Published:Updated:

கிறுகிறுக்கவைக்கும் முறைகேடுகள்... டேஞ்சர் ஸோனில் டாஸ்மாக்!

டாஸ்மாக்
பிரீமியம் ஸ்டோரி
டாஸ்மாக்

ட்ரான்ஸ்ஃபர், டெண்டர், வரிவருவாய் ஏய்ப்பு, கூடுதல் விலை, கமிஷன்

கிறுகிறுக்கவைக்கும் முறைகேடுகள்... டேஞ்சர் ஸோனில் டாஸ்மாக்!

ட்ரான்ஸ்ஃபர், டெண்டர், வரிவருவாய் ஏய்ப்பு, கூடுதல் விலை, கமிஷன்

Published:Updated:
டாஸ்மாக்
பிரீமியம் ஸ்டோரி
டாஸ்மாக்

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் முன்னணியில் இருந்துவருவது டாஸ்மாக்தான். அந்தவகையில் அரசின் அச்சாணியாகத் திகழ்ந்துவரும் இத்துறையில், ஏகப்பட்டப் புகார் பூதங்களும் கிளம்பிவருகின்றன. குறிப்பாக தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஆறு வகையிலான முறைகேடுகள் அனுதினமும் அரங்கேற்றப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் குவிகின்றன!

ட்ரான்ஸ்ஃபர் டிரேடிங்!

இந்த நிலையில், டாஸ்மாக்துறையில் நடக்கும் அப்படியான முறைகேடுகள் குறித்து டாஸ்மாக் ஊழியர் மாநிலச் சம்மேளன பொதுச்செயலாளர் திருச்செல்வனிடம் பேசினோம். “ட்ரான்ஸ்ஃபர் என்பது பொதுவாக எல்லாத் துறைகளிலுமே இயல்பாக நடக்கக்கூடியதுதான். ஆனால், இங்கே அதை ஒரு டிரேடிங்காகவே மாற்றிவிட்டனர். அதாவது, அதிக பயண தூரம் போன்ற முறையான காரணங்கள் இருந்தால் மட்டுமே ட்ரான்ஸ்ஃபர் கொடுக்க வேண்டும். ஆனால், எழும்பூர் அருங்காட்சியகம் எதிரேயுள்ள கடை எண் 483-லிருந்து, திருவல்லிக்கேணி டி1 காவல் நிலையம் எதிரிலுள்ள 812 எண் கொண்ட கடைக்கும்கூட ஒருவர் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிச் சென்றிருக்கிறார். இந்த இரண்டு கடைகளுக்கும் இடையே நான்கு கிலோமீட்டர் தூரம்கூட இருக்காது என்கிறபோது ஏன் ட்ரான்ஸ்ஃபர்? ஆக, இதில் லட்சக்கணக்கில் பணம் விளையாடியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இப்படி நூற்றுக்கணக்கான ட்ரான்ஸ்ஃபர்களைப் போட்டுள்ளனர். கடை வருவாயை வைத்து ஏ, பி, சி என மூன்று கிளாஸ்களாக மதுக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. குறைந்த வருவாய்க் கடையிலிருந்து அதிக வருவாய்க் கடைகளுக்குத்தான் அதிகப்படியான ட்ரான்ஸ்ஃபர்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு ட்ரான்ஸ்ஃபருக்கும் குறைந்தபட்சம் 50,000-த்திலிருந்து அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது எதுவும் அமைச்சர் தரப்புக்குத் தெரியாமல் நடப்பதில்லை.

கிறுகிறுக்கவைக்கும் முறைகேடுகள்... டேஞ்சர் ஸோனில் டாஸ்மாக்!

மதுபான ஆலை டு மதுபானக் கடை!

சமீபத்தில் பேட்டியளித்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ‘மதுபானம் மூலம் அரசுக்குக் கிடைக்கவேண்டிய வரிவருவாயில், பாதியளவு வெளியில் செல்கிறது’ என்றொரு குண்டைத் தூக்கிப்போட்டார். அதாவது, மதுபான ஆலைகளில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் பேக் செய்யப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலிருக்கும் டாஸ்மாக் குடோன்களுக்கும் அனுப்பப்படும். அங்குதான் ஒவ்வொரு பாட்டிலின் மீதும் ஹோலோகிராம் முத்திரை ஸ்டிக்கர் ஒட்டப்படும். இதன் மூலமே அரசுக்கும் வரிவருவாய் கிடைக்கும். ஆனால், பல சமயங்களில், மதுபானங்கள் ஆலைகளிலிருந்து டாஸ்மாக் குடோன்களுக்குச் செல்லாமல், நேரடியாக டாஸ்மாக் கடைகளுக்கே சென்றுவிடுகின்றன. இதனால் டாஸ்மாக் நிறுவனத்துக்குக் கிடைக்கவேண்டிய வரி தடைப்படுகிறது. இந்த முறைகேட்டில் ஆலை அதிபர்கள், அரசு அதிகாரிகள், கடைப்பணியாளர்கள் வரை அனைவருக்கும் தொடர்பு உள்ளது. குறிப்பிட்ட சில கடைகளில், இப்படியான முறைகேடுகள் அடிக்கடி நடக்கின்றன. விதிமுறை மீறி கூடுதலாகத் தயாரிக்கப்படும் மதுபானங்கள்தான் இவ்வாறு கள்ளச்சந்தைக்கு அனுப்பப்படுகின்றன.

அட்டைப்பெட்டி, டிரான்ஸ்போர்ட் டெண்டர்!

மது பாட்டில்களை பேக் செய்யப் பயன்படுத்தப்படும் அட்டைப்பெட்டி வேஸ்ட்டுகளைச் சேகரித்துச் செல்வதற்கான டெண்டரை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுப்ரமணியனின் வகுப்புத்தோழர் ஒருவர்தான் எடுத்திருக்கிறார். Brigap என்ற அந்த நிறுவனம் கட்டுமானம், ஐடி உள்ளிட்ட துறைகளில் அனுபவமுள்ளது. ஆனால், டாஸ்மாக்துறையில் துளியும் சம்பந்தமோ, அனுபவமோ இல்லாதது. ஏற்கெனவே வேஸ்ட் பேப்பர் கம்பெனி நடத்திவருபவர்கள் ஏராளமான பேர் இருக்க, இந்தத் துறைக்குத் தொடர்பே இல்லாத ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் சென்றதில் மேலிடத்தைச் சந்தேகப்பட இடமிருக்கிறது. டாஸ்மாக் கடைகளிலிருந்து காலி அட்டைப்பெட்டிகளை 3 ரூபாய் கொடுத்து எடுத்துச்செல்லும் அந்த நிறுவனம், வெளியில் 12 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.

கிறுகிறுக்கவைக்கும் முறைகேடுகள்... டேஞ்சர் ஸோனில் டாஸ்மாக்!

இதேபோல், மதுபான ஆலைகளிலிருந்து, டாஸ்மாக் குடோன்களுக்கு மதுபாட்டில்கள் அனுப்பிவைக்கப்படும் டிரான்ஸ்போர்ட் டெண்டரை மாவட்டவாரியாகப் பலர் எடுத்துள்ளனர். டிரான்ஸ்போர்ட்டுக்கான ஒப்பந்தத் தொகை அல்லாமல், கடைகளில் மதுபானப் பெட்டிகளை இறக்கிவைக்கும்போது, ஒரு பெட்டிக்கு 3 முதல் 5 ரூபாய் வரை இடத்துக்கேற்ப லாரி ஓட்டுநர்கள் வசூலிக்கிறார்கள். கொடுக்க மறுத்தால், பாட்டில்கள் அவ்வப்போது உடைந்துகிடக்கும். இதற்கான சேதாரத் தொகையைப் பணியாளர்கள்தான் கட்ட வேண்டும் என்பதால், லாரி ஓட்டுநர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துவிடுகிறார்கள்.

50 ரூபாய் வரை கூடுதல் விலை... நடவடிக்கைக்கு பதில் கையூட்டு!

டாஸ்மாக் மதுபானக் கடைகளில், எம்.ஆர்.பி எனப்படும் அதிகபட்ச சில்லறை விலைக்கும் அதிகமாக 5 முதல் 20 ரூபாய் வரைக் கொடுத்துத்தான் மதுபானங்களை மதுப்பிரியர்கள் வாங்கிச்செல்கிறார்கள். சமீபகாலமாகச் சில கடைகளில் 50 ரூபாய் வரையிலும் கூடுதலாகப் பெறுகிறார்கள். இதுமட்டுமின்றி, பகல் 12 மணிக்கு முன்பாகவும், இரவு 10 மணிக்குப் பிறகும் கள்ளச்சந்தையில் இரட்டிப்பு விலைக்கு விற்கப்படுவது தனிக்கதை. டாஸ்மாக் விதிகளின்படி இந்த முறைகேடுகளின்மீது நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது. ஒரு ரூபாயிலிருந்து ஒன்பது ரூபாய் வரை கூடுதலாக விற்றது தெரியவந்தால், ஒரு அபராதமும், அதற்கு மேல் விற்றால் அதற்குத் தனி அபராதமும் விதிக்கலாம். பணியாளர்களும் மேற்பார்வையாளர்களும் இணைந்து இக்கட்டணத்தைக் கட்ட வேண்டும். தொடர்ந்து புகார்கள் வரும்பட்சத்தில், குறைவான வருவாய் உள்ள கடைகளுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படுவார்கள். ஆனால், நடவடிக்கை எடுக்காமல் இருக்க, சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் உயரதிகாரிகள் தனியாகக் கையூட்டு பெற்றுக்கொள்கிறார்கள்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

ஊழியர்களிடம் கேட்டால், ‘இப்படிக் கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையை, டாஸ்மாக் அதிகாரிகள் மட்டுமின்றி, பறக்கும் படை, லோக்கல் போலீஸ், வருவாய்த்துறை என அனைத்து மட்டத்திலும் பிரித்துக் கொடுத்தாக வேண்டும். இனி லோக்கல் கவுன்சிலர்களுக்கும் பங்கு கொடுத்தாக வேண்டும். கொடுக்கவில்லையென்றால், நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டுகிறார்கள். இப்படி படியளக்கவே கூடுதல் விலைக்கு விற்கவேண்டியிருக்கிறது’ என்று சொல்கிறார்கள்.

கணக்கு குளறுபடி, கமிஷன்!

இன்று சாதாரணக் கடைகளில்கூட பில் போடும் எந்திரம் வந்துவிட்டது. ஆனால், டாஸ்மாக்கில் இன்னும் அமலுக்கு வரவில்லை. ஒரு நாளைக்கு எத்தனை பாட்டில்கள் வருகின்றன, அவற்றில் எத்தனை விற்பனையாகின்றன போன்ற எல்லா விவரங்களுமே கடை ஊழியர்கள் சொல்வதுதான். மற்றபடி அதை கிராஸ் செக் செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. எனவே 10,000 பாட்டில்கள் விற்பனையானால் 8,000 என்றும், 10 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தால், 8 லட்சம் ரூபாய் என்றும் மாற்றி கணக்கெழுதுமாறு, சில மாவட்ட மேலாளர்கள், கடை ஊழியர்களை மிரட்டி ஆதாயம் பெறுகிறார்கள்.

லேட்டஸ்டாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு ஆட்கள், டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று, மொத்த விற்பனைத் தொகையில் ஒரு சதவிகித கமிஷன் கேட்டு மிரட்டிவருகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் இந்த கமிஷன் பஞ்சாயத்தைக் கண்டித்து டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்கூட நடத்தினார்கள். டாஸ்மாக் போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் என ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருந்தும், யாருமே இந்த பிரச்னைகளையும் ஊழல்களையும் கண்டுகொள்வதில்லை. டாஸ்மாக் துறையே முற்றிலும் சீரழிந்துகிடக்கிறது.

திருச்செல்வன்
திருச்செல்வன்

இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளவும், பணியாளர்களின் நியாயமான பல கோரிக்கைகளைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பல்வேறு சங்கங்கள் இணைந்து ஏப்ரல் 21-ம் தேதி, சென்னையில் பேரணி செல்லவிருக்கிறோம்!” என ஆதங்கத்தோடு சொன்னார், டாஸ்மாக் ஊழியர் மாநிலச் சம்மேளன பொதுச்செயலாளர் திருச்செல்வன்.

சுப்ரமணியன்
சுப்ரமணியன்

டாஸ்மாக் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுப்ரமணியனிடம் பேசினோம். “மதுபானம் கொள்முதலில் ஆரம்பித்து விற்பனை வரை அனைத்துமே அதிகாரிகளின் மேற்பார்வையோடுதான் நடந்துவருகின்றன. எனவே, முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை. அட்டைப்பெட்டி டெண்டருக்கெல்லாம் எந்தவித முன் அனுபவமும் தேவையில்லை. அதிக விலை கேட்பவருக்கே டெண்டர் கொடுக்கப்படும். முதுநிலை மண்டல மேலாளர் நிலையில்தான் டெண்டர் விடப்படுமே தவிர, தலைமையகத்துக்கெல்லாம் இதில் எவ்விதத் தொடர்பும் இல்லை. எங்கள் கண்காணிப்பையும் மீறி கூடுதல் விலைக்கு விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்” என்றார்.

டாஸ்மாக் மதுவைவிட கிறுகிறுக்கவைக்கிறது, டாஸ்மாக் முறைகேடு விவகாரம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism