Published:Updated:

பிஎம் கேர்ஸ் பிரைவேட் சொத்தா? - அரசியல் தலைவர்களுக்கு ஆழ்ந்த புரிதல் இல்லையா?

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

எந்த அமைப்பாக இருந்தாலும், அதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.

பிஎம் கேர்ஸ் பிரைவேட் சொத்தா? - அரசியல் தலைவர்களுக்கு ஆழ்ந்த புரிதல் இல்லையா?

எந்த அமைப்பாக இருந்தாலும், அதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி
கடந்த இரு அத்தியாயங்களில் பிஎம் கேர்ஸ் மற்றும் பி.எம்.என்.ஆர்.எஃப் இந்த அமைப்புகளின் உருவாக்கம், செயல்பாடுகள், வித்தியாசங்கள், ஒற்றுமைகள், அரசியல் பின்னணி எல்லாவற்றையும் பார்த்தோம்.

கூடுதலாக, மோடி ஆட்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் பிஎம் கேர்ஸின் கட்டாய நன்கொடை வசூல் ஏற்படுத்திய சர்ச்சைகளையும் பார்த்தோம். சரி, இது குறித்து என்ன சொல்கிறார்கள் எம்.பி-க்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள்? தொடர்ந்து அவர்களின் பார்வையிலிருந்தே இந்த அமைப்பின் கூறுகளை அலசுவோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சு.வெங்கடேசன், மதுரை எம்.பி., சி.பி.எம்

``நாடாளுமன்றம், மத்திய தணிக்கைக்குழு என எந்த அமைப்பின் சட்ட வரைமுறைக்கும் வராத புதிய வடிவத்தை உருவாக்கியிருக்கிறார்கள். மிகப்பெரிய அதிகார துஷ்பிரயோகம் இது. `எம்.பி-க்களின் நிதியைப் பேரிடர் காலங்களில் அரசு நிதியமைப்புகளுக்கு வழங்கலாம்’ என்று விதி இருக்கிறது. ஆனால், பிஎம் கேர்ஸ் பொதுத்துறை அமைப்பு இல்லை என்கிறபோது, அதற்கு எப்படி எம்.பி-க்கள் நிதி வழங்க முடியும்? கொரோனாவை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு இதைச் செயல்படுத்தியுள்ளனர்.’’

பி.ஆர்.நடராஜன், கோவை எம்.பி., சி.பி.எம்

``ஏற்கெனவே, 2019-20 நிதியாண்டுக்கு எங்களுக்கு இரண்டரை கோடி ரூபாய் மட்டுமே தொகுதி மேம்பாட்டு நிதி வந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது, `மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நிதியில்லை’ என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இயல்புநிலை திரும்பியவுடன் இது தொடர்பாக சட்டப் போராட்டம் நடத்துவோம்.’’

சு.வெங்கடேசன் - பி.ஆர்.நடராஜன் - திருநாவுக்கரசு - ஜோதிமணி
சு.வெங்கடேசன் - பி.ஆர்.நடராஜன் - திருநாவுக்கரசு - ஜோதிமணி

திருநாவுக்கரசு, திருச்சி எம்.பி., காங்கிரஸ்

``எனக்குத் தெரிந்து ஏற்கெனவே இருக்கும் தேசிய நிவாரண நிதி அமைப்பில் பிரதமருக்கே அனைத்து அதிகாரமும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, எதற்காக ஒரு புதிய நிதியத்தை உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. எந்த அமைப்பாக இருந்தாலும், அதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.’’

ஜோதிமணி, கருர் எம்.பி., காங்கிரஸ்

``பி.எம்.என்.ஆர்.எஃப் வரவு செலவு கணக்கு விவரங்கள் இணையதளத்தில் வெளிப்படையாக உள்ளன. பிஎம் கேர்ஸில் அப்படி இல்லை. எதற்காக இவ்வளவு ரகசியம், அந்த அமைப்புக்குக் கிடைத்த பணம் மக்களுக்குச் செல்கிறதா, பா.ஜ.க-வுக்கு செல்கிறதா அல்லது நாடு முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டமா அது? ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையே மிகப்பெரிய ஊழல்’ என்றார் மன்மோகன் சிங். அதேபோல, இதுவும் ஊழலா என்ற சந்தேகம் வலுக்கிறது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கே.டி.ராகவன், மாநிலச் செயலாளர், பா.ஜ.க

ஏற்கெனவே இருந்த பி.எம்.என்.ஆர்.எஃப் அமைப்பிலும் பிரதமர்தான் முடிவு எடுக்க முடியும். காங்கிரஸ் கட்சித் தலைவருக்கும் அதிகாரம் இருந்தது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தாலும், அவர்களின் கையே ஓங்கும் அளவுக்கு விதிகளை வைத்திருந்தனர். சொல்லப்போனால், ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே அந்த அமைப்பு இருந்தது. அதற்கு மாற்றாகத்தான் பிஎம் கேர்ஸ் வந்துள்ளது.

கே.டி.ராகவன் - வானதி சீனிவாசன் - இல.கணேசன்
கே.டி.ராகவன் - வானதி சீனிவாசன் - இல.கணேசன்

வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர், பா.ஜ.க

கொரோனா எதிர்கொள்ளலுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்டதுதான் பிஎம் கேர்ஸ். பேரிடர் காலங்களில் இது போன்ற நிதியம் தொடங்குவதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம் உள்ளது. பிஎம் கேர்ஸின் அனைத்து வரவு செலவுகளையும் மத்திய தணிக்கைக்குழு ஆடிட் செய்ய முடியும். அது நாடாளுமன்றத்தின் கவனத்துக்கும் சென்றுவிடும். எனவே, அது குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

இல.கணேசன், ராஜ்யசபா எம்.பி., பா.ஜ.க

இது போன்ற பேரிடர் காலங்களில் எம்.பி-க்களின் தொகுதி நிதியை நிறுத்துவதற்கு விதிகள் இருக்கின்றன. அரசாங்கம் நல்ல நோக்கத்துக்காகக் கொண்டுவந்த திட்டத்தை விமர்சிப்பது சரியல்ல. இந்தத் திட்டத்தை பற்றி ஸ்டடி செய்துவிட்டு விரிவாகப் பேசுகிறேன்.

மொத்தத்தில் இல.கணேசன் சொல்வதுதான் உண்மை. பி.எம்.என்.ஆர்.எஃப் மற்றும் பிஎம் கேர்ஸ் பற்றி மக்கள் பிரநிதிகளுக்கே ஆயிரம் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பி.எம்.என்.ஆர்.எஃப் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வருமா... வராதா? மத்திய தணிக்கைக்குழு ஆடிட் செய்ய முடியுமா... முடியாதா?’ இப்படிப் பலவற்றையும் ஸ்டடி செய்ய வேண்டிய சூழலில்தான் மக்கள் பிரதிநிதிகளும் உள்ளனர். அப்படியென்றால், மக்களின் நிலை... பரிதாபமே!

தலைவர்களுக்குத் தேவை ஆழ்ந்த புரிதல்!

மேற்கண்ட அனைவரிடமும் பேசியபோது ஒன்று மட்டும் புரிந்தது. பலருக்கும் பி.எம்.என்.ஆர்.எஃப் மற்றும் பிஎம் கேர்ஸ் பற்றிய ஆழ்ந்த புரிதல் இல்லை. காங்கிரஸ் கட்சியின் எம்.பி-க்கள் சிலர், “பி.எம்.என்.ஆர்.எஃப் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வரும். மத்திய தணிக்கைக்குழு ஆடிட் செய்ய முடியும்” என்றே சொன்னார்கள். ஆனால், “அப்படியெல்லாம் இல்லை; மத்திய தணிக்கைக்குழு ஆய்வு செய்ய முடியாது” என்று நாம் தகவல் தெரிவிக்க வேண்டியிருந்தது. பி.எம்.என்.ஆர்.எஃப்-க்கு காங்கிரஸ் தலைவர் உறுப்பினராக இருக்கும் விதியை ராஜீவ் காந்தி 1985-ம் ஆண்டு கலைத்த விஷயமே தெரியாது என்கிறார் பா.ஜ.க உறுப்பினர் ஒருவர். சி.பி.எம் தரப்பிலும் “சில விஷயங்கள் தெரியவில்லை; விசாரிக்க வேண்டும்” என்கிறரீதியிலேயே பதில் வந்தது.

பிஎம் கேர்ஸ் பிரைவேட் சொத்தா? - அரசியல் தலைவர்களுக்கு ஆழ்ந்த புரிதல் இல்லையா?

இவற்றையெல்லாம் பார்க்கும்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பி.எம்.என்.ஆர்.எஃப் அமைப்பும் சரி... தற்போதைய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் பிஎம் கேர்ஸ் அமைப்பும் சரி... மக்களுக்கு மட்டுமல்லாமல் மக்கள் பிரதிநிதி களுக்கும் பிடிபடாத மர்மப் பிரதேசங்களாகவே இருந்தன; இருக்கின்றன.

கிட்டத்தட்ட 72 ஆண்டுகளாக பி.எம்.என். ஆர்.எஃப் நிதியத்தை அரசு அமைப்பு போன்ற தோற்றத்தை உருவாக்கி, இப்போது பா.ஜ.க செய்துகொண்டிருக்கும் அனைத்து வேலைகளையும் காங்கிரஸும் செய்திருக்கிறது. 1948 தொடங்கி 1985-ம் ஆண்டுவரை காங்கிரஸ் தலைவரை அந்த அமைப்பில் உறுப்பினராக வைத்திருந்தது அந்தக் கட்சி. இதுதானா, காங்கிரஸ் கட்சியின் அரசியல் அறம்?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ‘பிஎம் கேர்ஸ் பொதுத்துறை அமைப்பு இல்லை’ என்று பிரதமர் அலுவலகம் கூறுகிறது. ஆனால், மத்திய அமைச்சகங்களோ, ‘இது அரசு கொண்டுவந்த நிதியம்’ என்று சி.எஸ்.ஆர் விலக்கு, ஊழியர்கள் சம்பளம் பிடிப்பு போன்ற அரசு ஆவணங்களிலேயே குறிப்பிட்டுக் குழப்புகின்றனர்.

மாநிலங்களுக்கு நிதி கிடைக்குமா?

இன்னொன்று, மாநிலங்களின் உரிமை தொடர்பான விஷயம். ஏற்கெனவே, பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அதிகாரங்கள் மாநில அரசிட மிருந்து பறிக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், மாநில அரசுகளின் பேரிடர் அமைப்புகளுக்குச் செல்லும் நன்கொடையையும் கேள்விக்குறியாக்கி யிருக்கிறது பிஎம் கேர்ஸ்.

`பிஎம் கேர்ஸுக்கு சி.எஸ்.ஆர் விதிமுறைகள் பொருந்தும்’ என்ற அறிவிப்பு வரும்போதே, ‘மாநிலங்களில் பேரிடர் நிதிகளுக்கு சி.எஸ்.ஆர் பொருந்தாது’ என்ற உத்தரவு போடப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால், ‘பெரு நிறுவனங்கள் மூலம், மாநில அரசுக்குக் கிடைக்கும் நிதியை மத்திய அரசு தடுக்கிறது’ என்று புகார் சொல்லப் பட்டது. ஆனால், `பிஎம் கேர்ஸ், பி.எம்.என்.ஆர்.எஃப் மற்றும் மாநில அரசின் நிதியங்களுக்கும் சி.எஸ்.ஆர் பொருந்தும்’ என்று மத்திய அரசு சொல்லியுள்ளது. ஆனால், மத்திய அரசு நிதியம் இருக்கும்போது, மாநில அரசுக்கு நிதி கொடுக்க யார் முன்வருவார்கள்? `இது ஒருவிதத்தில் மாநில அமைப்புகளுக்குக் கிடைக்கும் சி.எஸ்.ஆர் நிதியைத் தடுக்கும் செயல்தான்’ என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

பிஎம் கேர்ஸ் பிரைவேட் சொத்தா? - அரசியல் தலைவர்களுக்கு ஆழ்ந்த புரிதல் இல்லையா?

உதாரணமாக, ‘கோல் இந்தியா’ நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ளது. ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அந்த நிறுவனம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பிஎம் கேர்ஸுக்கு 221 கோடி ரூபாய் நிதியை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது. இதனால், அந்த நிறுவனம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மாநில நிதி அமைப்புகளுக்கு சி.எஸ்.ஆர் நிதி கிடைக்காது.

இப்படி எத்தனையோ பிரச்னைகள்... ஆனால், கடந்த காலங்களிலும் இப்போதும் கேள்விகள் கேட்டு, ஆய்வுகள் செய்து மக்கள் மன்றங்களில் அம்பலப்படுத்தியிருக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளும் இதைக் கேள்விகள் கேட்காமல், பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தாமல் ஏனோ வாய்மூடி இருந்துவிட்டார்கள். இனியேனும் இந்த நிலை மாற வேண்டும். ஏனெனில், இந்தியா மக்களால் ஆளப்படும் நாடு.

“மேல்முறையீடு செய்திருக்கிறேன்”

பிஎம் கேர்ஸ் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டவர், பெங்களூர் முதுகலை சட்டக் கல்லூரி மாணவர் கந்துகுரி சூர்யா  ஹர்ஷா தேஜா. அவரிடம் பேசினோம். “முக்கிய விஷயங்களை ஆர்.டி.ஐ மூலம் கேட்பேன். அப்படித்தான் பிஎம் கேர்ஸ் குறித்தும் கேட்டேன். ஆனால், ‘பிஎம் கேர்ஸ் பொதுத்துறை அமைப்பு இல்லை. எனவே, தகவல் வழங்க முடியாது’ என்று மறுத்துவிட்டனர். பிரதமர் தொடங்கி பிஎம் கேர்ஸிலுள்ள மத்திய அமைச்சர் களெல்லாம் நம் அரசமைப்பின் அங்கங்கள். பிஎம் கேர்ஸுக்கு அவர்கள் பயன்படுத்துவது, அரசின் இணையதளம். தேசியச் சின்னத்தையும் பயன்படுத்துகிறார்கள். ஒரு தனியார் அறக்கட்டளை அமைப்பு எப்படி இதையெல்லாம் செய்ய முடியும்? இது தொடர்பாக மேல்முறையீடு செய்திருக்கிறேன். அதன் வரவு, செலவு கணக்கு விவரங்களைத் தெரிந்துகொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்” என்றார் உறுதியான குரலில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism