Published:Updated:

சிறை அரசியல்! - ‘பீடி’ கரன்ஸி... ‘சிறப்பு’ குத்தகை... உணவு ஊழல்... உரிமை மீறல்கள்...

 சிறை அரசியல்
பிரீமியம் ஸ்டோரி
சிறை அரசியல்

சிறையின் அருகிலிருக்கும் ஒரு கடையில், கைதியின் உறவினர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு, சிறைக்குள் இருப்பவரின் விவரங்களைத் தெரிவித்துவிட்டால் போதும்.

சிறை அரசியல்! - ‘பீடி’ கரன்ஸி... ‘சிறப்பு’ குத்தகை... உணவு ஊழல்... உரிமை மீறல்கள்...

சிறையின் அருகிலிருக்கும் ஒரு கடையில், கைதியின் உறவினர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு, சிறைக்குள் இருப்பவரின் விவரங்களைத் தெரிவித்துவிட்டால் போதும்.

Published:Updated:
 சிறை அரசியல்
பிரீமியம் ஸ்டோரி
சிறை அரசியல்

சிறை என்பது குற்றவாளிகளைச் சீர்திருத்தும் இடமாகவும், நல்வழிக்குத் திசைகாட்டும் பள்ளியாகவும் இருக்க வேண்டும். ஆனால், அதைப் பணம் கொழிக்கும் வியாபாரத்தலமாக ஒருசிலர் மாற்றியிருப்பதால், சிறைத்துறைக்குள் ஊழல் புரையோடிப்போயிருக்கிறது. இந்த ஊழல் பெருச்சாளிகளால், பீடியில் ஆரம்பித்து செல்போன்கள் வரை சகலமும் சிறைக்குள் தாராளமாகப் புழங்குகின்றன. ஒருசில தருணங்களில், நேர்மையான அதிகாரிகள் மீது பொய்ப் புகார்களும் எழுப்பப்பட்டு, அவர்களை வீழ்த்தும் அரசியலும் நடக்கிறது. கைதிகளுக்கு உணவு வழங்கப்படுவதில் நடைபெறும் முறைகேடு தொடங்கி, எதிர்த்து பேசுபவர்களுக்கு வழங்கப்படும் ‘20-வது வார்டு’ ட்ரீட்மென்ட் வரை சிறைக்குள் மனிதத் தன்மையற்ற அத்துமீறல்கள் அதிகரித்திருப்பதாக நம் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை அடிப்படையாக வைத்து தமிழகத்திலுள்ள ஒன்பது மத்தியச் சிறைச்சாலைகளில் விசாரணையை ஆரம்பித்தது ஜூ.வி டீம். முன்னாள் கைதிகள், சிறைத்துறை ஊழியர்கள், ஜெயிலர், வார்டன் எனப் பல்வேறு தரப்பினரிடமும் விசாரித்தோம். கிடைத்த தகவல்களெல்லாம் பகீர் ரகம்!

பிள்ளையார்சுழி போட்ட பாளையங்கோட்டை மாடல்!

சிறையில் நடக்கும் எந்த வேலைக்கும் பீடிதான் கரன்ஸி. பீடி பண்டல்களே சிறையின் பெரும் அதிகாரமாக விளங்குகின்றன. இந்த நடைமுறை, பாளையங்கோட்டையிலிருந்துதான் முதலில் சிஸ்டமானது என்று சொல்கிறார்கள் பல சிறைகளைப் பார்த்த முன்னாள் கைதிகள் சிலர். “தமிழகம் முழுவதும் இப்போது புழக்கத்திலிருக்கும் இந்த ‘பீடி கரன்ஸி’ மாடல் வெகுகாலமாக இருப்பதுதான். என்றாலும், ஒன்பது வருடங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை சிறையின் மூத்த அதிகாரியாக வந்த ஒருவர்தான் இதை முறைப்படுத்தி ஒரு ‘சிஸ்டமாக’ அங்கு கொண்டுவந்தார். அதுவரை தலைமைச் சிறைக் காவலர்களாக இருப்பவர்களே பீடி விற்பனையைப் பார்த்துவந்தனர். அந்த நடைமுறையை மாற்றி, ‘பீடி விற்பனையைச் சிறைக் காவலர்கள் குத்தகை மூலம் எடுக்க வேண்டும்’ என்ற நடைமுறையை அந்த அதிகாரி உருவாக்கினார். இந்த மாடல்தான் இப்போது தமிழகம் முழுவதும் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் பணம் கொட்டுவதால், இந்தச் சட்டவிரோத மாடலை மாற்றவோ ஒழிக்கவோ யாரும் விரும்புவதில்லை.

சிறையின் அருகிலிருக்கும் ஒரு கடையில், கைதியின் உறவினர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு, சிறைக்குள் இருப்பவரின் விவரங்களைத் தெரிவித்துவிட்டால் போதும். சம்பந்தப்பட்ட கைதிக்குப் பணத்துக்கேற்ற சிறப்பு உபசரிப்பு சிறைக்குள் கிடைத்துவிடும். இந்த நடைமுறை பாளையங்கோட்டைக்கும் பொருந்தும். சிறைக்குள் வி.ஐ.பி கைதி வந்துவிட்டால், அதிகாரிகளுக்குக் கொண்டாட்டம்தான். அந்த வி.ஐ.பி-க்குச் சிறப்பு உணவு, தனியறை வசதி என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ரேட் விதித்து வசூல் செய்துவிடுவார்கள். இது எல்லா ஜெயில்களிலும் நடைமுறையில் இருக்கிறது.

 சிறை அரசியல்! - ‘பீடி’ கரன்ஸி... ‘சிறப்பு’ குத்தகை... உணவு ஊழல்... உரிமை மீறல்கள்...

பாளையங்கோட்டைச் சிறையில் ஒரு நாள் சிறப்பு உணவுக்கு 1,000 ரூபாயும், ஒரு நாள் தனி அறைக்கு 5,000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. சென்னை புழல் சிறையில்தான் ரேட் அதிகம். சிறப்பு உணவுக்கு 2,000 ரூபாயும், ஒரு நாள் தனி அறைக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரை ரேட் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் புழல் சிறைக்குள் வந்திருக்கும் அரசியல் புள்ளி, ஆன்மிகப் பிரமுகர் இருவரிடமிருந்து மட்டும், பல லட்சங்கள் இதற்காக வசூலிக்கப் பட்டிருக்கின்றன” என்றனர்.

அதிரவைக்கும் உணவு ஊழல்... கூலிப்படைகளின் கேன்டீன்!

“கடலூர் மத்திய சிறைச்சாலையின் ஊழல் வரலாறு தொடங்குமிடம் உணவுக்கூடம்தான்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். நம்மிடம் பேசிய இந்தச் சிறையின் வார்டன்கள் சிலர், “கடலூர் சிறையில் 700 கைதிகள் இருக்கிறார்கள். சிறைத்துறை விதிப்படி, ஒரு கைதிக்கு ஒரு வேளைக்கு 100 கிராம் காய்கறிகள் கொடுக்க வேண்டும். அதன்படி கணக்கிட்டால் ஒரு வேளைக்கு 70 கிலோ காய்கறிகள் வீதம் மூன்று வேளைக்கு 210 கிலோ காய்கறிகள் சமைக்கப்பட வேண்டும். ஆனால், மூன்று வேளைக்கும் சேர்த்தே 50 கிலோ காய்கறிகள்தான் சமைக்கப்படுகின்றன. சிறைக்குள்ளிருக்கும் பாதிக்கும் மேற்பட்ட கைதிகள், சிறைக் காவலர்களால் நடத்தப்படும் தனி கேன்டீனில் பணம் கொடுத்து சிக்கன், மட்டன் என விருப்பத்துக்கு ‘ஆர்டர்’ செய்து சாப்பிடுகிறார்கள். இதனால், அளவு குறைவாகச் சமைத்துவிட்டு 700 பேருக்குச் சமைத்ததாகக் கணக்கெழுதி, பொருள்களைச் சுருட்டிக்கொள்கிறார்கள் சில சிறை அதிகாரிகள். இந்த உணவு ஊழல்தான் கடலூர் சிறையைக் கலங்கடிக்கிறது.

இந்த கேன்டீன் முறை, கூலிப்படைகளின் நெட்வொர்க் விரிவடையவே வழிவகுக்கிறது. கூலிக்காக ஆதாயக் கொலைகளைச் செய்துவிட்டு சிறைக்குள் செல்பவர்களுக்கு, வெளியே இருக்கும் பார்ட்டிகள் சிறை அதிகாரிகள் சிலரின் அக்கவுன்ட்டில் பணம் போடுகிறார்கள். அதைக் கைதியின் கணக்கில் வரவு வைத்துக்கொண்டு, அந்தக் கைதி கேன்டீனில் சாப்பிடும்போது கழிக்கப்படுகிறது. சிறிய குற்றங்களால் அடிக்கடி சிறைக்கு வரும் கைதிகள் இதையெல்லாம் பார்த்துவிட்டு, ருசியாகச் சாப்பிடவும், சிறைக்குள் சொகுசாக வாழவும் ஆசைப்படுகின்றனர். சிறைக்குள்ளேயே தங்களுக்குத் தகுந்தாற்போல, நல்ல செழிப்பான ஏதாவதொரு கூலிப்படையில் சேர்ந்து விடுகிறார்கள். இதன் மூலம், கூலிப்படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த உணவு ஊழல் மற்றும் ‘சட்டவிரோத’ கேன்டீன் நடவடிக்கைகளால், கடலூர் சிறை கூலிப்படைகளின் ஹாஸ்டலாக மாறிக்கிடக்கிறது” என்று வேதனைப்பட்டனர்.

 சிறை அரசியல்! - ‘பீடி’ கரன்ஸி... ‘சிறப்பு’ குத்தகை... உணவு ஊழல்... உரிமை மீறல்கள்...

`கேள்வி கேட்காதே...’ மிரட்டும் 20-வது வார்டு ட்ரீட்மென்ட்!

“சாக்கடையைவிட மோசமாக இருக்கும் அந்த 20-வது வார்டு அறைக்குள் யாருமே இருக்க முடியாது. தங்களை எதிர்த்து பேசும் கைதிகள் யாராக இருந்தாலும், அவர்களை அந்த அறைக்குள் அடைத்து சித்ரவதை செய்வதற்கென ஒரு குரூப்பே திருச்சி சிறைக்குள் இருக்கிறது...” என்று கொதிப்புடன் திருச்சி மத்திய சிறைச்சாலையின் விவரங்களை நம்மிடம் கொட்டினார் சமூக ஆர்வலர் கரிகால் சோழன்.

“ரிமாண்ட் கைதியாக வருபவர்களைக்கொண்டு பாத்ரூமைக் கழுவச் சொல்கிறார்கள். எதிர்த்து கேள்வி கேட்பவர்களை, அன்று இரவே ‘டவர் பிளாக்’கில் ஏற்றிவிடுவார்கள். டவர் பிளாக் என்றால், கைதிகளை அடிப்பதற்கு என்றே சர்ச்சைக்குரிய சாமியார் பெயர்கொண்ட ஓர் அதிகாரியால் உருவாக்கப்பட்ட அறை. சிறைக்குள் தனக்கென மூன்று குரூப்பை வைத்திருக்கும் அந்த அதிகாரி, சிறையையே ஆட்டிப்படைக்கிறார். டவர் பிளாக் ட்ரீட்மென்ட்டையும் மீறி எதிர்த்து யாராவது கேள்வி கேட்டால், உயர்ந்தபட்ச தண்டனையாக `20-வது வார்டு’ என்று சொல்லப்படும் ஓர் அறைக்குள் அடித்து, உதைத்து ஜட்டியோடு போட்டுவிடுவார்கள். ‘கொசுப்பண்ணை’ என்று திருச்சி கைதிகளால் அழைக்கப்படும் அந்த வார்டில், ஒரு நாள் இருந்தால் போதும். ஒரு மனிதன் உயிரோடு நரகத்தைப் பார்ப்பதற்குச் சமம்” என்றார். “இந்த மனித உரிமை மீறல்களோடு, கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்களிடம் 100 ரூபாய் வசூலிப்பது, நீதிமன்றத்துக்குக் கைதிகள் சென்று திரும்பும்போது அவர்கள் மூலம் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட பொருள்களைக் கடத்திவருவது என திருச்சி சிறைக்குள் நடைபெறும் முறைகேடுகள் ஏராளம்” என்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.

வேலூர் மத்திய சிறைச்சாலையில், கடந்த ஜூலை மாத இறுதியில், 50 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலத்தைக் கைப்பற்றிய சிறைக் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, அதைக் கைதிகளிடம் சப்ளை செய்த தலைமைக் காவலர், முதல்நிலைக் காவலர், வார்டன் ஆகிய மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார். ஆனாலும், கஞ்சா போதையில் கைதிகள் மிதப்பது தொடரத்தான் செய்கிறது. ஆண்கள் சிறையிலுள்ள 700 கைதிகளில், 500 பேருக்கான உணவுப் பொருள்களை மட்டுமே வாங்குகிறார்களாம். மீதிப் பொருள்கள் வழக்கம்போல ‘ஸ்வாஹா’தான் என்கிறது சிறைத்துறை வட்டாரம். இந்த முறைகேடுகளுக்குப் பின்னால் வேலூர் சரக சிறைத்துறை உயரதிகாரி ஒருவர் இருப்பதாகக் கூறப்படுகிறது. நேர்மையான அதிகாரிகளின் நடவடிக்கைகள் அவ்வப்போது பாய்ந்தாலும், அந்த உயரதிகாரியின் ஆதரவு இருப்பதால், சிறைக்குள் நடக்கும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லையாம்.

கரிகால் சோழன்
கரிகால் சோழன்

வட்டிக்குவிடும் காவலர்... சிறைக்குள் மன்னர் ஆட்சி!

மதுரை மத்திய சிறைச்சாலையின் நிலை குறித்து நம்மிடம் பேசிய முன்னாள் கைதிகள் சிலர், “சிறை வளாக மருத்துவமனையில் போதிய சிகிச்சை வசதிகள் இல்லை. கைதிகளுக்கு மாரடைப்பு போன்ற சீரியஸான நிலை ஏற்பட்டால், அரசு இராசாசி மருத்துவமனைக்குத்தான் கொண்டுசெல்ல வேண்டும். அதுவும் சிறை அதிகாரிகள் மனது வைத்தால்தான் நடக்கும். இந்தச் சிறையில் உயரதிகாரியாக இருந்தவருக்கு கார் ஓட்டுநராகப் பணியாற்றியதன் மூலம் நிலைக்காவலராக வந்திருக்கும் ஒருவர், வசதி படைத்த சிறைவாசிகளுக்குச் சிறப்பு உணவுகளை விற்பனை செய்துவருகிறார். ‘மன்னர்’ வகையறா காவலர் ஒருவர், பீடி விற்பனை மூலம் மட்டுமே வாரம் ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் கல்லாகட்டுகிறார். அந்தப் பணத்தைச் சிறைச்சாலைக்கு உள்ளேயே வட்டிக்குக் கொடுக்கிறார். உயரதிகாரிகள்கூட அவசரத்துக்கு அவரிடம் வட்டிக்குக் கடன் வாங்குவதால், மன்னர் அதிகாரியின் ஆட்சிதான் மதுரைச் சிறையில் நடக்கிறது. தோட்டப் பணிகளைச் செய்யும் தலைமைக் காவலர்கள் நான்கு பேர், செல்போன்களைக் கொண்டுவந்து கைதிகளைப் பேசவைத்து ‘நல்ல’ வருவாய் ஈட்டுகிறார்கள்” என்றனர்.

கோவை மத்திய சிறைச்சாலையில் விஜிலென்ஸ் பிரிவில் பணியாற்றும் ஒருவர் மீதுதான் குற்றச்சாட்டு தீவிரமாகவைக்கப்படுகிறது. நம்மிடம் பேசிய கோவை சிறைத்துறை வட்டாரத்தினர் சிலர், “அந்த விஜிலென்ஸ் அதிகாரி பேட்சைச் சேர்ந்த சுமார் 20 பேர் மத்திய சிறையில் பணியாற்றுகிறார்கள். பிரதான வாயில் முதல் கேன்டீன் வரை முக்கியமான இடங்களில் இவர்களின் நெட்வொர்க்தான் இயங்குகிறது. இந்த நெட்வொர்க் மூலம் சிறைக்கு வரும் வி.ஐ.பி கைதிகளைச் சிறப்பாக கவனிப்பது, சிறைக்குள்ளேயே ஆண்ட்ராய்டு போன், கஞ்சா பொட்டலங்களை விநியோகிப்பது எனச் சகலத்தையும் கவனிக்கிறார்கள். சிறைக்குள் அவ்வப்போது நடக்கும் மர்ம மரணங்களுக்குப் பின்னணியிலும் இந்த நெட்வொர்க்தான் இருக்கிறது. சிறைச்சாலையின் தலைமைக் காவலர்களான இருவரின் கட்டுப்பாட்டில் சிறை அங்காடி, சிறைவாசிகளின் உணவுப் பிரிவு, சிறைத் தோட்டம் மற்றும் சிங்காநல்லூர் சிறையின் கணக்குகளும் இருக்கின்றன. இவர்களின் கொட்டத்தை யாராலும் அடக்க முடியவில்லை” என்றனர்.

சுனில் குமார் சிங்
சுனில் குமார் சிங்

குத்தகைக்கு விடப்படும் வியாபாரம்!

சிறைக்குள் சட்டவிரோதமாக நடைபெறும் பீடி, சிகரெட், செல்போன், சிறப்பு உணவு வியாபாரத்தை கவனிக்க மாதக் குத்தகை விடப்படுகிறது. ஒவ்வொரு சிறையிலும் அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவர், உடனடியாக அதைக் கட்டுவதுடன் வாரம்தோறும் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டுமாம். அந்தத் தொகைக்கு மேல் வசூலாகும் பணத்தை அவரே எடுத்துக்கொள்ளலாம். சிறைச்சாலையின் உயரதிகாரிகள் மாறினாலும், புதிதாக வருபவருக்குக் குத்தகைத் தொகை சென்றுவிடுகிறது. இதனால், இந்த முறைகேட்டை யாரும் கண்டுகொள்வதில்லை என்கிறார்கள். பாளையங்கோட்டைச் சிறையில் குத்தகைப் பணமாக மாதத்துக்கு 30,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம். வாரம்தோறும் 25,000 ரூபாய் செலுத்த வேண்டும். தமிழகத்தின் பிற சிறைகளைப் பொறுத்தவரை, புழல் சிறைக்குத்தான் குத்தகைத் தொகை அதிகம் என்கிறார்கள். குத்தகையாக ஒரு லட்சம் ரூபாயும், வாரத்துக்கு 75,000 ரூபாயும் புழலில் ஏலம் விடப்பட்டு வசூலிக்கப்படுகிறதாம்.

மதுரையில் குத்தகைத் தொகை 50,000 ரூபாய்; வார வசூல் 35,000 ரூபாய். வேலூரிலும் திருச்சியிலும் குத்தகைத் தொகை முறையே 50,000 ரூபாய், மற்றும் 75,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறதாம். இதுபோக வேலூரில் 25,000 ரூபாயும், திருச்சியில் 50,000 ரூபாயும் வார வசூலாம். வசூலை, சிறை அதிகாரிகள் முறையாகப் பங்கு பிரித்துக் கொள்கிறார்கள். இதே வழிமுறை, சில மாற்றங்களுடன் மாவட்ட ஜெயில்கள், பெண்கள் சிறப்புச் சிறைச்சாலைகளிலும் நடக்கிறது. “தமிழகத்திலுள்ள 142 சிறைகளில், சமீபத்திய புள்ளிவிவரப்படி 17,070 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளிடம் நடைபெறும் பீடி, சிகரெட், கஞ்சா, செல்போன், சிறப்பு உணவு சட்டவிரோத வியாபாரத்தில் ஒவ்வொரு மாதமும் கோடிகள் புரள்கின்றன” என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

இதுபோக, செல்போன் பேசுவதற்கும், வீடியோ கால் செய்வதற்கும், மின் விசிறி உள்ளிட்ட சில சொகுசு ஏற்பாடுகளுக்கும் வசூலிக்கப்படும் பணம் தனி. வி.ஐ.பி-கள் செல்போன்களைக் சிறைக்குள் கொண்டு போவதற்கு 10,000 ரூபாய் கொடுத்தால் போதுமாம். ரெளடி கும்பல்கள் பயன்படுத்துவதற்கு மட்டும் மாதம்தோறும் சில ஆயிரங்கள் அந்தந்தச் சிறை உயரதிகாரிகளைப் பொறுத்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்கிறார்கள். மத்திய சிறைச்சாலைகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஜாமர் கருவிகள் 50 மீட்டர் சுற்றளவில் மட்டுமே வேலை செய்கின்றன. இதனால், உச்சபட்ச பாதுகாப்பு தேவைப்படும் சிறை வளாகங்களில் மட்டும் ஜாமரைப் பொருத்தியிருக்கிறார்கள். இதைப் பயன்படுத்திக்கொள்ளும் ரெளடிகளும், இதர கைதிகளும் ஜாமர் எல்லைக்கு அப்பால் சென்று செல்போனில் பேசுகிறார்கள். இதைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், பல கோடிகளில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட வேண்டும்.

தமிழகம் முழுவதும் சிறைத்துறைக்குச் சொந்தமாக ஐந்து பெட்ரோல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் கூட்டம் அதிகமிருக்கும் சமயங்களில் லிட்டருக்கு 5 முதல் 15 மி.லி குறைவாகப் போடப்படுகிறதாம். இதன் மூலமாகவும் மாதம்தோறும் கணிசமாக ஒரு தொகையைச் சுருட்டி, சிறைத்துறையின் அதிகாரிகள் சிலர் பங்கு பிரித்துக்கொள்வதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. புழல் மத்திய சிறையின் சிறை அங்காடி மற்றும் பெட்ரோல் பங்க்கின் முழுப்பொறுப்பும் அங்குள்ள உதவி சிறை அலுவலர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதாம். மற்ற நகரங்களைவிடவும் புழல் சிறையில் அனைத்துப் பொருள்களின் விலை கூடுதலாக இருப்பதுடன், அங்கு வி.ஐ.பி கைதிகள் வருகை அதிகம் இருப்பதால், இங்கு பணியாற்றவே சிறைக் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை விரும்புவதாகச் சொல்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமறிய சிறைத்துறை டி.ஜி.பி சுனில் குமார் சிங்கிடம் பேசினோம். “இவை முற்றிலும் போலியான, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். நேர்மையான அதிகாரிகள் சிலரைக் களங்கப்படுத்த வேண்டும், அவர்களின் தன்னம்பிக்கையைச் சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே, இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைச் சிலர் பரப்புகிறார்கள். சிறைத்துறைக்குள் விஜிலென்ஸ் பிரிவு சிறப்பாகச் செயல்படுகிறது. அதனால்தான், இது போன்ற பொய்யான தகவல்களை அளித்து சிறைத்துறைக்குக் களங்கம் விளைவிக்க சிலர் முயல்கிறார்கள். தவறுகள் எங்கு நடந்தாலும், உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துத்தான் வருகிறோம்” என்றார்.

சிறைத்துறைக்குள் நடக்கும் ஊழல்கள் நம்மை மலைக்கவைக்கின்றன. 17,070 கைதிகளைக் கண்காணிக்க 4,000-க்கும் குறைவான சிறைத்துறைப் பணியாளர்களே இருப்பது ஒரு குறை. அதாவது, மூன்று ஷிஃப்டுகள் கொண்ட ஒரு நாளில், ஒரு ஷிஃப்டுக்கு சுமார் 1,200 காவலர்கள்தான் உள்ளார்கள். அதோடு, ஊழல் நடைபெறும் சமையற்கூடங்களைக் கண்காணிக்க சிசிடிவி-கள் இருப்பதில்லை. காலத்துக்கு ஏற்ற தொழில்நுட்ப வசதி சிறைத்துறைக்குள் ஏற்படுத்தப்படவில்லை. இந்தக் குறைகளைக் களைந்து, அரசு உரிய கண்காணிப்பைப் பலப்படுத்தினால் மட்டுமே, ஊழல் பெருச்சாளிகள் ஒழிவதோடு, மனித உரிமையும் சிறைத்துறையில் காக்கப்படும்!

*****

சிறை அரசியல்!

கோவையில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் விஜிலென்ஸ் அதிகாரி மீதும், திருச்சியில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய சாமியார் பெயர்கொண்ட அதிகாரி மீதும் காழ்ப்புணர்ச்சியில்தான் புகார்கள் அளிக்கப்பட்டிருப்பதாக விளக்கமளிக்கிறது சிறைத்துறை உயரதிகாரிகள் வட்டாரம். ``அந்த இரண்டு அதிகாரிகளுமே நேர்மையானவர்கள். கோவையிலுள்ள விஜிலென்ஸ் அதிகாரி, சிறைக்குள் நடைபெறவிருந்த ஒரு வன்முறையையே தடுத்தவர். திருச்சியிலுள்ள அந்த சாமியார் பெயர்கொண்ட அதிகாரி, நேர்மையான செயல்பாடுகளால் பலரின் சட்டவிரோத உணவு ஊழலுக்கு ஆப்புவைத்துவிட்டார். இவர்கள் இருவரும் எடுத்த சில நடவடிக்கைகள் சில அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் பாதகமானதால், இது போன்ற தவறான தகவல்களைப் பரப்புகின்றனர்” என்கிறது அந்த வட்டாரம்.

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

 சிறை அரசியல்! - ‘பீடி’ கரன்ஸி... ‘சிறப்பு’ குத்தகை... உணவு ஊழல்... உரிமை மீறல்கள்...

“தமிழகத்தில் கோவை, வேலூர், திருச்சி, மதுரை ஆகிய சிறைகளில் மட்டும்தான் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றின் மூலம் தேவையான க்ளிப்பிங் பேட், பேண்டேஜ் உட்பட சில பொருள்களைத் தயாரிக்கிறார்கள். மதுரைச் சிறையில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளாக கிளிப்பிங் பேட் தயாரிக்க வொர்க் ஆர்டர் வாங்கியது மாதிரியும், அதற்கான மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்ததுபோலவும், அங்குள்ள மெஷினில் வேலை நடந்து சிறைவாசிகளுக்குக் கூலி கொடுத்ததுபோலவும் போலியாக பில்களைத் தயார்செய்து, கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. கோவைச் சிறையில் இதேபோல் 42 மெஷின்கள் உள்ள நிலையில், அவர்கள் காட்டாத கணக்கை, இரண்டு மூன்று மெஷின்கள் உள்ள மதுரை சிறையில், இப்படி கணக்கு காட்டியிருக்கிறார்கள். இது மிகப்பெரிய ஊழல். இது தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்திட வேண்டும்”.

- புகழேந்தி, வழக்கறிஞர்

 சிறை அரசியல்! - ‘பீடி’ கரன்ஸி... ‘சிறப்பு’ குத்தகை... உணவு ஊழல்... உரிமை மீறல்கள்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“1971-ல் ஐ.ஏ.எஸ் அதிகாரி நரசிம்மன் தலைமையில் சிறைச்சாலை சீர்திருத்த கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் கொடுத்த ரிப்போர்ட்டில், பல அம்சங்களை அமல்படுத்தியது அன்றைய அரசு. சிறைத்துறை வார்டனுக்கு ஊதியம், உடை மற்றும் சிறைவாசிகளுக்குச் சாப்பாடு, பணி செய்வதற்கான சம்பளம் என்று நிறைய மாற்றங்களைச் செய்தனர். பிறகு, கடந்த 50 ஆண்டுகளாக கமிஷன் ஏதும் அமைக்கப்படவில்லை. அப்படி ஒரு கமிஷனை இப்போதைய அரசாங்கம் அமைத்தால், நிச்சயமாகச் சிறைத்துறையின் நிர்வாகத்தை மேம்படுத்தலாம்.’’

- ராமச்சந்திரன், முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism