்பெரும் பாகுபாடுகள் தொடர்கின்றன. சுத்தம், அசுத்தம்போலவே சைவ உணவுக்கு எதிராக அசைவ அல்லது மாமிச உணவைத் தொடர்ந்து தடுத்து நிறுத்தும் போக்கு இங்கே நிலவுகிறது. இந்த நிலத்தில் வாழும் எளியவர்களின் ஊட்டச்சத்துக்கான ஒரே வழி மாமிசம் உண்ணுதல்தான். இந்தியாவில் கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் மாட்டுக்கறியைவைத்து மட்டும் எத்தனை மனிதர்கள் நடுரோட்டில், முச்சந்தியில் வைத்து கொலை செய்யப்பட்டார்கள்! அவர்களை அடித்துக் கொலை செய்யும் காட்சிகளைக் காணொலிகளாக எடுத்து பெருமிதத்துடன் இந்தியாவில் யார் பகிர்ந்துவருகிறார்கள் என்பதைக் கொஞ்சம் உங்கள் மனக் கண்களில் நிறுத்திப்பாருங்கள்.

தமிழக கவர்னர் மாளிகையிலேயே ராஜ்பவனின் பணியாளர்கள் அனைவரும் சைவ உணவைத்தான் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டதில் தொடங்கி, கிடைக்கும் இடைவெளிகளிலெல்லாம் சைவ உணவு பிரசாரத்தை, திணிப்பைக் கூச்சமின்றி செய்துவருகிறார்கள். இது ஒருபுறமிருக்க, `உலகம் முழுவதும் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்வதில் இந்தியா உலகின் நம்பர் 1’ என்ற அந்தஸ்தை, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசிலுடன் போட்டி போட்டு தொடர்ந்து வென்றுவருகிறது. இந்தியாவிலிருந்து மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்யும் பெரும்பாலான நிறுவனங்களையும் வசதிபடைத்த இந்துக்கள்தான் நடத்திவருகிறார்கள் என்பதை இணையத்தில் உலவினால் நீங்களே அறியலாம்.

இந்தியாவில் காலங்காலமாக மன்னர்களின் ஆட்சிதான் நடைமுறையில் இருந்தது. பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோதுதான் `ஜனநாயகம்’ என்ற சொல் நமக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அந்தச் சொல்லும்கூட அவர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கி, கிளம்பிய பிறகு பாபா சாகேப் அம்பேத்கர் எனும் இந்திய அரசியல் அமைப்பின் தந்தையால்தான் நடைமுறைக்கு வந்தது. அந்த மேதை இல்லையெனில், இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரமும் சமத்துவமும் வெறும் கனவாகவே போயிருக்கும். அதுமட்டுமல்ல... அம்பேத்கர் இல்லையெனில் நாம் இன்று அனுபவிக்கும் கல்வி, வாக்குரிமை, சொத்துரிமை, பெண் சுதந்திரம், இட ஒதுக்கீடு எதுவும் கிடைத்திருக்காது என்பதுதான் உண்மை.

இந்தியா பன்முகத்தன்மை வாய்ந்த தேசம்தானா?

இந்தியாவில் இந்து மதம் தோற்றுவித்த சாதி எனும் கொடிய நடைமுறை அடிப்படையிலேயே ஜனநாயகத்துக்கு நேர் எதிரானது. மனிதர்களை மனிதர்களாக மதிக்கக் கூடாது என்பதுதான் சாதிய முறையின் அடிப்படை விதி. மனிதர்களை அவர்களின் பிறப்பின் அடிப்படையில்தான் மதிப்பிட வேண்டும் என்கிற வகையில் ஆயிரம் ஆண்டுகளாக இங்கே மனிதர்கள் ஊர் - சேரி எனப் பிரிந்துதான் வாழ்கிறார்கள்; மனிதர்கள்மீது சக மனிதர்கள் தீண்டாமை எனும் கொடூரமான நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். சாதியை மெல்ல மெல்ல விமானங்களில் ஏற்றி, இந்தியர்கள் குடியேறிய பல நாடுகளில்கூட இன்று தீண்டாமையின் நவீன வடிவங்கள் உருப்பெற்றுவிட்டன. இந்தியாவில் ஜனநாயகம் மலர்ந்ததால் மட்டுமே இன்று தலித்துகளும் பழங்குடிகளும் கோயிலுக்குள்ளும் கல்விச் சாலைகளுக்குள்ளும் நுழைய முடிந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

`இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி’ என்பதை உலக சாதனையாக மார்தட்டுகிறார்கள். ஒருவேளை உச்ச நீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, கடுமையான வார்த்தைகளில் தனது தீர்ப்பை வழங்கியிருக்காவிட்டால் அதுவும் கிடைத்திருக்காது; இந்த நாட்டின் ஏழை, எளியவர்கள் இந்தத் தொற்றை எதிர்கொள்ள நாதியற்று இருந்திருப்பார்கள்.

இந்தியாவில் இருந்த ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சம் செல்லரிக்கப்பட்டுவருகிறது. குதிரைப் பேரங்களையும், எதிர்க்கட்சிகளை மொத்த விலைக்கு வாங்குவதையும் இன்றைய அரசியல் நடைமுறையாகவே பா.ஜ.க மாற்றிவிட்டது. மாநிலக் கட்சிகளை மிரட்டுவது, கட்சிக்காரர்கள் மீது மத்திய அரசின் பல்வேறு துறைகளைக்கொண்டு ரெய்டு நடத்துவது என அடியாள் வேலை பார்த்துவருவது ஜனநாயகத்துக்குப் பெரும் கேடும் இல்லையா!

எது நமது பன்முகத்தன்மை?

காதலர் தினத்தன்று காதலர்கள்மீது வன்முறையை ஏவுவது, அவர்களுக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைப்பதெல்லாம் இந்தியாவின் பன்முகத்தன்மையான வரலாற்றின் மீதான கரும்புள்ளிகள் இல்லையா? பிள்ளையார் ஊர்வலங்கள், மசூதிகளின் வழியே சென்று கலவரம் செய்வது இந்தியாவின் பன்முகத்தன்மையான வரலாற்றின் மீதான கரும்புள்ளிகள் இல்லையா? ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும் மக்கள் மாட்டுக்கறியை சாப்பிட்டபடி தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்த நேரத்தில் இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டு மாமிசம் உண்ணக் கூடாது என்கிற அறிவுரைகள் வழங்கப்பட்டது ஆட்சியாளர்களின் சைவ அஜெண்டாவின் நீட்சி அல்லவா?

இந்தியா பன்முகத்தன்மை வாய்ந்த தேசம்தானா?

இந்தியாவில் பல்வேறு கலாசாரங்கள், மொழிகள், உணவுகள் உள்ளிட்ட மதிப்பீடுகள் சமமாக மதிக்கப்பட்டு, இந்தியாவின் பன்முகத்தன்மை உயர்த்திப் பிடிக்கப்பட்டால் அது நல்லது. உங்கள் ஆட்சியில் அவை மலர்ந்தால், அந்தத் திசையில் நீங்கள் சென்றால் இந்திய தேசத்துக்கே அது பெருமிதமாக இருக்கும். நீங்கள் ஆட்சிக்கு வரும் முன்பும்கூட இந்த ஜனநாயக அத்துமீறல்களெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைவில் நடைபெற்றனதான்... மறுப்பதற்கில்லை. ஆனால், நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இவற்றையெல்லாம் அங்கீகரிக்கப்பட்ட செயல்களாக பகிரங்கமாகவே உங்கள் கட்சியினர் செய்கின்றனர். அப்படிச் செய்பவர்களே கட்சியில், ஆட்சியில் பதவி பெறுகிறார்கள். இவையெல்லாம் இந்தியாவின் சகிப்புத்தன்மையை வளர்க்கும் செயல்களா?

உலக அரங்கில் ஒன்றைப் பேசிவிட்டு, ஊருக்குள் நுழைந்ததும் அதற்கு நேர் எதிரான அரசியல் செய்தீர்கள் எனில் வரலாறு ஒருபோதும் உங்களை மன்னிக்காது!